சனி, 1 செப்டம்பர், 2012

தால் மக்கானி






வட மாநில உணவில் மிகவும் முக்கியமாக பூரி, ரோட்டி, சாதத்திற்கும் தொட்டுக் கொள்ள விரும்பிச்
சமைக்கும் சைட் டிஷ்  தால் மக்கானி தான்.

இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. முழு உளுந்தை பயன் படுத்துவதால் நிறைய நார்ச்சத்தும், கால்சியமும் முழுமையாகக் கிடைக்கிறது.  இதை தயார் செய்வது எளிது. ஒரு முறை செய்து உணவில் சேர்த்து ருசித்தவர் மீண்டும் மீண்டும் செய்யத் தூண்டும் ருசியான தால் இது. 

இதே முறையில் பச்சைப் பயறையும் செய்யலாம்.

தேவைப் பட்டால் மூன்று பருப்புகளை (கருப்பு உளுந்து, பச்சைப் பயறு, ராஜ்மா பீன்ஸ்) ஊற வைத்தும் செய்யலாம்..வித்தியாசமான கலவை ருசியில் இருக்கும் இந்த தால் மக்கானி.

தேவையானவை:
கறுப்பு முழு உளுந்து- 1கப், 
பெ.வெங்காயம்-1, 
தக்காளி-3, 
இஞ்சி, பூண்டு விழுது -2 டீஸ்பூன், 
(இஞ்சி, பூண்டு வாசனை பிடிக்காதவர்கள் சேர்க்காமலும் செய்யலாம்.)
மிளகாய்த் தூள் -2 டீஸ்பூன், 
தனியா தூள் – 1 டீஸ்பூன், 
உப்பு – தேவைக்கு, 
வெண்ணெய் –  3 டேபிள் ஸ்பூன், 
பட்டை – 1 துண்டு, 
சீரகம் – அரை டீஸ்பூன், 
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை.

செய்முறை:

உளுந்தை நன்கு கழுவி, சுமார் 7 மணி நேரம் ஊறவையுங்கள். முதல் நாள் இரவே ஊறவைத்தாலும் நலம்.
ஊறிய தண்ணீருடன் சேர்த்து, உளுந்தை குக்கரில் வைத்து, மூன்று விசில் வந்ததும் தீயைக் குறைத்து, 5 நிமிடம் வைத்து இறக்குங்கள். உளுந்து நன்கு குழைய வேக வேண்டும். 
வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். 
இப்போது, ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெயை உருக்கி, அதில் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்குங்கள். இதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள். 
இதனுடன் தக்காளி, தேவையான உப்பு சேர்த்து, தக்காளி கரையும்வரை வதக்குங்கள். தக்காளியை அரைத்தும் விடலாம்.
அவசரத்திற்கு தக்காளி பியூரி, தக்காளி சாஸ் கூட உபயோகப் படுத்தலாம்.

நன்கு வதங்கியதும், வேகவைத்த பருப்பை இதில் சேர்த்து, நன்கு கொதிக்கவிடுங்கள்.

ஒரு கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெயை உருக்கி, அதில் பட்டை, சீரகம் தாளித்து, பருப்பில் சேருங்கள். நன்கு கொதிக்கவிட்டு இறக்குங்கள். மீதம் உள்ள வெண்ணெயை மேலாக தூவினாற்போல் வைத்துப் பரிமாறுங்கள். 
மேலும் ருசிக்கு, ஃப்ரெஷ் க்ரீம் சேர்க்கலாம்.
குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பி உண்ணும் ஆரோக்கியமான உணவு இது.

===============================================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக