வியாழன், 13 செப்டம்பர், 2012

நம்ம பாரதி யார்..?


தீர்க்கதரிசி....!

"கடவுளின் தூதர்களான மகான்கள் மக்களுக்கு நன்மை செய்யவே தோன்றுகிறார்கள். தங்கள் பணி இவ்வுலகத்தில் முடிந்தவுடன் அவர்கள் மறைந்து விடுகிறார்கள்..." என்று சொன்ன பாரதியார், "நாம் நானூறு ஆண்டுகளுக்கு முன்னரே பிறந்துவிட்டோம். நம் கருத்துக்களை மக்கள் நானூறு வருடங்கள் கழித்து ஒப்புக்கொள்வார்கள்" என்று நம் நாட்டு மக்களின் மனப் பாங்கினை அன்றே தீர்க்கதரிசி போல சொல்லிவைத்தார்.

வறுமையிலும் வள்ளல்...!

பல சமயங்களில் போதிய பண வசதி இன்றி பாதிக்கப்பட்டு கஷ்ட ஜீவனம் நடத்தி வந்தவர் பாரதியார்.
அந்த நிலையிலும் கருணை உள்ளத்தோடு வாழ்ந்தவர் தான் பாரதியார். பல நாட்களை பட்டினியால் கழித்தவர். யாராவது அவரின் மேல் கருணை கொண்டு பணம் உதவி செய்தாலும் அன்றே அந்த பணம் முழுதும் செலவழித்து விடுவார். கிடைத்த பணத்தை சேமித்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் வாழ்ந்தவர். வறுமை என்றுமே அவரைச் சிதைத்ததில்லை.தன் சிந்தனைப் பெட்டகத்தை கவிதைகள் கொண்டு நிரப்பி நிறைவோடு மகிழ்ந்தவர்.

அவரது இல்லத்திற்கு வந்து கையேந்தி பிச்சை கேட்ட ஒரு வயதானவருக்கு தனது கையில் பணம் ஏதும் இல்லாத நிலையில் அவரை வெறும் கையேடு அனுப்ப மனமின்றி தான் உடுத்தியிருந்த வேட்டியை கழட்டித் தந்து, தன் மனைவியிடம் அந்தக் கிழவன் எவ்வளவு மகிழ்ச்சியோடு போரிறான் பார் என்று தான் வெறும் கோவணத்தோடு நின்று பரவசப்பட்ட காருண்ய மனம் கொண்ட தயாபரி.

அஞ்சாதவர்...!

பாரதியாரை அறிஞர் வ.ரா. (அறிஞர் வ.ராமசாமி ஐயங்கார்) காணச் சென்று அவருடன் கலந்துரையாட விரும்பினார். பாரதியாரைப் பார்த்ததும் வ.ரா வணக்கம் தெரிவித்தார்.முதன் முதலில் அவரைப் பார்த்து பாரதியார், யார் நீங்கள்? என்று கேட்டாராம்.

வ.ரா. ஆங்கிலத்தில் தம்மைப் பற்றிக் கூறினார். ஆங்கிலப் புலமையைப் பாரதியாரிடம் காண்பிக்க வ.ரா.அவ்வாறு ஆங்கிலத்தில் பேசினாராம்.

பாரதியாரின் முகத்தில் கோபம் கொப்பளித்தது. தனது அருகில் இருந்த நண்பர் பாலுவை அழைத்தார்.
"அடே..பாலு..! வைத்தவர் ஆங்கிலேயர் மொழியில் பேசுகிறார். அவரிடம் நீ வேண்டுமானால் பேசு..எனக்கு வேலை இல்லை" என்று உரக்க சொல்லிவிட்டு வெளியேறினாராம்.

அவரே கம்பீரம்...!

பாரதியார் தம் இலக்கிய வாழ்வில் முதன் முதலில் புனைந்து கொண்ட புனைப் பெயர் "ஷெல்லிதாசன்" என்பதாகும். முதலில் மிஸ்டர்.சி.சுப்ரமணிய பாரதி என்று தான் தம் பெயரை வெளியிட்டிருக்கிறார். பின்பு "காளிதாசன்" "சக்தி தாசன்" என்ற புனைப் பெயரிலும் பல கட்டுரைகள் எழுதி இருக்கிறார்.புனைப் பெயரில்லாமல் எழுதும்போது ஸ்ரீமான் சி.சுப்பிரமணிய பாரதி என்று குறிப்பிடுவாராம்.

மூன்றிலிருந்து முதன்மைக்கு..!

திருநெல்வேலியில் இருந்த தம்ழிச் சங்கம் நடத்திய கவிதைப் போட்டியில் பாரதியார் கலந்து கொண்டு ஒரு கவிதையை எழுதி அனுப்பியிருந்தாராம்.அவருடைய கவிதையைப் படித்த நடுவர்கள் அவருக்கு மூன்றாவது பரிசைத்தான் அளித்தார்களாம். மூன்றாம் பரிசு வென்ற அந்தப் கவிதை "செந்தமிழ் நாடெனும் போதினிலே " என்னும் கவிதையாகும். இன்றும் "பொதிகை"த தொலைக் காட்சியில் முதன் முதலில் ஒலிக்கப் பெறுவது செந்தமிழ் நாடெனும் போதினிலே" தான்.

விடாமல் பதினொன்று...!

பாரதியார் பிறந்தது 11 ஆம் தேதி டிசம்பர் மாதம் 1882 ஆம் ஆண்டு.

பாரதி "சின்னப் பயல்" என்ற கவிதையைப் பாடி "பாரதி என்னும் பட்டப்பெயர் பெற்றது அவரது 11 ஆம் வயதில் தான்.

பாரதியார் நம்மை எல்லாம் விட்டுச் சென்றது 11 ஆம் தேதி செப்டெம்பர் மாதம் 1921 ஆம் ஆண்டு.

அமரகவியை மரணம் என்ன செய்யும்...?

இயேசு, ஷெல்லி, கீட்ஸ்,பைரன், மன்னர் அலெக்சாண்டர்,கணித மேதை ராமானுஜம், விவேகானந்தர், மார்ட்டின் லூதர் கிங்..ஆகியோர் தங்களது நாற்பது வயதைக் கடக்கும் முன்பே...காலனால் கவர்ந்திழுக்கப் பட்டவர்கள்.
"நான் அமரன், எனக்கு மரணமில்லை..என்றும் உயிர்வாழ்வேன், எப்பொழுதும் சத்தியமாவேன், எப்பொழுதும் களிப்புடன் இருப்பேன், நான் கடவுள். ஆதலால் "சாகமாட்டேன்" இத்தகைய திடமான நம்பிக்கையுடன் உறுதியாக வாழ்ந்தார்.


ஆனால் காலனால் 40 வயதை அடையும் முன்னே மரணம் அவரைத் தழுவிற்று. நூறு வருடங்கள் வாழ்ந்து சாதிக்க வேண்டியதை முன்பே அறிந்தோ என்னவோ....பகவத் கீதைக்கு உரை வரைக்கும் எழுதி வைத்து உயிரை உகுத்துவிட்டார்....ஆனாலும் என்ன...இன்னும் வீட்டுக்கு வீடு, இதயத்திற்கு இதயம் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார் அந்த அமரகவி பாரதியார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக