திங்கள், 7 மே, 2012

வளையா.... பனை...!

பரட்டை விதையை 
எவர்  விதைத்தார்...
மண்ணைக் கவ்வி நீ 
கால் ஊன்றியபோதே...
அநாதை....மரமென்ற  
எண்ணமும்  எழுந்ததோ..
வானம்..... பார்த்து 
சிறகு.... விரித்து 
முறையிட்டனையா..?..
உயர்பனையே..!

வெட்டவெளியில்.. கால்கடுக்க...
காத்திருந்தாய் யாருக்கோ....?
நீர் வார்க்க வருவாரோ...
வானளிக்கும் கொடையில்....
தேன்துளி...இளநொங்கில்...
சேர்த்தாய் . யாருக்கோ..?
பகடைப் பனையா...!

பருவங்கள்....தாண்ட.....
பாதை ஊர் காவலனாய் 
கவனிப்பார்.....தீண்டாமல்....
கள் வடித்து காத்தாயே....
ஓடும் புகை வண்டியை....
விரட்டிப் பிடித்தே.....
வைரம் பாய்ந்த வனப்போடு...!
நிமிர்ந்த பனையே....!

மரங்களில் நீ ஏழையா..?
தீண்டாமை உனக்குமா?
தோப்பாக இல்லாமல்...
வீட்டிலும்  விடாமல்.....
தெருவோடு நிறுத்தியதால்...
நெஞ்சுரம் கொண்டாயோ..!
சொக்கப்பனையே...!

உனக்கென நாங்கள்...
ஒன்றும் தருவதில்லை...
எமக்கென நீயோ...
அள்ளித் தருகின்றாய்...
கூரையாய்... நீ....
விசிறியாய்......நீ...
வள்ளல் பனையே...!

நீ யாரென காட்டவா.....
ஓங்காரமாய் ஆங்காரமாய்...
நேற்றடித்த புயலிலே....
நீ வீரமாய் நின்றாய்...
தென்னை சாய்ந்தது...
புங்கைப் பொடியானது...
வேம்பு வீழ்ந்தது..
மின்சார தூணும் 
வளைந்து கிடந்தது...!
வைராக்கிய பனையே...!

இணை மரங்கள் .
கூட்டமாய்  சாய...
ஆங்காங்கே...நீயோ ..
மூலாதாரம்  பற்றி
சஹஸ்ராரம் நிமிர்ந்து..
பூதத்தை எதிர்த்து ...
வைராக்கியம் கொண்டாய் ...
விண்ணும் மண்ணும் 
உனைக் காக்க,...
புயலும் காத்ததோ...! 
வளையா பனையே...வாழியவே...!
ஆலாபனையாய்...வாழ்த்துவமே...!

===================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக