வியாழன், 21 ஜூன், 2012

"ஞானதீபம்" .!





குழந்தைப் பருவம் பணம் படைத்தவர்களுக்கு, ஆரோக்கியமாகவே அமைந்து விடுகிறது. ஆனால்...பொருளாதாரத்தில் பற்றிக்கொள்ள ஆதாரம் இல்லாமல் நலிவடைந்து போய் அல்லல் படும் குடும்பத்தில் பிறக்கப் படுவதால் மட்டுமே குழந்தைப் பருவத்தில் இருக்கும் எந்த ஒரு இனிய சந்தோஷத்தையும் எட்டிக்கூடப் பார்க்க இயலாத துர்பாக்கியசாலிகளாகிவிட்ட பிஞ்சு மனங்கள் இன்னும் இருக்கத் தான் செய்கிறார்கள்.

அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி இன்னும் நம் தமிழ் நாட்டில் பெரிய நகரங்களில் இருந்து சில மணிநேர பிரயாணத்தை அடுத்தே இருக்கும் சிறு சிறு கிராமங்களின் இன்றைய நிலைமையைக் கண்ணுற்று ஏதாவது செய்ய வேண்டும் என்ற நியாயமான எண்ணத்தில் ஒரு உந்துதலாகத் எழுந்த கட்டுரை இது.

இந்த சின்ன அகல்விளக்காக ஏற்றப்படும் சுடர்...... ஒளியால் கடந்து பலரது வாழ்வு ஒளிர வேண்டும் என்ற வேண்டுதலோடு தோன்றியதை எழுதாமல்....அனைத்து மனத்தினை இணைக்கவே இந்த எண்ணத்தினை அனுப்புகிறேன். ஒரு தனி மனித மனத்தின் எண்ணத்தால் எந்த ஒரு எழுச்சியையும் நடைமுறையில் கொண்டு வர இயலாது அல்லவா..? எந்த ஒரு இயங்கு சக்திக்கும் ஒரு உந்துசக்தி தேவைப் படுவதைப் போலவே...ஒரு குடும்பம் நிமிர, உயர, அந்தக் குடும்பத்தில் உள்ள பிள்ளைகள் கல்வி அறிவு பெர்ற்றவர்களாக இருக்க வேண்டும். இது நாம் எல்லோருக்மே தெரிந்து, அறிந்த ஒரு விஷயம் தான்...இதில் பெரிதாக ஒன்றும் இல்லை..அதற்குத் தான் அரசாங்கம் என்னவெல்லாமோ செய்கிறதே என்று முன்பு நான் நினைத்தது போலவே..நீங்களும் கேள்வியாகவோ... பதிலாகவோ எழலாம்.. அதுவும் சரிதான்.

கல்வி கற்பதால் மட்டும் தான் ஒரு குடும்பம் தலை தூக்க இயலும் என்று நன்கு அறிந்திருந்தும் இந்த நூற்றாண்டில் கூட இன்னும் பள்ளியின் வாசலை மிதிக்காத சிறுவ சிறுமிகள் வானம் பார்த்த பூமியாக இலவச தொலைக்காட்சி பெட்டிக்குள் தங்களைத் திணித்துக் கொண்டு சுயம் அறியாமல் ஏதோ இலவச மாயையில் வளைய வருகிறார்கள்.
அவர்களை சந்தித்துக் கேட்டால்....வெள்ளந்தியாகச் சிரித்து விட்டு "பள்ளியோடம்னா......புச்தொகம்னா....மதியம் சோறு போடுவாங்களே...அங்கியா...." என்று கேட்டுத் தான் தாயின் புடவைக்குள் ஒளிந்து கொள்ளும் எட்டு வயது
நிரம்பிய ஒரு சிறுவனின் கேள்வி...என்னை சிந்திக்க வைத்தது. இந்தியா....நீ...இப்படியா..? என்று ஆச்சரியக் குறி என்னுள் மட்டும் அல்ல இதைப் போல நீங்களும் சந்தித்தால் இதே..கேள்வி தான் உங்கள் மனதிலும் தோன்றும்.

இதில் யாரை நொந்து கொள்வது. ஏழ்மையையா ...? எங்கே...எப்படி சரி செய்ய வேண்டும் என்ற அறியாமையையா...? பார்த்த ஒரு பிள்ளையே இத்தனை கேள்விகளை கேட்க வைத்து விட்டானே....இன்னும் எத்தனை பிள்ளைகள் கண்ணுக்கே தெரியாமல் நித்தம் நித்தம்.....வெறும் நாளாக மட்டும் கடத்திக் கொண்டு...கூலி வேலை செய்யும் தந்தைக்கு வெறும் வாரிசாக..? அவர்களின் எதிகாலம் தான் என்ன...? இப்படியே போனால் இந்தியாவின் எதிர்காலம் தான் என்ன...? ஒரு சாரார் படித்த வர்கம்....படித்துக் கொண்டே போக...இன்னோர் சாரார்...அதே கூலி வேலையில் இருந்து மீளாமல்.....எத்தனை சலுகைகள் அரசாங்கம் அறிவித்தும் என்ன பயன்...? அது சேர வேண்டிய இடத்தில் சரியாகப் போய் சேரவில்லையே...இந்தப் ஒரு பெரிய பொத்தல் கண்ணுக்கே தெரியாமல் ஓரமாய் இருக்கிறது....எந்த அமைப்பு இதை அடைக்கும்..?....சரி செய்யும்.?..காக்கும்...?

பலரின் கைகளும், மனமும், எண்ணமும் சேர்ந்தால் திண்ணமாக இதற்கும் ஒரு வழி வகுக்கலாம்.எத்தனையோ கிராமங்களில் பள்ளிகள் இல்லை...அப்படியே இருந்தாலும்...அது என்னவோ பூதங்களின் இருப்பிடமாக பாழடைந்து கிடக்கிறது. ஒரு கிராமம் விட்டு இன்னொரு கிராமம் செல்ல இயலாமல் படிப்பைத் துறந்து ஒரு அறிவின் திறனை தானே சமாதி ஆக்கிக் கொள்வது தான் இந்த நிலையின் உச்சகட்டம். யாருக்கும் எதற்கும் நேரமில்லை...இதையெல்லாம் சிந்திக்கவும் பொறுமை இல்லை. இருந்தும், மனது வைத்தால் மட்டும் தான் இதயங்களைப் பாலமாக்க்கி ....எண்ணங்களை ஏணியாக்க்கி .பல அமைப்புகள் ஒன்று கூடலாம்...இணைந்த கரங்களின் சக்தி நாமறியாததா...? இன்ன ஜாதி என்று கணக்கெடுப்பு நடத்திக் கொண்டு வருகிறார்களே......அனைத்துக் பிள்ளைகளும் சரியான வயதில் பள்ளிக்கு செய்கிறார்களா என்ற கணக்கெடுப்பு செய்ய ஏன் தவறுகிறார்கள்..?


நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருந்தாலும்....இதும் தலையாயப் பிரச்சனை தானே...அவரவர் தங்களால் இயன்ற முறையில் ஏதாவது செய்யலாம்....பள்ளி இல்லாத இடங்களில் அதற்கான முயற்சி செய்யலாமே.
பணம் என்னும் பகடைக் காயை உருட்டி விளையாடும் சமுதாயத்தின் உயர்ந்த வர்க்கத்தின் நிலை மாறி இந்தியக் குழந்தைகளின் சீர் ஓங்க ஒவ்வொருவரும் நம்மால் இயன்ற முறையில் முயற்சித்தால் அதுவே பின்னாளில் ஒரு உயர்ந்த சமுதாயம் உருவாகும்.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு எனும் நல்ல அறிவுரைகள் வெறும் காற்றில் கலந்த கற்பூர வாசமாக மறைந்து போகாமல் கடலில் கலந்த உப்பு போல என்றென்றும் நிலைத்து நிற்குமாறு நம்மால் இயன்றதைச் செய்வோம்.
அறிவு என்ற அட்சய பாத்திரத்தை பத்திரப் படுத்தும் முயற்ச்சியில் கல்வி என்ற பெரும் செல்வத்தைக் கடத்து வளர்ப்போம்..எந்தப் ஒரு மாணவனுக்கும் கல்வி உதவி செய்யத் தயங்காமல் நம்மால் இயன்றதை நமது பங்கென சிறிதேனும் அளிக்கலாம் ....சமுதாயத்திற்க்காக சிறிதேனும் சிந்திக்கலாம்.

நாமெல்லாம் ஏற்ற முனைவது "ஞானதீபம்" .! அந்த அறிவுச்சுடர் தனியாகவும் எரியாது....எந்நாளும் அணையாதது..!

நட்புடன்.
ஜெயஸ்ரீ ஷங்கர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக