ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

அவள் தேடுகிறாள்...



 


 அலை கொண்டு தந்த
சிப்பிக் கடலுள்..!
அவளது முத்தை
சுமந்த சிப்பியை...!
தேடுகிறாள்....

கண்கள் பனிக்க
நெஞ்சம் பதைக்க
கால்கள் நடுங்க
கைகள் பதற..
தேடுகிறாள்...!
 
ஆயிரமாயிரமாய்....
கண் திறந்த சிப்பிக்காடு..
புதைந்தும்....மிதந்தும்...
கவிழ்ந்தும்..நிமிர்ந்தும்..
தேடுகிறாள்...

வெள்ளையாய் கருப்பாய்..
சிவப்பாய்...பழுப்பாய்..
பாசியுடை அணிந்தும்...
முழுதுமாய்...உடைந்தும்..
ஈரமணலில் கண் நிறைத்து...!
தேடுகிறாள்...!

தவற விட்டாளா?
தொலைத்து விட்டாளா?
எங்கு நழுவியதோ..! கருவிழி
தேடும் கண்ணாமூச்சி..!
தேடுகிறாள்...

அடுத்தொரு அலைவந்து..
கொண்டு போட்டதை
வாரிச் சென்றது,,,,!
கலைந்து காணாமல் போனது
சிப்பிக் கடல் மீண்டும் ...
முத்துக் குளிக்க...!
தேடுகிறாள்..!

இந்தமுறை....
கரையோரம்...வந்து
ஒதுங்கியது சங்கு ..!
சிப்பியென எடுத்தவளின்..
கைகளில் கம்பீரமாய்
சிரித்தது வலம்புரிசங்கு.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக