புதன், 27 ஜூன், 2012

சீதாயணம் (முழு நாடகம்)




நெஞ்சின் அலைகள்

நீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் மனிதா ! – விவேகானந்தர்

நன்றி: எழுதியவர்.திரு.சி.ஜெயபாரதன் அவர்கள், கனடா.




அன்புள்ள நண்பர்களே,
“சீதாயணம்” என்னும் எனது ஓரங்க நாடகத்தைத் தமிழ்கூறும் வலை உலகம் படித்தறிந்திடச் சமர்ப்பணம் செய்கிறேன். இந்த நாடகத்தில் வரும் இராமன், இராவணன், அனுமான், சுக்ரீவன் போன்ற அனைவரும் மனிதராகக் காட்டப் படுகிறார்கள். இராம பிரானைத் தேவ அவதாரமாகக் கருதும் அன்பர்கள் என்னை மன்னிக்க வேண்டும். வால்மீகி முனிவருக்கு ஆசிரமத்தில் தன் முழுத் துன்பக் கதையைச் சொல்லி, கணவனால் புறக்கணிக்கப்பட்டு இறுதியில் தன் உயிரைப் போக்கிக் கொண்ட சீதாவின் பரிதாபச் சம்பவம் இது.




அன்புடன்,




ஜெயபாரதன், கனடா

+++++++++++++


தீண்டப்படாத சீதா


~ சீதாயணம் ~


(ஓரங்க நாடகம்)


சி. ஜெயபாரதன், கனடா

முகவுரை: வாசகர்களே! இதை ஒரு கற்பனை நாடகமெனக் கருத வேண்டாம். இராமகதையில் மெய்யாக நடந்த நிகழ்ச்சிகளைப் பின்னி நெய்த ஒரு நாடகமிது. நாடகத் தொடுப்புக்காக நிகழ்ச்சிகள் முன்னும் பின்னும் மாற்றப்பட்டு வசனங்கள் புதியதாய்ச் சேர்க்கப்பட்டுள்ளன. மனிதர் நெஞ்சைக் கீறும் சீதையின் இறுதிக் காலப் பேரவலத்தைக் கூறுகிறது எனது சீதாயணம். இராமகதை உண்மையாக நிகழ்ந்தது என்பது என் உறுதியான கருத்து. சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வால்மீகி முனிவர் தன் மூலநூல் இராமாயணத்தில் கதையை முதலில் எப்படி எழுதி யிருந்தார் என்பதை அறிந்து கொள்ள முடியாது! மூலநூல் இராமாயணம் பின்னால், பலரால், பலமுறை மாற்றப்பட்டு, தெய்வீக முலாம் பூசப்பட்டு பொய்க் கதையாய் மங்கிப் போனது. பனை ஓலையில் எழுதப்பட்ட இராமாயணம் இடைச்செருகல் நுழைந்து கலப்பட மாக்கட்ட ஓரு காப்பியம் [Corrupted Manuscript] என்று அரசியல் ஆன்மீக மேதை இராஜ கோபாலாச் சாரியார் கூறுகிறார். வால்மீகி இராமாயணத்தை ஒன்பதாம் நூற்றாண்டிலே இந்திய மொழிகளில் முதன்முதலாகத் தமிழில் எழுதிப் பெருமை தந்தவர் கவிச்சக்ரவர்த்தி கம்பன்.

கம்பரும் பின்னால் இந்தி மொழியில் எழுதிய துளசிதாசரும் மூலக் கதையை சற்று மாற்றியுள்ளதாக இராஜாஜி கூறுகிறார். வால்மீகி இராமனைக் கடவுளின் அவதாரமாகச் சித்திரிக்கவில்லை என்றும், இராமன் தன்னை ஓர் அவதார தேவனாகக் கருதவில்லை என்றும் தன் நூலில் இராஜாஜி எழுதியுள்ளார். இராவணன் அழிக்கப் பட்டவுடன் இராமனின் அவதாரப் பணி முடிந்துவிட்டது என்று சொல்கிறார். அயோத்திய புரியில் பட்டம் சூடிய இராமன் சீதைக்கு இழைத்த இன்னல்களை நோக்கும் போது, அவன் வெறும் மானிட வேந்தனாகவே வாழ்ந்தான் என்று இராஜாஜி கூறுகிறார். சீதா பெற்ற துயர்களைப் போல இன்றும் நம் நாட்டுப் பெண்டிரில் பலர் இன்னல் அடைந்து வருகிறார்கள்.

உத்தரகாண்டத்தில் நளின மிருந்தாலும், சீதாவின் புனிதத்தை இராமனுக்கு நிரூபிக்க, இராமகதையில் வால்மீகி அக்கினிப் பரீட்சை வைப்பதாகக் காட்டுகிறார். ஆனால் அதுவும் இராமனின் பண்பு நெறிக்கு உடன்பாடாக வில்லை. உத்தர காண்டத்தைப் படிக்கும் போது மனம் மிகவும் வேதனைப் பட்டது என்று பின்னுரையில் [Epilogue] இராஜாஜி மனமுடைகிறார் (1). சீதையை இராமன் காட்டுக்கு அனுப்பும் உத்திர காண்ட அதிர்ச்சிக் காட்சியை நான் இராம கதையின் உச்சக் கட்டமாகக் கருதுகிறேன். தனித்து விடப்பட்ட சீதை குழந்தைகள் பிறந்த பிறகு மீண்டும் ஏற்றுக் கொள்ளப்படாது புறக்கணிக்கப்பட்டு மரணம் அடைவது இந்திய இதிகாசத்தில் தெரிந்தும், தெரியாமல் போன ஓர் உன்னத துன்பியல் வரலாறு என்பது என் கருத்து! இலங்காபுரியில் போரிட்டு சீதாவை மீட்ட காட்சியை நான் இராமகதையின் உச்சக் கட்டமாக எடுத்துக் கொள்ளவில்லை!

உண்மைக் கதையைத் திரித்து ஒருவனை இறைவன் அவதாரம் என்பதும், மற்றொருவனுக்குப் பத்துத் தலைகளை மாட்டி வைப்பதும், தென்னாட்டு மாந்தரில் சிலரை வானரங்களாகச் சித்தரிப்பதும் 21 ஆம் நூற்றாண்டில் கற்பனைக் கதையாகக் கூட கருதப்படாது! சீதையின் அவல மரணத்தை மூடி மறைத்து, அதற்குக் காரண கர்த்தாவான இராமனை உத்தமக் கணவன் என்று பாரதம் பல்லாயிரம் ஆண்டுகளாகப் பாயிரம் பாடி வணங்கி வருகிறது. காட்டுக்குத் துரத்தப்பட்ட கர்ப்பவதி சீதா, இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்று, வால்மீகி ஆசிரமத்தில் வாழ்ந்து இறுதியில் உயிரை மாய்த்துக் கொள்கிறாள். ஆனால் பாரத நாடு இராமனும் சீதாவும் இல்லறத்தில் ஒன்றாக வாழ்ந்த உன்னத தம்பதிகளாய்க் காட்டித் தொழுது வருகிறது! தெய்வ அவதாரமாக வேடம் பெற்ற இராமனை மானிடனாக மன்னனாக மீண்டும் மாற்றி என் சீதாயணம் எழுதப்படுகிறது! இது வால்மீகி இராமாயணம் அன்று! இதில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட மாய மந்திர வித்தைகள் கிடையா! இந்த நாடகத்தில் வரும் இராமன், இராவணன், அனுமான் யாவரும் மனிதப் பிறவிகளாகக் காட்டப்படுகிறார்கள்! விஷ்ணுவின் அவதாரமாக இராமர் இங்கே கருதப்பட வில்லை! பத்துத் தலை கொண்ட இராட்சதனாக இராவணன் இங்கே கூறப்பட வில்லை! தென்னாட்டுப் பிறவிகளான அனுமான், அங்கதன், சுக்ரீவன் ஆகியோர் குரங்கு முகமும், வாலும் கொண்ட வானரங்களாகத் தோன்றாமல் மனித முகம் கொண்ட மானிடர்களாக உலவி வருகிறார்கள்.

அனுமான் படையினரை நேராகப் பார்த்திருந்த வால்மீகி முனிவர், மூலக் கதையில் வால் முளைத்த வானரங்களாகக் காட்டி யிருக்க முடியாது என்பது என் கருத்து. பின்னால் அவரது சீடர்களோ அல்லது வேறு முனிவர்களோ மூலக் கதையைத் திரித்துள்ளதாகக் கருத இடமிருக்கிறது. மூவாயிரம் வருடத்துக்கு முன்பு அனுமான் போல ஆறறிவு பெற்றுப் பேசும் குரங்குகள் வாழ்ந்ததற்கு உலக வரலாறுகளில் எந்தச் சான்றுகளும் இல்லை! இராமன் காலத்தில் வாழ்ந்த அசுரர், இராட்சதர் போல் இன்றும் நாம் பயங்கரக் கொலைகாரரைக் காண்கிறோம். ஆறு மில்லியன் யூதர்களைக் கொன்று புதைத்த அடால்ஃப் கிட்லர், விஷ வாயுவிலும் மற்ற வழிகளிலும் பல்லாயிரம் பேரைக் கொன்று குழியில் மூடிய சடாம் ஹுசேன் போன்ற அரக்க வர்க்கத்தினர் உலகில் ஒவ்வொரு யுகத்திலும் பிறந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த அரக்கர் அனைவரும் முழுக்க முழுக்க மனித உருக் கொண்டவரே! யாருக்கும் பத்துத் தலைகளோ, கொடிய தோற்றமோ, வெளியில் நீட்டிய பற்களோ கிடையா! வால்மீகி இராமாயணத்தில் தெய்வீகத் தோரணங்கள், உயர்வு நவிற்சி வித்தைகள், மாய மந்திரங்கள், பத்துத் தலைகள், வெளியே நீட்டிய பற்கள், குரங்கு வாய்கள், வானர வால்கள் ஆகியவற்றை வடிகட்டி, முக்கிய கதா நபர்களை மனிதராக கருதிக் கதை ஓட்டத்தை மானிட நிகழ்ச்சிகளாக மாற்றினால் இராம கதை இனியதாய் சுவைக்கக் கூடிய, நம்பக்கூடிய ஓர் இதிகாசக் காவியமாகப் புத்துயிர் பெற்று எழுகிறது.

உயிரின மலர்ச்சி விஞ்ஞான மேதை சார்லஸ் டார்வின் நியதியைப் பின்பற்றி, இராமர் காலத்தில் வாழ்ந்திருந்தோரை மனிதப் பிறவிகளாகக் காட்டிச் சீதாவின் இரண்டாம் வனவாச சோக வரலாற்றை ஒரு நாடகமாகத் தமிழ் உலகுக்குக் காட்ட விழைகிறேன். இந்நாடகத்தில் வரும் முக்கிய நிகழ்ச்சிகள் வால்மீகி இராமாயணத்தில் காணப்பட்ட மெய்யான சம்பவங்களே! ஆனால் இந்த நாடகத்தின் கதாநாயகி சீதா! சீதாவின் மரணத்துக்கு முக்கிய காரணமான அவள் கணவன் இராமன் இங்கு கதாநாயகனாகக் கருதப் படவில்லை. வாழையடி வாழையாக இராமனைக் கடவுளாக வழிபட்டு வருபவரைப் புண்படுத்துவது இந்நாடகத்தின் குறிக்கோள் அன்று! இராமனை மனிதனாகக் காட்டியதற்கு, இராம பக்தர்கள் என்னை மன்னிக்க வேண்டும். இராமகதையில் அவதாரக் கடவுளாக இராமனை மாற்றியது சரியா அல்லது தவறா என்னும் வாதப் போருக்கு நான் வரப் போவதில்லை! மானிட இராமனைத் தேவனாய் உயர்த்தி மாற்றியவருக்கு இருந்த உரிமைபோல், அவனைக் கீழிறக்கி மீண்டும் மனிதனாய்க் கொண்டுவர எனக்கும் உரிமை உள்ளது என்ற துணிச்சலில் இந்த நாடகத்தை எழுத ஆரம்பித்தேன்.

லவா, குசா சீதைக்குப் பிறந்து இளஞர்களாய் ஆனபின் அரண்மனைக்கு விஜயம் செய்து இராமனுடன் உரையாடியதாக ஒரு வரலாறு உள்ளது! வேறொன்றில் அசுவமேத யாகத்தின் போது லவா, குசா இருவரும் குதிரையைப் பிடித்து இலட்சுமனன், சத்துருகனன், பரதன் ஆகியோரோடு வில் போரிட்டதாக கூறப்படுகிறது. இரண்டு சம்பவங்களும் மெய்யாக நடந்தனவா அல்லது இவற்றில் ஒன்று மட்டும் நிகழ்ந்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இரண்டு நிகழ்ச்சிகளும் அடுத்தடுத்து நேர்ந்திருந்தால், எது முதலில் நடந்தது, எது பின்னால் நடந்தது என்பதும் இராம கதையில் அறிய முடியவில்லை. அதனால் லவா, குசா முதன்முதலில் இராமனைச் சந்தித்தது அரண்மனையிலா அல்லது அசுமமேதப் போரிலா என்னும் குழப்பம் பல வெளியீடுகளைப் படிக்கும் போது எனக்கு ஏற்பட்டது. இந்த நாடகத்துக்காக அசுவமேத யாகத்தை எடுத்துக் கொண்டு, அரண்மனையில் லவா, குசா இராமனைச் சந்தித்த சம்பவத்தை நான் விட்டுவிட வேண்டியதாயிற்று.

ஆசிரமத்தில் இருந்த சீதா தன் கதையை நேராகச் சொல்லியதாலும், வால்மீகி லவா, குசா காண்டத்தில் தானே ஒரு கதா நபராக இருந்ததாலும், இராமகதைச் சம்பவங்கள் எல்லாம் குறிப்பிட்டதாகவும், அழுத்தமாகவும் தெளிவாகவும் உள்ளன. வாலியை இராமன் மறைந்து கொன்றது, மானைப் பிடிக்கப்போய் இராமன் மனைவியை இழந்தது, இலங்காபுரி செல்லப் பாலம் அமைத்தது, சீதாவைப் பற்றி வண்ணான் அவதூறு கூறியது போன்றவை மெய்யாக நடந்த நிகழ்ச்சிகளாகத் தோன்றுகின்றன. கண்ணகி சேரநாட்டு மலையிலிருந்து குதித்து உயிர்விட்டதைத் தெரிந்து, இளவரசர் இளங்கோவடிகள் தகவல் திரட்டிச் சிலப்பத்திகாரக் காவியத்தை எழுதியதை நாமறிவோம். இராம கதையில் சீதாவும் இறுதியில் மலைமேலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டதுபோல் தெரிகிறது. கண்ணகி ஆருயிர்க் கணவனை இழந்தாள்! சீதா ஆருயிர்க் கணவனால் புறக்கணிக்கப் பட்டாள்! இருவரது கோர மரணங்களும் படிப்போர் கண்களைக் குளமாக்கும் கணவரால் நேர்ந்த துன்பியல் காவிய முடிவுகளே!

++++++++++++

நாடக நபர்கள்: சீதா, இராமன், இலட்சுமணன், பரதன், சத்துருக்கனன், வால்மீகி, வசிஸ்டர், விசுவாமித்தர், அனுமான், பத்து அல்லது பன்னிரெண்டு வயதுப் பாலகர்கள்: லவா, குசா மற்றும் வால்மீகியின் ஆண் பெண் சீடர்கள், சேனையாட்கள்….

[துவக்கக் காண்டம்: இலங்கைப் போரில் இராவணனைக் கொன்று சீதாவை மீட்டு இராமன் இலட்சுமணன், அனுமான் படைகளுடன் அயோத்தியா புரிக்கு மீண்டு பட்டத்து அரசனாய் முடி சூட்டப்படுகிறான்]

+++++++++++


முதலாம் காட்சி:


சீதா நாடு கடத்தப்படல்


****

இடம்: அயோத்தியபுரி அரண்மனையில் மாமன்னன் இராமனின் தனி மாளிகை,

நேரம்: பகல் வேளை.

பங்கு கொள்வோர்: இராமன், இலட்சுமணன், பரதன், சத்துருகனன்.

[காட்சி துவக்கம். இராமன் பரபரப்பாகவும், மிக்க கவலையாகவும் இங்குமங்கும் நடந்து கொண்டிருக்கிறான். இலட்சுமணன், பரதன், சத்துருகனன் மூவரும் ஓடி வருகிறார்கள்]

இலட்சுமணன், பரதன், சத்துருக்கனன்: அண்ணா! அழைத்தீர்களாமே! ஏதாவது அவசரப் பணியா ? அல்லது அன்னியப் படையெடுப்பா ?

இராமன்: அவசரப் பணிக்கு உரையாடத்தான் அழைத்தேன். நமது ஒற்றர் தளபதி பத்ரா நேற்றுக் கொண்டு வந்த செய்தி என் வயிற்றைக் கலக்கி விட்டது! கேட்டதும் எனக்கு அவமானமாக இருந்தது. அன்று இராவணன் சீதாவைத் தூக்கிச் சென்ற அதிர்ச்சி விட இச்செய்தி என் நெஞ்சை இருகூறாய்ப் பிளந்து விட்டது! என்ன செய்வது என்று திகைத்தேன். உடனே உங்களை அழைத்து வரச் சொன்னேன். எனக்கும் என் அரச குலத்துக்கும் பெருத்த அவமானம்! என்னுடல் நடுங்குகிறது! இரவு முழுவதும் தூக்க மில்லை! பட்டத்துக்கு வந்ததும் எனக்கு இப்படி ஒரு புகாரா ? இப்போது என்மனம் போராடுகிறது! உங்களிடம் நான் சொல்லத்தான் வேண்டும். … ஆனால் அதை எப்படிச் சொல்வது ?

இலட்சுமணன்: நீங்கள் சொல்வதைப் பார்த்தால் என்குடல் நடுங்குகிறதே! என்ன மனப் போராட்டம் உங்களுக்கு ?

இராமன்: இலட்சுமனா! இந்த மானப்போர் இலங்கை மரணப் போரை விடப் பெரிது! இது அவமானப் போராட்டம்! மயிர் இழந்தால் கவரி மான் உயிரிழக்குமாம்! மானம் இழந்தால் மாந்தரும் உயிரிழப்பராம்! இந்த அவமானத்தைத் தாங்கிக் கொண்டு உங்கள் மன்னர் இன்னும் உயிரோடிருக்கிறார். மறுபடியும் வனவாசம் பற்றிச் சிந்திக்கிறேன்! இரண்டாம் வனவாசம்!

பரதன்: என்ன ? மறுபடியும் கானகம் செல்வதா ? வேண்டாம் அண்ணா ? பதினான்கு ஆண்டுகள் நான் பட்ட மனத்துயர் போதும். அடுத்தும் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. இரண்டாம் தடவை நாட்டை ஆள நான் தயாராகவும் மில்லை.

இராமன்: பரதா!…. இம்முறை …. காட்டுக்கு … நான் போக வில்லை! ஆனால்… வனவாசம் போக வேண்டியது …. உங்கள் அண்ணி! சீதா மீண்டும் கானகம் செல்ல கதவு திறந்து விட்டது விதி! இது எனக்கு வந்திருக்கும் பரீட்சை! எப்படி அதைச் செய்து முடிப்பேன் ?

பரதன்: [ஆத்திரமோடு] அண்ணா! இது கொடுமை! இது அநீதி! இது அக்கிரமம்! என்ன செய்தி வந்தது ? முதலில் அதைச் சொல்லுங்கள் எங்களுக்கு.

இலட்சுமணன்: அண்ணி மீண்டும் காடு செல்வதை நாங்கள் தடுப்போம்! போன முறை மந்தாரை கிழவி மூட்டி வைத்த தீயைக் கையேந்தி, கைகேயி அன்னை உங்களையும் அண்ணியையும் காட்டுக்குத் துரத்தினார். அத்துயர் தாங்காது நம் தந்தை உயிர் நீத்தார்! காரணம் சொல்லுங்கள்! ஏன் அண்ணி நாடு கடத்தப்பட வேண்டும் ?

இராமன்: நான் பட்டம் சூடிய பிறகு நாட்டு மக்கள் என்னைப் பற்றி என்ன பேசிக் கொள்கிறார் என்று பத்ராவை ஒற்றறியச் சொன்னேன். நாடு முழுவதும் சுற்றி வந்து பத்ரா கூறிய செய்தி என்னைத் திடுக்கிட வைத்தது! குடிமக்கள் நல்லதும் பேசினாராம். பொல்லாங்கும் சொன்னாராம். கடல்மீது பாலமிட்டு நான் இலங்கை சென்று இராவணனைக் கொன்று வெற்றி பெற்றதைப் பாராட்டினாராம்! ஆனால்….!

மூவரும்: [ஆர்வமாய்] ஆனால் … அடுத்து… அவர்கள் என்ன சொன்னார்களாம் ?

இராமன்: ஆனால் … சீதாவை மீட்டு வந்து … அரண்மனையில் நான் வைத்திருப்பது அவருக்குப் பிடிக்கவில்லையாம்! மன்னர் சீதாவைக் கண்டிக்காது மாளிகையில் வைத்துக் கொள்ளலாமா என்று என்னைத் தூற்றினாராம்! வேறொருத்தன் மாளிகையில் பல நாட்கள் இருந்தவளை, மன்னர் ஏற்றுக் கொள்வதா என்று கேலி செய்கிறாராம்!

இலட்சுமணன்: அண்ணியைக் கண்டிக்கச் சொல்ல அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது ?

இராமன்: இலட்சுமணா! குடிமக்களுக்கு என்னைக் கேட்கப் பூரண உரிமை உள்ளது! நான் அவரது மன்னன். இராவணன் தொட்டுத் தீண்டியதற்கு சீதாவைக் கண்டிக்க வேண்டுமாம்! நான் தண்டிக்க வேண்டுமாம்!

இலட்சுமணன்: அண்ணியைத் தொட்ட இராவணனைத்தான் கொன்று விட்டோமே! அந்த தண்டனை போதாதா ? அண்ணியைத் தொட்டு இராவணன் தூக்கிச் சென்றது, அண்ணியின் தவறில்லையே! எதற்காக அண்ணியைக் கண்டிக்க வேண்டும் ? ஏன் அண்ணியைத் தண்டிக்க வேண்டும் ? உங்கள் தனிப்பட வாழ்க்கையில் தலையிட, குடிமக்களுக்கு உரிமை யில்லை! உங்கள் சொந்த பந்தங்களை எடைபோட இவர்களுக்கு முதிர்ந்த அறிவும் இல்லை! மூடத்தனமான குடிமக்களின் புகாரை ஓதுக்கி விடுங்கள் அண்ணா! இது சிறிய தொல்லை. இதைப் பெரியதாக எடுத்து வேதனைப்பட வேண்டாம்.

இராமன்: இது பெரிய பிரச்சனை, இலட்சுமணா. இராவணனை மட்டும் தண்டித்தது போதாது. சீதாவையும் நான் தண்டிக்க வேண்டும் என்று குடிமக்களின் சிந்தனையில் இருக்கிறது. …. சீதாவின் தலை முடியைப் பிடித்து, அவளை மடியில் வைத்துக் கொண்டு இராவணன் தூக்கிச் சென்றானாம்!

இலட்சுமணன்: அது அண்ணியின் தவறில்லையே! அதனால் அண்ணியின் புனிதம் போனது என்று

நீங்கள் நினைக்கிறீர்களா ? அதைப் பற்றி உங்கள் தனிப்பட்ட கருத்தென்ன ?

இராமன்: நீ போட்ட கோட்டைத் தாண்டியது சீதாவின் தவறுதான்! ஆனால் சீதாவின் புனிதத்தில் எனக்கு எள்ளளவும் ஐயப்பாடு இல்லை! மீட்கும் போது மனதில் சற்று குழப்பம் இருந்தாலும், சீதாவை ஏற்றுக் கொண்டு அயோத்திய புரிக்கு அழைத்து வந்தேன்!

இலட்சுமணன்: அண்ணா! அண்ணிக்குப் போதிய பாதுகாப்பு அளிக்காது, இராவணன் தூக்கிச் செல்ல வழி வைத்தது நமது தவறல்லவா ?

இராமன்: இல்லை இலட்சுமணா! மானை வழியில் ஓடவிட்டுச் சீதைக்கு வலை விரித்தது இராவணன் சூழ்ச்சி. அதில் நம்மையும், அவளையும் இராவணன் ஏமாற்றி விட்டான்! இளங்குமரி போல் ஆசைப்பட்டு மானைப் பிடிக்க என்னை அனுப்பியது, சீதாவின் முதல் தவறு! என் அவலக்குரல் போன்று எழுந்த போலிக்குரல் கேட்டு அஞ்சி உன்னை அனுப்பியது, சீதாவின் இரண்டாவது தவறு! நீ போட்ட கோட்டைத் தாண்டி இராவணனுக்குப் பிச்சை போட்டது, சீதாவின் மூன்றாவது தவறு!

பரதன்: அண்ணா! கள்வன் சூழ்ச்சி செய்து கன்னியைத் திருடிச் சென்றால், கள்வனைத் தண்டிப்பது நியாமானது! கள்வனுடன் சேர்த்துக் கன்னியையும் தண்டிப்பது எப்படி நீதியாகும் ? கள்வன்தான் குற்றவாளி! இராம நீதி மன்றத்தில் பாதிக்கப்பட்ட கன்னியும் குற்றவாளியா ? குடிமக்கள் புகாரை கேட்டும் கேளாதது போல் புறக்கணிப்பதே முறை.

இராமன்: குடிமக்களைப் புறக்கணிப்பது மன்னருக்கு முறையில்லை, பரதா ? சீதாவின் புனித்ததை நம்பினாலும், புகாரைக் கேட்டபின் மனைவியாக ஏற்றுக் கொள்ள மனம் ஏனோ தயங்குகிறது. அரண்மனை முனிவர்கள் அக்கினிப் பரீட்சை வைக்கச் சொன்னார்கள்! அதை எப்படிச் செய்ய முடியும் ? உயிரோடு கொளுத்தி உடலின் புனிதத்தைச் சோதிப்பது எப்படி ? உடன்கட்டை ஏறுவது போன்றது அக்கினிப் பரீட்சை! அது ஓர் தண்டனை! சோதனை என்பது தவறு! சீதாவின் புனிதத்தை எப்படி அறிவது ? நாட்டுக் குடிமக்களுக்கு எப்படி நிரூபிப்பது ? …. நேற்று வண்ணான் ஒருவன் தன் மனைவியைக் கண்டிக்கும் போது, என்னை இகழ்ந்து பேசி யிருக்கிறான். முந்தைய இரவில் வீட்டுக்கு வராத மனைவியைத் திட்டும் சாக்கில், ‘நேற்றிரவு எங்கேடி படுத்துக் கிடந்தாய் தேவடியா சிறுக்கி ? இராவணன் கூட பல வருடம் இருந்த சீதாவை ஏத்துக்கொண்ட ராம ராஜான்னு என்னை நினைக்காதே! ‘ என்று என்னைக் குத்தி அவளை அதட்டி யிருக்கிறான்! இம்மாதிரி அவச் சொற்களைக் கேட்டுக் கொண்டு எப்படி நான் சும்மா இருப்பது ? அதற்கு முதலில் ஆலோசனை சொல்லுங்கள், எனக்கு.

பரதன்: அண்ணா! முதலில் உங்கள் குழப்பத்தை எப்படித் தெளிவாக்குவது என்று தெரியவில்லை! அண்ணியின் வாக்கை நீங்கள் நம்ப வில்லையா ?

இராமன்: என்மனம் நம்புகிறது. ஆனால் குடிமக்கள் அவளை நம்பவில்லை! ஏற்றுக் கொண்ட என் குணத்தை மீறி, தூற்றிவரும் அவரது துணிச்சலே என்னை வேதனைப் படுத்துகிறது.

சத்துருக்கனன்: அண்ணா! நீங்கள் நம்புவது போதாதா ? குடிமக்களைப் பற்றி நாம் ஏன் கவலைப் படவேண்டும் ? அண்ணி ஓர் உத்தமி. அறிவு கெட்ட தெரு மக்கள் என்ன நினைத்தால் நமக்கென்ன ?

இராமன்: ஆத்திரமடையாதே தம்பி! நான் சீதாவுக்குக் கணவன் மட்டுமில்லை! பட்டம் சூடியபின் பின், குடிமக்களின் செங்கோல் வேந்தன் நான்! எனக்கு முதல் பொறுப்பு குடிமக்கள்! இரண்டாவது பொறுப்புதான் மனைவி! பேரசனாகிய நான் குடிமக்களுக்கு ஓர் உதாரண மனிதனாய்க் காட்ட வேண்டும். மன்னன் எவ்வழி, அவ்வழி மாந்தர் என்பதை அறிந்துகொள். சீதாவைப் போல் அன்னியன் இல்லத்தில் இருந்துவிட்டு வந்தவளை என்னைப் போல் ஏற்றுக் கொண்டு, அவள் பதி அவமானப் படவேண்டுமா என்று கேட்டார்களாம், குடிமக்கள்!

இலட்சுமணன்: அண்ணா! என்ன முடிவுக்கு நீங்கள் வந்துள்ளீர்கள் இப்போது ?

இராமன்: என் இதயம் செய்ய விரும்பாததை என் ஞானம் செய்யத் துணிந்து விட்டது! நெஞ்சைப் பிளக்கப் போகும் ஒரு துயர முடிவுக்கு வந்து விட்டேன்! (கண்களில் கண்ணீர் பொங்க) தம்பி இலட்சுமணா! நீதான் இதை நிறைவேற்ற வேண்டும்! நாளை காலை சீதாவை இரதத்தில் ஏற்றிக் கொண்டு நீ மட்டும் புறப்பட வேண்டும்! குகன் படகில் ஏறிச் சென்று கங்கை நதியின் எதிர்க்கரையில் உள்ள காட்டில் விட்டுவிட்டு வர வேண்டும்! (அழுகை பீறிக்கொண்டு வருகிறது). என் கட்டளையை மீறாதே!

இலட்சுமணன்: (குமுறிவரும் அழுகையுடன்) அண்ணா! இது வஞ்சக முடிவு! நியாயமற்ற முடிவு! என்னால் இந்தப் பாபத்தைச் செய்ய முடியாது! உங்கள் ஆணையை நிறைவேற்ற நான் தயங்குகிறேன். அந்த உத்தமிக்கு இந்தக் கொடுமையை நான் எப்படி இழைப்பது ? அண்ணா! இந்தக் கல்நெஞ்சம் எப்படி வந்தது உங்களுக்கு ? ஏழேழு பிறப்புக்கும், வாழையடி வாழையாய் பெண் பாபம் நம்மை விடாது! இன்னும் பல்லாயிரம் ஆண்டுக்கு இந்தப் பாபத்தின் எதிரொலி கோசல நாட்டை அடித்துக் கொண்டே இருக்கும்! எதிர்காலச் சந்ததிகள் உங்களுக்குச் சாபம் போடும்! இந்த வஞ்சகச் செயலுக்கு உங்களைத் தூற்றும்! ‘

இராமன்: நிறுத்து இலட்சுமணா! போதும் உன் சாபம்! நீ பார்க்கத்தான் போகிறாய்! கோசல நாடு என்னைப் போற்றும்! குடிமக்களுக்கு முதலிடம் தந்து முடிவு செய்யும் என்னை எதிர்காலம் கொண்டாடும்! புதிய இராம இராஜியத்தை நான் உருவாக்குகிறேன். இராம இராஜியத்தில் மன்னரின் சொந்தம், பந்தம், சுயநலம் யாவும் பின்னே தள்ளப்படும்! குடிமக்கள் கோரிக்கைதான் நான் முடிமேல் எடுத்துக் கொள்வேன்! இலட்சுமனா! என் ஆணையை நிறைவேற்று! நீதான் சீதாவைக் கானகத்தில் விட்டுவிட்டு வரவேண்டும்.

பரதன்: அண்ணா! நீங்கள் தரும் இந்த கோர தண்டனை சீதா அண்ணிக்குத் தெரியுமா ?

இராமன்: இதைப் பற்றி எதுவும் நான் சீதாவுக்குச் சொல்லவில்லை! அவளுக்குத் தெரியவே கூடாது. நேரில் சொன்னால் என் நெஞ்சம் வெடித்து விடும்! எங்களுக்குள் பெரிய சண்டை மூளும்! அவள் கண்ணீர் வெள்ளத்தில் நான் மூழ்கி விடுவேன். நீங்களும் அவளிடம் இதைப் பற்றி எதுவும் முன்பே சொல்லக் கூடாது! இது பரம இரகசியமாய் முடிக்க வேண்டிய தண்டனை!

இலட்சுமணன்: அண்ணி உங்கள் தர்ம பத்தினி! மிதிலை மன்னரின் மூத்த புத்திரி! ஒரு மனிதப் பிறவியாகக் கருதி நீங்கள் அண்ணியை நடத்தவில்லை! இது முழு மோசடியாகத் தெரிகிறது எனக்கு! தசரத மாமன்னரின் தவப் புதல்வன் தயங்காமல் செய்த நயவஞ்சகச் சதியாகத் தோன்றுகிறது எனக்கு!

இராமன்: போதும் உன் குற்றச்சாட்டு, இலட்சுமணா! குடிமக்களின் புகாரை நான் பொருட்படுத்தா விட்டால், நாளை யாரும் என்னை நாட்டில் மதிக்கப் போவதில்லை! நீ செய்ய மறுத்தால் நான் பரதனை அனுப்புவேன். பரதன் மறுத்தால் சத்துருக்கனனை அனுப்புவேன். அவனும் மறுத்தால், அனுமானை அனுப்புவேன். அன்னியனான அனுமான், என் அடிமையான அனுமான் என் சொல்லைத் தட்ட மாட்டான்! ஆசிரமத்தைப் பார்க்க அழைத்துச் செல்வதாய்க் கூறி சீதா கூட்டிச் செல்! ஆசிரமத்தைப் பார்க்க அவள் ஒருசமயம் ஆசைப்பட்டுக் கூட்டிச் செல்ல என்னைக் கேட்டதுண்டு. இலட்சுமணா! நாளைக் காலை சீதாவை நீ காட்டில் விட்டு வராவிட்டால், உன் முகத்தில் நான் இனி விழிக்க மாட்டேன்! நான் உன் தமையன் இல்லை, நீ என் தம்பி இல்லை என்று நாட்டில் அறிவித்து விடுவேன்.

(இலட்சுமணன் இடிந்துபோய்த் தரையில் சாய்கிறான். பரதன், சத்துருகனன் இருவரும் கண்ணீருடன் சோகமாய்ப் போகிறார்கள். கவலையோடு இராமன் ஆசனத்தில் பொத்தென அமர்கிறான்)

(முதல் காட்சி முற்றும்)

****

(இரண்டாம் காட்சி தொடரும்)

தகவல்:

1. Bharathiya Vidhya Bhavan Ramayana By C. Rajagopalachari [1958]

2. Valmiki ’s Ramayana, Dreamland Publications, By: Ved Prakash [2001]

3. The Wonder that was India By: A.L. Basham [1959]

Picture Credits: Kishan Lal Verma




காட்சி இரண்டு


வால்மீகி ஆசிரமத்தில் சீதா அடைக்கலம்

[இடம்: கங்கா நதியின் தென்கரை ஓரம்.நேரம்: பகல்.பங்கு கொள்வோர்: சீதா, இலட்சுமணன், குகன், வால்மீகி ஆசிரமத்தின் பெண் சீடர்கள்][அரங்க அமைப்பு: இரத்தில் கங்கையின் வடபுறம் வந்திறங்கிப் பின் குகன் ஓட்டி வந்த படகில் கங்கை நதியைக் கடந்து இலட்சுமணன், சீதா கரையோர தோப்பின் மரநிழலில் தங்குகின்றனர். குகன் சீதாவின் ஆடை, அலங்கார, ஆபரணப் பெட்டியைச் சுமந்து கொண்டு அவர்களுக்குப் பின் தொடர்கிறான்]

இலட்சுமணன்: (சீதாவைக் கும்பிட்டுத் திடீரெனக் காலில் விழுந்து, தழுதழுத்த குரலில் கண்ணீருடன்) அண்ணி! என்னை மன்னிக்க வேண்டும். …. இல்லை! இல்லை! … என்னை மன்னிக்க வேண்டாம். உங்களுக்கு மாபெரும் துரோகத்தைச் செய்து விட்டேன்! துரோகத்துக்கு உடந்தையாக இருந்து, துரோகச் செயலைத் தடுக்க வலுவின்றி, துரோகக் கட்டளைக்கு அடிபணிந்து, பாசமுள்ள உங்களுக்கு வஞ்சகம் செய்து விட்டேன்! … நான் கோழை! … நான் வஞ்சகன்! … என்னை மன்னிக்காதீர்கள்! .. என்னை இறைவன் தண்டிப்பான். செய்யத் தகாத செயலைத் தெரிந்தே செய்து விட்டேன்!

சீதா: (புரியாத விழிகளுடன்) நீ என்ன சொல்கிறாய் ? நீ என்ன வஞ்சகம் செய்துவிட்டாய் ? மன்னிக்கச் சொல்லிப் பிறகு மன்னிக்க மேண்டா மென்று ஏன் மன்றாடுகிறாய் ? ஏன் உடம்பு நடுங்குகிறது ?

இலட்சுமணன்: (காலைப் பிடித்து கொண்டு, மேலே திரும்பி) அண்ணி! அருமை அண்ணி! எப்படிச் சொல்வேன் உங்களுக்கு ? அண்ணனிட்ட தண்டனையை உங்களுக்கு எப்படிச் சொல்வேன் அண்ணி ?

சீதா: உன் அண்ணா, என்ன தண்டனை எனக்கு விதித்திருக்கிறார் ? புரிய வில்லையே. புரியும்படிச் சொல் இலட்சுமணா, சொல்!

இலட்சுமணன்: [நேரே பார்க்காமல் முகத்தைத் திருப்பி தடுமாற்றமுடன்] அண்ணி! உங்களை அண்ணா நாடு கடத்தியுள்ளார்! உங்கள் இதயக் கோயிலில் குடியுள்ள எங்கள் அருமை அண்ணா!

சீதா: [கூர்ந்து நோக்கி] நான் என்ன குற்றம் செய்தேன் ? சுற்றி வளைக்காமல் நேராகப் பேசு!

இலட்சுமணன்: அண்ணி! நீங்கள் எந்தக் குற்றமும் புரிய வில்லை. உங்களை இன்று காட்டில் விட்டுவிட்டு வரவேண்டு மென்று எனக்கு அண்ணாவின் உத்தரவு. கட்டளையை நிறைவேற்றி விட்டேன். போன வனவாசத்தில் நிகழ்ந்த தவறுக்கு, இப்போது புது வனவாசம் உங்களுக்கு! இரண்டாம் வனவாசம்!

சீதா: கட்டளை நிறைவேற்றி விட்டாய்! முதலில் கட்டளை ஏன் பிறந்தது ? ஏதோ நடந்திருக்கிறது. ஏன் மறைத்து மறைத்துப் புதிர் போடுகிறாய் ? மறைக்காமல் நடந்ததைச் சொல் இலட்சுமணா!

இலட்சுமணன்: அன்று கைகேயி சிற்றன்னையின் வரத்தைக் காப்பாற்ற தந்தைக்கு அடிபணிந்து, காடேக ஒப்புக்கொண்டார். இப்போது குடிமக்கள் அவச்சொல்லுக்கு அடிபணிந்து, உங்களைக் காட்டுக்கு அனுப்பத் தண்டனை விதித்திருக்கிறார். அதனால் அண்ணா அவமானப் பட்டாராம்!

சீதா: அவச்சொல்லால் என் பதிக்கு அவமானமா ? குடிமக்கள் என்னைப் பற்றி என்ன அவச்சொல்லை இவருக்குச் சொன்னார்களாம் ? இந்த அவமானத்தை என் பதி எனக்கல்லவா முதலில் சொல்ல வேண்டும் ? நான் சம்பந்தப்பட்ட இந்த அவமானம் எனக்குத் தெரியாமல், முதலில் உங்களுக்குத் தெரிந்திருப்பது இப்போது எனக்கு அவமானமாகத் தோன்றுகிறது. நான் அவரது மனைவியா அல்லது அந்தப்புர பெண்ணடிமையா ? மனைவி அருகில் இருந்தது தெரியாமல் போனது. மதிப்புள்ள மிதிலை நாட்டு மன்னரின் புதல்வி என்பதும் மறந்து போனது. என்னால் ஏற்பட்ட அவமானம் அவரை மட்டுமா தாக்கும்! என்னையும் தாக்கும்! என் தந்தையையும் பாதிக்கும்! என்ன அவமானம் என்னருமைப் பதிக்கு ?

இலட்சுமணன்: அசோக வனத்தில் காலம் தள்ளிய உங்கள் புனிதத்தில் அண்ணாவுக்கு எள்ளளவும் ஐயப்பாடு இல்லை! இலங்கை வேந்தன் சிறையிட்ட உங்களை உத்தமி என்று முற்றிலும் நம்புகிறார். ஆனால் குடிமக்கள் மனதில் உங்கள் மீது தப்பான சந்தேகம் எழுந்துள்ளது. இராவணன் உங்களைத் தொட்டுத் தூக்கிச் சென்றானாம். பல வருடங்கள் அவனது அரண்மனையில் நீங்கள் வைக்கப் பட்டிருந்தீர்களாம்! அண்ணா நம்பித் தன்னுடன் எப்படி அரண்மனையில் வைத்துக் கொள்ளலாம் என்று குடிமக்கள் அண்ணாவைத் தூற்றினார்களாம். இது ஒற்றர் மூலம் அண்ணாவுக்குத் தெரிய வந்தது.

சீதா: [ஆத்திரமாய்] என்ன சொன்னாய் இலட்சுமணா! நான் களங்க மற்றவள். நான் கறை அற்றவள். இராவணன் முரட்டுத்தனமாய்ப் பற்றித் தூக்கிச் சென்றது, ஆத்மாவற்ற இந்த கூடு உடம்பைத்தான். என் ஆத்மா சுத்தமானது. தூய்மையான என் மனக் கோயிலில் இருப்பவர் என் பதி ஒருவர்தான்! இதை நான் எப்படி நிரூபித்துக் காட்டுவது ? இராவணன் பிறர் மனைவியைக் களவாடிய அயோக்கியன்! ஆனால் அவன் கூட என்னைப் பலாத்காரம் செய்யவில்லை! அப்படி ஏதேனும் ஆகியிருந்தால் என்னுயிரை அன்றைக்கே மாய்த்திருப்பேன்! என் ஆத்மா ஏற்றுக் கொண்டு ஒருவரை மணந்தபின், விதியால் பிரிக்கப்பட்டு, மற்றவன் கையால் தீண்டப்பட்டு, அவன் மாளிகையில் வாழ்ந்தேன் என்று ஊரார் ஏசினாலும், உன் அண்ணாவுக்கு என்மேல் நன்னம்பிக்கை இல்லாமல் போனதா ? உண்மையாக உன் அண்ணாவுக்குத்தான் என்மீது நம்பிக்கை யில்லை! அப்படித்தான் எனக்குத் தெரிகிறது. தன் சந்தேகத்தை மறைத்து, ஊரார் புகாரைக் காரணம் காட்டி, அவரது அன்பு மனைவியை ஏன் தண்டிக்கிறார் ? நான் புனிதமானவள் என்பதை நிரூபிக்க முடியாது! நிரபராதி சீதா என்பதை நிரூபிக்கக் கூடிய ஓர் இரக்கமுள்ள அரக்கியனை உன் அண்ணா போர்க்களத்தில் கொன்றுவிட்டார்! நான் புனிதமானவள் என்று முதலில் நம்பினால்தானே, அவர் ஊருக்கு நிரூபிக்க முடியும்! அன்பு மனைவியைத் தண்டித்து, அறிவு கெட்ட குடிமக்களின் அவச்சொற்களை மெய்யென்று காட்டி விட்டார்! தன்மானத்தைக் காப்பதாய்க் காட்டி என் மானத்திற்குப் பங்கம் இழைத்தார்! உன் அண்ணா எனக்குப் பதி! ஆனால் சீதா அவரது மனைவி இல்லை!

இலட்சுமணன்: அப்படி அண்ணாவைத் திட்டாதீர்கள் அண்ணி! ஊர்வாயிக்கு அண்ணா அஞ்சிமனம் நோவது உண்மையே! அதே சமயத்தில் உங்கள் புனிதத்தில் அவருக்குச் சந்தேகமில்லை என்பதும் உண்மையே! அப்படி சந்தேகம் இருந்தால், படை திரட்டிச் சென்று, கடல் கடந்து போரிட்டு உங்களை மீட்க வந்திருப்பாரா ?

சீதா: உடம்பு முழுதும் சந்தேக இரத்தம் ஓடும் உன் அருமை அண்ணா, ஏன் போரிட்டார் தெரியுமா ? சீதாவை மீட்பதற்காகத் தோன்றினாலும் மெய்யாக சீதாவுக்காகப் போரிடவில்லை! கட்டிய மனைவியை மாற்றானிடம் விட்டுவிட்டார் என்று ஏசும் ஊர்வாயை மூடத்தான் போரிட்டார் என்பது இப்போது விளங்குகிறது எனக்கு! அவரது வீர, சூர, விற்தொடுப்பு பராக்கிரமத்தை எடுத்துக் காட்ட ஈழப்போர் ஓர் எதிர்பாராத வாய்ப்பளித்தது! உன் அண்ணாவின் வல்லமைக்குச் சவால்விட்டு இராவணன் என்னைச் சிறை வைத்ததே போருக்கு முக்கிய காரணம்! முதன்முதலாக அசோக வனத்தில் தூதுவன் அனுமானைக் கண்டதும் துள்ளியது என்னுள்ளம்! என்னை மீட்க என்னருமைப் பதி வருகிறார் என்று எல்லையற்ற ஆனந்த மடைந்தேன்! ஆனால் கரை புரண்ட அந்த ஆனந்த வெள்ளம் பின்னால் வரண்டு போனது. இராவணனைக் கொன்று என்னை முதலில் காண வரும்போது, குளமான என் கண்களுடன் அவரை நோக்கி ஓடினேன். என்னைக் கண்டதும் அவர் கால்கள் ஏனோ நின்று முன்னேற வில்லை! எனது நெஞ்சம் பிளந்தது! பெருத்த ஏமாற்றம் எனக்கு! நெருங்கிய என்னை அவர் அணைத்துக் கொள்ளவில்லை! பெருத்த அவமானம் எனக்கு! என் கண்களில் கண்ணீர் வழியும் போது, அவரது கண்களில் வரட்சி எரிந்தது! அந்த வெறுப்பும், புறக்கணிப்பும் அன்றே நான் அவர் கண்களில் கண்டேன்! மனைவியைப் பிரிந்தவர் மீண்டும் கூடும் போது முகத்தில் தெரியும் கனிவும், காதலும், களிப்பும் அவர் கண்களில் நான் காணவில்லை! அந்தப் புறக்கணிப்பை என்னால் மறக்க முடியவில்லை, இலட்சுமணா! அந்த வெறுப்பை என்னால் தாங்க முடியவில்லை ! அன்னியனால் தீண்டப்பட்ட நான் அன்றே அவர் தீண்டத்தகாத மனைவியாகி விட்டேன் ! தீண்டியன் மாளிகையில் பட்ட துயரை விட, தீண்டாமல் காட்டில் புறக்கணிக்கப்பட்ட வேதனை என்னை எரித்துக் கொல்கிறது!

இலட்சுமணன்: இதுவரை இப்படி நீங்கள் பேசக் கேட்டதே யில்லை, அண்ணி! அண்ணாவின் சந்தேகப் பார்வை, உங்கள் மனதில் பச்சை மரத்தாணிபோல் அன்றே ஆழமாய்ப் பதிந்து விட்டதே!

சீதா: உண்மையாக உன் அண்ணா என்னை நேசிக்க வில்லை என்பதை திருமணமான தினத்திலே நான் கண்டு கொண்டேன். என்னைத் திருமணம் செய்து கொள்வதற்காக அவர் மிதிலா புரிக்கு வரவில்லை! வில்லை முறிக்க வந்தார்! தன் கைப்பலத்தைக் காட்டப் போட்டிக்கு வந்தார்! என்மேல் நேசமோ, ஆசையோ கொண்டு மிதிலைக்கு வந்ததாக எனக்குத் தெரியவில்லை! வில்லை முறித்துத் தன் வல்லமையை நிரூபித்தார்! சீதா ஒரு பந்தயப் பரிசு! பந்தயத் பரிசாக என் தங்கையை வைத்திருந்தாலும், அவர் மணந்து அவளை மனைவியாக ஏற்றுக் கொண்டிருப்பார்! சுயம்வர மென்று என் தந்தை எல்லா மன்னரை அழைத்திருந்தாலும் யாரும் எவரைத் தேர்ந்தெடுக்க வில்லை! இதைச் சுயம்வரம் என்று எப்படிச் சொல்வது ? அவரும் என்னைத் தேர்ந்தெடுக்க வில்லை! நானும் அவரைத் தேர்ந்தெடுக்க வில்லை! பந்தயக்காரருக்குப் பரிசின் மேல் கண்ணாகத் தோன்றினாலும், உண்மையில் பந்தயத்தின் மேல்தான் கண்! வெற்றியில் கிடைத்த பரிசு பிறகு வேண்டப்படாமல், தீண்டப்படாமல் கண்ணாடிப் பெட்டியில் அடைபடுகிறது! போட்டிப் பரிசு கறை பிடித்துப்போய் பின்னல் காணாமல் போய்விடுகிறது! பார், என்றைக்காவது உன் அண்ணா, என்னை மனிதப் பிறவியாகக் கருதிக் கலந்து பேசி எந்த முடிவும் இதுவரைச் செய்திருக்கிறாரா ?

இலட்சுமணன்: அது முற்றிலும் உண்மை அண்ணி! உங்களை மனிதப் பிறவியாக அண்ணா கருத வில்லை! இக்கொடும் தண்டனை இடுவதற்கு முன்பு உங்களிடம் ஒரு வார்த்தை சொல்லவில்லை! உங்கள் கருத்தைக் கேட்டு உரையாட வாய்ப்பளிக்க வில்லை! அண்ணாவின் நீதி மன்றத்தில் ஒருபோக்கு, ஒருபக்க வாதமே மட்டுமே தலை விரித்தாடுது! இருபோக்கு வாதம் அண்ணாவுக்குப் பிடிக்காது! வனவாசத் தீர்ப்பை நாங்கள் யாவரும் எதிர்த்தும், தடுத்தும் பயனில்லாமல் போனது, அண்ணி! அண்ணா புரியும் போரில் என்றும் தோற்பதே இல்லை! நாங்கள்தான் தோற்றுப் போனோம்.

சீதா: (குமுறிக் கோவென்று அழுகிறாள்) வனவாசத் தண்டனையை உன் அண்ணாதான் நேரடியாக அறிவிக்க வில்லை! இன்று காலை புறப்படுவதற்கு முன் நீ ஏன் சொல்ல வில்லை ? உனக்கு நான் என்ன கெடுதி செய்தேன் ?

இலட்சுமணன்: ஆமாம், இன்று நானும் சொல்லவில்லை. அண்ணா வஞ்சித்தது போல் நானும் உங்களை வஞ்சித்தது உண்மைதான். நாங்கள் இருவருமே உங்களை வஞ்சித்து விட்டோம். முதலில் உங்களுக்கு சொல்ல வேண்டுமென்று நாங்கள் மன்றாடினோம். அனுமதிக்க மறுத்து விட்டார்! நாங்கள் சொல்லப் போனதையும் தடுத்து விட்டார். காலையில் உங்களுக்குச் சொல்ல எனக்கு வாய்ப்பிருந்தது! சொல்லி யிருக்கலாம்! ஆசிரமத்தைக் காட்டப் போவதாய் அண்ணன் சொல்லியபடிச் சொல்லி உங்களை ஏமாற்றியது உண்மை! நான் அறிந்தே செய்த குற்றத்துக்கு அதனால்தான் என்னை மன்னிக்க வேண்டாம் என்று மன்றாடினேன். அன்று வனவாசத்தில் பதியுடன் களிப்போடு இருந்த உங்களைக் கடத்திப்போய்க் கலங்க வைத்துச் சிறையிலிட்டான், அயோக்கியன் இராவணன்! ஆனால் இன்றைய வனவாசம் வேறு! அரண்மனையில் பதியுடன் ஆனந்தமாக இருந்த உங்களைப் புறக்கணித்து நாடு கடத்திக் கதற வைப்பவரே உங்கள் அருமைப் பதிதான்!

சீதா: காலையில் நீ சொல்லி யிருந்தால், கதையே மாறிப் போயிருக்கும்! நான் அவரோடு போராடி இருப்பேன்! நீ யார் பக்கம் சேர்ந்திருக்கிறாய் என்பதே எனக்குத் தெரியவில்லை. பார்த்தால் நீங்கள் எல்லோரும் என்னைப் போல் உங்கள் அண்ணாவின் அடிமை! என் பக்கக் கதையைக் கேட்க உன் அண்ணாவுக்குத்தான் அறிவில்லை! நெறியில்லை! நினைவு மில்லை! பராக்கிரமப் பதிக்கு என்னிடம் பேசப் பயமா ? அல்லது இவளிடம் என்ன பேச்சு என்ற புறக்கணிப்பா ? நீங்கள் எல்லாம் உன் அண்ணாவின் பக்கம். யாராவது ஒருவர் எனக்காகப் போராடி உங்கள் அண்ணாவை எதிர்த்தீர்களா ?

இலட்சுமணன்: நாங்கள் எல்லோரும் உங்களுக்காக வாதாடினோம். ஒரு பலனும் இல்லை. அண்ணனை மாற்ற முடியவில்லை. ஊர்வாயிக்கு அஞ்சி, உங்களை நாடு கடத்துவதில் ஒரே பிடிவாதமாக இருந்தார், அண்ணா.

சீதா: வாழ்க்கை முழுவதும் எனக்கு அடிமை வாழ்வுதான்! காட்டுக்கு வா வென்றால் வர வேண்டும்! போ வென்றால் போக வேண்டும்! வேண்டாம் என்றால் நான் விலக்கப்பட வேண்டும்! இன்று இல்வாழ்வில் நான் விலக்கப்பட்டவள்! எந்த விதத் திருமண ஒப்பந்தமும் இல்லாத சுயம்வரப் போட்டியில் கிடைத்த பரிசு முடிப்புதானே நான்! யாரிடம் போய் முறையிட்டு உன் அண்ணா செய்தது சரியா அல்லது தவறா என்று நான் நீதி கேட்பது ?

இலட்சுமணன்: உங்களுக்கு அண்ணா செய்தது அநீதி! அவரது ஆணையைக் கண்மூடி நிறைவேற்றிய நான் மெய்யாக ஒரு கோழைதான்!

சீதா: வாழ்க்கை முழுதும் நான் துயருற்று மனமுடைய வேண்டுமென்று விதி எழுதி விட்டது! நான் சோகத்தின் வடிவம்! நான் பாபத்தின் பிம்பம்! என்னால் என் பதிக்கு அவமானம் வேண்டாம். என்னால் கோசல நாட்டுக்குக் கெட்ட பெயர் வேண்டாம். நான் கங்கை நதியில் விழுந்து … இப்போதே உயிரை மாய்த்துக் கொள்ளலாம். …. ஆனால் உன் அண்ணாவின் …. குலவிளக்கு என் வயிற்றில் வளரும் போது, …. நான் அப்படிச் சாக மாட்டேன். என் அற்ப உயிரை மாய்த்து, உயிருள்ள என் கர்ப்பச் சிசுவைக் கொல்ல மாட்டேன். … அதுதான் மாபெரும் பாபம்! ஆனால் அறிவுகெட்ட உன் அண்ணாவிடம், எதையும் சந்தேகப்படும் உன் அண்ணாவிடம் என் வயிற்றில் வளரும் சிசுவைப் பற்றி எதுவும் சொல்லாதே! என் சிசுவுக்காக நான் தனியே காட்டில் வாழப் போகிறேன். குடிமக்கள் புகாரிட்டாலும் என் உயிரை அழிக்கமாட்டேன்! என் வயிற்றில் வாழும் சிசு அவரது மானத்தை விட மேலானது! நெறிகெட்ட உன் அண்ணாவிடம் என் கர்ப்பத்தைப் பற்றிச் சொல்லாதே!

இலட்சுமணன்: ஆ! என்ன ? … அண்ணி… நீங்கள்…! தாய்மை அடைந்த செய்தி ஆனந்தச் செய்தியல்லவா ? அரண்மணையில் ஆனந்தமாக இதைக் கொண்டாட வேண்டிய வேளையில் உங்களைத் திண்டாட வைத்துக் காட்டில் தனியே விட்டு போகிறேனே! இறைவா! என்ன கொடுமை இது ? அண்ணன் ஒருவரைக் காட்டுக்கு அனுப்புவதாக நினைத்தார்! உண்மையில் இருவரை நாடு கடத்தி இருக்கிறார். வயிற்றில் வளரும் அவரது குலவிளக்கையும் சேர்த்து அனுப்பி விட்டார்! அண்ணி! உங்கள் இருவரையும் தனியே இந்த நடுக்காட்டில் எப்படி விட்டுச் செல்வேன் ? என் மனம் இடங் கொடுக்கவில்லை அண்ணி! நானும் இங்கேயே தங்கி உங்களுக்குப் பாதுகாப்பாய் இருக்க முடிவு செய்து விட்டேன். அன்று வனவாசத்தில் உங்களுக்குத் நான் துணையாக இருந்ததுபோல் இப்போதும் அருகில் இருப்பேன்!

சீதா: வேண்டாம். நீ சிந்தித்ததான் பேசுகிறாயா ? அன்று வனவாசத்தில் என்னருகில் உன்னருமை அண்ணா இருந்தார். இப்போது நீ மட்டும் என்னுடன் தனியாக வசித்தால், அயோத்திபுரிக் குடிமக்கள் என்ன பேசிக் கொள்வார் ? இராவணன் கூட இருந்தவள், இப்போது இலட்சுமணன் கூட வாழ்கிறாள் என்று முத்திரை குத்திவிடும். அது உங்கள் அண்ணாவுக்குக் கொடுக்கும் அடுத்த அதிர்ச்சியாக இருக்கும். நான்தான் அவமானப் படுத்தினேன் உன் அண்ணாவை! நீயுமா அவரை அவமானம் செய்ய வேண்டும்! என் கணவரே என்னைக் கைவிட்ட பிறகு இனி உன் உதவி எனக்கு எதற்கு ? முன்பு வனவாசத்தில் இருந்த போது என்மீது உனக்காசை என்று உன்மீது எனக்கே சந்தேகம் வந்துவிட்டது! அதைச் சொல்லி உன்னை நான் திட்டியும் இருக்கிறேன். போதும் உன் உதவி! எரிச்சலை உண்டாக்காதே. நான் தனியாக இந்தக் காட்டில் பிழைத்துக் கொள்வேன். போ இலட்சுமணா போ, ஒழிந்து போ! என்முன் நில்லாதே! (கத்திக் கொண்டு அலறி மயக்கமுற்றுத் தரையில் விழுகிறாள்).

இலட்சுமணன்: அண்ணி! பக்கத்தில் வால்மீகி முனிவரின் ஆசிரமம் உள்ளது. பெண்சீடர்களின் குரல் கேட்கிறது. தந்தை தசரத மகாராஜாவின் பழைய நண்பர் அவர். அங்கே போய் தங்கிக் கொள்ளுங்கள்.

[சீதாவுக்கு மயக்கமும் வாந்தி வருகிறது. அதைக் கண்ட பெண்சீடர்கள் ஓடி வருகிறார்கள். வயதான ஒருத்தி சீதாவை மடியில் கிடத்தி முகத்தையும், அவள் உடம்பையும் கூர்ந்து நோக்குகிறாள். ஒருத்தி முகத்தில் நீரைத் தெளித்து, வாயில் நீரூற்றிக் கொப்பளிக்க வைக்கிறாள்]

மூத்த சிஷ்யை: (இலட்சுமணனைப் பார்த்து) நீங்கள் இப்பெண்ணின் கணவரா ? உங்கள் மனைவியைப் பார்த்தால் கர்ப்பவதி போல் தெரிகிறதே! எங்கள் வால்மீக முனிவரின் ஆசிரமம் அருகிலேதான் உள்ளது.

சிறிது நேரம் நீங்கள் இருவரும் தங்கிச் செல்லலாம். இந்தப் பெண் இனி பயணம் செய்யக் கூடாது.

இலட்சுமணன்: அவர்கள் எனது அண்ணனின் மனைவி. நீங்கள் என் அண்ணியை மட்டும் கூட்டிச் செல்லுங்கள். நான் இப்போது வரமுடியாத நிலையில் இருக்கிறேன். சூரிய அத்தமனமாவதற்கு முன்பு நான் அவசரமாக அயோத்திய புரிக்கு மீள வேண்டும். கொஞ்ச காலம் அண்ணி மகரிஷி வால்மீகி ஆசிரமத்தில் வாழட்டும். பின்னால் என் அண்ணாவே நேராக வந்து அண்ணியை அழைத்துச் செல்வார்.

[இலட்சுமணன் சீதாவின் காலைத் தொட்டு வணங்கிப் படகு நோக்கிச் செல்கிறான். குகனும் காலைத் தொட்டு வணங்கிய பின் உடை, அலங்காரப் பெட்டியைப் பெண்சீடர்களிடம் கொடுத்து விட்டுப் பின் தொடர்கிறான்]

++++++++++




காட்சி மூன்று


ஆசிரமத்தில் லவா, குசா இரட்டையர் பிறப்பு

இடம்: வால்மீகி முனிவரின் ஆசிரமம்.நேரம்: மாலைஅரங்க அமைப்பு: வால்மீகி இராமகதையை எழுத்தாணியால் ஓலைச் சுவடியில் எழுதிக் கொண்டிருக்கிறார். அப்போது பெண்சீடர்கள் சீதாவை மெதுவாகத் தாங்கிக் கொண்டு உள்ளே நுழைகிறார்கள். வால்மீகி எழுதுவதை நிறுத்தி எழுந்து சென்று வரவேற்கப் போகிறார்.

பெண்சீடர்கள்: மகரிஷி! காட்டில் மயக்கமுற்ற இந்தப் பெண்ணை நாங்கள் அழைத்து வந்தோம். இந்தப் பெண்மணி ஒரு கர்ப்பிணி மாது. பார்த்தால் பெரிய வீட்டைச் சேர்ந்தவர் போல் தெரிகிறது. யாரென்று எங்களுக்குத் தெரியவில்லை. இங்கே சிறிது காலம் தங்க வைக்கலாமா ? அவருக்கு இப்போது யாருமில்லை! ஆனால் அவரது கணவர் சிறிது காலம் கழித்து அழைத்துச் செல்ல இங்கு வருவாராம்.

வால்மீகி: (சற்று உற்று நோக்கி) …. எனக்குத் தெரியும் இந்த மாது யாரென்று! கோசல நாட்டு மகாராணி சீதாதேவி. மாமன்னர் இராமனின் தர்ம பத்தினி. மிதிலை நாட்டு மன்னரின் மூத்த புத்திரி! ஓய்வெடுக்க உள்ளே அழைத்துச் செல்லுங்கள். சீதாதேவியைக் காட்டிலே தனியாகவா கண்டார்கள் ? …. கோசல நாட்டு மகாராணி கானகத்து வரக் காரணம் என்ன ?

சீடர் அனைவரும்: (ஒருங்கே) மதிப்புக்குரிய மகாராணி சீதாதேவியாரா ? (எல்லாரும் கைகூப்பி வணங்குகிறார்கள்). எங்களுக்கு முதலில் தெரியாமல் போனதே! … (சிஷ்யைகளில் ஒருத்தி) மகரிஷி! அவர் கிடந்த நிலையைப் பார்த்தால் எங்களுக்குப் பரிதாபமாக இருந்தது! தாயாகிய மகாராணிக்குப் பணிவிடைகள் செய்ய அரண்மனைச் சேடியர் யாருமில்லை! காட்டில் விடப்பட்டுத் தனியே விழுந்து கிடந்தார். (இருவர் மட்டும் சீதாவை உள்ளே அழைத்துச் செல்கிறார்கள்). (சிஷ்யைகளில் ஒருத்தி) அவர் தனியாக வரவில்லை. உடனிருந்தவர் இரண்டு நபர்கள். மகாராணியாரின் கொழுந்தன் ஒருவர்! மற்றொருவர் படகோட்டி போல் தெரிந்தது. விட்டுச் சென்ற இருவரும், மகாராணியார் காலைத் தொட்டுக் கும்பிடும் போது எங்களுக்கு யாரென்று தெரியாமல் போனது. யாரென்று கேட்கவும் தவறி விட்டோம், மகரிஷி! மகாராணியாரின் கொழுந்தன்தான் எங்களிடம் ஒப்படைத்து விட்டுச் சென்றார்.

வால்மீகி: சீதாவை அழைத்து வந்த கொழுந்தன் யாரென்று தெரியவில்லை ? பரதனா ? இலட்சுமணனா ? அல்லது சத்துருக்கனனா ? கங்கை நதியில் படகோட்டியவன், குகனாக இருக்க வேண்டும். எதற்காக சீதாதேவியைக் காட்டில் விட்டுச் சென்றார்கள் ?

சீதா: (படுத்திருந்தவள் மயக்கம் மெதுவாக தெளிந்து எழுந்து கொண்டு) …. நான் … இப்போது … எங்கிருக்கிறேன் ?

வால்மீகி: … அஞ்ச வேண்டாம் சீதா! … என் ஆசிரமத்தில்தான் இருக்கிறாய். நான் வால்மீகி முனிவர். இவர்கள் யாவரும் ஆசிரமத்தில் பயிலும் என் சீடர்கள். உன் மாமனர் தசரதச் சக்கரவர்த்தி எனக்கு மிகவும் வேண்டியவர். உன் தந்தை மிதுலை நாட்டு மன்னரும் எனக்குத் தெரிந்தவர். மன்னர் உனக்குச் சுயம்வர நடத்தியது, வில்லை முறித்து இராமன் உன்னைத் திருமணம் செய்தது, நீங்கள் வனவாசம் செல்ல நேர்ந்தது, இலங்காபுரிக்கு உன்னை இராவணன் கடத்திப் போனது, போரில் அவனைக் கொன்று நீ மீட்கப் பட்டது, அயோத்தியா புரியில் இராமன் பட்டம் சூடியது எல்லாம் எனக்குத் தெரியும். …. ஆனால் எனக்குத் தெரியாதது, நீ இப்போது காட்டில் விடப்பட்ட காரணம்! … அதுவும் தாய்மை நிலையில் உன்னைத் தனியாக விட்டுப் போன காரணம்!

சீதா: (மெதுவாக எழுந்து … காலைத் தொட்டு வணங்கி) மகரிஷி! எனக்குப் புகலிடம் அளித்த உங்களுக்குக் கோடி புண்ணியம். என்னைக் கனிவுடன் அழைத்துவந்த உங்கள் சீடர்களுக்கு நான் கடமைப்பட்டவள். ஆசிரமத்தைக் காட்டுவதாக என்னை அழைத்து வந்தவர், கொழுந்தன் இலட்சுமணன். என்னைச் சீடர்கள் வசம் ஒப்படைத்துச் சென்றவரும், அவரே.

வால்மீகி: ஆச்சரியப்படுகிறேன். உனது வருகையை யாரும் எனக்குத் தெரிவிக்க வில்லையே. தெரிந்தால் நானே நேராக உங்களை வரவேற்க வந்திருப்பேன். மாமன்னர் இராமன் உன்னை ஏன் அழைத்து வரவில்லை ? முன் கூட்டியே எனக்கு ஏன் அறிவிக்கவில்லை ? எதற்காக உன்னைத் தனியாக விட்டுச் சென்றார் இலட்சுமணன் ? எனக்கு ஒன்றும் புரியவில்லை.

சீதா: அது ஒரு பெரும் கதை, மகரிஷி! பட்டம் சூடிய என் பதிக்குப் பல அரசாங்கப் பணிகள்! கோசல நாட்டுக் குடிமக்களின் புகார்கள்! தங்களுக்கு அவற்றைத் தனியாகச் சொல்ல விரும்புகிறேன்.

வால்மீகி: சீடர்களே! உங்கள் அறைகளுக்குச் செல்லுங்கள். போகும் போது கதவை மூடிச் செல்லுங்கள். (கதவை மூடிச் சீடர்கள் வெளியேறுகிறார்கள்)

சீதா: (கண்ணீருடன் அழுகை முட்டிக் கொண்டு வர) மகரிஷி! … எப்படிச் சொல்வேன் என் அவல நிலையை! …. என் இல்வாழ்க்கை மீண்டும் முறிந்து போனது! முதல் வனவாசத் தண்டனையின் மனப்புண் ஆறுவதற்குள், இரண்டாம் வனவாசத் தண்டனை எனக்கு! என்னைப் புறக்கணித்து நாடு கடத்தி விட்டார் ..என்னுயிர்ப் பதி! (கதறி அழுகிறாள்).

வால்மீகி: (பேராச்சரியம் அடைந்து) என்ன ? மாமன்னர் உன்னை மணவிலக்கு செய்து விட்டாரா ? அன்று வனவாசத்தில் நீ பட்ட இன்னல் போதாதா ? இப்போது உனக்கு ஏன் இரண்டாம் வனவாசம் ? மீட்டு வந்த உன்னை மீண்டும் காட்டுக்கனுப்ப எப்படி மனம் வந்தது மன்னருக்கு ? உன்மேல் சுமத்திய குற்றம்தான் என்ன சீதா ? எனக்குப் பெரும் புதிராக இருக்கிறது!

சீதா: மகரிஷி! காட்டில் விடப்பட்டதற்கு மெய்யான காரணம் என்ன என்பது எனக்குத் தெரியாது. என் பதி அதைப் பற்றி என்னிடம் எதுவும் சொல்ல வில்லை! வாயிருந்தும் நான் வாதாட முடிய வில்லை! காதிருந்தும் அந்தக் காரணம் என் காதில் விழவில்லை! வைராக்கியம் இருந்தும் நான் போராட வழியில்லை! என் பக்க நியாயத்தைக் கூற ஒரு நீதி மன்றமும் இல்லை! எனக்குத் தெரியாமலே என் பதி செய்த சதி! முதல் வனவாசத்துக்குக் காரணம் என் விதி! ஆனால் இரண்டாம் வனவாசத்துக்குக் காரணம் என் பதி! இன்று இலட்சுமணன் என்னிடம் கூறிய காரண மிது. காட்டில் விட்டுச் சென்ற சில மணி நேரத்துக்கு முன்புதான் எனக்கே காரணம் தெரிந்தது. கடத்திச் செல்லும் போது இராவணன் என் மயிரைப் பிடித்து இழுத்துச் சென்றானாம்! வாகனத்தில் என்னை மடிமீது வைத்து தூக்கிச் சென்றானாம்! பல வருடம் வேறொருவன் இல்லத்தில் இருந்தவளை பதியானவர் எப்படி ஏற்றுக் கொள்ளலாம் ? சகித்துக் கொண்டு என் பதி அரண்மனையில் எப்படி வைத்துக் கொள்ளலாம் என்று குடிமக்கள் கேலி செய்தார்களாம்! என் பதிக்கு அப்புகார் பெருத்த அவமானமாய்ப் போனதாம்! ஆனால் என் கணவருக்கு என்மீது எந்தவிதச் சந்தேகமும் இல்லையாம்!

வால்மீகி: அட ஈஸ்வரா! என்ன கொடுமை இது ? தெருமக்களின் கேலிக்கும், புகாருக்கும் ஓர் மாமன்னன் செவி சாய்ப்பதா ? மன்னனை மக்கள் அவதூறு பேசுவதைத் தவிர்க்க முடியாது! ஆனால் அதுவே சரியென்று தன்னுயிர் தர்ம பத்தினியைக் காட்டுக்கு அனுப்புவதா ? கொடுமை! கொடுமை!! தாங்க முடியாத கொடுமை!!! இராம கதையே திசை மாறிப் போயிற்றே!

சீதா: முதலில் வனவாசம் போவதற்கு முன்பும் அவர் ஒரு வார்த்தை என்னிடம் சொல்லவில்லை! பதினாங்கு வருடம் கானகம் போக வேண்டும் என்றார். ஆட்டுக் குட்டிபோல் அவர் பின்னால் சென்றேன்! தந்தை சொல் தட்டாத தனயன் என்று புகழ் பெற்றார். மனைவியை அடிமைபோல் நடத்துவது ஊரில் யாருக்குத் தெரியும் ? இரண்டாம் தடவை வனவாசம் தள்ளப்பட்டது முன்னைவிட மோசம். காட்டுக்குப் போவென்று கூட எனக்குக் கட்டளை இடவில்லை! சீதாவைக் காட்டில் விட்டுவிட்டு வந்துவிடு என்று தம்பிக்கு இரகசிய உத்தரவு! உருகிடும் உள்ளம் படைத்தவர் என் பதி! எப்படி நேராக மனைவிக்கு இந்தக் கோர தண்டனையைத் தருவது என்று மனம் தாங்காமல், தம்பிமார் காதில் மட்டும் சொல்லி யிருக்கிறார். யாருக்கும் தெரியாமல் நாடு கடத்தி என் மானத்தை ஓரளவு காப்பாற்றி யிருக்கிறார்! உத்தம குணமுடையவர் என் கணவர்! வால்மீகி: அப்படித்தான் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன் சீதா. என் கருத்தை மாற்றிக் கொள்ளும் வேளை வந்து விட்டது! உத்தம புத்திரனாய்ப் புகழ் பெற்ற மாமன்னர், உத்தம கணவராகவும் இருப்பார் என்று சொல்ல முடியாது போலிருக்கிறது! சீதா: இராவணன் என்னைத் தொட்டுத் தூக்கிச் சென்றது உண்மை! ஆனால் அவன் என்னை பலவந்தப் படுத்தவில்லை! அப்படி ஆகியிருந்தால் நான் அன்றே உயிரைப் போக்கி என் மானத்தைக் காத்திருப்பேன். இப்போது என் மதிப்பை, மானத்தை என் பதி நசுக்கினாலும், உயிரை நான் மாய்த்துக் கொள்ளப் போவதில்லை! காரணம், என் வயிற்றில் வளர்ந்து வரும் என் பிரபுவின் குலவிளக்கு. மகரிஷி! இராவணன் எனக்கிழைத்த தீரா அவமானத்தையும் தாங்கிக் கொண்டு வாழ விரும்புகிறேன் நான். இனியும் குழந்தை பெற்றுக் கணவரோடு மனைவியாய் நெடுங்காலம் வாழ விரும்புகிறேன் நான். அப்படிக் கனவு காண்கிறேன்! ஆனால் அது நடக்கக் கூடியதா ? ஒன்றாய் வாழத் தவம் செய்தவளுக்குப் பதி இரண்டகம் செய்து விட்டார்! பதியிடமிருந்து இராவணன் என்னைத் தற்காலியமாகப் பிரித்தான்! ஆனால் பதியிடமிருந்து இப்போது நிரந்தரமாகப் பிரித்தது யாரென்று நினைக்கும் போது, என் நெஞ்சில் தீப்பற்றி எரிகிறது! (கோவென்று கதறி அழுகிறாள்).

வால்மீகி: …. சீதா! எனக்கொரு யோசனை தோன்றுகிறது. சொல்லட்டுமா ? நானே உன்னை இராமனிடம் அழைத்துச் சென்று, புனிதமானவள் என்று எடுத்துச் சொல்லி மறுபடியும் சேர்த்துவிடவா ? நான் சொன்னால் மன்னர் கேட்பார்! உங்கள் இருவரையும் மீண்டும் சேர்த்து வைக்க வேண்டு மென்று என்மனம் துடிக்கிறது. அப்படிச் செய்வது உனக்கு விருப்பமா ?

சீதா: அது என் விருப்பம்தான், மகரிஷி! ஆனால் அது நடக்காது. வேண்டாம், அந்த முயற்சி! பிறன் கைபட்ட மனைவிக்கு இனி இல்லற மில்லை! வேண்டாத பதியின் வீட்டு நிலை கூட இடிக்கும்! தனியாக, இருப்பதுதான் எனக்கு மதிப்பு! அவமானப் பட்டவள் மாண்டு போவது நிம்மதி. ஆனால் உயிரை மாய்த்துக் கொள்ளும் துணிச்சல் இப்போது எனக்கில்லை. பதியின் புறக்கணிப்புத் தினமும் நெஞ்சைக் கரையான் போல் அரித்து வருகிறது! கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டுவரக் கட்டளை யிட்டபின், கணவர் முகத்தில் நான் இனி எப்படி விழிப்பேன் ? எனக்குத் தன்மானம் இருக்கிறது. அவமானத்தைக் கொடுத்த எனக்கு, அரண்மனைக் கதவுகள் இனிமேல் திறக்கப்பட மாட்டா! தனியாக இந்த வனவாசத்தில் காலம் தள்ளி மன வேதனைப் பட்டே தினமும் சிறிது சிறிதாகச் சாக வேண்டியதுதான்! குழந்தை பிறக்கும்வரை நான் எப்படியும் பிழைத்திருக்க வேண்டும். இந்த வனவாசத்தில் என்னை மீட்க இனி யாரும் வரப் போவதில்லை! … மகரிஷி! எனக்குத் தந்திருப்பது ஆயுள் தண்டனை! இராவணன் கொடுத்த சிறைத் தண்டனையை விடக் கோரமான ஆயுள் தண்டனை! இதிலிருந்து யாரும் என்னை விடுவிக்க முடியாது!

வால்மீகி: தாயாகும் நீ இந்தச் சமயத்தில் அரண்மனை வாசியாக வாழ்வதே மேல். நீ விரும்பினால், உன்னை மிதிலாபுரிக்கு அழைத்துப்போய் உன் தந்தையிடம் சேர்த்து விடுகிறோம்.

சீதா: வேண்டாம் மகரிஷி! நாடு கடத்தப் பட்டு நான் ஆசிரமத்தில் இருப்பது என் தந்தைக்குத் தெரிய வேண்டாம். காரணம் தெரிந்தால் மிகவும் வேதனைப் படுவார்! பதிமீது சீறி எழுவார்! சினங்கொண்டு என் பதியிடம் உடனே சண்டைக்குப் போவார்! கோசலபுரி மீது போர் தொடுக்கவும் தயங்கமாட்டார். மேலும் மிதிலாபுரிக் குடிமக்கள் என்ன சொல்வார்கள் ? மானம் கெட்டுப் போனவள் பதியால் துரத்தப் பட்டு பிறந்த நாட்டுக்கு ஓடி வந்தவள் என்று ஏசுவார்! கோசல நாட்டில்தான் என்னால் என் பதிக்கு அவமானம்! மிதிலா புரியில் என் தந்தைக்கும் என்னால் அவமானம் வர வேண்டுமா ?

வால்மீகி: சீதா! நீ வாழ வேண்டும். மரணத்தைப் பற்றி நினைக்காதே. இளமை பொங்கும் நீ நீண்ட காலம் வாழ வேண்டும். இந்த ஆசிரமத்தில் உனக்கு எப்போதும் இடமுண்டு! உனக்கு எல்லா வசதிகளும் இங்கு இருக்கின்றன. ஆசிரத்தில் பெண் மருத்துவர் இருக்கிறார். உன் உடல் நலத்தையும், சிசுவின் நலத்தையும் கண்காணிப்பார். கவலைப் படாதே! குழந்தையைப் பெற்று அதை ஆளாக்கு. கல்வி புகட்டி குழந்தைக்குப் பயிற்சிகள் அளிப்பது என் பொறுப்பு.

சீதா: மிக்க நன்றி மகரிஷி. அரண்மனை கைவிட்டாலும், ஆசிரமம் ஆதரவளிப்பது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. உங்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன் ? இங்கே சும்மா இருக்காமல், உங்கள் ஆசிரமப் பணிகளைச் செய்கிறேன். சிறு பாலர்களுக்குக் கல்வி புகட்டுகிறேன். அத்துடன் நான் இதுவரைப் படிக்காத வேதங்களை உங்களிடம் படிக்க விரும்புகிறேன்.

வால்மீகி: சீதா! பிறவிப் பயனென்று நான் கருதும் என் படைப்பைப் பற்றி உனக்கு நான் சொல்ல வேண்டும். இராம கதையை நான் மாபெரும் காவிய நூலாக எழுதி வருகிறேன். நேராக நீயே ஆசிரமத்தில் புகுந்தது எனக்கு நல்லதாய்ப் போனது. உங்கள் வனவாசக் காண்டத்தை இப்போது எழுதிக் கொண்டிருக்கிறேன். நீ ஆசிரம வாசியாக வந்திருப்பதால், என் இராமகதை மெய்யான வரலாற்றுக் காவியமாக உயிர்த்தெழப் போகிறது. உயிரற்ற என் நூலுக்கு உண்மையான உனது திருவாய் மொழி ஆத்மாவை ஊட்டப் போகிறது. இராமாயணம் என்னும் பெயரை அதற்கு வைத்திருக்கிறேன். என் காவிய நூலுக்கு இன்னும் பல விபரங்கள், விளக்கங்கள் வேண்டும். எனக்குத் தெரியாத தகவலை நீ சொல்ல வேண்டும். ஏழு அல்லது எட்டுக் காண்டங்களில் இராம கதை முடியும் என்று நினைக்கிறேன். அயோத்தியா காண்டம், வனவாசக் காண்டம், இலங்கைக் காண்டம் ஆகியவற்றில் பல பகுதிகள் இன்னும் நிரப்பப்பட வேண்டும். பதி உன்னைக் காட்டுக்கு அனுப்பியது இராமாயணக் காவியம் பூர்த்தியாகவோ என்று நான் நினைக்கிறேன்! மெய்யான நிகழ்ச்சிகளைத் துல்லியமாகக் கூற, உன்னை இங்கே அனுப்பியது விதி என்று சொல்வேன்! எல்லாம் ஆண்டவன் செயல். இராமாயணத்தில் இதுவரை நான் எழுதிய ஓலைகளை நேரமுள்ள போது, நீ சரிபார்க்க வேண்டும். தவறுகள் இருப்பின் தயங்காமல் கூறு! நான் அவற்றைத் திருத்திக் கொள்வேன். மேலும் ஆசிரமத்தில் புதியதாகச் சேரும் சீடர்களுக்கு நீ கல்வி புகட்டலாம். நீ விரும்பும் வேதங்களைச் சொல்லிக் கொடுப்பது என் பொறுப்பு.

சீதா: உங்கள் பணியை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்கிறேன், மகரிஷி. உங்கள் வரலாற்றுப் படைப்பான இராம கதைக்கு என் கசந்த வாழ்க்கையும், நேரடிப் பங்களிப்பும் உதவி செய்ய முடியும் என்று கனவிலும் நான் கருதவில்லை. இரண்டாம் வனவாசத்தில் என் குழந்தை பிறக்கவும், மகரிஷி மூலம் நான் வேதக் கல்வி பயிலவும், இராம காவியத்தை முடிக்கவும் வாய்ப்புக் கிடைக்கப் போவது அறிந்து ஒரு வகையில் எனக்கு மகிழ்ச்சியே!

வால்மீகி: சீதா! நீ இன்று ஓய்வெடுத்துக் கொள். நாளை முதல் இராமகதை எழுதும் கூட்டுப் பணியைத் துவங்குவோம். இராமகதை வரலாற்றுக் காவியமாக அமைய இறைவன் எனக்களித்த வாய்ப்பை என்ன வென்று சொல்வது! (வால்மீகி மகிழ்ச்சியுடன் வெளியே செல்கிறார்)

[சில மாதங்கள் கழித்து ஆசிரமத்தில் சீதாவுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறக்கின்றன. வால்மீகி முனிவர் முதலில் பிறந்த பையனுக்கு குசா என்றும், இரண்டாவது பிறந்த பையனுக்கு லவா என்றும் சூட்டுகிறார். லவா, குசா இருவரும் குருகுலவாசப் பாடசாலையில் குரு வால்மீகியின் நேர்பார்வையில் கல்வி, ஒழுக்க நெறி, யோகா உடற்பயிற்சி, மனப்பயிற்சி, வில்பயிற்சி, வாள்பயிற்சி, சூலாயுதப் பயிற்சி, குதிரை ஏற்றம் போன்றவற்றைக் கற்றுக் கொள்கிறார்கள். இறுதியில் இரட்டை இளைஞர் வில்பயிற்சியில் மேதமை அடைந்து, வயது வந்தோரையும் வீழ்த்திடும் திறமை பெறுகிறார்கள். அன்னை சீதா சிறுவர் மீது தீராத அன்பைக் பொழிந்து, அவளது வாழ்க்கையிலும் புது மலர்ச்சி பொங்கி எழுகிறது. இடையிடையே தன் சோக வாழ்க்கையைப் பற்றிப் பிள்ளைகளிடம் சிறிது சிறிதாகக் கூறுகிறாள். லவா, குசா இருவருக்கும் தந்தை இராமனைப் பற்றியும், தான் பிரிக்கப் பட்டதையும் வேதனையோடு பலமுறை சொல்லியிருக்கிறாள்.]

***********




காட்சி நான்கு


அயோத்திய புரியில் ஆரம்பித்த அசுவமேத யாகம்

இடம்: அயோத்திய புரி அரண்மணைநேரம்: மாலைபங்கு கொள்வோர்: இராமன், இலட்சுமணன், பரதன், சத்துருக்கனன், மகரிஷி வசிஸ்டர், விசுவாமித்திரர், மன்னர்கள், பத்து அல்லது பன்னிரெண்டு வயதுப் பாலகர்கள்: லவா, குசா. அனுமான், அங்கதன், சுக்ரீவன்.

[அமைப்பு: மாமன்னன் இராமன் அசுவமேத யாகம் செய்வதற்குத் திட்டமிட்டுகிறான். மகரிஷி வசிஸ்டர் பரதன், இலட்சுமணன், சத்துருக்கனன் ஆகியோர் மூவரையும் அழைத்து யாகத்திற்கு ஒரு குதிரையைத் தியாகம் செய்யத் தயாரிக்கச் சொல்கிறார். அநேக மன்னர்கள், பெரியோர்கள், முனிவர்கள் ஆகியோருக்கு இராமன் ஓலை அனுப்பி அசுவமேத யாகத்தில் பங்கு கொள்ள வேண்டுகிறான். விசுவாமித்திர முனிவர் அவரது சீடர் படையுடன் வருகை தந்தார். சீதாவின் தந்தை ஜனக மாமன்னர் கூடக் கலந்து கொண்டார். இராமனுடைய பக்கத்து ஆசனத்தில் சீதாவுக்குப் பதிலாக முழுவடிவத் தங்கச்சிலை ஒன்று செய்யப்பட்டு வைக்கப் பட்டிருந்தது. ஜனக மன்னர் சீதாவின் சிலையைப் பார்த்ததும் திகைப் படைந்து அவர் மனதில் ஏதோ ஓர் ஐயப்பாடு எழுகிறது. இலங்கா புரியிலிருந்து மீண்டு பட்டத்து அரசியான சீதாவைப் பார்க்கப் போன ஜனக மன்னர், அவள் நாடு கடத்தப் பட்டிருப்பதும், வால்மீகி ரிஷியின் ஆசிரமத்தில் அடைக்கலமாகி இருப்பதும் தெரியவந்து மிகவும் மனமுடைந்து போகிறார்.

அணிகலன்கள் பூட்டப் பட்ட அழகிய வெள்ளைக் குதிரை ஒன்று அரண்மனை வாயிலில் நின்றது. ஆட்டுத் தோலில் எழுதப்பட்டுக் குதிரையின் கழுத்தில் தொங்கிய ஓர் அறிக்கையில் எச்சரிக்கை காணப்பட்டது. 'பகைவரை ஒழித்துக்கட்டும் கோசலச் சக்கரவர்த்தி மேன்மை மிகு இராம வேந்தருக்கு இக்குதிரை சொந்தமானது. குதிரையை மதித்து வரவேற்போர் அனைவரும் அவரது ஆணைக்குக் கீழ்ப்படிந்து அவர் கேட்கும் வரிப்பணத்தை காலாகாலத்தில் கட்டி விடவேண்டும். குதிரையை வழிமறித்துக் கட்டிப் போடுவோர் மாமன்னர் இராமரது பகைவராகக் கருதப்படுவர்! அத்துடன் குதிரையைப் பிடிப்போர் இராமச் சக்கரவர்த்தியை எதிர்த்துப் போரிடவும் தயாராக வேண்டும் '.போர்த்துறைக்குத் தளபதியாக நியமிக்கப் பட்டுள்ள சத்துருகனன், குதிரை முன்னே செல்ல பின்னே பலத்த படையினருடன் வழிநடத்திச் சென்றான். குதிரையும், சத்துருகனன் பட்டாளமும் பிறகு பல படகுகளில் ஏறிக் கங்கை நதியைத் தாண்டி அப்பால் வால்மீகி ஆசிரமம் வழியாகச் சென்றன. காட்டில் விளையாடிக் கொண்டிருந்த லவா, குசா இரட்டையர், ஒப்பனை செய்யப்பட்டு வெள்ளைக் குதிரை கம்பீரமாகச் செல்வதைக் கண்டு பூரிப்படைந்து, அறிக்கையை வாசித்து அதைப் பிடித்து நிறுத்தினர்! அஞ்சாமல் குதிரையை மரத்தில் கட்டிப் போட்டு, அவர்களைத் தாக்க யார் வருகிறார்கள் என்று வேடிக்கை பார்த்தனர்.]

சத்துருக்கனன்: [குதிரை கட்டப்படுவதைப் பார்த்துக் கேவலச் சிரிப்புடன்] பாலர்களே! இது விளையாட்டுப் பொம்மை இல்லை! உங்களுக்குப் படிக்கத் தெரியுமா ? வெள்ளைக் குதிரை கழுத்திலே தொங்குவதைப் படித்தீர்களா ? இல்லை. படிக்கத் தெரியாத பட்டிக் காட்டுப் பாலகர் என்றால் மன்னித்து விடுகிறேன்.



லவா, குசா: [ஆத்திரமுடன்] நாங்கள் படிக்கத் தெரியாத பட்டிக்காட்டுப் பாலகர் என்றா நினைத்தீர் ? அறிக்கைப் படித்துத்தான் யாம், குதிரையைப் பிடித்துக் கட்டினோம்! குதிரை வேண்டு மென்றால் கூறியபடி எங்களுடன் போரிடு! அல்லது குதிரையை எங்களிடம் விட்டுவிட்டுப் போய்விடு!

சத்துருகனன்: [அவர்களது வில்லைப் பார்த்து இறுமாப்புடன்] தோளிலே வில் தொங்குதே! வில்லை உங்களால் வளைக்க முடியுமா ? வில்லை வளைத்து அம்பைக் குறிவைத்து ஏவத் தெரியமா ?

லவா, குசா: ஏன் தெரியாது ? பாய்ந்தோடும் மானின் கண்ணை அடிப்போம்! பறக்கும் பறவையின் மூக்கை உடைப்போம்! பதுங்கித் தாவும் முயலின் காதைக் கிழிப்போம். எதிர்த்தால் உங்கள் நெஞ்சையும் இரண்டாய்ப் பிளப்போம்! குதிரையை எங்களிடம் விட்டுப் போவீர்! அல்லது உதிரத்தைக் கொட்டி உயிரை விட்டுப் போவீர்! முதலில் எடுங்கள் உங்கள் வில்லை!

[இருவரும் தமது வில்லைக் கையில் ஏந்தி அம்பைத் தொடுக்கிறார்கள்].

சத்துருக்கனன்: (கோபம் மிகுந்து) அடே பொடிப் பயல்களே! என்னை மானென்று நினைத்தீரா ? அல்லது முயலென்று நினைத்தீரா ? இராமச் சக்கரவர்த்தியின் போர்த் தளபதி நான்! நொடிப் பொழுதில் உங்களை அம்பால் அடித்துத் துடிக்க வைப்பேன்! ஓடுங்கள் உயிரைப் பிடித்துக் கொண்டு! இதோ! என் எச்சரிக்கை அம்பு!

[எச்சரிக்கை அம்பைக் கவனாக விடுகிறான். லவா, குசா இருவருக்கும் இடையே அம்பு உரசிக் கொண்டு போகிறது].

லவா, குசா: எங்களிடம் போரிட அஞ்சுகிறீர்! எச்சரிக்கை அம்பு எதற்கு ? இதோ! எங்கள் மெய்யான அம்புகள்! அவற்றின் வேகத்தைப் பார்! குறிவைக்கும் எங்கள் திறமையைப் பார்! [லவா, குசா இருவரும் அம்பு தொடுத்தெய்ய, சத்துருகனன் வலது கையை உரசிக் கொண்டு ஒன்றும், இடது கையை உரசிக் கொண்டு அடுத்ததும் பாய்கின்றன!]

சத்துருகனன் சினத்துடன் தன் வில்லை வளைத்து அடுத்து, அடுத்து அம்புகளைத் தொடுக்கிறான். ஓரம்புக்கு இரட்டை அம்புகள் எதிர்த்து வரவே, குழம்பி திகைத்துப்போய் கையில் காயம்பட்டுக் கீழே விழுந்து மயக்கம் அடைகிறான். மற்ற போர் வீரர்களும் அடிபட்டு விழுகிறார்கள். உயிர் பிழைத்த ஒற்றர் சிலர் அயோத்திக்கு மீண்டு சத்துருக்கனன் தோற்றுப் போய் விழுந்து விட்டதை இராமனிடம் கூறுகிறார்கள். அயோத்திய புரியில் சத்துருகனன் படைக்கு நேர்ந்த தோல்வியைக் கேட்டு இராமன் அதிர்ச்சி யடைந்து அடுத்து இலட்சுமணனை அனுப்புகிறான். சிறுவர் இருவரையும் கொல்லாது உயிருடன் கைப்பற்றி வருமாறு கட்டளை யிடுகிறான். இலட்சுமணன் காட்டுப் போர்க்களத்தில் லவா, குசா இருவரையும் பார்த்து, குதிரையை அவிழ்த்து விடும்படிக் கெஞ்சுகிறான். குசா வேடிக்கைக்காகக் குறிவைத்து அம்பை ஏவிஇலட்சுமணன் கீரீடத்தில் அடித்து வீழ்த்துகிறான். இலட்சுமணன் அவமானம் அடைந்து போரிடத் தொடங்குகிறான். இறுதியில் இலட்சுமணனும் கையில் அடிபட்டு வீழ்கிறான். செய்தியை அறிந்த இராமன் பரதனை அனுப்பத் தீர்மானித்து பிறகு மனதை மாற்றித் திரும்புமாறு ஆணையிடுகிறான். இலட்சுமணனை வென்று வீழ்த்தும் வீரர்களும் காட்டுப் புறத்தில் வாழ்கிறார்களா என்று இராமன் பெருங்கவலை அடைகிறான். உடனே அனுமனைக் கூப்பிட்டு இராவணனைக் கலக்கி யடித்த தென்முனைப் படையைத் திரட்டக் கட்டளை யிடுகிறான். பரதன் தலைமையில் அனுமான், அங்கதன், சுக்ரீவன் ஆகியோரும், அவரது தென்னகப் படையினரும் கானகப் போர்க்களத்துக்கு வருகிறார்கள்.

************




காட்சி ஐந்து


லவா, குசா, இராமன் முதல் சந்திப்பு

இடம்: காட்டுப் போர்க்களம்.நேரம்: மாலைபங்குகொள்வோர்: இலட்சுமணன், பரதன், சத்துருகனன், அனுமன், அங்கதன், சுக்ரீவன், லவா, குசா, இராமன், சீதா. ஆசிரம மருத்துவர், சீடர்கள்.அரங்க

அமைப்பு: பரதன் ஏவிய ஓரம்பில் லவாவின் கரம் காயமானது! [வில்லைக் கீழே போட்டுவிட்டுக் குசா லவா கையிக்குக் கட்டுப் போடுகிறான்] அடுத்துப் போரில் குசா பரதைனைக் காயப்படுத்தி முடமாக்கினான். கலங்கமற்ற சிறுவரைக் கண்டு பராக்கிரமமுள்ள அனுமான் படையினர் போரிடத் தயங்கி நின்றனர். அனுமான் ஏதோ சந்தேகப்பட்டுத் தன் ஒற்றன் ஒருவனை அனுப்பி ஆசிரமத்தில் சீதா இருப்பதை அறிந்து கொண்டான். அனுமான் சிறுவர்களின் கண்கள் இராமப் பிரபுவின் கண்களை ஒத்திருப்பதையும், முகச்சாயல் சீதாவின் முகத்தைப்போல் இருப்பதையும் கண்டு பேரதிர்ச்சி அடைந்தான்! அனுமானின் உடம்பு நடுங்க ஆரம்பித்துக் கைகள் தளர்ந்தன! இராமப் பிரபுவின் கண்மணிகளுடன் எப்படிப் போரிட்டு நான் சிறைப் படுத்துவேன் என்று மனமொடிந்தான் அனுமான்! அனுமான் படையினர் போரிடாமல் சும்மா நிற்பதைக் கண்டு, பரதன் பெருங் கோபம் அடைந்தான்! பரதன் சினத்தைக் கண்டு அனுமான் தயங்கிப் போரிட வந்தபோது லவா, குவா இருவரும் நடுங்கிக் கொண்டிருக்கும் அனுமானை எளிதாகப் பிடித்து ஒரு மரத்தில் கட்டிப் போட்டனர். அப்போது இராமன் தேரில் வந்திறங்கிக் கோபத்துடன் நேராக இரட்டையர்களை நோக்கி நடந்தான்.

இராமன்: (லவா, குசா இருவரது வல்லமையை மனதிற்குள் வியந்தபடி, ஆங்காரத்தைக் கட்டுப்படுத்தி) அருமைச் சிறுவர்களே! யார் நீங்கள் ? யார் உங்கள் பெற்றோர் ? எங்கிருந்து வந்தவர் நீங்கள் ?லவா, குசா: (போரை நிறுத்தி) நீங்கள் யார் ? எங்கிருந்து வருகிறீர்கள் ? நீங்கள் கூறுங்கள் முதலில்.இராமன்: என் பெயர் இராமன். கோசல நாட்டு மன்னன் நான். அயோத்திய புரியிலிருந்து வருகிறேன். அந்த குதிரையை அனுப்பியன் நான்தான்!



லவா, குசா: (இருவரும்) ஓ! அப்படியா ? அந்த குதிரைப் பிடித்தவர் நாங்கள்தான்! எங்கள் அன்னை மிதி நாட்டு இளவரசி! பெயர் சீதா! எங்கள் தந்தையார் பெயரும் இராமன்தான்! ஆனால் நாங்கள் அவரை இதுவரைக் கண்டதில்லை!லசா: என் பெயர் லசா! இவன் பெயர் குசா! நாங்கள் இரட்டையர்! அன்னை ஆசிரமத்தில் இருக்கிறார். தந்தை கோசல நாட்டில் எங்கிருக்கிறார் என்று தெரியாது.

இராமன்: [அதிர்ச்சி அடைந்து, தளர்ச்சியுற்று வில்லைக் கீழே போடுகிறான். சிறுவர்களை நெருங்கிக் கனிவுடன் உற்று நோக்குகிறான்] சமர்த்தான உங்களுக்கு லவா, குசா என்ற அழகான பெயர்களை இட்டவர் யார் ? உங்களுக்கு வில்வித்தை கற்றுக் கொடுத்தவர் யார் ?

லவா, குசா: எங்கள் குரு வேத மகரிஷி வால்மீகி! … ஏன் வில்லைக் கீழே போடுகிறீர் ? [அவர்களும் வில்லைக் கீழே போடுகிறார்கள்]. ஒன்று எங்களிடம் போரிடுங்கள்; அல்லது குதிரை எங்களிடம் விட்டுவிட்டு ஓடுங்கள். ஓடுபவரின் மீது யாம் அம்பு தொடுப்பதில்லை! ஆயுதமற்ற மனிதருடன் யாம் போரிடுவதில்லை! அது அறமற்றது என்று எங்கள் குருநாதர் சொல்லியிருக்கிறார்! இராமன்: [சிரித்துக் கொண்டு] உங்கள் யுத்த தர்மத்தை மெச்சுகிறேன். ஆயுதமற்ற நபருடன் நானும் போரிடுவதில்லை! அஞ்சாத சிறுவருடரும் நான் போரிடுவதில்லை! ஆமாம், வல்லமை மிக்க வில்லம்பு வித்தையை, நீங்கள் கற்றுக் கொள்ள எத்தனை மாதங்கள் ஆயின ?

லவா, குசா: எத்தனை மாதங்களா ? எத்தனை வருடங்கள் என்று கேளுங்கள்! ஆமாம், ஏன் நீங்கள் சிறுவருடன் போரிடுவதில்லை ? அவர்கள் எல்லாரும் அஞ்சாமல் எங்களிடம் போரிட்டார். நீங்கள் ஏன் போரிட அஞ்சுகிறீர் ? சிறுவருடன் போரிடக் கூடாது எந்த வேதம் சொல்லுகிறது ? உங்கள் குருநாதர் யார் ?

இராமன்: எமது குருநாதர் வசிஸ்ட மகரிஷி. நீங்கள் இருவரும் சிறுவர். நான் வயது முற்றிய வாலிபன். நான் உங்கள் இருவருடன் போரிடுவது முறையன்று.

லவா, குசா: அது சரி மாமன்னரே! எங்களில் ஒருவருடன் போரிடுங்கள்! உங்கள் யுத்த தர்மத்தின்படி அதுதான் தர்ம மென்றால், எங்களில் ஒருவருடன் போரிடுங்கள்! ஆமாம், உங்கள் குரு வசிஸ்டர், எங்கள் குரு வால்மீகியை விட வல்லவரா ?

இராமன்: ஆம் பாலர்களே! வசிஸ்ட மகரிஷி, வால்மீகி மகரிஷியை விட சற்று வல்லவர்தான்! … ஆனால் நான் சிறுவன் ஒருவனுடன் எப்படிப் போரிடுவது ? உங்கள் வயதைப் போல் எனக்கு மூன்று மடங்கு வயது! அதுவும் தர்மமாகாது! உங்களில் எவருடனும் நான் போரிடப் போவதில்லை …. நான் உங்களுடன் போரிட்டால் உங்கள் அன்னைக்குப் பிடிக்காது!

லவா, குசா: ஏன் அப்படிச் சொல்லி போர் செய்ய பயப்படுகிறீர் ? முதலில் குதிரையை நாங்கள் கட்டிப் போட்டதே, எங்கள் அன்னைக்குத் தெரியாது. ஆசிரமத்தில் இருக்கும் எங்கள் அன்னை இதைப் பற்றிக் கவலைப்படார். எதற்காக எங்கள் தாயின் எதிர்ப்புக்குப் பயப்படுகிறீர் ? எங்களுடன் போரிட, எங்கள் அன்னையின் அனுமதியை ஏன் நாடுகிறீர் ? நமக்குள் நடக்கும் அசுவமேத யாகப் போரில், எங்கள் அன்னையைக் கொண்டு வராதீர்கள். … ஆமாம், எங்கள் குரு வால்மீகியை விட, உங்கள் குரு வசிஸ்டர் வல்லவர் என்பது உண்மை என்றால், எங்களுடன் போரிட்டு அதை நிரூபித்துக் காட்டுங்கள்!

இராமன்: அதில் ஒரு சிக்கல் உள்ளது! நீங்கள் சிறுவரானதால், உங்களிடம் போரிட உங்கள் அன்னையின் அனுமதி தேவை. அவசியம் தேவை. அதுதான் தர்மம். ஆமாம், நீங்கள் ஏன் உங்கள் தந்தையை இதுவரைப் பார்க்க வில்லை ?

லவா, குசா: தர்மத்தைக் குறிப்பிட்டு ஏன் இப்படித் குதர்க்கம் பேசுகிறீர் ? தந்தை இருக்குமிடம் எங்களுக்குத் தெரியாது! தெரிந்தாலும் எங்களுக்கு வழி தெரியாது! வழி தெரிந்தாலும் அன்னையின் அனுமதி கிடைக்காது! எங்கள் தந்தைதான் எங்களைக் காண வரவில்லை! எங்களைக் காண விருப்பமு மில்லை! அவருக்கு நேரமுமில்லை! அவர் மிக்கப் பிடிவாதம் கொண்டவராம். அவர் பெரிய பராக்கிரமசாலியாம்! அவரைக் கண்டால் அசுரர்கள் ஓடிப்போய் விடுவார்களாம்! … ஆனால் எங்கள் தாயை அவர்தான் காட்டுக்குத் துரத்தி விட்டாராம்! கடும் கல்நெஞ்சக்கார மனிதர்! அவர் எங்கள் தாயைக் காட்டுக்குத் தனியே அனுப்பியது தர்மமாகாது.

இராமன்: [யோசனையுடன்] ஒருபுறம் பார்த்தால் அது அதர்மம்தான்….! ஆனால் வேறு கோணத்தில் பார்த்தால் அது அதர்மமாகத் தோன்றாது! …. அது தர்மமா அல்லது அதர்மமா என்பது வாதத்துக்கு உரியது! … ஆமாம், அவரைக் காண நேரிட்டால் என்ன தண்டனை கொடுப்பீர்கள் ?

லவா, குசா: [தரையில் கிடந்த வில்லை எடுத்து] இந்த அம்புகளால் அவரது நெஞ்சைப் பிளப்போம்! …. [சிறுவர்களின் வில்போரைப் பற்றி ஆசிரமத்தில் கேள்வியுற்று அப்போது சீதை ஓடி வருகிறாள். காவி நிறப் புடவை உடுத்திய சீதா ஆசிரமத்தின் மற்ற சீடர்களுடன் போர்த்தளத்துக்கு வருகிறாள்] …. அதோ எங்கள் அன்னை! எங்களை நோக்கி வருகிறார். …. [சீதா இராமனைக் கண்டும் காணாது, முதலில் அனுமானைக் கட்டிப் போட்டுள்ள அந்த மரத்தடிக்குப் பதறிக் கொண்டு செல்கிறாள். இராமன் சீதாவை நேராக நோக்க மனமின்றி அவளைத் தவிர்த்துக் குதிரை கட்டப்பட்டுள்ள வேறு மரத்தடிக்கு நகர்கிறான். லவா, குசா தாயைத் தொடர்கிறார்கள்]



சீதா: கண்மணிகளே! என்ன அலங்கோலம் இது ? உடனே அனுமானை அவிழ்த்து விடுங்கள்! [லவா, குசா இருவரும் ஓடிப்போய் அனுமானின் கட்டை அவிழ்த்து விடுகிறார்கள். ஆசிரமச் சீடர்கள் பரதனுக்கும் மற்ற படையினருக்கும் சிகிட்சை அளிக்கிறார்கள். அனுமான் சோக மடைந்து சீதாவைக் கும்பிடுகிறான்]

அனுமான்: [கண்ணீர் பொங்கி சீதாவின் காலில் விழுந்து வணங்கி] மகாராணி! இந்த காட்டிலா, இந்தக் கோலத்திலா, இந்த நிலையிலா உங்களை நான் காண வேண்டும் ? உங்களைக் காட்டிலே காணும் துர்பாக்கியம்தான் அடியேனுக்கு எழுதப்பட்டுள்ள விதியா ? அன்று இலங்காபுரி அசோக வனத்தில் உங்களை முதலில் கண்டு பிடித்தபோது எத்தகைய ஆனந்தம் அடைந்தேன் இன்று உங்களைக் கண்டபின் எதிர்மறையாக என் நெஞ்சம் பற்றி எரிகின்றது மகாராணி! சீரும் செல்வத்திலும் வளர்ந்த மிதிலாபுரி மன்னரின் செல்வி மாளிகையில் வாழாது, இந்த வனாந்திரக் காட்டில் சிறுவர்களுடன் எப்படி காலந் தள்ளுகிறீர்கள் ?

சீதா: [கண்ணீருடன்] எழுந்திடு! மாளிகையை விட மகரிஷி ஆசிரமத்தில் நான் மகிழ்ச்சியாக வாழ்கிறேன். யாரென்று உன்னைத் தெரியாமல் கட்டிப் போட்டு விட்டார்களே எம காதகர்கள்! … கண்மணிகளே! அனுமான்தான் அசோக வனத்தில் சிறைப்பட்ட என்னை முதலில் கண்டுபிடித்து மீட்பதற்கு உதவி புரிந்தவர். அவரிடம் மன்னிப்புக் கேளுங்கள்! … அயோத்திய புரியில் அசுவமேத யாகம் புரிவதைப் பற்றி மகரிஷி எனக்குச் சொன்னார்! ஆனால் அந்தக் குதிரையைக் கட்டிப் போட்டவர் என் கண்மணிகள் என்பது இன்றுதான் எனக்குத் தெரிந்தது.

லவா, குசா: [அனுமானின் காலில் விழுந்து வணங்கி] நாங்கள் தவறு செய்து விட்டோம். எங்கள் அறியாமைக்கு மன்னிக்க வேண்டும் ஐயனே!

அனுமான்: [எழுந்திடுங்கள்] ஒன்றும் அறியாத பாலர் நீங்கள்! … தாயே! உங்கள் வீர புத்திரர்களை நான் அடையாளம் கண்டு கொண்டேன். கண்களைப் பார்த்தால் இராமப் பிரபுவின் கண்கள்! முகத்தைப் பார்த்தால் அன்னையின் முகம்! சிறுவர்கள் யாரென்று தெரிந்தபின் என் கைகள் வலுவற்றுப் போயின! போரிட முடியாமல் தயங்கினேன், பின்வாங்கினேன்! எளிதாக இருவரும் என்னைப் பற்றி மரத்தில் கட்டிப் போடுவதை நான் வேடிக்கை பார்த்தேன்! … இளவரசர் பரதனுக்கு என்மேல் மிகவும் கோபம்! .. யாரென்று தெரியாமல் சிறுவர்கள் பரதன், இலட்சுமணன், சத்துருகனன் மூவரையும் கூடக் காயப்படுத்தி விட்டார்கள்! வில்லம்பு வித்தகர் இராமப் பிரபுவின் புதல்வராக இருக்க வேண்டுமே தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது என்று மனதில் அழுத்தமானது.

சீதா: அட பாவமே! அவர்கள் எங்கே காயப்பட்டுக் கிடக்கிறார்கள் ?

அனுமான்: அது நேற்றைய நிகழ்ச்சி! படையினர் அவர்களைத் தூக்கி வந்தபின் அரண்மனை மருத்துவர் காயத்துக்குக் கட்டுப் போட்டார்கள். …. அதோ அவர்களும் உங்களைக் காண இங்கு வந்து கொண்டிருக்கிறார்கள். பரதனுக்கு ஆசிரம மருத்துவர் கட்டுப் போடுகிறார். [கைக்கட்டுடன் இலட்சுமணன், சத்துருகனன் சீதாவின் முன்வந்து வணங்கிக் கண்ணீர் வடிக்கிறார்கள்.]

சீதா: [பொங்கி வரும் கண்ணீருடன்] என் கண்மணிகள் உங்களை யாரென்று தெரியாமல், காயப்படுத்தி விட்டார்களே! ஒரு தவறு நடந்த பின், அடுத்தடுத்துப் பல தவறுகள் நிகழ்ந்து விட்டன! லவா, குசா இவருக்கும் உங்கள் பெயரைச் சொல்லிக் கொடுத்தேனே தவிர, உங்கள் முகத்தைக் காட்ட முடியாமல் போனதே மனம் என்று நோகிறது! (லவா, குசாவைப் பார்த்து) இவர்கள் உனது தந்தையின் தம்பிமார்கள், இலட்சுமணன், சத்துருகனன். அதோ! அங்கே கட்டு போடப்படுபவரும் ஒரு தம்பியே. அவர் பெயர் பரதன். அவர்கள் யாவரும் உன் சித்தப்பபன்மார்.

லவா, குசா: [இருவரும் காலில் விழுந்து] ஐயம்மீர்! எங்களை மன்னிக்க வேண்டும். நாங்கள் தெரியாமல் உங்ளைக் காயப்படுத்தி விட்டோம். [லவா, குசா இருவரும் தாயை விட்டு, குதிரை கட்டப்பட்டிருக்கும் மரத்தடிக்குச் செல்கிறார்கள்]

இலட்சுமணன்: [கண்ணீரைத் துடைத்துக் கொண்டு] இருவரும் வில்லாதி வீரர்கள்! சூராதி சூரர்கள்! பெரியவராகிய நாங்கள் சிறுவர் என்று அஞ்சிச் சற்று தயக்கமுடன்தான் போரிட்டோம்! ஆனால் சிறுவர்களுக்கு அப்படி ஓர் அச்சமில்லை! …. அதோ அண்ணா வந்திருக்கார்! …. உங்களிடம் அண்ணா பேசினாரா ? நீங்கள் அவரிடம் பேசினீர்களா ? … லவா, குசா உங்களையும், அயோத்தியபுரிக்கு அழைத்துச் செல்ல அண்ணாவிடம் கேட்கப் போகிறேன்.

சீதா: [முகத்தை திருப்பிக் கொண்டு] வேண்டாம் இலட்சுமணா. உங்கள் அண்ணா என்னைப் பார்க்கவா இங்கு வந்திருக்கார் ? குதிரையைப் பிடித்துப் போக வந்திருக்கார்! அயோத்திய புரிக்கு குதிரையை அழைத்துப் போவார்! என்னை மீண்டும் அழைத்துப் போவார் என்று எனக்கு நம்பிக்கை யில்லை! நீயும் அதை எதிர்பார்க்காதே! அவருடைய முதல் வேலை, அடைபட்டுள்ள குதிரைக்கு விடுதலை! அபலை சீதாவுக்கு விடுதலை என்று நினைக்காதே! வேண்டாம் இலட்சுமணா! அவரைக் கேட்காதே! என்னைக் கூட்டிச் செல்ல அவருக்கல்லவா தெரிய வேண்டும் ? நீ கேட்டு அவர் என்னை அழைத்துச் செல்வதா ? முதலில் நீ கேட்பதே எனக்கு அவமானம்! நான் எப்போதே தேவை யற்றவளாகி வெளியே தள்ளப் பட்டவள். இப்போது எப்படி ஒரு தேவையை நீ உண்டாக்கப் போகிறாய் ? பாலை வனமான என் வாழ்க்கை இனி சோலை மயமாக மீளாது. அது எனக்குத் தெரியும். அவர் வந்து அழைத்துச் செல்வார் என்று அன்று நீதான் சொன்னாய். இதுவரை இங்கு வராதவர், இன்று ஏன் வந்தார் என்பது எனக்கும் தெரியும். உனக்கும் தெரியும். பத்துப் பனிரெண்டு வருடமாக அவர் என்னைக் காண இங்கு வந்தது கிடையாது! இருக்காளா அல்லது இறந்து விட்டாளா என்று கேட்டது கூடக் கிடையாது! என்னை மறந்து போனவருக்கு நீ மீண்டும் நினைவூட்ட வேண்டுமா ? வேடிக்கையாய் இருக்கிறது! இப்போதும் என்னைத் தேடியோ, என்னுடன் பேசவோ, என்னுடன் உறவு கொண்டாவோ உன் அண்ணா வரவில்லை! என்னைக் காண வந்திருந்தால், என்னோடு கனிவாகப் பேசினால், நான் அவரை மதிப்பேன்! உபசரித்து ஆசிரமத்து வரும்படி அவரை அழைப்பேன்!

சத்துருகனன்: அப்படிச் சொல்லாதீர்கள் அண்ணி. அண்ணாவின் உள்ளக் கோயிலில் உங்களைத் தவிர வேறு யாருமில்லை. அண்ணாவின் மனது தங்க மனது! அசுவமேத யாகத்திடலுக்கு முன்னால் யாவரும் காணும்படி உங்கள் முழுவடிவத் தங்கச் சிலையை வார்த்து அமர வைத்துத் தினமும் தரிசித்து வருகிறார்!

சீதா: உன் அண்ணாவுக்கு என்மேல் இத்தனை பாசமா ? எனக்கு இது தெரியாதே! அவரது உள்ளக் கோயிலில் எனக்கு இன்னும் இடமுள்ளதா ? ஆச்சரியமாக இருக்கிறது! உயிர்ச் சிலையை அகற்றிவிட்டுத் தங்கச் சிலைக்குச் சாம்பிராணி போடுகிறார். ஊர்க் கண்களுக்குத் தங்கச் சிலையாய் நானிருப்பது, என் நெஞ்சில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுகிறது. உயிருள்ள மனைவி காட்டில் தவிக்கும் போது, உயிரற்ற தங்கச்சிலை சுகவாசியாக மாளிகையில் இருப்பது நியாயமா ? இலட்சுமணா! அந்த உயிரற்ற சிலை, உயிர்ச்சிலை போல் உடனே அகற்றப் படவேண்டும். நான் சொன்னதாக உன் அண்ணாவிடம் சொல். என் உருவம், ஓவியம் எதுவும் அரண்மனையில் இருக்கக் கூடாது! நான் ஒன்றும் உயிரற்ற சிலையோ, வண்ண ஓவியமோ அல்லது போட்டிப் பரிசோ இல்லை! செத்தவருக்குதான் சிலை வைப்பார்கள்! உன் அண்ணாவின் ஏட்டில் உண்மையாக, நான் செத்துவிட்டவள்தான்! ஒரு பந்தயப் போட்டி வீரர் உன் அண்ணா!. பந்தயத்தில் வென்ற பரிசைக் காட்சி மாளிகையில் வைப்பவர். அன்று கானகத்தில் நான் கடத்தப் பட்டதும் அவர் தனியாகவே வாழ்ந்தார்! இன்றும் நானில்லாமல் அவர் தனியாக வாழ்கிறார். மனைவி என்னும் ஒரு பெண்பிறவி அவருக்குத் தேவை யில்லை! அவருக்கு வேண்டியது குடிமக்கள் பாராட்டு! குடிமக்களைத் தலைமேல் வைத்துக் கொண்டதற்கு நான் பலியானேன்! தன் பராக்கிரமத்தை நிலைநாட்ட, அவர் அசுவமேத யாகம் செய்தார்! அறியாத என் புதல்வர் குதிரையைக் கட்டிப் போட்டு அசுவமேத யாகப்போரில் அவரது தம்பிமார், காயம் அடைந்தார்கள். எல்லாத் துயருக்கும் அவரே காரண கர்த்தா!

சத்துருக்கனன்: அண்ணி! அண்ணா அசுவமேத யாகம் செய்ததால்தானே லவா, குசாவை அண்ணாவும், நாங்களும் கண்டு கொள்ள முடிந்தது!

சீதா: இல்லையப்பா! என்னைப் பிரித்த உங்கள் அண்ணா அசுவமேத யாகம் செய்து, என் கண்மணிகளைப் பிரிக்கப் போகிறார்! என் புதல்வரைக் கண்ட உன் அண்ணாவின் கண்கள் என்னை ஏன் காணவில்லை ? குதிரையைக் காண வந்தவ என்னருமைப் பதி, ‘நீ எப்படி இருக்கிறாய் ‘ என்று என்னிடம் ஏன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை ? தீண்டப்படாத அபலை மனைவியை ஒருமுறைக் கனிவுடன் கூட ஏன் பார்க்கவில்லை ?

இலட்சுமணன்: அண்ணி! அப்படிச் சொல்லாதீர்கள். இம்முறை நாங்கள் அண்ணாவை மீறி, உங்களை அரண்மனைக்கு அழைத்துச் செல்லப் போகிறோம்.

சீதா: நான் விரும்பி வந்தால்தானே! நான் என்ன குதிரையா இழுத்துக் கொண்டு போக ? உன் அண்ணா அழைத்தாலும், நான் வர மறுப்பேன்! அப்படி அவர் அழைத்தாலும், முதல் தடவையாக அவரை எதிர்க்கப் போகிறேன்! நான் என்ன அரண்மனை அந்தப்புர அடிமையா ? வா வென்றால் வணங்கி வருவதும், போ வென்றால் பணிந்து போவதும் மிதிலை நாட்டு இளவரசியிடம் இனி நடக்காது. முன்னாளில் சீதா அடியாளாக பதியின் பாத மலர்களைக் கழுவிக் கொண்டிருந்தாள். சீதாவின் அடிமைக் காண்டம் என்றோ முடிந்து விட்டது, இலட்சுமணா!


+++++++++++++++


காட்சி ஆறு


முடிவை நோக்கிச் சீதா



இடம்: வால்மீகியின் ஆசிரமத்துக்கு அருகில் பெரிய மலைகள் சூழ்ந்துள்ள காடு.

நேரம்: மாலை வேளை

பங்குகொள்வோர்: வால்மீகி, இராமன், சீதா, இலட்சுமணன், பரதன், சத்துருகனன், அனுமன், அங்கதன், சுக்ரீவன், லவா, குசா, ஆசிரமச் சீடர்கள். மலை மேட்டுக்கு அருகில் உள்ள ஒரு மரத்தில் அசுவமேத யாகத்தின் வெள்ளைக் குதிரை கட்டப்பட்டுள்ளது.

(இராமன் மரத்தில் கட்டுண்ட குதிரையை அவிழ்க்கச் சென்றபோது, லவா, குசா இருவரும் குதித்தோடிச் சென்று மறிக்கின்றனர்)

லவா, குசா: [தரையில் கிடந்த வில்லைக் கையில் எடுத்து] நிறுத்துங்கள் கோசல மன்னரே! முதலில் எடுங்கள் உங்கள் வில்லை! குதிரையைக் கட்டியவர் நாங்கள்! முதலில் எங்களுடன் போரிட்டு வென்ற பின்தான் நீங்கள் குதிரையை விடுவிக்கலாம்.

இராமன்: [கனிவுடன்] அருமைப் பாலர்களே! உங்களுடன் நான் போரிடப் போவதில்லை! நீங்களும் என்னுடன் போரிடத் தேவை யில்லை! இந்தக் குதிரை எப்படி எனக்கு சொந்தமோ, அதே போல் அது உங்களுக்கும் சொந்தமே! நாமெல்லாரும் இப்போது ஒருபக்கம்! நான் உங்கள் எதிரியும் அல்லன்! நீங்கள் எமக்குப் பகைவரும் அல்லர்!

லவா, குசா: கோசல மன்னரே! என்ன புதிர் போடுகிறீர்! சொந்தம் கொண்டாடி எங்களை ஏமாற்ற முடியாது! நீங்கள் வில்லை எடுக்கப் போகிறீர்களா ? இல்லையா ? ஆயுதமற்ற எதிரியோடு யாம் வில்போர் தொடுப்பதில்லை என்றது நினைவிருக்கிறதா ? போரிடாமல் நீங்கள் குதிரையை அவிழ்ப்பது தவறு. எங்கள் முதல் எச்சரிக்கை இது! எடுங்கள் உங்கள் வில்லை!இராமன்: போருக்கு முதலில் உங்கள் அன்னையிடம் அனுமதி பெற்று வாருங்கள். அப்போது நான் யாரென்றும் உங்கள் அன்னையிடம் கேளுங்கள். அதன் பிறகு நீங்கள் என்னுடன் போரிடலாம்.

லவா, குசா: [ஆச்சரியமோடு] மறுபடியும் எங்கள் அன்னையை ஏன் இழுத்து வருகிறீர் ? எங்களை யாரும் நிறுத்த முடியாது. ஆமாம் … நீங்களே சொல்லுங்கள் யாரென்று ?

[அப்போது வேகமாய் வால்மீகி முனிவர் வருகிறார். லவா, குசா இருவரும் தலை குனிந்து கைகூப்பி வணங்குகின்றனர்.]

வால்மீகி: பாலர்களே! நிறுத்துங்கள் போரை! கீழே போடுங்கள் வில்லை!



லவா, குசா: (இருவரும் ஒருங்கே) வணக்கம் குருதேவா! (வில்லை இருவரும் கீழே போடுகிறார்கள்)

இராமன்: (இராமனும் தன் கிரீடத்தை எடுத்துவிட்டுக் குனிந்து வணங்குகிறான்.) வணக்கம் மகரிஷி!

வால்மீகி: அருமைச் சிறுவர்களே! யாரென்றா கேட்கிறீர்கள் ? இவர்தான் உங்கள் அருமைப் பிதா! …(இராமனைப் பார்த்து) மாமன்னா! உங்கள் குதிரையைச் சிறுவர்கள் கட்டிப் போட்டது அறியாமற் செய்த தவறே! பலரைக் காயப்படுத்தியதும் அவர்கள் அறியாமற் செய்த தவறே! எனக்குத் தெரியாமல் போனது. முதலில் தெரிந்திருந்தால், தேவையற்ற இந்தப் போரை நிறுத்தி யிருப்பேன். இத்தனை பேர் காயப் பட்டதையும் தவிர்த்திருப்பேன்!

லவா, குசா: [அலறிக் கொண்டு] கோசல மன்னர் எங்கள் தந்தையா ? எங்கள் அருமைத் தந்தையா ? … (லவா மட்டும்) நாங்கள் போரிடப் போன இவர் எங்கள் பிதாவா ? எங்களுடன் ஆரம்பத்திலிருந்தே போரிட மறுத்த இவர் எங்கள் தந்தையா ? தான் யாரென்று கூறினாலும், தந்தை என்று சொல்லாது, மறைத்துக் கொண்ட இவர் எங்கள் பிதாவா ?

இராமன்: அருமைப் பாலர்களே! மெய்யாக நீங்கள் யாரென்று முதலில் எனக்குத் தெரியாது. உங்கள் அன்னையின் பெயரைக் கேட்டதும் நான் போர் தொடுக்க வந்ததை நிறுத்தினேன். உங்களுடன் போரிடவும் மறுத்தேன்.

குசா: எங்கள் அன்னையப் பற்றித் தெரிந்ததும், தந்தை நான் என்று நீங்கள் ஏன் எங்களுக்குக் கூறவில்லை ? எங்கள் அன்னையைக் கனிவின்றி, கண்ணிய மின்றிக் காரண மின்றிக் கானக விலங்குபோல் காட்டுக்குத் துரத்திய கோசல மன்னர் நீங்கள் தானா ? பிதாவாக இருந்து, எங்களை இதுவரைக் காண வராத கோசல மன்னர் நீங்கள் தானா ? இன்று இவரைக் கண்டும் காணாமல் போனது எங்கள் நல்ல காலந்தான்! [இராமனைக் கூர்ந்து நோக்கி] எங்கள் தந்தை என்று சொல்லக் கூட உங்களுக்குத் தயக்கமா ? உங்கள் புதல்வர் என்று சொல்வதில் கூட அத்தனை வெறுப்பா ? அல்லது வெட்கமா ? [இராமன் வேதனை தாங்காமல் தலையைத் தொங்க விடுகிறான்.]

வால்மீகி: மாமன்னா! ஆசிரமத்தில் சீதாவுக்கு பிறந்த இந்த இரட்டைச் சிறுவர் உன்னருமைப் புத்திரர்! அதில் சந்தேகம் வேண்டாம்! [லவா, குசா இருவரையும் பார்த்து] பாலர்களே! சந்தேக மின்றி இவர் உங்கள் தந்தைதான்!

இராமன்: [ஆச்சரியமோடு] மகரிஷி! சீதாவுக்குப் பிறந்த இருவரும் மெய்யாக என் புதல்வர்களா ?

லவா, குசா: வந்தனம், வந்தனம் பிதாவே! [வணங்குகிறார்கள்]. [ஆத்திரமோடு] சந்தேகம் தீராத் தந்தை! சந்தேகம்! சந்தேகம்!! சந்தேகம்!!! சந்தேகக் குணம் இன்னும் தந்தைக்குக் குறைய வில்லையே!



வால்மீகி: ஆமாம் மாமன்னா! இவர்கள் உன் அருமைப் புதல்வரே! பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மூவர் சாட்சியாகச் சொல்கிறேன். இவர்கள் உன் அருமைப் புதல்வரே! அன்றைக்கு இலட்சுமணன் காட்டில் விட்டு சென்ற கர்ப்பவதி சீதாவுக்கு என் ஆச்சிரமத்தில் தங்க இடமளித்தேன். சீதாவுக்கு இரட்டைப் பிள்ளைகள் பிறந்தார்கள். லவா, குசா வென்று பெயர் வைத்தவன் நானே! பிறந்ததும் அவர்களது ஜோதிடத்தைக் கணித்து, கிரகங்களின் அமைப்பையும், எதிர்காலத்தையும் சோதித்தேன். இராஜ அம்சங்கள் படைத்த அவர் இருவரும், மாமான்னரின் பரம்பரை வாரிசுப் பட்டமேறும் இளவரசர்கள். அதில் எந்த ஐயமும் இல்லை, மாமன்னா!

[அச்சமயத்தில் பரதன், இலட்சுமணன், சத்துருக்கனன் மூவரும் கையில் கட்டுகளுடன் முன்வந்து வால்மீகி மகரிஷியை வணங்குகிறார்கள். சீதா தனியாகத் தூரத்தில் நின்று வேடிக்கை பார்க்கிறாள். அனுமான் சீதாவின் அருகில் நிற்கிறான்.]

மூவரும்: வணக்கம் மகரிஷி! (பரதன் மட்டும்) யாரென்று கேட்டுக் கொள்ளாமல், சிறுவருடன் நாங்கள் போரிட்டதும், எங்கள் தவறே! அசுவமேத யாகம் புரிந்ததின் எதிர்பாராத பலன், சீதா அண்ணி, சிறுவர்கள் அண்ணாவுடன் சந்திப்பு! அவர்களுடன் எங்கள் சந்திப்பு!

இலட்சுமணன்: மகரிஷி! வீர புத்திரரான லவா, குசா இருவருக்கும் நீங்கள் அளித்த வில் பயிற்சியைப் பாராட்டுகிறோம்! பாருங்கள் சிறுவர்கள் எமக்களித்த அழியாத நினைவுச் சின்னங்களை! [மூவரும் தங்கள் கட்டுகளைக் காட்டிச் சிரிக்கிறார்கள்]. அனுமார் ஒருவர்தான் வில்லடிக்குத் தப்பியவர்! இராம பரம்பரைப் பாலர்களைக் கண்டதும் எங்கள் கைகளும் ஏனோ அம்புகளை ஏவக் கூசின! வில்லை முழுவதும் வளைக்க எங்கள் மனம் விழைய வில்லை! நாங்கள் விடும் அம்புகள் சிறுவர் மேல் பட்டுவிடக் கூடாது என்று அஞ்சினோம்! கண்கள் குறி வைத்தாலும் கைகள் தடுமாறி அம்புகள் அவர்கள்மேல் படாது அப்பால் சென்றன. ஆயினும் ஓரிரு அம்புகள் எப்படியோ சிறுவர்களைக் காயப்படுத்தி விட்டன!

வால்மீகி: அருமைச் சிறுவர்களே! உன் தந்தைக்கு மூன்று தம்பியர். மூத்தவர் பரதன், அடுத்தவர் சத்துருகனன், இளையவர் இலட்சுமணன். எல்லாருக்கும் மூத்தவர்தான் உன் பிதா. அதோ சீதாவின் பக்கத்தில் நிற்பவர்தான் அனுமான்! உன் பிதாவின் வலது கை போன்றவர்! அவர் இந்தக் கண்டத்தின் தென்முனை வாசி. சீதாவை இலங்காபுரியிலிருந்து மீட்கக் கடலில் கற்பாலம் அமைத்தவர் அவர். சீதாவின் இருப்பிடத்தை முதலில் கண்டவரும் அவரே! இராவணன் வயிற்றைக் கலக்கி இலங்காபுரிக்குத் தீயிட்டவர் அவர்! தென்னக வீரர் அனுமாரின் உதவி கிடைத்திரா விட்டால், உன் அன்னையை, உன் தந்தை மீட்டிருக்க முடியாது!

லவா, குசா: (இருவரும் அனுமான், பரதன், சத்துருகனன், இலட்சுமணன் அனைவரையும் மீண்டும் வணங்குகிறார்கள்) மகரிஷி! சிறிது நேரத்துக்கு முன் அன்னையும் அவர்களை அறிமுகப் படுத்தினார்கள்.

வால்மீகி: [லவா, குசா இருவரையும் பார்த்து] பாலர்களே! குதிரையை அவிழ்த்து விடுங்கள். இனிமேல் குதிரைக்காகப் போர் வேண்டாம்.

லவா, குசா: குருதேவா! அப்படியே செய்கிறோம். [அனுமான் சென்று குதிரையை அவிழ்த்துக் கயிற்றைக் கையில் பிடித்துக் கொள்கிறான்]. [இருவரும் அடுத்து இராமனின் பக்கத்தில் போய் நிற்கிறார்கள். இராமன் இருவரையும் அன்புடன் தழுவிக் கொள்கிறான்] பிதாவே! ஏன் எங்கள் தாயைக் கண்டும் காணாதது போல் நிற்கிறீர்கள் ? தாயுடன் பேச ஏன் தயங்குகிறீர்கள் ?

இராமன்: கண்மணிகளே! உங்கள் அன்னைக்குத் தண்டனையிட்ட நான், முன்னின்று பேசச் சக்தியற்று நிற்கிறேன். பேசிட நாக்கு கூசுகிறது!

லவா, குசா: நாங்கள் அன்னையிடம் அழைத்துச் செல்கிறோம், வாருங்கள். (தந்தையின் கரங்களைப் பற்றி இருவரும் தாயிடம் அழைத்துச் செல்கிறார்கள். வால்மீகி, பரதன், இலட்சுமணன், சத்துருகனன் அனைவரும் தொடர்ந்து பின்னே செல்கிறார்கள்.)

வால்மீகி: [கீழே குனிந்திருக்கும் சீதாவைப் பார்த்து] சீதா! உன் துயர்கள் எல்லாம் முடியும் நேரம் வந்து விட்டது. நீ இராப்பகலாய் நினைத்துக் கொண்டிருக்கும் உன் பதி இதோ உன்னெதிரில் வந்து நிற்கிறார். அரண்மனைக்கு உன்னை அழைத்துச் செல்ல வந்திருக்கிறார். நீயும் உன் சிறுவர்களும் அயோத்திய புரிக்கு உன் பதியோடு செல்ல வேண்டுகிறேன். என் பணி இன்றுடன் முடிந்து விட்டது.

சீதா: மகரிஷி! செய்யாமல் செய்த உங்கள் உதவிக்கு வையகமும், வானகமும் கூட ஈடாகாது! உங்கள் உதவிக்கு எங்கள் நன்றி. மகரிஷி! நான் பாலகருடன் பதியோடு வாழ விரும்புகிறேன். ஆனால் உத்தரவு எங்கிருந்து வர வேண்டுமோ, அந்த உதடுகள் ஊமையாக உள்ளனவே! இன்று அவரது ஓரக்கண் கூட என்னைக் கண்டு கொள்ள வில்லையே! என்னை அழைத்துப் போக என் பதி விரும்புகிறாரா ? கேளுங்கள் மகரிஷி!

வால்மீகி: மாமன்னா! அரண்மனை மாளிகையில் வசிக்க வேண்டிய மிதிலை நாட்டு அரச குமாரி இந்த மண் குடிசையில் வாழக் கூடாது! உன் பட்டத்துச் சிங்கக் குட்டிகள் உன் மடிமீது விளையாட வேண்டியவர், இப்புழுதி மண்ணில் விளையாடிக் கொண்டிருக்கலாமா ? சீதாவையும், இரட்டைச் சிறுவர்களையும் அயோத்திய புரிக்கு அழைத்துச் செல்ல வேண்டியது உன் கடமை! என் ஆழ்ந்த வேண்டுகோளும் அது!

இலட்சுமணன்: அண்ணா! அண்ணி போனபின் அரண்மனை ஒளியற்று இருண்டு போய் உள்ளது! மனைக்கு வேண்டும் விளக்கு! உங்களுக்கு வேண்டும் துணைக்கு! அரண்மனை கலகலப்பாக இருக்க இரட்டைக் கண்மணிகள் நம்மோடு வர வேண்டும். இன்னும் எத்தனை வருடம் வனவாசத்தில் அண்ணி தனிமையாகத் துயர்ப்பட வேண்டும் ? எத்தனை வருடம் நீங்களும் தனியாக வாழ வேண்டும் ? இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.

சத்துருகனன்: அண்ணியை நாடு கடத்திய அநீதி நம்மை அலங்கோல நிலைக்குத் தள்ளி யிருக்கிறது! ஒருவராகக் கடத்தப்பட்ட அண்ணி, இப்போது மூவராய்த் திரும்பட்டும்.

பரதன்: அண்ணா! வாய் திறந்து பேசுங்கள்! அழைத்திடுங்கள் அண்ணியை! இம்முறை கூட்டிச் செல்லா விட்டால், இனி நான் அரண்மனையில் கால் வைக்க மாட்டேன்.

இராமன்: [சீதாவை நேராக நோக்காமல்] மகரிஷி! லவா, குசா இருவரையும் நிச்சயம் கூட்டிச் செல்கிறேன்.

இலட்சுமணன்: அண்ணியை அழைத்திடுங்கள் அண்ணா! உங்கள் கனிவு, கண்ணியம், கடமை எங்கே போயிற்று ? அண்ணியைப் புறக்கணிக்காது மீண்டும் ஏற்றுக் கொள்வது உங்கள் கடமை. உங்கள் இல்லற நியதி. அண்ணியை மணந்தபோது ஜனக மாமன்னருக்கு நீங்கள் அளித்த வாக்கு. இதுவரை நடந்ததை மறப்போம். இனிமேலும் அறத்துடன் நடப்போம்.

லவா, குசா: அருமைப் பிதாவே! அன்னையை ஏன் அழைக்க வில்லை ? … எங்களால் அன்னையைப் பிரிந்து வாழ முடியாது! … அன்னை வராமல் நாங்களும் வரப் போவதில்லை. இதுவரை தந்தைக் காணமால் காட்டில் வாழ்ந்தோம்! இனி தாயைக் காணாமல் மாளிகையில் வாழ்வதா ? … என்ன முரண்பாடான வாழ்க்கை இது ? தந்தையைத் தெரியாமல் இருந்தோம், எந்தப் பிரச்சனையும் இல்லை! பிறந்தது முதல் என்றும் நாங்கள் அன்னையைப் பிரிந்தது கிடையாது. தந்தையின் ஆடம்பர மாளிகை வேண்டாம்! எங்கள் தாய் வாழும் ஆசிரமக் குடிசையே போதும். தந்தை யின்றி வாழ்ந்தோம்! தாயின்றி வாழ முடியாது! அருமைப் பிதாவே! அன்னையிடமிருந்து எங்களைப் பிரிக்காதீர்! வேரில்லாத விழுதுகளாகப் போய்விடுவோம்!



இராமன்: அருமைச் செல்வர்களே! நீங்கள் அரண்மனைக்கு உரியவர்கள்! கோசல நாட்டை எதிர்காலத்தில் ஆளப்போகும் என் பட்டத்து இளவரசர்கள்! அங்குதான் நீங்கள் வளர வேண்டும். ஆனால் உங்கள் அன்னையின் நிலமை வேறு!

லவா: ஆம் பிதாவே! அந்தப் பட்டத்து இளவரசர்களைக் உங்களுக்குப் பெற்றுத் தந்தவர் எங்கள் தாய்! நீங்கள்தான் கைவீட்டீர்கள். தாயைக் காப்பது எங்கள் பொறுப்பு! எங்கள் கடமை! ஆனால் நாங்கள் தாயைக் கைவிட மாட்டோம்.

வால்மீகி: மாமன்னா! சீதாவின் புனிதத்தில் இனியும் சந்தேகம் வேண்டாம். இதுவரை சீதா உயிருடன் இருந்து உன்னருமைச் சிறுவரைப் பெற்றுத் தனியாக உன்னுதவி இல்லாமல் வளர்த்து ஆளாக்கி விட்டதே, அவளது புனிதத்தை நிரூபிக்கிறது.

இராமன்: மகரிஷி! எனக்குச் சீதாவின் புனிதத்தில் எள்ளளவு சந்தேகமும் இல்லை! ஆனால் கோசல நாட்டுக் குடிமக்களுக்கு நான் என்ன காரணம் சொல்வேன் ? அவரது ஐயப்பாட்டை எப்படித் தீர்ப்பேன் ? என்ன செய்வதென்று தெரியாத குழப்ப நிலை எனக்கு! சீதாவை அயோத்திய புரிக்கு அழைத்து வந்தால், குடிமக்களின் புகாருக்கு நான் மீண்டும் ஆளாவேன்! மக்கள் என்னை மறுபடியும் ஏசுவார்! அவமானப் படுத்தி என்னைப் பேசுவார்! என் புத்திரர் இருவரையும் ஏளனம் செய்வார்! கோசல மன்னரும் அவரது சந்ததிகளும் ஏசப்பட்டு நகைப்புக்கிடமாக வேண்டுமா ? காட்டு ராணியை பனிரெண்டு வருடங் கழித்து அழைத்து வந்து, மீண்டும் நாட்டு ராணி ஆக்கிக் கொண்டான் இராமன் என்று வீதிக்கு வீதி குடிமக்கள் முரசடிக்கப்பட வேண்டுமா ?

சீதா: [சீற்றத்துடன்] மகரிஷி! தயவு செய்து அவரைக் கெஞ்சாதீர்கள்! நான் என்றோ தீண்டப்படாதவள் ஆகிவிட்டேன்! அயோத்திபுரி நரகத்தில் ஆடம்பரமாகச் சாவதை விட, வனவாச ஆசிரமத்தில் அபலையாக வாழ்வதில் ஆனந்தம் அடைகிறேன்! ஆத்மா நீங்கிய எனது வெற்றுடலை இராவணன் தீண்டியதைவிட, ஆத்மா தாங்கிய மனைவியை ஏற்க மறுக்கும், பதியின் புறக்கணிப்பு என் நெஞ்சைப் பிளக்கிறது. அன்று அசோக வனத்தில் சிறைப்பட்ட போது, என்னை மீட்க என் கணவர் வருவார் என்று நம்பி உயிரை வைத்திருந்தேன். இன்றைய வனவாசத்தில் என்னை மீட்டுச் செல்ல எவரும் வரப் போவதில்லை! எனக்கு முடிவு இனி இங்குதான்! நான் தீண்டப்படாத சாபம் பெற்றவள்! நிரந்தரமாகத் தள்ளப் பட்டவள்! பாழாய்ப் போன குடிமக்கள் பதியைத்தான் பிரித்தார்கள்! இப்போது என் கண்மணிகளையும் பிரிக்கப் போகிறார்கள்! (கோவென்று அழுகிறாள்)

லவா, குசா: (தாயின் கண்ணீரைத் துடைத்து) அம்மா! அழாதீர்கள்! நாங்கள் உங்களை விட்டுப் பிரிய மாட்டோம்! தந்தை வேண்டாத தாயிக்குப் பிறந்தவர்கள் நாங்கள்! சந்தேகப் பிதாவுக்குப் பிறந்தவர்கள் நாங்கள்! (இராமனைப் பார்த்து) குடிமக்கள் எங்கள் பிறப்பைப் பற்றியும் புகார் செய்தால், எங்களையும் நீங்கள் ஒருநாள் காட்டுக்கு துரத்தி விடுவீர்களா ? அன்னியப் பெண்டிர் கரம் எங்கள் மீது பட்டுவிட்டால், நாளைக்கு குடிமக்கள் எங்களையும் புகார் செய்வார்களா ? அவ்விதம் உங்கள் காதில் பட்டால் உடனே நாங்களும் நாடு கடத்தப் படுவோமா ? அன்னிய ஆடவன் தொட்டால் பெண் தீண்டப்படாதவள் ஆகிறாள்! அதைப்போல் அன்னியப் பெண் தொட்டால் ஆணும் தீண்டப்படாதன் ஆகிவிடுவானா ?

சீதா: அருமைக் குமாரர்களே! உங்கள் பிதா குடிமக்களின் குரலுக்கு முதல் மதிப்பளித்தாலும், அதிலும் ஏற்றம் இறக்கம் உண்டு. ஆடவர் மேல் வகுப்பு! பெண்டிர் கீழ் வகுப்பு! குடிமக்களில் பாதித் தொகையான பெண்டிருக்கு வாக்குரிமை யில்லை! நாக்குரிமையும் இல்லை! முதலில் தந்தை சொல்படிந்து என்னைக் கலந்து பேசாமல், அவரே ஒப்புக்கொண்டு வாக்கைக் காப்பாற்றப் பதினாங்கு வருடம் வனவாசத்தில் இன்னல் பட்டோம். நான் காட்டில் தூக்கிச் செல்லப்பட்டு சிறையில் பட்ட துயருக்கும், என் பெயர் கறை பட்டதற்கும் அவரே மூல காரணம். இப்போது குடிமக்கள் சொல்படிந்து என்னைக் கலந்து உரையாடாமல், காட்டுக்குத் துரத்தியதற்கும் அவரே காரண கர்த்தா. தனது பட்டத்து அரசியை இதுவரை அவர் மனிதப் பிறவியாகக் கருதி மதித்தே இல்லை! என் இதயக் கோயிலில் அவரது உருவம் ஒன்றுதான் உள்ளது! ஆனால் அவரது நெஞ்சில் யாரில்லாத பாலை வனம்தான் உள்ளது. ஊர் மக்களுக்கு ஏக பத்தினி விரதியெனக் காட்டிக் கொண்டு, ஒப்புக்காக என்னுருவில் ஒரு தங்கச் சிலையைப் பக்கத்தில் வைத்திருகிறார்! உயிருள்ள மனைவி தனியே காட்டில் தவிக்கும் போது, உயிரற்ற சிலையை சிம்மாசனத்தில் வைத்து பூஜித்து வருவதுபோல் காட்டுவது தர்மமா ? மகரிஷி! என் சிலையை உடனே அவர் அகற்ற வேண்டும். என் சிலைகூட அவரை ஒட்டி இருக்கக் கூடாது! என் உருவம், ஓவியம் எதுவும் அலங்காரப் பொருளாக அரண்மனையில் காட்சி தரக் கூடாது!

இராமன்: அப்படியே ஆகட்டும்! அரண்மனைக்குச் சென்றதும் சீதாவின் தங்கச் சிலையை அகற்றி விடுகிறேன்.

வால்மீகி: சீதா! அரண்மனைக்கு மீளுவது பற்றி உன் இறுதியான முடிவென்ன ?

சீதா: (அழுகையுடன்) மகரிஷி! தனிமை என்னைக் கொல்கிறது! நான் பதியுடன் வாழ விரும்புகிறேன். என் கண்மணிகளைப் பிரிய எனக்கு விருப்ப மில்லை! ஆனால் அவர் விரும்பி என்னை வா வென்று கனிவோடு இதுவரை அழைக்க வில்லையே! வேண்டாத பதியோடு நான் எப்படி வாழ முடியும் ? அசோக வனத்தில் முதன்முதல் அவர் என்னைப் பார்த்த அதே வெறுப்புப் பார்வையை இன்றும் அவர் முகத்தில் காண்கிறேன். நாங்கள் ஒருவரை ஒருவர் நேசித்து மணந்து கொள்ளவில்லை! நாங்கள் ஒருவரை ஒருவர் எக்காலத்திலும் பிரிய மாட்டோம் என்று வாக்களித்து மாலை இடவில்லை! அவர் ஜனகா புரிக்கு வந்தது என்னைத் திருமணம் புரியவா ? இல்லை, பந்தயப் போட்டியில் பங்கு கொள்ள! சுயவரப் போட்டியில் அவர் வில்லை முறித்து ஜெயித்த பந்தயப் பரிசு நான். பந்தயக்காரருக்கு பரிசு முக்கிய மில்லை. பந்தய வெற்றிதான் முக்கியம். பந்தயத்தில் பரிசாக என் தங்கை இருந்தாலும் அவர் ஏற்றுக் கொண்டு மாலை யிட்டிருப்பார்! அதே போல்தான் இலங்கைப் போரும் நடந்தது! இலங்கைக்கு அவர் வந்தது, என்னை மீட்பதுபோல் தோன்றியது! ஆனால் இராவணன் பாராக்கிரமம் அவரது ஆற்றலுக்குச் சவால் விட்டதுதான் மெய்யான காரணம்! இலங்கா புரியில் போரிட்டார்! வென்றார்! புகழ்பெற்றார்! என்னை மீட்ட பிறகு அவர் முகத்தில் நான் கண்டது என்ன ? அருவருப்பான ஒரு துச்சப் பார்வை! கரிந்த புண்ணைப் பார்ப்பதுபோல், அவரது கண்கள் என்னைப் பார்த்தன! பல மாதம் பிரிந்திருந்த பதி என்னை ஆசையோடு அணைத்துக் கொள்ளவில்லை! பல நாட்கள் எனக்கு முத்தமிடவு மில்லை! அன்றைக்கே நான் தீண்டத்தகாதவள் ஆகி விட்டேன். நான் தேவை யில்லாதவள்! அவரது இதயத்தில் எனக்கு இடம் கிடையாது. அவர் ஓர் உத்தம பதி! கோடியில் ஒருவர்! என்னால் புண்பட்ட அவரது பாலை நெஞ்சில் எந்தப் பெண்ணும் இடம்பெற முடியவில்லை!

வால்மீகி: மாமன்னா! சீதாவை அழைத்துப் போவது பற்றி இறுதியான உன் முடிவு என்ன ? இன்றில்லை என்றால், என்றைக்கு அழைத்துப் போவாய் ?

இராமன்: [மேலே பார்த்தபடி] என் முடிவு என்றோ தீர்மானிக்கப் பட்டது! மகரிஷி! மன்னித்து விடுங்கள் என்னை! அன்று நான் எடுத்த முடிவே, இன்று நான் எடுக்கப் போகும் முடிவு! மன்னனாகத்தான் இப்போது என்னால் வாழ முடியும். இல்லற மனிதனாக நான் ஆள முடியாது! மனைவியை ஏற்றுக் கொண்டால், நான் மகுடத்தைத் துறக்க வேண்டியதிருக்கும்! குடிமக்கள் புகார்கள் என் செவியில் விழுந்த போது இந்த வினா எழுந்தது. மகுடமா அல்லது மனைவியா என்ற கேள்வி என்னைப் பல நாட்கள் வாட்டியது! தந்தைக்குக் கொடுத்த வாக்குப்படி நான் மகுடத்தை ஏற்றுக் கொண்டேன். மகுடத்தைக் காப்பாற்ற வேண்டுமானால், நான் மனைவியை இழக்கத்தான் வேண்டும்! .. ஆம்! நிரந்தரமாக நான் சீதாவைத் தியாகம் செய்யத்தான் வேண்டும்! ..[பரதனைப் பார்த்து] பரதா! நான் வனவாசம் புகும் முன்பு, உனக்களித்த வாக்கு நினைவில் இருக்கிறதா ? பதினான்கு வருடம் வனவாசம் கழித்து, கோசல நாட்டு ஆட்சியை ஏற்றுக் கொண்டு, உன்னை விடுவிப்பதாக உறுதி கூறியதை மறந்துவிட்டாயா ? நாட்டுக்காக நான் சீதாவைத் தியாகம் செய்வதைத் தவிர, வேறு எதுவும் எனக்கு தெரியவில்லை. ஆனால் லவா, குசாவை நான் அழைத்துச் செல்கிறேன், மகரிஷி!

வால்மீகி: ஈஸ்வரா! இராமகதை இப்படித் திசைமாறிப் போகும் என்று கனவு கூடக் காணவில்லை! நான் எழுதும் நூலுக்கு இராமாயணம் என்று தவறாகப் பெயரிட்டு விட்டேன். அதை மாற்றிச் சீதாயணம் என்று தலைப்பிடப் போகிறேன். இராமன் பட்ட அவமானத்தை விடச் சீதா பட்ட கொடுமை மிகையானது! இராம கதையே சீதாவைப் பற்றியது! இராம கதையே சீதாவால் கூறப்பட்டது! சீதாவைச் சிறைத் தண்டனை, பதியின் புறக்கணிப்பு, அவள் பட்ட துயரங்கள் கூறும் பக்கங்கள்தான் இராம கதையில் அதிகம்!

சீதா: வேண்டாம் மகரிஷி! என் கொடி இராம கதையில் பறக்க வேண்டாம்! அசோகவன மீட்பிலே, அன்று என் கொடி நூலறுந்து பறக்க முடியாமல் போனது! இராமகதையில் என் கொடி பறக்க வேண்டாம்! நீங்கள் படைக்கும் இராம காவியத்தில் அவர் கொடியே வானோங்கிப் பறக்கட்டும். என் சோக வரலாறு, தெரிந்தும் தெரியாமல் அதில் மறைந்தே இருக்கட்டும்.

பரதன்: அண்ணா! உங்களுக்கு கிடைத்த ஓர் அரிய வாய்ப்பை இழந்து விட்டார்கள்! அண்ணிக்கு மீண்டும் நீங்கள் தண்டனை அளிப்பது அநீதி! அக்கிரம்! அதர்மம்! மகரிஷி வேண்டியும் நீங்கள் கேட்கவில்லை! நாங்கள் மன்றாடியும் நீங்கள் புறக்கணித்தீர்! ஒரே பிடிவாதமாக அண்ணியை ஒதுக்கத் துணிந்தீர்! பாலர்களைப் பிரிக்க முனைந்தீர்! உங்களுக்குப் பணி செய்ய நான் இனி விரும்ப வில்லை! பதவியிலிருந்து நான் விலகிக் கொள்கிறேன்.

இலட்சுமணன்: [வில்லைக் கீழே எறிந்து] அண்ணா! அண்ணியை மறுபடியும் புறக்கணித்தற்கு நானும் அரசாங்கப் பதவியிலிருந்து விலகிக் கொள்கிறேன்.

சத்துருகனன்: அண்ணா! இத்தனைப் பிடிவாதக்காரர் நீங்கள் என்று நான் நினைக்க வில்லை! போர்த் தளபதி பதவியிலிருந்து நானும் விலகிக் கொள்கிறேன்.

அனுமான்: இராம் பிரபு! மெய்யாக நீங்கள் மகாராணியாரைக் கைவிட்ட காரணம் இப்போதுதான் புரிகிறது, எனக்கு! இரண்டாவது முறை கண்டுபிடித்த பின்பு, இங்கே விட்டுப் போவது எனக்கு நியாயமாகத் தெரியவில்லை! இந்த வேதனையை என்னால் தாங்க முடியாது! நானும் உங்களுக்குப் பணி செய்வதை விட்டு தென்னாட்டுக்குத் திரும்பப் போகிறேன்.

லவா, குசா: (கடுமையாக) அருமைப் பிதாவே! அன்னையைப் பிரிந்து எங்களால் உங்களுடன் வாழ முடியாது. அன்னையை வரவேற்காத அயோத்தியா புரிக்கு நாங்களும் வரப் போவதில்லை! இங்கே அன்னையுடன் தங்கிக் கொள்கிறோம்.

வால்மீகி: [வேதனையுடன்] போதும் இந்த சத்தியாகிரகம்! சீதாவை மன்னர் புறக்கணிக்க அத்தனை பேரும் ஒருங்கே மன்னரைத் தண்டிக்கிறார்கள்! இந்த ஒத்துழையாமைப் போராட்டம் என்ன முடிவைத் தரப் போகிற தென்று எனக்குத் தெரியவில்லை! என்ன இக்கட்டான கட்டத்திற்கு சீதாவின் நிலை வந்து விட்டது ? மாமன்னரே! குடிமக்கள் புகாரை ஒதுக்கி, நீங்கள் சீதாவைக் கூட்டிச் செல்வதுதான் முறை. எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும். வாய் திறந்து ‘வாராய் ‘ என்று அழைத்துச் செல்லுங்கள்.

சீதா: [கண்ணீர் பொங்க] மகரிஷி! என்னை வைத்து துவங்கிய இப்போராட்டம் என்னால்தான் தீர்வு பெற வேண்டும்! என் கதையை நான்தான் முடிக்க வேண்டும்! அப்போது எல்லாரது பிரச்சனைகளும் தீரும்! உங்கள் இராம கதைக்கு நானே முடிவை எழுதுகிறேன்! எனது கதைக்கு வேறு முடிவே கிடையாது! (லதா, குசாவைப் பார்த்து) …. அருமைக் குமார்களே! உங்களைத் தாய் பிரியும் தருணம் வந்து விட்டது! வேறு வழியில்லை. நீங்கள் பட்டத்து வாரிசுகள். உங்கள் இடம் அரண்மனை! உங்களை வளர்ப்பது இனி உங்கள் தந்தையின் பொறுப்பு! என் பொறுப்பு இன்றோடு முடிந்து விட்டது! என் முடிவே இறுதி முடிவு! எல்லோரது பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும்….நான் வாழ்வதில் யாருக்கும் இனிப் பயனில்லை! … நான் தீண்டப் படாதவள்!.. நான் தேவைப் படாதவள்! … தனியாகத் தினமும் செத்துக் கொண்டிருப்பதை விட, ஒரே நொடியில் உலகை விட்டுச் செல்வது சுகமானது! நானினி வாழ்வதில் உங்களுக்குப் பலனில்லை! …. எனக்கும் பலனில்லை! … எல்லோரது பிரச்சனையும் என்னால்தான் தீர்க்க முடியும்! … நான் போகிறேன்! … [வேகமாய் ஓடி யாவரையும் கும்பிட்டுக் குன்றின் உச்சியிலிருந்து கீழே குதிக்கிறாள். அனைவரும் அவளைத் தடுக்க ஓடுகிறார்கள். ஆனால் தாமதமாகி விடுகிறது. சீதாவின் தலை பாறையில் அடிபட்டு அவளது ஆத்மா பிரிகிறது].

லவா, குசா: [ஓடிச் சென்று அழுகிறார்கள்] அம்மா! அம்மா! எங்களை விட்டுப் போக வேண்டாம். உங்களைப் பிரிந்து எப்படி இருப்போம் ?

வால்மீகி: [கண்ணீர் சிந்தி] சீதா! உனது ஆயுள் இப்படிக் கோரமாக முடியுமென்று நான் நினைக்க வில்லை! காட்டில் அபயம் அளித்த எனது ஆசிரமத்துக்கு அருகிலா, உனது ஆயுளும் இறுதியாக வேண்டும். … ஈஸ்வாரா! … என்ன பயங்கர முடிவு ? … இராம கதை இவ்விதம் சோகக் கதையாக முடிய வேண்டுமா ? [மரத்தடிக் குன்றில் தலை சாய்கிறார்].

[இராமன் தலையில் கையை வைத்துக் கொண்டு பாறையில் அமர்கிறான். இலட்சுமணன், பரதன், சத்துருகனன், அனுமன் யாவரும் குன்றின் அருகில் நின்று கதறி அழுகிறார்கள்]

இலட்சுமணன்: [கண்ணீருடன்] அன்று வனவாசத்தில் உங்களை இராப் பகலாய்ப் பாதுகாத்துக் கொண்டு நின்றேன்! இன்று உங்களைப் பாதுகாக்க முடியாது நீங்கள் உயிர் துறப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றேன்! வனவாசத்தில் நிரந்தரமாகப் பிரிய உங்களை அழைத்து வந்து மோசடி செய்த வஞ்சகன் நான். சாக வேண்டியன் நான்! வாழப் பிறந்தவர் நீங்கள்!

பரதன்: [கலக்கமுடன், ஆங்காரமாக] அண்ணி! உயிர் நீங்கிப் பாதாளத்தில் கிடக்கும் உங்கள் உடலுக்கு தகுந்த அடக்க மரியாதை கூடச் செய்ய முடியாமல் நாங்கள் நிற்கிறோம்! உங்கள் மரணத்துக்கு காரண கர்த்தாவான இராமச் சக்கரவர்த்தியை வரலாறு வாழையடி வாழையாகப் பழி சுமத்தும்! மனைவியைக் கொன்ற உத்தமன் என்று வருங்காலம் பறைசாற்றும்! மிதிலை நாட்டு அபலை முடிவுக்குக் கோசல நாட்டு மன்னன் மூல கர்த்தா என்பது எதிர்காலத்தில் தெரியாமலும் போகலாம்.

அனுமான்: [கதறி அழுகிறான்] பட்டத்து மகாராணி பட்ட துயர் போதாமல் இப்படி ஒரு பயங்கர முடிவா ? இதை எப்படித் தாங்குவேன் ? நீங்கள் இப்படிக் காட்டில் உயிர் துறக்கவா, நாங்கள் இலங்கையில் போரிட்டு உங்களைக் காப்பாற்றினோம் ?



[சீதாவின் உடல் பாதாளப் பள்ளத்தில் கிடக்க இலட்சுமணன், பரதன், சத்துருகனன், அனுமன் யாவரும் கைகூப்பி வணங்குகிறார்கள்].

வால்மீகி: இறைவா! மிதிலை மன்னரின் புதல்வி, கோசல மன்னரின் பத்தினி சீதாதேவின் ஆத்மா சாந்தியடைய நாங்கள் வேண்டுகிறோம். அபலை சீதாவின் துயர்க்கதை ஊரெல்லாம் பரவட்டும்! நாட்டு மாந்தருக்கு ஒரு பாடம் கற்பிக்கட்டும்.

[அனைவரும் அயோத்திய புரிக்குப் புறப்படுகிறார்கள். அழுது கொண்டிருக்கும் லவா, குசா இருவரையும் கையைப் பிடித்து இராமன் அழைத்துச் செல்கிறான். வால்மீகியும் சீடர்களும் ஆசிரமத்துக்கு மீள்கிறார்]

(நாடகம் முற்றிற்று)


********


சீதாயணம்


ஓரங்க நாடகத்தின் பின்னுரை





பின்னுரை: பன்முகமுடைய, பல இனங்கள் கொண்ட, பல மதங்கள் உடைய, பல மொழிகள் பேசும், பல மாநிலங்கள் ஒட்டிய பாரத நாட்டில் விடுதலைக்குப் பிறகு மதச் சண்டைகளும், இனச் சண்டைகளும், குழுச் சண்டைகளும், கட்சிச் சண்டைகளும் பெருகிக் கட்டுப்படுத்த முடியாமல் நிலைத்துப் போவது வருந்தத்தக்க வரலாற்று மைல் கற்களாகும். கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக, இந்தியப் பிரிவினைக்குப் பிறகு மதப்போரை மறுபடியும் துவக்கி மும்மரமாக நடத்தி வருவது, அவதாரத் தேவனாகத் தவறாகக் கருதப்படும் இராமன் பெயரால் அயோத்தியில் கட்டப் போகும் புதுக்கோயில் என்பதை யாவரும் அறிவோம்! இராமன் பிறந்த புனித பூமியான அயோத்தியாவில் பாப்ரி மசூதி யிடிப்பும், அதே இடத்தில் ஓரடி பிசாகாமல் கோயில் எடுக்கும் யுத்தமும் ஆயிர வருடப் போராக ஆகும் போக்கு தென்படுகிறது! அரசியல் மேதைகளும், ஆன்மீக ஞானிகளும், ஆட்சி வர்க்கமும் இராமன் அவதார தேவன் அல்லன் என்று பலமுறைகள் பறைசாற்றி, உரையாற்றி, எழுதியும் வந்தால், இந்த தலைமுறையில் முடியா விட்டாலும், அடுத்து வரும் புதிய தலைமுறைகளில் மதப் போராட்டம் படிப்படியாய் குறைவதற்கு வாய்ப்பிருக்கிறது!

இராமனைத் தெய்வீக நாயகனாகப் போற்றுவதற்குரிய எந்த சிறப்பான அம்சமும் அவன் வரலாற்றில் குறிப்பிடுவதற் கில்லை!புத்தரைப் போல, மகா வீரர் போல, இராமன் இந்து மதத்தையோ அல்லது வேறு எந்த மதத்தையோ பரப்பவில்லை! அசோக மாமன்னர் புத்த மதத்தை உலகெங்கும் பரப்பியது போல், இந்துக்கள் தேவனாய் வணங்கிடும் இராமன் இந்து மதத்தை எங்கும் பரப்பவு மில்லை, வளர்க்கவு மில்லை! அவனது வரலாற்றில் எந்த சமயத்திலும் சிந்திக்கத் தக்க, பொறிக்கத் தகுந்த எந்தப் பொன்மொழிகளோ அல்லது செம்மொழிகளோ பேசியதில்லை! தரணியைக் காக்க வந்த தார்மீக இந்துவென்று இராமன் என்றும் தன்னைக் கருதவில்லை! இராவணன் உள்பட அக்கிரமம் செய்த அரக்கர்களைக் கொன்றதைத் தவிர, வரலாற்று முக்கியத்துவம் பெற்ற எந்த மகத்தான பணிகளையும் இராமன் செய்திருப்பதாகத் தெரியவில்லை. கிருஷ்ண பகவான் இசைத்ததாகக் கூறும் பகவத் கீதை போல இராமன் இந்துமத வேத நூலெதுவும் எழுதவில்லை! மெய்யாக கிருஷ்ண பரமாத்மா பூமியில் அவதரித்துப் பகவத் கீதையைப் படைத்தார் என்பதும் தர்க்கத்துக்குரிய ஒரு வரலாற்றுத் தகவலே!

உலகிலே மாபெரும் மகாபாரதக் காவியத்தை எழுதிய வியாச முனிவர்தான் அற்புத வேதநூல் பகவத் கீதையை ஆக்கினார் என்பது என் அழுத்தமான கருத்து. பூமியில் அவதரித்து யுத்த களத்தில் பகவத் கீதை படைக்கும் கிருஷ்ண பரமாத்மா, பஞ்ச பாண்டவரில் அர்ச்சுனனுக்கு மட்டும் ஏன் தேரோட்டியாக வர வேண்டும் என்பதும் தர்க்கத்துக் குரியது. வியாச முனிவர் படைத்த உன்னத நூல் பகவத் கீதையைப் பின்னால் வந்தவர், கிருஷ்ண பரமாத்மா எழுதியதாக மாற்றி அந்நூல் பேரும் புகழும் பெற தெய்வீக முலாம் பூசி விட்டர்கள்.எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் மெய்ப்பொருள் காண்பது அறிவு, எப்பொருள் எத்தன்மைத் தாயினும் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்று நமக்கு வள்ளுவர் கூறி இருக்கிறார்.

சுமார் மூவாயிரம் ஆண்டுக்கு முன்பு வால்மீகி முனிவர் தன் மூலநூல் இராமாயணத்தில் இராம கதையை முதலில் எப்படி எழுதி யிருந்தார் என்பதை அறிந்து கொள்ள முடியாது! மூலநூல் இராமாயணம் பின்னால் பலரால், பலமுறை மாற்றமாகித் தெய்வீக முலாம் பூசப்பட்டுப் புராணப் பொய்க் கதையாய், உணர்ச்சி ஊட்டாத, உயிரற்ற காவியமாய்ப் போனது. பனை ஓலையில் எழுதப்பட்ட இராமாயணம் இடைச் செருகல் நுழைந்து கலப்பட மாக்கட்ட ஓரு காப்பியம் என்று அரசியல் ஆன்மீக மேதை இராஜகோபாலாச்சாரியார் தானெழுதிய இராமாயண நூலில் கூறுகிறார்.தெய்வத்தைத் தொழாமல், கணவனைத் தினமும் தொழுது எழுகின்ற மனைவி பெய்யென்று சொன்னவுடன் மழை பெய்துவிடும் என்று வள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே எழுதி யிருப்பது, அக்கால இல்லங்களில் ஆட்சி செய்து வந்த ஆணாதிக்க வர்க்கத்தின் நியதியையும், வரலாற்றையும் காட்டுகிறது! எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்றும் அவரே சொல்லி யிருக்கிறார்.

வீட்டில் வாயைப் பூட்டி வைத்துக் கணவனால் சித்திரவதை செய்யப்படும் மனைவி, கணவன் எப்போது சாவான் என்று கடவுளைத் தினமும் வேண்டிக் கொள்வதில் எந்தத் தவறுமில்லை! முதற் குறளின் உட்பொருள் என்ன வென்றால், அக்காலத்திலும் பெண்டிர் தனித்துவ உணர்ச்சியும், விடுதலை முதிர்ச்சியும், குடும்பத் தலைவனை எதிர்த்திடும் துணிச்சலும் கொண்டிருந்தனர் என்பதே. அந்தக் காலத்துப் பெண்டிரின் அத்தகைய விடுதலை உணர்ச்சியை, தனித்துவத் துணிச்சலைக் கட்டுப்படுத்தவே, வள்ளுவர் ஒரு பெரும் பரிசுக் கொடையை உயர்வு நவிற்சியாக எடுத்துக் காட்டி யிருக்கிறார்! கணவனைத் தினமும் தொழுகின்ற பெண், பெய்யென்றால் மழை மெய்யாகப் பெய்யாதென்று மேதை வள்ளுவருக்குத் தெரியாதா என்ன ?

இராமாயணம், மகாபாரதம் போன்ற நமது புராண கதைகள் அனைத்தும் ஆணாதிக்க வழிபாடுகளையே, பல்லாயிரம் ஆண்டுகளாகப் பறைசாற்றி வருகின்றன! பஞ்ச பாண்டவர் மனைவி திரெளபதியைச் சூதாட்டத்தில் பகடைப் பனையமாக வைத்து இழந்தார்கள்! துரியோதனன் அடிமையான திரெளபதியின் துகிலைத் துச்சாதனன் சபை நடுவே உரித்து அவமானம் செய்ய, ஆனந்தம் அடைகிறான். எல்லாம் இழந்த காலத்தில் நளச் சக்கரவர்த்தி நள்ளிரவில் தூங்கும் மனைவியை விட்டு நழுவிச் செல்கிறான். பொய்யே பேசாத சத்தியவான், மனைவியை நடுத்தெருவில் நிற்க வைத்து விற்கிறான். இந்தியாவில் இன்றைக்கும் கணவன் இறந்ததும், மனைவி மறுமணம் செய்யக் கூடாதென்பதும், கணவன் இறந்தவுடன் மனைவியை உடன்கட்டை ஏற்றி உயிருடன் எரிப்பதும் ஆணாதிக்கப் பரம்பரையின் அடாத செயல்களே!

மனைவி இறந்து சுடுகாட்டுத் தீ அணைவதற்கு முன்பே, புதுப் பெண்ணை மணம் செய்யக் கணவன் திட்டமிடுவதும் ஆணாதிக்க நீதியின் அடாத செயலே! இப்போதும் பெரும்பான்மையான இல்லங்களில் ஆணாதிக்க வர்க்கம் ஆண்டு வந்தாலும், சிறுபான்மை இல்லங்களில் பெண்ணாதிக்கமும் கையோங்கி யுள்ளது! ஆணாதிக்கமோ அல்லது பெண்ணாதிக்கமோ இரண்டில் ஒன்றில்லாத இல்லங்கள் கலியுகத்தில் மிகமிகக் குறைவே.

இராமன் ஆண்ட காலத்தில் வாழ்ந்து, இராம வரலாற்றை அறிந்த வஷிஸ்டர், விஸ்வாமித்திரர், வால்மீகி ஆகிய முப்பெரும் முனிவர்களில் வால்மீகி மட்டும் இராம கதையை ஏன் எழுதினார் என்பது கேட்கத் தக்க ஒரு கேள்வி. மூன்று முனிவர்களில் யார் மூத்தவர், யார் இளையவர், யார் இடைப்பட்டவர் என்பது தெரியவில்லை. அவர்களில் முக்கியமாக வஷிஸ்ட முனிவரே இராமன், பரதன், சத்துருகனன், இலடசுமணன் ஆகிய நான்கு இளவரசர்களுக்கும் குருகுல ஆசிரமத்தில் ஆரம்பக் கல்வி முதல் வேத ஞானக் கல்வியும் புகட்டி, வில்வித்தை, வாள்வீச்சு போன்ற போர்த்துறை திறமைகளைப் பெறவும் பயிற்சி அளித்தவர். அதைப் போன்று ஆசிரமத்தில் சீதாவின் புதல்வர் லவா, குசா இருவருக்கும் ஆரம்பக் கல்வி, வில், வாள் போர்ப் பயிற்சி அளித்தவர், வால்மீகி. இராமனது வயது, லவா, குசா இரட்டையர் வயது வேறுபாடுகளைப் பார்க்கும் போது, வால்மீகி முனியே மூவரிலும் இளையவர் என்பதை ஒருவாறு ஊகிக்கலாம். இராம கதையை வால்மீகி முதலில் தானாகவே எழுத ஆரம்பித்தாரா அல்லது சீதா ஆசிரமத்தில் வந்த பிறகு எழுத ஆரம்பித்தாரா என்பதும் தெரியவில்லை. சீதா ஆசிரமத்தில் இருந்து தன் அவலக் கதை முழுவதையும் கூறிய பின், வால்மீகி இராம கதையில் கவர்ச்சி அடைந்து எழுதத் துவங்கி யிருக்கலாம் என்று கருதவும் இடமிருக்கிறது.

இராமகதை உண்மையாக நிகழ்ந்தது என்பது என் உறுதியான கருத்து. கம்பரும் பின்னால் இந்தி மொழியில் எழுதிய துளசிதாசரும் மூலக் கதையை சற்று மாற்றியுள்ளதாக இராஜாஜி கூறுகிறார். வால்மீகி இராமனைக் கடவுளின் அவதாரமாகச் சித்திரிக்கவில்லை என்றும், இராமன் தன்னை ஓர் அவதார தேவனாகக் கருதவில்லை என்றும் இராஜாஜி எழுதியுள்ளார். இராவணன் அழிக்கப் பட்டவுடன், இராமனின் அவதாரப் பணி முடிந்துவிட்டது என்றும், அயோத்திய புரியில் பட்டம் சூடிய பிறகு இராமன் சீதைக்கு இழைத்த இன்னல்களை நோக்கும் போது, அவன் வெறும் மானிட வேந்தனாகவே வாழ்ந்தான் என்றும் இராஜாஜி கூறுகிறார். முன்பாதிக் காலத்தில் இராமன் அவதாரத் தேவனாகத் தோன்றிப் பல மாய வித்தைகள் புரிந்து, பின்பாதிக் காலத்தில் மனிதனாக மாறி வாழ்ந்தான் என்று இராஜாஜி கூறுவது முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறது! முழுக்க முழுக்க இராமன் மனிதாகப் பிறந்து, மனிதனாக வளர்ந்து, மனிதனாகவே வாழ்ந்தான் என்பது எனது அழுத்தமான கருத்து!

கர்ப்பிணி சீதா இரண்டாம் முறை காட்டில் விடப்பட்டு, வால்மீகியின் ஆசிரமத்தில் இரட்டையர் பிறந்து இளைஞரான சமயத்தில் தந்தை இராமனைச் சந்திக்கிறார்கள். பாலர்களை மட்டும் ஏற்றுக் கொண்ட இராமன் சீதையைக் கூட்டிச் செல்ல மறுத்ததும், சீதா மனமுடைந்து மலைக் குன்றிலிருந்து குதித்துத் தன்னுயிரை மாய்த்துக் கொள்கிறாள். சீதையின் அவல மரணத்தை மூடி மறைத்து, அதற்கு முழுக் காரண கர்த்தாவான இராமனை உத்தமக் கணவன் என்று போற்றி இந்துக்களில் பலர் பல்லாயிரம் ஆண்டுகளாக சீதாவையும் இராமனையும் ஒன்றாக வைத்து வணங்கி வருகிறார்கள். கடவுள் அவதாரமாக வேடம் பெற்ற இராமனை மானிட மன்னனாக மீண்டும் மாற்றி எனது சீதாயண நாடகம் எழுதப்பட்டது! இந்த நாடகத்தில் வரும் இராமன், இராவணன், அனுமான் அனைவரும் மனிதப் பிறவிகளாகக் காட்டப் படுகிறார்கள்! விஷ்ணுவின் அவதாரமாக இராமர் இங்கே கருதப்பட வில்லை!

பத்துத் தலை கொண்ட அரக்கனாக இராவணன் இங்கே கருதப்பட வில்லை! தென்னவரான அனுமான், அங்கதன், சுக்ரீவன் ஆகியோர் குரங்கு முகமும், வாலும் கொண்ட வானரங்களாகத் தோன்றாமல் மனித முகம் கொண்ட மானிடர்களாக சீதாயண நாடகத்தில் வருகிறார்கள். சீதையைக் காட்டுக்கு அனுப்பும் இறுதிக் காண்டத்தில் நேர்ந்த அதிர்ச்சிக் காட்சியை இராம கதையின் உச்சக் கட்டமாக நான் கருதுகிறேன். காட்டில் தனித்து விடப்பட்ட சீதா, வால்மீகி ஆசிரமத்தில் குழந்தைகள் பெற்று, வளர்த்த பிறகு ஏற்றுக் கொள்ளப்படாது புறக்கணிக்கப்பட்டு உயிரை மாய்த்துக் கொள்வது, இந்திய இதிகாசத்தில் தெரிந்தும், தெரியாமல் போன ஓர் துன்பியல் காவிய வரலாறு என்பது என் கருத்து!

அனுமான் படையினரை நேராகப் பார்த்திருந்த வால்மீகி முனிவர், மூலக் கதையில் வால் முளைத்த வானரங்களாகக் காட்டி யிருக்க முடியாது என்பது என் கருத்து. பின்னால் அவரது சீடர்களோ அல்லது பின்னால் பெருகிய இராம பக்தர்களோ மூலக் கதையைத் திரித்துள்ளதாகக் கருத இடமிருக்கிறது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அனுமான் போல ஆறறிவு பெற்று பேசும் குரங்குகள் எந்தப் பகுதியிலும் வாழ்ந்ததற்கு உலக வரலாறுகளில் சான்றுகள் இல்லை! மானிட இராமனைத் தேவனாய் உயர்த்தி மாற்றியவருக்கு இருந்த உரிமை போல், அவனை மீண்டும் கீழிறக்கி மனிதாய்க் கொண்டு வர எனக்கும் உள்ளது என்ற துணிச்சலில் இந்த நாடகத்தை எழுதி முடித்தேன். வால்மீகி இராமாயணத்தில் தெய்வீகத் தோரணங்கள், உயர்வு நவிற்சி வித்தைகள், பத்துத் தலைகள், வெளியே நீட்டிய பற்கள், குரங்கு வாய்கள், வானர வால்கள் ஆகியவற்றை வடிகட்டி நீக்கி முக்கிய கதா நபர்களை மனிதராக மாற்றிக் கதை ஓட்டத்தை மானிட நிகழ்ச்சிகளாக படைத்தால் இராம கதை இனியதாய், எளியதாய், நம்பக்கூடிய மகத்தான ஓர் இதிகாசக் காவியமாகப் புத்துயிர் பெற்று எழுகிறது.

ஆசிரமத்தில் இருந்த சீதா தன் கதையை வால்மீகிக்கு நேராகச் சொல்லியதாலும், வால்மீகி லவா, குசா வளர்ப்புக் காண்டத்தில் தானே ஒரு முக்கிய நபராக இருந்ததாலும், இராமகதைச் சம்பவங்கள் பல குறிப்பிட்டதாகவும், அழுத்தமாகவும், தெளிவாகவும், மெய்யானதாகவும் நம்பக் கூடியதாகவும் உள்ளன. வில்லை முறித்துச் சீதாவை இராமன் மணந்தது, மூத்தவன் இராமன் இருக்க பரதன் இளையவனை அரசனாக்கத் தாய் விழைந்தது, தசரத மன்னன் கைகேயிக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இராமனைப் பதினாங்கு வருடம் காட்டுக்கு அனுப்பியது, அதன்பின் தந்தை தசரதன் மனமுடைந்து இறந்தது, காட்டில் மானைப் பிடிக்கப்போய் இராமன் மனைவியை இழந்தது, வாலியை இராமன் மறைந்து நின்று கொன்றது, அனுமார் படையினர் இலங்காபுரி செல்லக் கற்பாலம் அமைத்தது, சீதாவைப் பற்றி வண்ணான் அவதூறு கூறியது, மனம் விண்டு சீதா இறுதியில் குன்றிலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டது போன்றவை மெய்யாக நடந்த நிகழ்ச்சிகளாகத் தோன்றுகின்றன. கண்ணகி மதுரையில் கணவன் கொல்லப்பட்டபின், சேர நாட்டுக்குச் சென்று மலை மேலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டாள். கண்ணகி ஆருயிர்க் கணவனை இழந்தவள்! சீதா ஆருயிர்க் கணவனால் நிரந்தரமாகப் புறக்கணிக்கப் பட்டவள்! காவியத்தில் அக்கோர முடிவுகள் இரண்டும் படிப்போர் நெஞ்சைப் பிழிந்து, கண்களைக் குளமாக்கும் கோரத் தன்மை படைத்தவை!

சீதாயண நாடகம் போதிக்கும் முக்கிய பாடம், இராமன் ஓர் அவதாரத் தேவன் அல்லன்; அவன் முழுக்க முழுக்க ஒரு மனிதன் என்பதே! பல்லாயிரம் ஆண்டுகளாக மாந்தர் பலர் புரியாத ஏதோ ஒரு காரணத்தில் அவனைத் தேவ மகனாக்கி வந்ததால், அயோத்திய புரியில் இப்போது பாப்ரி மசூதி இருந்த இடத்தில் கோயில் எழுப்புவது வட நாட்டில் மதப்போரைத் துவக்கிப் பத்துப் பதினைந்து ஆண்டுகளாக நூற்றுக் கணக்கில் மக்கள் கொலை செய்யப்பட்டு வருகிறார்கள். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் இராமன் எந்த இடத்தில் பிறந்தான் என்று நிச்சயமாய் யாரும் நிரூபிக்க முடியாத போது, பிரச்சனையான பாப்ரி மசூதி இருந்த இடத்துக்கு ஆயிரம் அடி அப்பால், இராம பக்தர்கள் புதிய கோயில் கட்டினால் என்ன குறைவாகும் என்பதே எனது முடிவான கேள்வி!


**********

தகவல்

1. Bharathiya Vidhya Bhavan Ramayana By C. Rajagopalachari [1958]

2. Valmiki ’s Ramayana, Dreamland Publications, By: Ved Prakash [2001] and Picture Credit to Kishan Lal Verma

3. Mahabharatha By: Rosetta William [2000]

4. The Wonder that was India By: A.L. Basham [1959]


**************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (April 11, 2005)]







Like


Be the first to like this.
33 மறுமொழிகள் »






1


சீனிவாசன் சொல்கிறார்:

சீதாயணம் அற்புதமான கதை பாராட்டுகள் இதுபோல் பல உங்களிடம் எதிர்பார்க்கிறோம்


Posted on 2:15 AM இல் ஜூலை 13, 2008


பதில்






2


Arnold Dowker சொல்கிறார்:

i am a newbie in SEO but i consider which the distribution of articles in report websites is one of the very best approaches to acquire one way links.


Posted on 1:06 AM இல் ஆகஸ்ட் 4, 2011


பதில்






3


Gilberto Mcjunkin சொல்கிறார்:

Great write-up and proper to the point. I don’t know if this is actually the very best stick to ask but do you people have any ideea exactly where to make use of most professional writers? Give thanks to you


Posted on 9:45 AM இல் ஆகஸ்ட் 6, 2011


பதில்






4


Jayabarathan S சொல்கிறார்:

பாராட்டுக்கு நன்றி நண்பர் சீனிவாசன்.

நமது இந்திய புராணக் கதைகள் உள்ளே உன்னத கலைக் களஞ்சியம் ஒளிந்திருக்கிறது. அவற்றின் மீது படிந்துள்ள தூசியைத் துடைத்தால் அவை புத்துயிர் பெற்று மீண்டும் எழுகின்றன.

சி. ஜெயபாரதன்


Posted on 8:29 AM இல் ஜூலை 13, 2008


பதில்






5


dharumi சொல்கிறார்:

இதையும் வாசித்துப் பாருங்களேன்.

http://directorram.blogspot.com/2008/06/blog-post_22.html


Posted on 6:38 AM இல் செப்டம்பர் 28, 2008


பதில்






6


dharumi சொல்கிறார்:

//அக்காலத்திலும் பெண்டிர் தனித்துவ உணர்ச்சியும், விடுதலை முதிர்ச்சியும், குடும்பத் தலைவனை எதிர்த்திடும் துணிச்சலும் கொண்டிருந்தனர் என்பதே. //

அந்தக் குறளிலிருந்து எப்படி இந்த விவாதத்தை வைக்கிறீர்கள் என்பது புரியவில்லையே…


Posted on 7:16 AM இல் செப்டம்பர் 28, 2008


பதில்






7


krishnamoorthi சொல்கிறார்:

அன்புள்ள திரு ஜெயபாரதன்,

மதுரை வலைப்பதிவர் தருமியின் கடவுள் என்றொரு மாயை தொடர் பதிவின் ஏழு பகுதிகளையும் அதில் உங்களுடைய பின்னூட்டங்களையும் சமீபத்தில் தான் படிக்க நேர்ந்தது. இந்தத் தொடர்பதிவின் முதல் பகுதியில் நிகழ்ந்த கருத்துப் பரிமாற்றங்கள், எப்படித் திசை மாறிப் போயின என்பதையும் பார்க்க முடிந்தது. தருமியுடன் பேசிக் கொண்டிருந்த போது உங்களுடைய சீதாயணம் பதிவு நன்றாக இருக்கும் என்று சொன்னார்; இங்கே வந்து படித்த பிறகு தான், எதன் அடிப்படையில் அவர் அது பிடித்திருக்கிறது என்று சொன்னார் என்பதும் புரிந்தது.

அதில் கண்ட அனுபவங்களைக் கொண்டு, இப்போது அதன் ஏழாவது பகுதியின் மீது கருத்துப் பரிமாற்றங்களை, தொடங்கியிருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது படித்துவிட்டு விருப்பமிருந்தால்,உங்களுடைய கருத்து என்ன என்பதையும் பதிவு செய்யுங்கள்.

தருமியுடைய வலைப்பதிவில் பின்னூட்டங்களோடு, இந்த விவாதத்தைப் பற்றிய எனது கண்ணோட்டங்களையும், கேள்விகளையும் இந்தப் பக்கங்களில் பார்க்கலாம்,

இங்கே மற்றும் இங்கே


Posted on 12:18 AM இல் ஜூன் 23, 2009


பதில்






8


Jayabarathan S சொல்கிறார்:

அன்புள்ள நண்பர் திரு. கிருஷ்ண மூர்த்தி,

வணக்கம்.

உங்கள் கடிதம் கண்டு பெரு மகிழ்ச்சி அடைந்தேன். ஆன்மீகச் சிந்தனை சிறிதும் இல்லாத வெறும் விஞ்ஞானம் பெரும் பாலை வனமே. அதில் தாகம் தீர்க்கும் பசுஞ்சோலைதான் ஆன்மீக மலர்ச்சி.

தருமியும் அவரது முகமூடி மூர்க்கரும் பாதிக் கிணறு தாண்டிய பகுத்தறிவுவாதிகள் என்பது என் கருத்து.

“உயிர்” என்றால் இரசாயனக் கலவை என்று ஆரம்பப் பள்ளி மாணவராய்ச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.

“உயிர், ஆத்மா, கடவுள்” என்றால் என்ன வென்று அவரது சிறு மூளைக்குப் புரிவ தில்லை. அவரது மூளையில் ஓர் ஊற்று அடைத்துப் போய் உள்ளது.

ஆன்மீகம், விஞ்ஞானம் ஆகிய இரண்டும் சேர்ந்துதான் பிரபஞ்ச நியதிகளை விளக்க முடியும் என்று விஞ்ஞான மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கூறுகிறார்.

வெறும் விஞ்ஞானம் மட்டும் போதாது.

இன்றைய விஞ்ஞான அறிவு பூரணமற்றது, குறைபாடுகள் கொண்டது, தர்க்கத்துக்கு உரியது. தொடர்ந்து மாறி விருத்தியடைவது.

உங்கள் ஆன்மீக வலைத்தளம் ஒரு பசுஞ்சோலை. பாராட்டுகள். என் குநாதர் விவேகானந்தர்.

உங்கள் பதில்களைப் படித்து என் கருத்தைக் கூறுகிறேன். என் படைப்புகள் திண்ணையில் ( http://www.thinnai.com ) தொடர்ந்து வருகின்றன.

அன்புடன்,

சி. ஜெயபாரதன்.


Posted on 5:02 மாலை இல் ஜூன் 23, 2009


பதில்






9


Siva சொல்கிறார்:

அன்பு நண்பருக்கு,

மாலை வணக்கங்கள்.

“சீதாயணம்” மிகச் சிறந்த படைப்பு. பாரதி “தெய்வம்” என்று உடைத்துச் சொன்ன உண்மை, அதில் இருக்கிறது.

சீதையின் வாதங்கள் மிகக் கூர்மை. சிந்தனையைத் தூண்டுவதாகவே, முழுப் படைப்பும் உள்ளதுடன், ராமன் குறித்த எனது மதிப்பீட்டினை உறுதி செய்கிறது.

கதாபாத்திரங்களின் உரையாடல்கள் மட்டுமின்றி, முன்னுரை மற்றும் முடிவுரை இவற்றில், தங்கள் கருத்து வெளிப்பாடுகளில், மத ஒற்றுமை குறித்த தங்களின் ஆதங்கமும், “விட்டுக் கொடுத்தலே வாழ்தலின் சாரம்” என்ற நிலையும் தெரிய வருவதில், நான் மிக மகிழ்ச்சியடைகிறேன்.

பெண் விடுதலையைத் தன் விடுதலையாகக் கருதி போராடிய பெருமக்களின் உணர்வு வெளிப்பாடுகளின் வரிசைப் பட்டியலில், நம்முடைய “சீதாயணம்” உறுதியாக இடம் பெறும்.

நேரம் கிடைக்கும்போது, மற்ற படைப்புக்க‌ளையும் படித்து, எனது கருத்துக்களைத் தெரிவிக்கிறேன்.

வாழ்த்துக்களும், நன்றிகளும்.

சிவா.


Posted on 7:55 AM இல் பெப்ரவரி 9, 2010


பதில்






10


OKV சொல்கிறார்:

நீண்ட கால இதிகாசத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து மாற்றுக் கருத்துக்களுடனும் வித்தியாசமன கோணத்தில் புனையப்பட்ட நாடகம் சீதாயணம். நன்றாக உள்ளது. பேசாமல் சீதாயணத்தை ஒரு குறும்படமாக எடுத்து விடுங்கள். அயோத்தியில் கோவில் கட்ட வேண்டுமா, இல்லையா, எந்த இடத்தில் கட்ட வேண்டும் என்பது இரு மதங்களையும் சார்ந்த ஒரு உணர்வுபூர்வமான விஷயம். எது எப்படியோ கடவுளின் பெயரால் இருப்பவர்கள் யாரும் தண்டிக்கப்பட கூடாது. பேசாமல் கோவில், மசூதி இரண்டையும் விடுத்து அந்த இடத்தை வசதியே இல்லாத மாணவர்களுக்கு அனைத்து வசதிகளுடனும் கல்வி கற்பிக்கும் இடமாகவோ அல்லது உண்மையான சிறந்த சமுக நல திட்டங்களுக்கோ பயன்படுத்த இரு மதத்தினரும் சேர்ந்தே முயற்சிக்கலாம். இனிமேலும் இதற்கான பூசல்களும் உயிரிழப்பும் நடக்காமல் தடுக்கலாம் என்பது என்னுடைய கருத்து.


Posted on 3:27 AM இல் பெப்ரவரி 26, 2010


பதில்






11


Jayabarathan S சொல்கிறார்:

அன்புள்ள வேணி,

சீதாயணத்தை எப்படிக் குறும்படமாக எடுப்பது ? கனடாவில் இருந்து கொண்டு செய்ய இயலாது.

நீதிபதிதான் பிரச்சனைக்குரிய இடத்தில் ராமர் ஆலயம் எழுப்பக் கூடாதென்று தடை விதித்துள்ளார்.

மதம் பிடித்தோடும் அடிப்படை இந்து, முஸ்லீம் மூர்க்க வர்க்கத்தினர் மிருகக் குணம் படைத்தவர். அவர் பிறர் கூறும் ஆக்கமுறை வழிகளை ஏற்றுக் கொள்ள மாடார்.

பாராட்டுக்கு மிக்க நன்றி.

அன்புடன்,

சி. ஜெயபாரதன்

+++++++++++++++++++


Posted on 6:05 மாலை இல் பெப்ரவரி 26, 2010


பதில்






12


Jayabarathan S சொல்கிறார்:

rajamranjini@gmail.com

வணக்கம் சார். தங்களின் ‘சீதாயணம்’ படித்தேன். சீதாவின் இறுதி கால துன்பியல் வாழ்க்கை துயரமானது. நாடகத்தில் சீதாவின் மனம் படும் கவலையையும் துயரத்தையும் உணர முடிகின்றது. ராமர் மனித அவதாரத்தில் மனிதராகவே வந்து போகின்றார். அருமையான நாடகம்.

பாராட்டுகள் சார்.

அன்புடன்,

க.ராஜம்ரஞ்சனி


Posted on 9:18 மாலை இல் மார்ச் 15, 2010


பதில்






13


Jayabarathan S சொல்கிறார்:

பாராட்டுக்கு நன்றி ரஞ்சனி.

அன்புடன்,

சி. ஜெயபாரதன்


Posted on 9:43 மாலை இல் மார்ச் 15, 2010


பதில்






14


Freddie Flever சொல்கிறார்:

This weblog appears to get a great deal of visitors. How do you get traffic to it? It gives a nice unique twist on things. I guess having something useful or substantial to give info on is the most important factor.


Posted on 11:23 மாலை இல் ஜனவரி 18, 2011


பதில்






15


Francina Plock சொல்கிறார்:

high log you get


Posted on 1:10 AM இல் ஜனவரி 19, 2011


பதில்






16


Ray Maestre சொல்கிறார்:

This weblog appears to recieve a good ammount of visitors. How do you get traffic to it? It gives a nice individual spin on things. I guess having something authentic or substantial to give info on is the most important thing.


Posted on 1:12 AM இல் ஜனவரி 19, 2011


பதில்






17


Arie Koran சொல்கிறார்:

bull logbook you compass


Posted on 1:12 AM இல் ஜனவரி 19, 2011


பதில்






18


Bud Fasula சொல்கிறார்:

This post appears to get a great deal of visitors. How do you promote it? It gives a nice unique twist on things. I guess having something real or substantial to post about is the most important factor.


Posted on 1:28 AM இல் ஜனவரி 19, 2011


பதில்






19


Anibal Cardine சொல்கிறார்:

This page appears to recieve a great deal of visitors. How do you advertise it? It offers a nice individual spin on things. I guess having something authentic or substantial to say is the most important thing.


Posted on 1:40 AM இல் ஜனவரி 19, 2011


பதில்






20


Paketresorna சொல்கிறார்:

really like the article you wrote . it really isn’t that simple to find good posts to read (you know.. READ! and not just going through it like some uniterested and flesh eating zombie before going to yet another post to just ignore), so cheers man for not wasting my time! :p


Posted on 3:57 AM இல் பெப்ரவரி 6, 2011


பதில்






21


adsl vnpt சொல்கிறார்:

It’s hard to find knowledgeable people about this topic, but you appear to be guess what happens you’re discussing! Thanks


Posted on 5:54 AM இல் பெப்ரவரி 6, 2011


பதில்






22


Paketresor சொல்கிறார்:

continue with the the good work on the site. Do like it! :p Could use some more frequent updates, but i am sure you got other things things to do like we all do. =)


Posted on 6:21 AM இல் பெப்ரவரி 7, 2011


பதில்






23


sennheiser wireless headphones சொல்கிறார்:

Nice post. I learn something more challenging on different blogs everyday. It will always be stimulating to read content from other writers and practice a little something from their store. I’d prefer to use some with the content on my blog whether you don’t mind. Natually I’ll give you a link on your web blog. Thanks for sharing.


Posted on 11:06 AM இல் மார்ச் 5, 2011


பதில்






24


Glendora Hubley சொல்கிறார்:

Amazing! Your post has a ton readers. How did you get so many readers to see your site I’m envious! I’m still studying all about posting articles on the web. I’m going to look around on your blog to get a better understanding how to get more visable. Thanks!


Posted on 2:02 மாலை இல் மார்ச் 14, 2011


பதில்






25


buy kitchen scale சொல்கிறார்:

What a nice theme, where did you get it?


Posted on 7:36 AM இல் ஜூன் 27, 2011


பதில்






26


நாக.இளங்கோவன் சொல்கிறார்:

அன்பின் திரு.செயபாரதன் ஐயா,

தங்களின் இந்த நாடகம் என் நெஞ்சைப் பிழிந்த ஒன்று.

அமைதியான ஆனால் அழுத்தமான தமிழில் உருக்கியிருக்கிறீர்கள்.

நெஞ்சார்ந்த பாராட்டுக்கள். தங்களின் படைப்புகள் பல்லாயிரமாய்ப் பரவவேண்டும். என்னைக் கவர்ந்த எழுத்துக்கள் பல உள்ளன உங்கள் நாடகத்தில்.

//அவர் மிதிலா புரிக்கு வரவில்லை! வில்லை முறிக்க வந்தார்! தன் கைப்பலத்தைக் காட்டப் போட்டிக்கு வந்தார்! என்மேல் நேசமோ, ஆசையோ கொண்டு மிதிலைக்கு வந்ததாக எனக்குத் தெரியவில்லை! வில்லை முறித்துத் தன் வல்லமையை நிரூபித்தார்! சீதா ஒரு பந்தயப் பரிசு! //

இந்த இடம் என்னைத் தாக்குறச் செய்த இடம். நாடகத்தின் அடிநாதமாக இதனைச் சொல்வேன். ஆணாதிக்க உலகில் நல்ல பெண்களின் வேதனையின் உச்சம் என்றால் மிகையல்ல.

//வாழ்க்கை முழுவதும் எனக்கு அடிமை வாழ்வுதான்! காட்டுக்கு வா வென்றால் வர வேண்டும்! போ வென்றால் போக வேண்டும்!

//

இதேபோலத்தான் கோவலன் மாதவியைக் குறித்து “நான் வா என்றால்

வருவாள் போ என்றாள் போவாள்” என்று ஆணவமாகப் பேசுவான். மாதவியின் உயர்ந்த மனதைப் பழித்துப் பேசுவான்.னிட

இதில் பெரிய கொடுமையாக நான் கருதுவது வால்மீகி முனிவர் சீதையிடம் கீழ்க்கண்டவாறு சொன்னதுதான்:

//

பதி உன்னைக் காட்டுக்கு அனுப்பியது இராமாயணக் காவியம் பூர்த்தியாகவோ என்று நான் நினைக்கிறேன்! மெய்யான நிகழ்ச்சிகளைத் துல்லியமாகக் கூற, உன்னை இங்கே அனுப்பியது விதி என்று சொல்வேன்! எல்லாம் ஆண்டவன் செயல்.

//

சிறிதும் அவளை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று எண்ணாமல்

இராமனின் காதையை எழுத ஆரம்பித்ததில், அவரும் அவரின் இலக்கியத்திற்குச் சீதையைப் பயன்படுத்திக் கொண்டுவிட்டார் என்றே

கருத முடிகிறது.

//சீதாவுக்குப் பதிலாக முழுவடிவத் தங்கச்சிலை ஒன்று செய்யப்பட்டு வைக்கப் பட்டிருந்தது. ஜனக மன்னர் சீதாவின் சிலையைப் பார்த்ததும் திகைப் படைந்து அவர் மனதில் ஏதோ ஓர் ஐயப்பாடு எழுகிறது. இலங்கா புரியிலிருந்து மீண்டு பட்டத்து அரசியான சீதாவைப் பார்க்கப் போன ஜனக மன்னர், அவள் நாடு கடத்தப் பட்டிருப்பதும், வால்மீகி ரிஷியின் ஆசிரமத்தில் அடைக்கலமாகி இருப்பதும் தெரியவந்து மிகவும் மனமுடைந்து போகிறார்.//

இந்த இடம் சற்று நெருடுகிறது. சீதை இராமனைப் பிரிந்து 12 ஆண்டுகள் ஓடியபின்னர் செய்த அசுவமேதயாகத்திற்கு வரும் சனகன், அப்போதுதான் சீதை இராமனைப் பிரிந்து வாழ்கிறாள் என்று அறிவதாக இருப்பது நம்பும்படி இல்லை.

மேலும் பிடித்த வரிகள்:

//

வால்மீகி இராமனைக் கடவுளின் அவதாரமாகச் சித்திரிக்கவில்லை என்றும், இராமன் தன்னை ஓர் அவதார தேவனாகக் கருதவில்லை என்றும் இராஜாஜி எழுதியுள்ளார்

அனுமான் படையினரை நேராகப் பார்த்திருந்த வால்மீகி முனிவர், மூலக் கதையில் வால் முளைத்த வானரங்களாகக் காட்டி யிருக்க முடியாது என்பது என் கருத்து.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அனுமான் போல ஆறறிவு பெற்று பேசும் குரங்குகள் எந்தப் பகுதியிலும் வாழ்ந்ததற்கு உலக வரலாறுகளில் சான்றுகள் இல்லை!

மானிட இராமனைத் தேவனாய் உயர்த்தி மாற்றியவருக்கு இருந்த உரிமை போல், அவனை மீண்டும் கீழிறக்கி மனிதாய்க் கொண்டு வர எனக்கும் உள்ளது என்ற துணிச்சலில் இந்த நாடகத்தை எழுதி முடித்தேன்.

கண்ணகி மதுரையில் கணவன் கொல்லப்பட்டபின், சேர நாட்டுக்குச் சென்று மலை மேலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டாள். கண்ணகி ஆருயிர்க் கணவனை இழந்தவள்! சீதா ஆருயிர்க் கணவனால் நிரந்தரமாகப் புறக்கணிக்கப் பட்டவள்! காவியத்தில் அக்கோர முடிவுகள் இரண்டும் படிப்போர் நெஞ்சைப் பிழிந்து, கண்களைக் குளமாக்கும் கோரத் தன்மை படைத்தவை!

//

கண்ணகியின் முடிவையும் சீதையின் முடிவையும் ஒப்பிட்டிருக்கும் பாங்குக்கு எனது வணக்கங்கள்.

அருமையானதொரு நாடகம். அழகான படைப்பு.

அன்புடன்

நாக.இளங்கோவன்


Posted on 4:52 மாலை இல் ஆகஸ்ட் 22, 2011


பதில்






27


S. Jayabarathan சொல்கிறார்:

மதிப்புக்குரிய நண்பர் நாக. இளங்கோ,

சிலம்புச் செல்வர் மா.போ.சியின் வாரிசான சிலம்புச் சிற்பி ஒருவர் எழுதிய நுணுக்கமான, விளக்கமான நாடக அணிந்துரையாக நான் எடுத்துக் கொள்கிறேன்.

ஒரு சிறு நாடகத்தை இத்தனை ஆழமாக, ஊன்றி ஆராய்ந்து இதுவரை யாரும் இப்படி விமரிசனம் செய்ததில்லை.

பதிவுகளில் முன்பு வெளிவந்த உங்கள் சிலப்பதிகார விளக்கப் பகுதிகள் ஒரு நூலாக வெளியிடப் பட்டுள்ளதா ?

அவற்றை மீண்டும் தமிழ்மன்றத்தில் தொடர்ந்து இடுவீர்களா ?

உங்கள் பாராட்டுக்கு எனது உளங்கனிந்த நன்றி

அன்புடன்,

சி. ஜெயபாரதன்.

+++++++++++++++++


Posted on 8:56 AM இல் ஆகஸ்ட் 23, 2011


பதில்






28


S. Jayabarathan சொல்கிறார்:

jayashree shankar ✆ to anbudan, tamizhsiragugal, thamizhthendral, tamilnanban, amudhae_thamiz., me

show details 10:

சீதாயணம்..பின்னூட்டம்..

பெருங்காவியத்தின் கதாநாயகனை ஓரங்கட்டி நாயகிக்கு ஓட்டுப் போட்டு அவள் நிற்கும் இரண்டாம் இடத்தைக் காலி செய்து முதல் இடம் தந்திருப்பதில் பெண்களுக்கே பெருமை சேர்த்திருப்பது போல் இருக்கிறது. சீதைக்கு அயனம் எழுதும் முன்பே விளக்கமாக முகவரை சொல்லி எல்லோரிடமும் அட்ச்சதை வாங்கிக் கொண்டீர்கள்.(அனைத்து இறைவனிடமும் ஆசீர்வாதம்) மிக அழகான, அடக்கமான, படிக்கப் படிக்க ..ஆம்…ஆம்….சரிதான்…சரிதான்….என்று சொல்லிக்கொண்டே மனம் மேற்கொண்டு படிக்கத் தூண்டும் எழுத்து நடை…இதெல்லாம் சீதாயனத்திர்க்கு ஒரு பச்சைக்கொடி.

பல யுகங்கள் கடந்தும் நடந்ததாக சொல்லும் மஹா சரித்திரம். சாதாரணமாக, ஒரு நன்றாக சீறும் சிறப்புமாக வாழ்ந்து வந்திருக்கும் ஒரு குடும்பத்தில் ஒரு ஐந்து தலைமுறைக்கு முன்னே யார் இருந்தார்கள் என்றால் கூட சொல்லத் திணறிப் போகவேண்டும். அப்படி இருக்கையில் யுகம் பல கடந்தும் “ராமன்” என்ற பெயர் இனி வரும் நூற்றாண்டுகளிலும் அழியாமல் இருக்கும் ஆச்சரியம். அதற்கு பெறும் பங்கு “ராமாயணம்” மாகத் தான் இருக்க வேண்டும். ராவணனின் கடத்தலுக்குப் பிறகு தான் சீதைக்கே ஒரு முக்கிய இடம் கிடைத்தது. அதன் பின்பு நடந்து தான் அனைவரும் படித்து, பார்த்து அறிந்தது..ஆனால் இங்கு நீங்கள் அதன் பின்பு நடந்த சீதையின் மனப்போராட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு அவளுக்கென்று ஒரு பகுதி ஒரு உணர்ச்சி காவியமாய் நடையோடு …எழுதி இருக்கிறீர்கள். யோசிக்க வேண்டிய விஷயம். இதுவரை..யாரும் கையில் எடுத்துக் கொள்ளாத வில் இது.வெற்றி உங்கள் பக்கம் தான் இருக்கும். நான் கூட யோசித்ததுண்டு, சீதை ராவணனிடம் பட்ட வேதனையை விட ராமனோட சேர்ந்ததும் ராமன் பட்ட சந்தேகத்தில் தான் அதிகம் துவண்டிருப்பாள் . அதனால்தானோ என்னவோ பூமாதேவியே…தன் மகளை வாரி அணைத்து தழுவிக் கொண்டாள்.(தாய்ப் பாசம் மண்ணானாலும் இருக்கும் போலிருக்கு)..

மஹாகவி பாரதியாரின் மனைவி கண்ணம்மாவிற்கு நேர்ந்த நிலை, பகவான் ராமகிரிஷ்ணரின் மனைவி அன்னை சரதாம்பாளுக்கு நேர்ந்த நிலை, ராயர் ராகவேந்தரரின் மனைவிக்கு நேர்ந்த நிலைமை, கணிதமேதை திரு ராமானுஜரின் மனைவிக்கு நேர்ந்த நிலைமை, காந்தியடிகளின் மனைவி கஸ்தூரிபாய் அன்னைக்கு இது போல் பல பெறும் மேதைகளின் மனைவிகளின் நிலைமை ஏனோ மனதளவில் சந்தோஷப் படும் நிலையில் இல்லை. இது அவர்கள் வாங்கி வந்த வரம் போலவும். (அவர்களுக்கே அப்படி என்றால் நாங்கள் எல்லாம் எம்மாத்திரம்..). இப்படி எத்தனையோ சொல்லிக் கொண்டே போகலாம்.

தங்களின் “சீதாயணம்” என்ற இந்த நாடகத்தை வரவேற்று எனக்குத் தெரிந்ததை என் பாணியில் எழுதி விட்டேன். விடாது படித்து நிறை சொல்வேன். தாங்கள் அனைத்து துறையையும் கரை கண்டவர் அதனால் குறை இருக்க வாய்ப்பில்லை.முதல் காட்சி மிகுந்த விறுவிறுப்போடு சென்றது..சீக்கிரம் திரை விழுந்து விட்டது. காத்திருப்போம்.அதுவரை பொறுமையோடு.

ஜெயஸ்ரீ ஷங்கர்.


Posted on 1:14 மாலை இல் ஆகஸ்ட் 23, 2011


பதில்






29


S. Jayabarathan சொல்கிறார்:

Elangovan N ✆ to tamilmanram

show details 12:32 PM

அன்பின் ஐயா,

கனிவு கண்டு மகிழ்ந்தேன்.

சீதையின் குணநலன் எனக்கு மிகவும் பிடிக்கும். அரசகுலத்தில் இருக்கக்கூடிய உயர்ந்த பெண்களின்

ஆன்மாவின் அலறலுக்கு வேகம் அதிகம் என்றே கருதுவதுண்டு. அரசன் வெற்றிபெற்றால் மேலும்

இரண்டு பெண்களை மணந்து கொள்வான். தோற்றுப் போனால் இருக்கும் மனைவியரை இழந்துவிடுகிறான்.

இராமன் தன் மனைவியை மீண்டும் கண்டும் கூட அரச வாரிசுகளில் மட்டும் அக்கறை காட்டி

சீதையைக் கண்டு கொள்ளாமல் விடுவது மிகவும் வலிக்க வைக்கிறது. நாடு, செல்வம் போன்றே “நல்ல பெண்களும்” ஒரு பொருளாக ஆகிவிடுகிறார்கள். சீதைக்கு மணமானதில் இருந்து

அவள் மகிழ்ச்சியாக இருந்தது சில கவிதை வரிகளில் மட்டும்தான் போல. பந்தயப்பரிசு என்று நீங்கள் எழுதியிருந்தது பொருத்தமாக இருந்தது. “அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்” என்ற ஒரு

வரியை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டு மேடைகள் நிறைய பேசிவிட்டன :-) (எனக்கும் அந்த ஒரு வரிதான் தெரியும்). இந்த வரிக்குள் தமிழ்ப்பண்பாட்டைத் தேடுபவர்களும் ஏராளம். அதற்குள் இருக்கும் வலி மிக அதிகம் என்றே தோன்றுகிறது.

சிலம்பு மடல்கள் என்று ஒரு 10/12 வருடத்திற்கு முன்னர் எழுதினேன். அதனை 2001ல் நூலாகக் கூட வெளியிட்டேன். இளங்கன்று பயமறியாது என்பது போல முதல்தடவை சிலம்பைப் படித்த வேகத்தில்

ஏதோ எழுதியது அது. பின்னர் மீண்டும் ஒருகாலத்தில் சிலம்பைப் படித்தபோது “என்னத்தைப் பெரிதாய் எழுதிவிட்டோம்” என்றே எண்ணினேன். பின்னர் வேறொரு கோணத்தில் எழுதத் துவங்கிய போது

நிறைய படிக்க வேண்டும் என்ற தேவையே இருந்தது தெரிந்தது. இன்னும் சில காலம் சில முக்கிய நூல்கள்

படிக்க வேண்டியிருக்கிறது. அதன்பின்னர் புதிய படைப்பாக ஏதேனும் எழுதவேண்டும் என்ற எண்ணமே

மனதில் எழுகிறது. இலக்கியங்களில் சிலம்பு ஒரு சுவை மிக்க இலக்கியம். வாய்ப்பு கிடைக்கும்போது மேலும்

எழுதுகிறேன்.

மிக்க நன்றி.

அன்புடன்

நாக.இளங்கோவன்


Posted on 1:17 மாலை இல் ஆகஸ்ட் 23, 2011


பதில்






30


S. Jayabarathan சொல்கிறார்:

jayashree shankar ✆ to me

show details

23 ஆகஸ்ட், 2011 11:50 pm அன்று, jayashree shankar எழுதியது:

நாடகம் என்று ஒற்றை சொல்லாய் சொல்ல மனம் இடம் கொடுக்கவில்லை. உங்களுள் ஒளிந்திருக்கும் பெண் மனம் , சீதையின் வாழ்வில் ஒரு அர்த்தம் வேண்டுமென அவளுக்காக ஒரு காவியம் படைத்ததாகத் தான் எடுத்துக் கொள்கிறேன். எழுத்தில் ஒரு வீரியம், போர் வாள் போன்ற ஒரு தீர்க்கம் , சொல்ல வந்ததில் நேர்மை,நியாயம்..!!, சீதையின் நிலைமை இது தான் என அறிந்ததும் ராமன் மீது இருக்கும் பக்தி மெல்ல தரை இறங்கி வெளி நடந்துவிடும் கண்ணியமாக..உங்கள் நினைவு போல் ராமன் யாருக்கும் ஒன்றும் செய்யவில்லை. மகா கோழையாக இருந்திருக்கிறார். பதவி மோகம் கண்ணை மறைத்து விட்டது போலும். படிக்கப் படிக்க புதுமையாகவும், புரட்சியாகவும், மேலும் பிரமிப்பாகவும் இருந்தது. சரித்திரத்தையே திருப்பி போட்ட உமது சிந்தனை மிகவும் பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரியது. வாழ்நாள் பூரா தனியாகவே வாழ்ந்த சீதாவுக்கு ஏன் ஒரு தனியான கோவில் இருக்கக் கூடாது.? ஒருவேளை சீதாயணம் படித்த பின் தோன்றும்….நல்ல விதை விதைத்திருகிறீர்கள். தங்களின் சீரிய எழுத்துப் பணி போற்று தலுக்குரியது.

சீதாயணம் ஒரு எழுத்தோவியம்.! படங்களும் மிக மிக அருமை.

ஜெயஸ்ரீ ஷங்கர்.


Posted on 3:10 மாலை இல் ஆகஸ்ட் 23, 2011


பதில்






31


G Johnson Tharanimainthan சொல்கிறார்:

Amazed to read SEETHAYANAM! Such a bold attempt to reverse the original Ramayanam ! A masterpiece in Tamil drama and an eye opener for the future generation. This should be given wide publicity in the Tamil community! The words used are poetic and weighty. ” Muthal vanavaasathukku kaaranam en vithi! Aanal irandam vanavaasathukku karanam en pathi! ” The sufferings of Seethai which are hidden in Ramayanam are aptly highlighted in SEETHAYANAM! Congratulations!


Posted on 4:50 AM இல் December 17, 2011


பதில்






32


சி. ஜெயபாரதன் சொல்கிறார்:

நண்பர் தரணிமைந்தன்,

உங்கள் பாராட்டுக்கு என் பணிவான நன்றி. நீங்கள் எங்கு வசித்து வருகு என்ன உத்தியோகம் பார்க்கிறீர்கள் ? உங்களைப் பற்றி விபரம் அறிய பேரவா.

அன்புடன்,

சி. ஜெயபாரதன்.


Posted on 11:45 AM இல் December 17, 2011


பதில்






33


சி. ஜெயபாரதன் சொல்கிறார்:

From: K.Ranjini

Date: 2010/3/15

Subject: சீதாயணம்

To: jayabarat@tnt21.com

வணக்கம் ஸார். தங்களின் ‘சீதாயணம்’ படித்தேன். சீதாவின் இறுதி கால துன்பியல் வாழ்க்கை துயரமானது. நாடகத்தில் சீதாவின் மனம் படும் கவலையையும் துயரத்தையும் உணர முடிகின்றது. ராமர் மனித அவதாரத்தில் மனிதராகவே வந்து போகின்றார். அருமையான நாடகம்.

பாராட்டுகள் ஸார்.

அன்புடன்,

க.ராஜம்ரஞ்சனி


Posted on 12:29 மாலை இல் ஜனவரி 4, 2012


பதில்





RSS Feed for this entry

மறுமொழி இடுக





பக்கங்கள்


சுயநலம்
அக்கினி புத்திரி
அக்கினிப் பூக்கள் !
அணு, அகிலம், சக்தி !
அணுயுகப் பிரளய அரங்கேற்றம் !
ஆக்க மேதை தாமஸ் ஆல்வா எடிசன்
ஆசிரியரைப் பற்றி
ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)
ஆயுத மனிதன் (ஓரங்க நாடகம்)
இதுவரைப் பார்வைகள் (ஜனவரி 15, 2011)
இந்திய விஞ்ஞான மேதை ஜெயந்த் நர்லிகர் D.Sc.
இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி
ஊழிற் பெருவலி யாவுள ?
எங்கள் தாய் !
ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்
கணித மேதை ராமானுஜன்
கனடா தேசீய கீதம்
கலைஞன் ! காதலன் ! கணவன் !
காதல் நாற்பது – எலிஸபெத் பிரௌனிங்
கானடா நாடென்னும் போதினிலே
காம சக்தி
கூடங்குள ரஷ்ய அணு உலையில் 2011 ஜப்பான் சுனாமியில் நேர்ந்த புகுஷிமா விபத்துகள் போல் நிகழுமா ?
கூடங்குளம் அணு உலை, கடலிலிருந்து குடிநீர், அசுரப்படை எதிர்ப்புகள் !
கூடங்குளம் மின்சக்தி ஆலையம்
சந்திரனைச் சுற்றும் இந்தியா !
சிறைக் கைதிகள் .. !
சீதாயணம் (முழு நாடகம்)
சூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது
தமிழில் முதல் அணுசக்தி நூல்
தமிழ் விடுதலை ஆகட்டும் !
தாகூரின் கீதப் பாமாலைகள்
தாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி
தாய் நாட்டு வாழ்த்து
தேய்பிறைக் கோலம் !
நமது புனித பூமி
பாரதிதாசன் தேசீயக் கவிஞரா ?
பூரண சுதந்திரம் ?
மகாத்மா காந்தியின் மரணம்
மானிடக் கவிஞர் பாரதி ஒரு மகாகவியே
முடிவை நோக்கி !
முதல் பெளதிக விஞ்ஞானி காலிலியோ
வானியல் விஞ்ஞானிகள் நூல்
விடுதலை இந்தியாவில் விஞ்ஞானத் தமிழ் வளர்ச்சி
விண்வெளிக் கப்பலில் பணிசெய்த பாரத வீராங்கனை கல்பனா செளலா
விழித்தெழுக என் தேசம் !
வேதனை விழா
வையகத் தமிழ் வாழ்த்து
ஷேக்ஸ்பியரின் ஈரேழ் வரிப் பாக்கள்

வகைகள்
அணுசக்தி (102)
அண்டவெளிப் பயணங்கள் (154)
கட்டுரைகள் (18)
கதைகள் (8)
கவிதைகள் (32)
கீதாஞ்சலி (8)
நாடகங்கள் (9)
விஞ்ஞான மேதைகள் (66)
விஞ்ஞானம் (298)

அண்மைய இடுகைகள்
சைனா அண்டவெளிப் பயிற்சியில் பங்கெடுக்கும் முதல் பெண் விண்வெளிப் பயணி
2012 ஆகஸ்டில் இறக்கப் போகும் நாசாவின் நூதன செவ்வாய்க் கோள் தளவூர்தி
2012 ஜுனில் பூமிக்கு நேராகச் சூரியனைக் கடந்து சென்ற சுக்கிரன்
2014 இல் இந்தியா அடுத்தனுப்பும் சந்திரயான் -2 தளவுளவி இறக்கத் திட்டத்தில் ஏற்படும் தாமதம்
பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! ஆவியாகித் தூசியாகச் சிதறும் ஓர் புதிய கோள் கண்டுபிடிப்பு.

தொகுப்புகள்
ஜூன் 2012
மே 2012
April 2012
மார்ச் 2012
பெப்ரவரி 2012
ஜனவரி 2012
December 2011
நவம்பர் 2011
அக்டோபர் 2011
செப்டம்பர் 2011
ஆகஸ்ட் 2011
ஜூலை 2011
ஜூன் 2011
மே 2011
April 2011
மார்ச் 2011
பெப்ரவரி 2011
ஜனவரி 2011
December 2010
நவம்பர் 2010
அக்டோபர் 2010
செப்டம்பர் 2010
ஆகஸ்ட் 2010
ஜூலை 2010
ஜூன் 2010
மே 2010
April 2010
மார்ச் 2010
பெப்ரவரி 2010
ஜனவரி 2010
December 2009
நவம்பர் 2009
அக்டோபர் 2009
செப்டம்பர் 2009
ஆகஸ்ட் 2009
ஜூலை 2009
ஜூன் 2009
மே 2009
April 2009
மார்ச் 2009
பெப்ரவரி 2009
ஜனவரி 2009
December 2008
நவம்பர் 2008
அக்டோபர் 2008
செப்டம்பர் 2008
ஆகஸ்ட் 2008
ஜூலை 2008
ஜூன் 2008
மே 2008
April 2008
மார்ச் 2008
பெப்ரவரி 2008
ஜனவரி 2008
December 2007
நவம்பர் 2007
அக்டோபர் 2007
செப்டம்பர் 2007
ஆகஸ்ட் 2007
ஜூலை 2007
ஜூன் 2007
மே 2007
April 2007
மார்ச் 2007
பெப்ரவரி 2007
ஜனவரி 2007
December 2006

Blog Stats
212,373 hits







ஜூன் 2012


ஞா

தி

செ

பு

வி

வெ




« மே








1

2


3

4

5

6

7

8

9


10

11

12

13

14

15

16


17

18

19

20

21

22

23


24

25

26

27

28

29

30


Blogroll
அதியமான் எழுத்துரு மாற்றி
அறிவியல் பழமை புதுமை
ஆங்கிலக் கல்வி
ஆங்கிலத் தமிழ் தட்டச்சு
ஆன்மீக ஜீவா
இந்து மதம் ஓர் அறிமுகம்
ஈகரைத் தமிழ்க் களஞ்சியம்
எட்டுத் திக்கும்
எழுத்தாளர் தொகுப்பு
காலப் பயணி
சமரசம் உலாவும் இடமே
சிகாகோ தமிழ் அகராதி
சித்தார் கோட்டை
சென்னைத் தமிழ்ச் சொற்களஞ்சியம்
தகடூர் தமிழ் மாற்றுருச் சுவடி
தமிழ் அகராதி
தமிழ் ஆங்கிலத் தட்டச்சு
தமிழ் இதழ்கள் இணைப்பு
தமிழ் இந்து
தமிழ் இலக்கண நூல்கள்
தமிழ் எழுத்துரு மாற்றச் சுவடி
தமிழ் ஏ-கலப்பை 3.0.1 இறக்கம்
தமிழ்க் கணிச்சுவடு
தமிழ்த் தட்டச்சு மின்பலகை
தமிழ்மணம்
திண்ணை வலை (பழையது)
திண்ணை வலை (புதியது)
திருக்குறள் – ஆங்கில மொழிபெயர்ப்பு
திருக்குறள் -மூலமும் உரையும்
நதியலை
நெஞ்சின் அலைகள்
பஞ்சாமிர்தம்
பணிப்புலம் – ஆன்மீகம்
பதிவுகள் -கிரிதரன், கனடா
பாரதியார் கவிதைகள்
பாவை விளக்கு
மெய்ப்பாடைத் தேடி
யூனித்தமிழ் எழுத்துரு மாற்றி
யூனித்தமிழ் மாற்றி
யூனித்தமிழ்த் தட்டச்சுச் சுவடி
வலை அகராதி
Be the Best Server
Khan Academy
Latha's Web Corner
PKP Blog


வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. Theme: Vermilion Christmas.



Follow

Follow “நெஞ்சின் அலைகள்”

Get every new post delivered to your Inbox.


Join 91 other followers




Powered by WordPress.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக