திங்கள், 17 டிசம்பர், 2012

ஜெகம் புகழும் புண்ய கதை ராமனின் கதையே!


சுட்டும்... சுடாத மனப் புண்கள்...!




டிசம்பர் மாதக் குளிரும் , பனிக் காற்றும் மூடிய கண்ணாடி ஜன்னலை தட்டிப் பார்த்து தோற்றது. இருந்தும் இடுக்கு வழியாக நுழைந்து கட்டிலில் சுருண்டு படுத்திருந்த வேதவல்லியை குளிர் ஒரு உலுக்கு உலுக்கியது.. நடுங்கியவாறே வேதவல்லி ….ஷ்….ஆ….என்று கட்டிலில் தேடி விலகிக் கிடந்த கம்பளியை இழுத்துப் போர்த்தியபடி கண்ணை மூடிக் கொண்டாள். அறையின் நீல நிற ஜீரோ வாட்ஸ் பல்பின் ஒளி மூடிய கண்களுக்குள்ளும் புகுந்து எழுப்பி …. “நீ தூங்கினது போதும்”ன்னு கண்ணுக்குள்ளே காவல் நின்றது. உள்ளம் பளிச்சென்று விழித்து நிமிர்ந்தது..
இப்படித்தான் விடியற்காலை மூணு மணிக்கே வேதவல்லிக்குத் தலைக்குள் அலார மணி அடித்து எழுப்பும்.. மனம் அதற்குப் பிடித்த புத்தகப் பக்கங்களைத் திருப்பிப் படிப்பது போல தானும் கடந்த காலங்களை நினைவு படுத்திக் கொண்டே படுத்திருப்பாள் . பதினைந்து வருஷங்கள் முன்னால தன் மாமியார் இதே இடத்தில் படுத்த படுக்கையாகக் கிடந்தது புலம்பிக் கொண்டிருந்தாள். அப்போது இவள் இருந்த இடத்தில் இப்போது மாலதி, மருமகளாக.

வம்சாவளியும் வாரிசும் ஒரே வீட்டில் காட்சியை மாற்றி மாற்றி காண்பித்துக் கொண்டிருந்தது. காலம் தான் அசுர வேகத்தில் நகர்ந்து போயிடுத்து. நான் அப்படியே இருக்கப் போறேன்னு அப்போ நினைச்சேன். இப்ப…மாலதியும் அதையே தானே நினைச்சுண்ட்ருக்கா . மாலதி மேல் மாமியார் வேதவல்லிக்கு உதயத்திற்கும் முன்னாடியே உதயமாகிவிடும் கோபமும் எரிச்சலும்.

மாலதி செய்யும் எந்த நல்லதும் மனசுக்குள் ஏறாமல் அவளிடம் ஏதாவது குத்தம் கண்டு பிடிச்சுண்டே அவளைத் திட்டி ஒத்திகைப் பார்க்க உகந்த நேரமாக இந்தக் காலைப் பொழுது தான் சுகமாயிருக்கும். வேதவல்லிக்கு. நிஜத்தில் வேதவல்லி ஏதாவது திட்டினாலும் மாலதி அதைப் பெரிதாகவே எடுத்துக் கொள்ள மாட்டாள். இது வேதவல்லியை இன்னும் ஆத்திரப்படுத்தும்..

இது நித்தம் நடக்கும் திருபள்ளியெழுச்சி தான். ஒன்றும் புதிது இல்லை. இன்றும்..மங்கிய விளக்கொளியில் சுவற்றில் தன் மாமியார், மாமனார் , தன் கணவர் என்று கருப்பு வெள்ளைப் படங்கள் இவளையே கோபத்துடன் முறைத்துப் பார்த்து பயமுறுத்துவது போலிருந்தது வேதவல்லிக்கு… இவர்களோட சேர்ந்து நாற்பது வருஷங்கள் குப்பை கொட்டியது போறாதுன்னு இப்போ அவா போய்ச் சேர்ந்த பின்னாடியும் என் கண் முன்னாடியே படங்களாக மாட்டி வெச்சு தினமும் அவங்க முகத்திலேயே முழிக்க வைக்கறா மாலதி. என்ன வேண்டியிருக்கு..? நேக்கில்லாத்த கரிசனம் அவளுக்கு? நான் கேட்டேனா?

எத்தனையோ தடவை மாலதிகிட்ட சொல்லியாச்சு ….இந்தப் படங்களை இங்கேர்ந்து எடுத்துட்டு முருகன் படத்தை மாட்டுன்னு…அவள் கேட்டால் தானே…வாஸ்து படி இங்க இவா படங்கள் தான் இருக்கணும்னு நறுக்குன்னு சொல்லிட்டு ஒரு முழம் பூவை நாலாக் கிள்ளி படத்தில் சொருகி விட்டு . கூடவே ஊதுபத்தி வேற..காட்டிட்டு போறாள் .பார்த்துக் கொண்டே இருந்த வேதவல்லிக்கு பத்திக் கொண்டு வந்தது….”நாளைக்கு நீங்களும் இப்படிப் படமாத் தான் தொங்கப் போறேள்ன்னு தினம் சொல்லாம சொல்றா மாதிரின்னா இருக்கு”" இவ பண்ணற காரியம்.. நான் சொன்னேனா…இவாளுக்கு பூ வை பத்தியைக் காட்டுன்னு..அகராதி பிடிச்சவ…படிச்சிருக்கோம்னு உடம்பெல்லாம் திமிர்….வேலை பார்த்து கை நிறைய சம்பாதிக்கறோம்னு கர்வம்.. ஒரு பேச்சு நான் சொன்னாக் கேட்க மாட்டாள். எல்லாம் அவளுக்கே தெரியும்னு ஒரு நினைப்பு…நான் தான் டாப்பு மீதியெல்லாம் டூப்புன்னு. மனசுக்குள் பொருமித் தீர்க்கிறாள் வேதவல்லி.
.
நான் மட்டும் என்ன சும்மாவா..இருக்கேன் .? அவரோட ரயில்வே பென்ஷனாக்கும் மாசம் பொறந்தா சுளையா பத்தாயிரம் ரூபாய் டாண்ணு வரது. சொந்த வீட்டிலயே பென்ஷன் இருக்கறதாலத் தான் நிம்மதியா இருக்க முடியறது. .இல்லாட்டா எப்பவோ கொண்டு போய் முதியோர் இல்லத்துக்கு தள்ளிருப்பாள் இவள். மூர்த்தியும் அவ சொல்றதுக்கெல்லாம் பூம் பூம் மாடு மாத்ரி தலையாட்டுவான்…ஒரு நாலாவது ஒரு சண்டை சச்சரவு அவாளுக்குள்ளே வரதில்லை அவ என்ன சொல்றாளோ அதே வேதவாக்கா எடுத்துண்டா பிரச்சனை எங்கேர்ந்து வரும்?.அப்படி என்ன தான் மாய மந்திரம் செய்து சொக்குப் பொடி போட்டு வெச்சிருக்காளோ…மனசுக்குள் பொருமுவாள் வேதவல்லி.

பக்கத்தாத்து பார்வதியை கொஞ்ச நாளா காணறதே இல்லையே…என்னாச்சு அவளுக்குன்னு நேத்திக்கு மாலதியை கேட்டப்போ…அதுவாம்மா……
அவங்களை ஆத்துல பார்த்துக்க யாரும் ஆளில்லைன்னு கொண்டு போய் முதியோர் இல்லத்தில் சேர்த்திருக்காளாம் .ரமா..தான் சொன்னாள் ..அவளும் இப்ப வேலைக்கு கிளம்பறாள் …அதான்…..என்று சர்வ சாதாரணமாக மாலதி சொன்னதைக் கேட்டதும்,



இவ பேசற தொனிலயே தெரிஞ்சது…”நானா இருக்கக் கொண்டு நீங்க இன்னும் இங்க இருக்கேள்னு ..” சொல்றா மாதிரி.

அட ராமா..! இப்படிப் பண்ணுவாளோ? பார்வதிக்கு பென்ஷனாவது ஒண்ணாவது ..அதான்…ரமா கடங்காரி வெளிய தள்ளிட்டா..என்று புலம்பிய வேதவல்லியைப் பார்த்து

“சித்த சும்மா இருக்கேளா..? தெரியாமல் யாரைப் பத்தியும் எதையும் பேசாதேங்கோ….பாவம்..சேரும்..” என்று சொன்னது தான் தாமதம்.

வேதவல்லி அழுது ஆகாத்தியம் பண்ணி மூர்த்தி வந்ததும் பாவ புண்ணியத்தைப் பத்தி இவள் எனக்கு என்ன சொல்லித் தரவேண்டி இருக்குங்கறேன்…..வயசு வித்தியாசமில்லையா? ன்னு குதி குதின்னு குதிச்சு .”என்னையும் கொண்டு போய் முதியோர் இல்லத்துல சேருடா”ன்னு வீட்டை ரெண்டு பண்ணினாள் வேதவல்லி.

நான் மனசுல ஒண்ணையும் வெச்சுண்டு பேசலை…இதுக்கெல்லாம் நேக்கெங்கே நேரம்…..? மூர்த்தி ,உங்க அம்மா நேக்கும் அம்மா தான்..அதை புரிஞ்சுக்கோங்கோ நீங்க என்று ஒரே வார்த்தையில் கணவனின் வாயை அடைத்து விட்டாள் மாலதி. ஆஃ பீஸ் விட்டுவீட்டுக்கு வந்தால் நம்ம அருணுக்கு கணக்குச் சொல்லித் தரவே நேக்கு நேரம் சரியாய் இருக்கு. இதுல வம்புக்கு நிக்க ஏது நேரம்…? ..என்றாள் மாலதி..

அம்மா…விடேன்….அவள் உன்னை ஒண்ணும் சொல்லியிருக்க மாட்டாள். எல்லாம் நேக்குத் தெரியும்…ன்னு மூர்த்தி சொல்ல வந்தான்.

மாலதி சொன்னது தெரியாமல் வேதவல்லி ..தன் .மகனை “பொண்டாட்டியை அடக்க யோக்யதை இல்லை…நீ இப்படி தாசானு தாசனா இருப்பாய்னு நான் கனவுலயும் நினைக்கலையே…..அடக்குவான்னு பார்த்தால் இப்படி பிள்ளைப் பூச்சியா அடங்கிக் கெடக்கானே…” என்று வருத்தப் பட்டாள் . இப்படியா அவளைத் தலைல தூக்கி வெச்சுண்டு கரகாட்டம் ஆடுவான்…ஆச்சரியமான்னா இருக்கு…! என்று அலுத்துக் கொண்டாள் .

இதே மாதிரி முப்பது வருஷம் முன்னம் தன் மாமியார் தன பிள்ளையிடம் ஏதோ வேதவல்லியைப் பற்றி சொல்லிக் கொடுக்கப் போய் ….அடுத்த நிமிஷமே….அவர், ஏய்..வேதா இங்க வாடின்னு கத்தியபடி தலை முடியைக் கொத்தாப் பிடிச்சு ” அப்படியாத் துடுக்காப் பேசின எங்கம்மாவைப் பார்த்து…உங்காத்துக்குப் போய்த் தொலை…இனிமேல் நீ இங்க இருக்க லாயக்கில்லைன்னு ” கூப்பாடு போட்டவர் …!
அவருக்குப் பிறந்ததைப் பாரு….பெத்தத் தாய் மேல கொஞ்சம் கூட பாசமே இல்லாமல்…இப்படி…ஒண்ணா…. ரெண்டா….தொட்டதுக்கெல்லாம் இதே சச்சரவு தான்.அம்மா….சொல்லச் சொல்ல இங்கே இவர் என்னை அடி உதைன்னு…கொஞ்ச நஞ்ச கஷ்டமாப் பட்டுருக்கேன்..அவருக்கு அப்பா அம்மான்னா அவ்வளவு மரியாதை . இவன் யாரைக் கொண்டு பொறந்திருக்கான்னே தெரியலையே..?

நான் அத்தனை கஷ்டத்தையும் தாங்கீண்டு பிள்ளையை வளர்ந்து இவள் கையில் கொடுப்பேனாம்…இவள் என்னடான்னா எங்கிட்டயே மட்டு மரியாதை இல்லாமல் நடந்துப்பாளா?. நன்னாருக்கு. நான் பட்டதுல ஒரு கால்வாசியாவது இவளுக்கும் தெரிய வேண்டாமா? அந்தக் காலம் மாதிரியா இருக்கு..இப்போ…இதே வீடு தான்..இதே அடுக்களை தான்….இத்தனை பெரிய வீட்டைப் பெருக்கி மெழுகி…கோலம் போட்டவள் நான் தானே. இவ நேத்திக்கு வந்தவ….ஒரு பிள்ளையைப் பெத்துட்டா ,மட்டும் போதுமா….வீட்டுக்கே உரிமை கொண்டாட? அந்தக் காலம் மாதிரி விறகு அடுப்பும்…ஸ்டவுமா இப்போ இருக்கு. தொட்டதுக்கெல்லாம் மெஷின்…மகா ராணியாட்டமா சொகுசா இருக்கா. நான் பட்டா மாதிரி கஷ ஜீவனமா என்ன?.

நானெல்லாம் புருஷன் போனப் பின்னாடியும் மாமியார் கொடுமையைத் தாங்கினேனே . கஷ்டப் பட்டு மூர்த்திக்கு ‘அவரோட’ ரயில்வே வேலையை வாங்கிக் கொடுத்து, அப்பா இல்லாத பொண்ணாச்சே..கஷ்டப்படற குடும்பம்னு அவன் சொன்னானேன்னு ஒத்தப் பைசா கூட வரதட்சணை வாங்காத இவளைக் கல்யாணமும் செஞ்சு வெச்சேன். எதுக்காக? என்னைக் கடைசி காலத்துல நன்னா பார்த்துக்குவாள்னு நெனைச்சுத்தானே.? இவ என்னடான்னா வீட்டுக்குள்ள வந்து பத்து வருஷம் கூட முழுசா முடியலை…அதுக்குள்ள புருஷனைக் கைக்குள்ள போட்டுண்டு…படுத்தற பாடு இருக்கே..நல்ல வேளையா நேக்கு கையும் காலும் நடமாடீண்டு இருக்கு. வீட்டுக்குள்ளே நடக்க முடியறது …இல்லாட்டா இவ தவிச்ச வாய்க்கு தண்ணி கூடத் தரமாட்டாள் .

ஆரம்பத்துல நன்னாத் தான் இருந்தாள் .திடீர்னு என்ன நினைச்சாளோ என்னமோ… எப்பவும் எனக்கும் திக்கா… காப்பி, நான் கேட்டதும் டிபன் ,வித விதமா சாப்பாடுன்னு செய்து கொடுத்திண்டு இருந்தவள்….அவ அம்மா தவறிப் போன பிறகு பிறகு தான் இப்படியெல்லாம் ….அக்க வெள்ளமா ஒரு காப்பி….எப்பப் பாரு ஓட்ஸ் கஞ்சி, கோதுமை கஞ்சின்னு ஜெயில் கைதி சாப்பாடு போட்டுக் கொல்றா. என்னமோ நான் தான் உயிருக்குப் போராடற மாதிரி கையில் மாத்திரையை கொண்டு வந்து நீட்டீண்டு…நாக்குக்கு ருசியா ஒரு வாய் பச்சைத் தண்ணி கூட குடிக்க விடாமல் ..வெந்நீரை குடுத்து. இதெல்லாம் ஏன் ன்னு அவளைக் கேட்க ஆளில்லை.

அதான் அப்படியே என் பென்ஷன் பணம் முழுதும் விள்ளாமல் எடுத்துக்கறாளே… வாய்க்கு ருசியா சாப்பாடாவது போடக் கூடாதா? இன்னைக்கு அவன் வரட்டும் கேட்கிறேன்…என்னைக் கொண்டு போய் பணம் கட்டி சேர்க்கற முதியோர் இல்லத்தில் விடுடான்னு …அவாளாவது நன்னாப் பார்த்துப்பா…இப்படி வாய்க்கும் வயத்துக்கும் வஞ்சனை செய்ய மாட்டான்னு…அவனுக்கு உரைக்கறா மாதிரி சொல்றேன்.

எப்பப் பாரு போனும் கையுமா நிக்கத் தான் இவள் லாயக்கு. இதெல்லாம் யாருக்குப் பிடிக்கும்? .வேலைக்குப் போனா இவ்வளவு அலங்காரமும், அகங்காரமுமாவா இருக்கணும். இரு…இரு…இன்னைக்கு ரெண்டுல ஒண்ணு …பார்க்கறேன்… மனசுக்குள் எங்கேர்ந்தோ ஒரு சந்தோசம் எட்டிப் பார்த்து வேதவல்லிக்கு.

சூரியன் எழுந்திருக்கும் போதே வீட்டில் பிரச்சனையை எழுப்ப ஒத்திகை பார்த்தாள் வேதவல்லி..

இதெல்லாம் படுக்கையில் கிடக்கும் வரையில் தான். மூர்த்தியைப் பார்த்து விட்டால்..போதும்…..இவளது பேச்சு வேறு விதமாக இருக்கும். அவனுக்கே…” நம்ப அம்மாவைப் போல ஒரு நல்ல மாமியார் யாருக்கும் கிடைக்க மாட்டாள்…மாலதி கொடுத்து வெச்சவள் ன்னு நினைப்பான். அந்த அளவுக்குத் தேனொழுகப் பேசுவாள். தன் உள்ளத்துக்குள் இருக்கும் கள்ளம் அவளுக்கு சிறிதும் வெளியே காட்டிக் கொள்ள மாட்டாள்.
இதெல்லாம் அந்தக் கால ட்ரைனிங்..

அம்மாவுக்கு இன்னைக்காவது லைஃப் சர்டிபிகேட்டு வாங்கணும் அப்போ தான் இந்த மாசம் பென்ஷன் பணம் தருவாளாம் . சொல்லிக் கொண்டே அடுப்பை ஏற்றி அதில் பாலை வைத்தாள் மாலதி.. உள்ளிருந்து இருமல் சத்தம் கேட்டதும்….அம்மாவுக்கும் நான் சொன்னது காதில் விழுந்திருக்கும். கொஞ்சம் கிளம்பச் சொல்லுங்கோ. நானே அழைச்சுண்டு போறேன் என்றவள் அடுத்தடுத்த வேலைகளை முடித்துக் கொண்டிருந்தாள்.

மாலு …நானும் உங்க கூட வரேனே..நீ மட்டும் தனியாப போய் என்ன பண்ணுவே பாவம்…மூணு பேருமே போகலாம் .என்றவன் “அம்மா…அம்மா என்று சொல்லிக் கொண்டே அம்மாவின் அறைக்குள் சென்றான் மூர்த்தி..

டிசம்பர் குளிருக்கு இதமாக கம்பளிக்குள் புகுந்து நடுங்கிக் கொண்டு இருந்தாள் அம்மா . இதக் குளிரில் கையைக் காலை அசைக்கக் கூட முடியாத நிலை. எழுபது வயதைக் கடந்த உருவம். மெலிந்து கிடந்த அம்மாவைப் பார்த்த மூர்த்தி,..அம்மா..வா டாக்டர்ட்ட போயிட்டு வந்துடலாம்…ஒரு லைஃப் சர்டிபிகேட் வேணுமாம் உன்னோட பென்ஷன் பணம் வாங்க…என்று சொன்னான்.சீக்கிரமாப் போனால் சீக்கிரமா வந்துடலாம்…என்றான்.

டாக்டரை ஆத்துக்கு வரச் சொல்லேன் மூர்த்தி….எனக்கு தள்ளலை …மாலதி ஏந்துண்டு … காப்பி போட்டாச்சோ..? இன்னைக்கு அவளுக்கு வேலைக்குப் போகணமே ..குழந்தை அருணுக்கு ஒரே ஜலதோஷம்னு நேத்து சொன்னாளே.. , இப்ப எப்படி இருக்கு..?..தேவலையா? அம்மாவின் பாசமான குரல் கேட்டதும் , அம்மாவைப் பார்க்கவே பாவமாக இருந்தது மூர்த்திக்கு.

நீ ஏன் இதைப் பத்தியெல்லாம் கவலைப்படறே… ? .நீ பாட்டுக்கு ரெஸ்ட் எடுக்க வேண்டியது தானே… என்று சொல்லிக் கொண்டே காப்பியை ஆற்றி இந்தாம்மா காப்பி…மெல்ல எழுந்திரு…என்று சொன்னவன்.ஒரு மக்கில் தண்ணீரோடு நின்றான்…இந்தா, வெந்நீர், லேசா வாயை கொப்பளிச்சுக்கோ போதும்..ஒரே குளிரா இருக்கு இல்லையா? .என்று கொடுத்தவனை அம்மா…வாஞ்சையோடு பார்க்கிறாள்.

ஆறிய காப்பியை வாங்கி உறிஞ்சியவள், என்னடா மூர்த்தி… காப்பி கஷாயம் மாதிரி ..ஒரே அக்கவெள்ளம்….நீயே பாரு என்று டம்ப்ளரைத் நீட்டினாள் குரலில் எகத்தாளம் இருந்தது.

அம்மா…..தினம் இதைத் தானே குடிக்கறே இன்னைக்கு என்ன வந்தது…? ஒரு வேளை உனக்கு நாக்கு சரியில்லையோ என்னமோ..? இதையும் டாக்டர்ட்ட சொல்லலாம்….என்ற மூர்த்தி.. அங்கிருந்து நகர்கிறான்.

ஆமாம்…..நான் ஒண்ணு சொன்னால் நீ வேற சொல்லு…என்று ஏமாற்றத்தில் வேதவல்லி மகனிடம் எரிந்து விழுந்தாள் .

வர வர உனக்கு எதுக்கெடுத்தாலும் கோபமும், எரிச்சல்லும் தான் வரது…என்று சொல்லிக் கொண்டே தூங்கிக் கொண்டிருந்த தன மகனை எழுப்ப அடுத்த அறைக்குள் நுழைந்து கொண்டான் மூர்த்தி. அங்கு அருண் அசந்து தூங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்து . இவனை எழுப்பவே அரை மணிநேரமாகும்.என்றபடி மெல்லத் தட்டவும் …..அருண் கண்ணைத திறந்து பார்த்துவிட்டு..”அப்பா. ..இன்னிக்கு ஸ்கூல் வேண்டாம்பா…” என்று வழக்கமா சொல்லும் அதே வார்த்தையை சொல்லிவிட்டு மீண்டும் கண்ணை மூடிக் கொண்டான். மூர்த்தியும் மகனை ரசித்தபடி அருணைக் கட்டிக் கொண்டு அவனருகில் தானும் படுத்துக் கொண்டான்.

நன்னாயிருக்கு மூர்த்தி நீங்க பண்றது…எழுப்பச் சொன்னா நீங்களும் வந்து படுத்துண்டா எப்படி…? அவன் ஸ்கூலுக்குப் போகணும்…இந்தாங்கோ என்று கையில் காப்பியோடு அறைக்கு வந்த மாலதி…” அவனுக்கு வயசு எட்டாயாச்சு….இன்னும் நீங்க அவனை எல்.கே.ஜி…யாவே ட்ரீட் பண்றேள்…என்று சொல்லிவிட்டுப் காப்பி டம்ளரை கையில் திணித்து விட்டுப் போனாள் மாலதி.

அம்மா…அம்மா…ரொம்பக் குளிரா இருக்கா..? இந்த ஸ்வெட்டரைப் போட்டுக்கோங்கோ. இன்னிக்கு நீங்களும் வரேள் பென்ஷன் வாங்க..அப்பறம் அங்கேர்ந்து உங்களை உங்க பழைய ஃப்ரென்ட் வாசுகி அம்மாவையும் பார்த்துட்டு வந்துடலாம். இல்லாட்டா அப்படியே ஏதாவது கோயிலுக்குப் போயிட்டு வரலாம். நேக்கு இன்னைக்கு வீக்லி ஆஃப் தான். லீவு நாள். என்று நிஜமான அன்பாகத் தான் சொன்னாள் மாலதி.

லீவாம்..லீவு..எல்லாம் பொய். பென்ஷன் வாங்கணும்னு லீவு போட்ருப்பா…என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட வேதவல்லி …இதோ நான் ஒண்ணும் எங்கியும் வரலை….ராத்திரி நான் சரியாவே தூங்கலை ….இப்போ தான் தூங்கப் போறேன். என்று திரும்பிப் படுத்துக் கொண்டாள் .

அப்போ உங்க ஃ ப்ரெண்டு….வாசுகிம்மா…? என்று ஆசையைக் கிளப்பினாள் மாலதி.

யாரையும் நேக்குப் பார்க்க வேண்டாம்..என்று ஸ்ட்ரைக் செய்தாள்.

அடம் பிடிக்கும் குழந்தையை சமாதானம் செய்தவது போல கொஞ்சிக் கெஞ்சி ஒருவழியா வேதவல்லியை அழைத்துக் கொண்டு போய் நிறுத்தி பென்ஷனை வாங்கியாச்சு.மூர்த்தி கையில் கொடுத்த மூன்று மாத பென்ஷன் பணம் முப்பதாயிரத்தை மறக்காமல் மாலதி மூர்த்தி அங்கேர்ந்து நேராக ஆஃபீஸ் போகும் முன்பே கேட்டு வாங்கி தன் கைப்பைக்குள் போட்டுக் கொண்டதை பார்த்து விட்டு. கடைத் தேங்காயோ வழிப் பிள்ளயாரோன்னு தான் இருக்கு. எல்லாத்தையும் அவள் கையில் ஒப்படைக்காட்டா என்ன இவனுக்கு. சமத்தே பத்தாது…என்று நினைத்துக் கொள்கிறாள்.

.மாலதியைப் பார்த்ததும் அவள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கிறது .ஆட்டோவில் வீட்டுக்கு வரும்போது , மாலதி..நீ நேக்கு தீபாவளிக்கு கோ-ஆப்டெக்ஸ்ல காட்டன் புடவை தானே வாங்கினே..இப்போ இந்தப் பணத்துல ஒரு பட்டுப் புடவை வாங்கிக்கறேன். என்று சந்தடி சாக்கில் சொல்கிறாள் என்றாள் .

இப்பப் போய் யாராவது பட்டுலக் காசைப் போடுவாளோம்மா …? வேணா இன்னும் ரெண்டு காட்டன் புடவை வாங்கிக்கோங்கோ அது போதும் என்றாள் மாலதி.

வேதவல்லி எந்த பதிலும் சொல்லாமல் மனம் வெதும்பி மௌனம் காத்தாள் . அதில் ஒளிந்திருக்கும் கோபம் தெரிந்தது.

வீட்டு வாசலில் நின்ற ஆட்டோவிலிருந்து மெல்ல இறங்கி நுழையப் போகிறாள் வேதவல்லி…..இந்தக் கட்டைக்கு காட்டன் போதும்னு சொல்றா..பாரேன் திமிரை…என்று நினைத்த படியே நடந்தவள் அப்படியே கால் தடுக்கி கீழே சறுக்கி நேராக அங்கிருந்த தலை “ணங் கென்று கல் தூணில் இடித்து வாசல் படியில் மயங்கி கண்கள் இருண்டு… வீடே தட்டா மாலையாடுவது போலிருக்க கீழே விழுகிறாள். வேதவல்லி.

ஆட்டோவுக்கு கொடுக்க பணம் எடுத்துக் கொண்டிருந்த மாலதி திடுக்கிட்டு…என்ன சத்தம் என்று பதறிய படியே வேதவல்லி விழுந்து கிடப்பதைப் பார்த்து, அச்சச்சோ….அம்மா விழுந்துட்டேளா …? எப்படி..? என்று ஓடிச் சென்று முகத்தில் தண்ணீரைத் தெளித்துப பார்த்து அதிலும் மயக்கம் தெளியாமல் கிடந்தததைப் பார்த்து பயந்து..பகவானே என்றபடியே உடனே அதே ஆட்டோவில் அப்படியே வேதவல்லியை அலாக்காக தூக்கி
உட்காரவைத்தபடியே வேகமா அப்பல்லோ ஹாஸ்பிடலுக்குப் போப்பா ….. என்றவள் வேகமாக மூர்த்திக்கும் விஷயத்தை ஃபோனில் சொல்கிறாள்.

இப்படியாகும்னு யார் கண்டா..? இருந்தாலும் இதுக்கும் தயாராத் தான் காஷ்லெஸ் மெடிக்கல் இன்சுரன்ஸ் போட்டுருக்கேன்….ரயில்வே ஹாஸ்பிடல்லாம் வேண்டாம்…..பேசாம .நீங்க அப்பல்லோக்கு வந்துடுங்கோ…! கவலையோடு அம்மா..அம்மா….என்று அழைத்துப் பார்க்கிறாள்.

அடுத்த கால்மணி நேரத்தில் அவசரப் பிரிவில் வேதவல்லி அட்மிட் செய்யப் பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் பரிசோதனை நடந்து கொண்டிருந்தது. தலையில் பலத்த அடி…! சி.டி ஸ்கேன் செய்ய வேண்டும்..என்றெலாம் பேசிக் கொண்டார்கள்..இன்னும் 24 மணி நேரம் சென்றால் தான் நிலைமை என்ன என்று சொல்ல முடியும், என்று டாக்டர் சொன்னதும் மாலதி திடுக்கிட்டாள் . பாவம் ஆசையாப் பட்டுப் புடவை வேணும்னு கேட்டா….சரின்னு ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்..என்று நினைத்துக் கொண்டாள் . இன்னும் என்னவெல்லாமோ நினைத்துக் கொண்டால். சமயபுரத்து மாரியம்மனுக்கு வேண்டிக் கொண்டு காசு முடிந்து வைத்தாள் .

அதற்குள் மூர்த்தியும் அருணை அழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து…என்னாச்சு மாலதி…இப்ப அம்மா எப்படி இருக்கா? எப்படி விழுந்தா..என்ற கேள்வியோடு கவலை தோய்ந்த முகத்துடன் ஒவ்வொரு டாக்டரிடமும் அம்மாக்கு சரியாகுமா? என்று கேட்கவும்…மாலதி அழுது விட்டாள் ..

அருண்..பாட்டிக்கு என்னாச்சுப்பா..? என்று அவனும் அழ ஆரம்பித்தான்.

டாக்டர் வேதவல்லியை பரிசோதனை செய்யும் போது ….நல்ல வேளையா இவங்களுக்கு இரத்த அழுத்தமோ சக்கரையோ இல்லை. விழுந்த அதிர்ச்சி தான்…நாட் ஈவன் ப்ளட் கிளாட்..ஒன்னும் கவலையில்லை… …நல்ல ஹெல்தியாத் தான் இருக்காங்க உங்க வொய்ஃப் சரியான சமயத்துல ரொம்ப டிலே பண்ணாமல் கொண்டு வந்து சேர்த்தாங்க…அவங்களுக்கு ரெஸ்ட் வேணும் என்றபடி இன்ஜெக்ஷன் கொடுத்துக் கொண்டே மூர்த்தியைப் பார்த்து சொல்லிக் கொண்டிருந்தார்.

அரை மயக்கத்தில் டாக்டர் சொல்வதைக் கேட்ட வேதவல்லிக்கு மெல்ல மெல்ல நினைவு திரும்பவும் கண்ணைத் திறக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள் . மனசுக்குள் இப்போ நான் எங்கே இருக்கேன்…நேக்கு என்னாச்சு..? என்று நினைவுகள் சுழன்று கொண்டிருந்தது. ஹாஸ்பிடல் வாசனை மனத்துள் ஒரு வித அச்சத்தை வரவழைத்தது. மெல்லிய புகை மண்டலத்தில் மங்கலாக மூர்த்தியும், மாலதியும்..டாக்டரும் நிழலாகத் தெரிந்தனர்.

எதற்கும் இரண்டு நாட்கள் இங்கேயே இருக்கட்டும்…என்று டாக்டர் சொல்லிவிட்டுப் போகிறார்.வேதவல்லிக்கு தனி அறையில் சலைன் ஏறிய வண்ணம் இருந்தது.

அம்மா உறங்கிக் கொண்டிருப்பதாக நினைத்து மூர்த்தியும் மாலதியும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

மாலதி தான் பேசினாள் ….ஆமாம் மூர்த்தி….டாக்டர் சொன்னது நிஜம் தான். நல்ல சமயத்துக்கு இங்க கொண்டு வந்தோம். இங்க தான் உடனடியா நன்னா ட்ரீட்மென்ட் பண்ணுவா.அம்மா அதிக கனமில்லாமல் இருந்ததால் உடனே யாரையும் எதிர் பார்க்காமல் என்னாலயே தூக்க முடிஞ்சது.

நேக்கு நம்ம அம்மாவின் உடம்பை முக்கியமா உணவு விஷயத்தில் கட்டுப் பாடா வைக்க நினைச்சு வெறும் கஞ்சி தான் கொடுக்கறேன்…காப்பி கூட தண்ணியாத் தான் தருவேன். இத்தனை வருஷம் நல்ல திக்கா காப்பி சாப்பிடாச்சு இப்போ உள்ளே ஜீரண உறுப்புக்கு ரெஸ்ட் கொடுத்தால் தான் நல்லது. அம்மாவுக்குப் இதெல்லாம் பிடிக்கலை தான்.அதுக்காகவெல்லாம் நம்ம ரிஸ்க் எடுக்க முடியுமா? இவங்க ஆரோக்கியத்தை நாம கவனமா பார்த்துண்டா இன்னும் சில வருஷமாவது நம்மோட இருப்பாங்க இல்லையா?

அதான்….எதுக்கும் இருக்கட்டும்னு மாசா மாசம் அம்மாவோட பென்ஷன் பணத்தில் இந்த இன்சூரன்ஸ் கட்டீண்டு வரேன். இன்னும் தனியா ஒரு தொகை சேர்ந்திருக்கு. நாம ரெண்டு பேர் சம்பளத்தில் பெரிசா என்ன பண்ண முடியும்…? உங்கம்மா இருந்தப்போ கட்டின வீடு…இன்னும் வீட்டை கொஞ்சம் புதுப்பிக்கலாம்னு நினைச்சேன். அதான் தீபாவளிக்கு கூட நல்ல புடவையா வாங்காமல் காட்டன் புடவை வாங்கினேன் பாவம் அம்மாவுக்கு அதுவே ஒரு குறை போல…பட்டுப் புடவை வேணும்னு கேட்டாள்.இப்பத் தோணறது….பட்டுப் புடவை அம்மாவுக்கு ரொம்ப இஷ்டம்,அதையே வாங்கியிருக்கலாம்.

இப்போ டிஸ்சார்ஜ் ஆகி ஆத்துக்கு போனதும் ஒரு பட்டுப் புடவை வாங்கிடலாம்…நல்லவேளையா பகவான் புண்ணியத்தில் ஒண்ணுமாகலை . அம்மாவை இனிமேல் நாம தான் ஜாக்கிரதையாப் பார்த்துக்கணும்.

நீ இப்படி நன்னாத் தான் யோசிக்கறே..ஆனால் அம்மாக்குத் தான் உன் மேல ஒரு பிரியமே இல்லையோன்னு எனக்குத் தோணறது.. அது எனக்கும் வருத்தம் தான். என்ன செய்ய? நீயாவது புரிஞ்சுக்கோ.

தேன் பாட்டில் மேல விஷம்’னு எழுதி வெச்சுண்டு குழம்பினா என்னவாகும்…? அது போலத் தான் இதுவும்..எதற்கும் ஒரு காலம் வரும், அது வரைக்கும் பொறுமையாத் தான் காத்திருக்கணும். எப்படியும் ஒரு நாள் புரியாமல் போகாது.

உண்மையான அன்பு இருக்கற இடத்தில் தான் உரிமையும், கோபமும் இருக்கும் அம்மா அந்த உரிமையில் தான் சொல்றா. நானும் அதே உரிமையில் தான் எடுத்துக்கறேன்…சம் டைம்ஸ் நான் கூட அதே உரிமையோட எதிர்த்துப் பேசறேன்…என் அம்மாகிட்ட எப்படி இருப்பேனோ அது போலத் தான் உங்க அம்மாவும். நாங்க கஷ்டப் பட்ட நேரத்தில் என்னை ஒண்ணுமே டிமாண்ட் பண்ணாமல் கல்யாணம் பண்ணி வைக்கலையா.அந்த விஸ்வாசம் எனக்கு இருக்கும். இப்ப ஏதோ ஒரு பாதுகாப்பின்மை..அதனாலத் தான் நானும் யோசிக்கறேன்…இனிமேல் வேலையை ரிசைன் பண்ணிட்டு அம்மாவையும் அருணையும் பார்த்துண்டு இருக்கலாம்னு. சரி தானே…நீங்க என்ன சொல்றேள்..? என்கிறாள் மாலதி..

நல்ல ஐடியா மாலு…..அப்படியே செய்….அப்பறம் அம்மா ரூமிலிருந்து அந்தப் படங்களை எல்லாம் எடுத்து வேற ரூமுல மாட்டேன்….அம்மா தான் சொல்லச் சொன்னா. ஏதோ செண்டிமெண்ட் போல.

ஓ ….அதுவா…என்கிட்டயும் சொல்லிருக்கா…நம்மோட சேர்ந்து ஒண்ணா வாழ்ந்த ஒருத்தர் இல்லாட்டாலும் அவாளுக்கு நாம அதே மரியாதையைத் தரணும் இல்லையா..? நம்மள விட உங்கம்மா தான் அவாளோட ரொம்ப வருஷங்கள் இருந்திருக்கா அதான் அவாளைப் பார்த்துண்டு இருக்கட்டுமேன்னு மாட்டி வெச்சேன். சரி எடுத்துடலாம். அம்மாவும் எனக்கு சொல்லியிருக்கா….உங்க பாட்டி செய்த கொடுமைகளை எல்லாம்….பாவம் அம்மா.

இப்போ இருக்கற தலைமுறை இடைவெளியில் மாமியார் கொடுமை கொஞ்சம் கொஞ்சமா மறைந்சுண்டு வரது …இதுக்கெல்லாம் யாருக்கு நேரமிருக்கு? இப்போ எல்லாருமே யோகா, மெடிட்டேஷன் எல்லாம் செய்து அவா அவா மனதை ஆரோக்கியமா வெச்சுக்க பழகறாங்க.. மாமியார் பாங்குல மானேஜரா வேலை பார்ப்பா, மருமகள் பெரிய போஸ்ட்ல வேலை பார்ப்பாள்….இவர்களுக்குள் எந்த அடிமை படுத்தும் தனம் இருக்காது. ஆரோக்கியமான இடைவெளியோடு ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுண்டு குடும்பத்தை கொண்டு செலுத்துவா இப்போல்லாம் இப்படித் தான் மாறியிருக்கு. இது எல்லா தரப்பிலும் பரவலா நடந்துண்டு வர விஷயம் தானே…? ஒவ்வொருத்தரும் ஏதோ ஒரு குறிக்கோளோட வாழறா. இது தான் இப்போதைய ஆரோக்கியமான சமூக முன்னேற்றம்.

ஆனால் மாமியார் கொடுமையை இன்னும் டிவி சீரியல் மட்டும் தான் கெட்டியாப் பிடிச்சுண்டு அதை மறக்க விடாமல் ஞாபகப் படுத்தீண்டே இருக்கு…இல்லையா?

வாழப் போற குறிப்பிட்ட கால வாழ்க்கையில் சொந்தம்னு சொல்லிக்க நமக்குன்னு உறவு வட்டத்துக்குள் ரொம்ப கொஞ்ச பேர் தான் இருப்பா இல்லையா? அந்த உறவுகளை சரியாப் புரிஞ்சுக்காம வீட்டை குருக்ஷேத்ரமா பண்ணினால் வேற எங்க போய் நாம நிம்மதியா வாழ்ந்திட முடியும்.?
வயசுக்கேத்த விவேகம் வேணும்….அவ்ளோதான். .நான் தான் கஷ்டப் பட்டுட்டேன்…ஆனால் நீ கஷ்டப் பட்டுடக் கூடாதுன்னு அன்போட காப்பவள் தான் அம்மா. அந்த விவேகம் வந்துட்டா போதும்… இந்த உலகத்தில் அம்மாட்ட மட்டும் தான் உண்மையான பாசத்தையும் அன்பையும் பார்க்க முடியும்.

என்னோட இந்த வாழ்க்கைல எனக்கு உறவுன்னு சொல்லிக்க நீங்க மூணு பேரும் தானே இருக்கேள். உங்களுக்கு அம்மான்னா அவங்க எனக்கும் அம்மா தானே மூர்த்தி. நம்ம அருணுக்கு பாட்டி ங்கற உறவு இன்னும் நீண்ட காலம் வரை இருக்கணும்னு தான் என்னோட ஆசை. இப்படி பேசிக் கொண்டே நேரம் போவது தெரியாமல் அமர்ந்திருந்தாள் மாலதி.

படுக்கையில் ஒருக்களித்து படுத்திருந்த .வேதவல்லி……உறங்குவது போல பாவனை செய்தபடியே மாலதி பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தவளின் மாமியாரின் மனசாட்சி குற்றவுணர்வில் கண்ணீரால் கண்களை மறைக்க..இத்தனை வருஷங்கள் “தேனை விஷமாகவே பார்த்துண்டு இருந்திருக்கேன்…” அன்னப் பறவை மாதிரி நல்ல விஷயங்களை மட்டும் கிரஹிச்சுண்டு வாழும் விவேகம் இனிமேல் உன்னிடமிருந்து எனக்கும்…வரவேண்டும் .நினைத்தபடியே மாலதியின் முகத்தைப் பாசத்தோடு திரும்பிப் பார்க்கிறாள்.

மாலதியின் இதயம் அன்புக் கேடயமாக இருந்ததால் தான் சொல்லம்புகளால் என்றுமே துளைக்க முடியவில்லை என்பதை உணர்ந்து கொண்டாள் வேதவல்லி.
———–

திங்கள், 10 டிசம்பர், 2012

நாங்கள் கலைமான்கள்

நாங்கள் கலைமான்கள் 



கேன்டி வொய்ட் நிற வோல்ஸ்வேகன் பஸ்ஸட் கார் காற்றைக் கிழித்துக் கொண்டு சீறியப்படியே புறவழிச் சாலையைக் கடந்து கொண்டிருந்தது. காரினுள்ளே இருந்த ஜி.பி.எஸ்-க்கு அதிகம் வேலை இல்லாமல் மின்னி மின்னி ஒரே சீராக அம்பு பாய்வது போல வழி சொல்லிக் கொண்டிருந்தது. ரமேஷ் சந்தோஷமாக விசிலடித்தபடியே லாவகமாக ஸ்டியரிங்கைப் பற்றியபடியே மனதுக்குள் மகிழ்ச்சியில் பறந்து கொண்டிருந்தான். காலையில் அவசர அவசரமாக தாம்பரம் வரைக்கும் ஒரு முக்கிய காண்டிராக்ட் ஆர்டருக்காக வந்தவன் ,வந்த வேலை முடிவதற்குள்ளாகவேத் திரும்பிக் கொண்டிருந்தான்.அவனை இவ்வளவு அவசரமாக அழைத்து திரும்ப வைத்தது பைரவியின் மெசேஜ் தான் . மறுபடியும் பைரவி அனுப்பிய செய்தியை தனது கைபேசியில் பார்க்கிறான்."ரமேஷ் உடனே எங்கிருந்தாலும் வா...பேசணும்.." என்று சிரித்தாள் பைரவி. மெசேஜ் பாக்ஸை மூடியதும் "சாம்சுங் காலக்ஸி" சிரித்த பைரவியை காட்டி மறைந்தது.

"என்ன அழகு.....எத்தனை அழகு ..!
கோடி மலர்...கொட்டிய அழகு....
இன்றெந்தன் கை சேர்ந்ததே...."

என்று பாடியபடி காரின் வேகத்தை அதிகரித்தான்..ரமேஷ்.

மற்ற எந்த வேலைகள் இருந்தாலும் இந்த ஒரு காரணத்துக்காகத் தள்ளி வைக்கலாம்....அதனால் அவனுக்கு சில லட்சங்கள் மட்டும் தான் நஷ்டமாகும்...இப்போது பைரவி மட்டும் தான் அதி முக்கியம்...என்பதால் அவள் அனுப்பிய செய்தியைக் கண்டதும் அடித்துப் பிடித்துக் கொண்டு காரை விரட்டிக் கொண்டிருந்தான்.என்ன விஷயமாயிருக்கும்? எங்கே சந்திக்கலாம்? என்று அவன் மனம் முக்கிய இடங்களைப் பட்டியல் போட்டபடி இருந்தது. இறுதியாக மனதில் வந்து நின்றது.."தி கிராண்ட்.." ஹோட்டல்.

உடனே பைரவிக்கு அதைத் தெரிவித்து விரைவில் வந்துவிடுவேன்.... காத்திருக்கவும்..."பதில் மெசேஜ் கொடுத்து விட்டு...அவளை சந்திக்கும் ஆசையுடன் அவனும் காத்திருந்தான். அத்தனை வேகத்திலும் கூட அவனுக்கு நேரம் மிக நிதானமாக நகர்வது போலிருந்தது.

பைரவி வளர்ந்து வருகிற திரைப்படப் பின்னணிப் பாடகி என்பதையெல்லாம் தாண்டி வளர்ந்து விட்ட நிலையை தொட்டிருப்பவள். அடுத்தடுத்த புதுப் படங்களில் அவளை புக் செய்துவிட்டு ரெகார்டிங் செய்ய அவளது கால்சீட்டை எதிர்பார்த்து காத்திருந்தனர் பெரிய பெரிய இயக்குனர்கள். நாளும் பொழுதும் ட்ராக் பாட ஒவ்வொரு ரெகார்டிங் தியேட்டராக ஓடிப் பாடி நேரமின்மையால் தவித்துக் கொண்டிருந்தாள் பைரவி. இந்நிலையில் அடுத்த மாதம் லண்டனில் நடக்க இருக்கும் ஒரு கலை நிகழ்ச்சிக்காக தன்னைக் கலந்து கொள்ளச் சொன்ன இயக்குனரிடம் "கண்டிப்பாக நடத்தித் தருகிறேன் " என்று வாக்குக் கொடுத்துவிட்டு, தான் லண்டன் செல்லப் போகும் விஷயத்தைச் சொல்ல வேண்டும் என்ற ஆவலில் தான் ரமேஷுக்கு அந்த மெசேஜ் அனுப்பினாள் பைரவி.

இரண்டு மாதங்களுக்கு முன்னால் பைரவி தன மனதுக்கு எது சரி என்று படுகிறதோ அதை மட்டும் செய்தவளாய் இருந்தாள் . அவளுக்கு அந்த பூரண சுதந்திரத்தை அவளது அம்மாவும் அப்பாவும் கொடுத்து ஊக்கப் படுத்தினர். அவளுக்கு அளிக்கப்பட்ட சுதந்திரம் அவளை ஆரோக்கியமாக வளர்த்து விட்டிருந்ததை எண்ணி அவர்களுக்கு எப்போதும் மகிழ்ச்சியே.

இருபத்தி நாலு வயதில் திடீரென்று ஒரு திரையிசைப் பாடலில் பிரபலமாகி, அடுத்தடுத்து அனைத்துப் படப் பாடலிலும் அவளது குரல் தான் மேலோங்கி இருந்து திரையுலகில் தனி இடம் பெற்ற பாடகியாக வலம் வருவது கண்டு அவர்களே வியந்து ஆச்சரியப் பட்டனர்.

இப்போதெல்லாம் "ஏர்டெல் சூப்பர் சிங்கர் " நிகழ்ச்சிக்கு நடுவராக பைரவி இருப்பதால் பணம்,பெயர் , புகழ் ,அந்தஸ்து என்று மரியாதைக்குப் பஞ்சமில்லாமல் ராஜவீதியில் யௌவன கர்வத்தோடு நடந்து கொண்டிருந்தாள் பைரவி. இதெல்லாம் ரமேஷை அவள் வாழ்வில் குறுக்கிடாத வரையில் தான்.

என்று ரமேஷின் காந்தக்கண் இவளை இழுத்ததோ அன்றிலிருந்து அந்தப் பெரிய பாடகியில் மனதுக்குள்ளும் சலனம்....ஈர்ப்பு...சபலம்....எனக் காதலுக்குண்டான லக்ஷணங்கள் அவள் மனத்துள் நுழைந்து பாடாய்ப் படுத்திக் கொண்டிருந்தது. அவள் பாடும் பல பாடல்கள் அவனுக்காகத் தான் பாடுவதாகக் கூட நினைந்து குரல் நெகிழ்ந்து இன்னும் இனிமை சேர்த்தது. பைரவி அசப்பில் ஸ்ரீதேவியை நினைவுக்கு இழுத்துக் குரலால் வாணி ஜெயராமை அடையாளம் காட்டுவாள். எத்தனையோ பேர்களின் வேட்டைக் கண்களுக்குத் தப்பிய‌ கவரிமான், ரமேஷ் வீசிய காந்த வலையில் விழுந்து சிக்கிக் கொண்டது. அதன் பின்பு அவளுக்கு எல்லாம் அவனாகிப் போனான் ரமேஷ்.

கலிஃபோர்னியா ஸ்டேட் யுனிவேர்சிட்டியில் விஸ்காம் படித்து விட்டு வந்த ரமேஷ் சொந்தமாக விளம்பரப் படங்கள் தயாரித்து வெளியிட ஆரம்பித்து இப்போது அவனுக்கென சொந்தமாக ஒரு தனி டி வி சேனலே வைத்து நிகழ்ச்சிகள் ஒளிபரப்புச் செய்யும் அளவுக்கு உயர்ந்து விட்டான். மார்கெட்டில் லீடிங்கில் இருக்கும் அத்தனை பெரிய வர்த்தக விளம்பரங் களுக்கும் அவனே கான்ட்ராக்ட் எடுத்து படமாக்குவதோடு அவனது சானலுக்குத் தான் முதலில் என்ட்ரி கொடுப்பான். காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்பது போல சென்னையில் பிரதான இடங்களில் இரண்டு மல்டிப்ளெக்ஸ் தியேட்டர் வேறு. மாதம் முப்பது நாட்களும் லட்சங்களை அலட்சியமாக அவனை எண்ணிச் சேர்க்க வைத்து , வாழ்க்கையை சுவாரசியமாக்கியது. அவனது பணத் தேவைகள் பூர்த்தியாகிய வேளையில் மனத்தில் புதிதாக நுழைந்து இசைத்த ராகம் தான் பைரவி.

இசைப்பிரியன், கலா ரசிகன் ரமேஷின் பெற்றோர்கள் கூட இசைக் கலைஞர்கள் தான். கர்நாடக சங்கீதமும், வீணையின் நாதமுமாக காதல் மனமும், கலப்புத் திருமணமும் அவர்களது இசை உலக வாழ்கையை அர்த்தமுள்ளதாக ஆக்கியது. அதற்கான சாட்சியாக செல்லப் பிள்ளை ரமேஷ்.. அவனது அம்மா அவனது கல்யாணத்தைப் பற்றிப் பேச்செடுத்து " ரமேஷ்...உன் கல்யாணத்துக்கு பெண் பார்க்கப் போறோம்....உன் மனசில் யாராவது இருந்தால் சொல்... என்று கண்ணியமாகக் கேட்டாள் .
.
"அம்மா...என் வாழ்க்கையை பங்கெடுக்க வருபவள் இசையில் அல்லது பரத நாட்டியத்தில் பெரிய அளவில் பெயர் பெற்றவளாக கலையின் அருமை புரிந்தவளாக இருக்க வேண்டும்,அப்படி இருக்கும் ஒருத்தியைத் தான் நான் உன் முன்னால் கொண்டு வந்து நிறுத்துவேன். அவளை நானே பார்த்து, ரசித்துத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஆசை....அது வரை நீ கொஞ்சம் எனக்காக விட்டுக் கொடேன்..." என்று கெஞ்சியதும்....சரி தான்...சரி தான்....அப்பாவுக்குத் தப்பாமல் தான் பொறந்திருக்கே...ன்னு புன்னகைக் கொடியை காட்டினாள் .

அதீத கற்பனா சக்தியும், இசையில் மனம் லயித்த நாட்டமும், நாட்டியத்தில் ஆசையும் ஆவலும் கொண்ட மனமாக அவன் கண்ட கனவெல்லாம் பைரவியாக அவன் வாழ்வில் நுழைந்த தருணம்..... தன்னையறியாமல் ரமேஷ் ஆனந்தத் தாண்டவமாடினான்.அவளை முதன் முதலாக சந்தித்த போது .."இவள் தானா...இவள் தானா.... எதிர்பார்த்த பெண்மானும் இவள்தானா..." என்று அவனது ஆத்மா மகிழ்வோடு பாடியது..

வலை விரிக்காமல் கொக்கி போட்டு காத்திருக்காமல், ஒற்றைக் காலில் கொக்கைப் போல நின்று தவமிருக்காமல் ராகமாலிகாவாக தானாகவே இதயத்தோடு இணைந்தவள் பைரவி. இவளைவிடச் சிறந்தவளாக இன்னொருத்தியும் இந்த உலகத்தில் பிறந்திருப்பாளா .... என்ன...? வாழும் காலம் வரை இவளோடு பெருமையாக வாழ வேண்டும்...என்று மனதுக்குள் முடிச்சும் போட்டுக் கொண்டான் ரமேஷ்.

வாகினி ஸ்டுடியோ விற்கு ஒரு வேலையாக சென்று திரும்பும் நேரம் பார்த்து தனக்கெதிராக மின்னலாக பைரவி எதிர்ப்பட்டாள் . ஒரு நொடி பார்வை பரிமாற்றம் மட்டும் மனதை,... உடலை.., உலுக்கியது.ஆனந்த அதிர்ச்சி. ..அவனுக்குள் ஏற்படுத்த, பைரவியோடு பேசும் பொன்னான தருணத்தை திட்டம் போட்டு உருவாக்கினான்.

அவன் தீட்டியபடியே ஒரு நாள் தன்னை பைரவிக்கு அறிமுகப் படுத்திக் கொண்டு அப்படியே ஒரு மெகா சீரியலுக்கு "டைட்டில் ஸாங் " நீங்க தான் பாடணும் ...."மாட்டேன்னு சொல்லிடாதேங்க...இந்த சீரியல் கிட்டத் தட்ட மூணு வருஷம் என்னோட சானல்ல ரெகுலரா.வரும் ..உங்க குரல் டைட்டில்ல கிடைச்சால்....."டி.ஆர்.பி. ரேடிங் கிடைக்கும். இது தாய்க்குலத்தைப் பெருமை படுத்தற சீரியல்....உங்களுக்கும் சின்னத்திரையில் ஒரு லிப்ட் கிடைக்கும்...என்று சொல்லியபடியே வெற்றுச் செக்கில் கையெழுத்துப் போட்டு உங்களுக்கு எவ்ளோ வேணுமோ போட்டு எடுத்துக்கோங்க....நோ ப்ராப்ளம் .....ஆனால் பாட்டு உங்கள் குரலில் தான். என்று சொல்லி விட்டு சட்டென்று நகர்ந்தான்.

அவனது கண்ணிய அப்ரோச் பிடித்திருந்தாலும், தயக்கத்துடன் அந்த செக்கைக் கையில் வாங்கியவள்...இதைக் காரணம் காட்டி இவரோடு இன்னொரு முறை சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம்... என்று நினைத்தாள் . அவள் மனமும் அவன் பின்னே சென்றதை அவளே அப்போது அறிந்திருக்கவில்லை.அவனும் அவளைப் பிடித்துப் போடத் தனக்குக் கிடைத்த வாய்ப்பை நழுவ விடத் தவற வில்லை.

இப்படியாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இருவரும் ஒன்றை விட்டு ஒன்றாக ஏதோ ஒரு விதத்தில் மீண்டும் மீண்டும் சந்தித்துக் கொண்ட போது அவர்களையும் மீறி நட்பாகி அதுவே பைரவியின் மனதுள் மனதுள் காதலாகி கனிந்து கொண்டிருந்தது.

ஒரு நாள் பைரவியின் பிறந்தநாள் பரிசாக தானே ஆசையோடு தஞ்சாவூர் வீணையை ஏந்தி வந்து அவள் வீட்டு ஹாலுக்குள் நுழைந்ததும் இனிமையாகப் பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாடியபோது இன்ப அதிர்ச்சி அடைந்தாள் பைரவி . யாரும் பார்க்காத நேரம் பார்த்துக் காத்திருந்து ,கண்ணீர் மல்க ஆனந்தத்தில் ரமேஷின் மார்பில் சாய்ந்து நன்றி சொன்னாள் பைரவி.ஒரு நிமிடத்தில் விலகி நின்றவளை ஏக்கத்தோடு பார்த்த ரமேஷ்....பைரவி....." என்னைக்கும் நீ தான் என் பக்கத்தில் இருக்க வேண்டும்...உறுதி செய்...." என்று மெல்லிய குரலில் கொஞ்சியப்படியே கரத்தை நீட்டினான் ரமேஷ்.

அந்த பாக்கியத்தை நீ தான் எனக்குத் தர வேண்டும் ரமேஷ்....நான் காத்திருக்கேன்....என்று நீட்டிய கரத்தில் தன் கரத்தை இணைத்தாள் அதீத வெட்கத்தில் திக்கு முக்காடிப் போய் உதடுகள் துடிக்க, கன்னம் சிவக்க தலை குனிந்த படியே சொல்லி முடித்தாள் .

அய்யே.....எத்தனை சினிமாப் பாட்டுப் பாடி அசத்தரே.....வெக்கத்தப் பாரு....என்று அவளின் முகத்தை நிமிர்த்தியவன்...."என்ன தான் நீ பாடினாலும்....இது தான் நிஜம்...இது தான் நீ...! என் பைரவி ராகம்....என்று "உன்னைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ.....?" என்று பாடிக் காண்பிக்க..

பைரவி வெட்கத்துடன்....."ம்ம்ம்ம்.......இதுவும் பைரவி ராகம் தான்." என்று சிணுங்கினாள்.

அம்மாடி நான் உண்மையைப் பாடினேன்...எனக்கு ராகமெல்லாம் ஒண்ணும் தெரியாது உன்னோட போட்டிக்கு நான் வரலப்பா...என்று தோளை லேசாகக் குலுக்கி
நீ தன்னே ஒன்னாங்கிளாசாயிட்டு பாடுன்னு ..எனிக்கு நீ மாத்ரம் மதி .! என்று மலையாளத்தில் சொன்னபோது போது அங்கே சங்கீதமாக இருவரின் சிரிப்பும் இணைந்தது.

ரமேஷ் வந்து விட்டு சென்றதும்...அம்மாவின் முதல் கேள்வியே....." முதல்ல நீ வெளில போக ஆரம்பிச்சே...இப்போ வீணை உள்ளே வர ஆரம்பிச்சிருக்கு....இன்னும். என்னவெல்லாம் வருமோ ?என்னவெல்லாம் நடக்கப் போறதோ ...? யார் கண்டா..? பெரிய பரிசோட வரார்....உங்களுக்குள்ள..... .என்று சந்தேகத்துடன் இழுத்தாள் .

ம்ஹும்.....அப்டிலாம் நீ நினைக்கறா மாதிரில்லாம் ஒண்ணும் கிடையாது.இன்னும்..அவர் எனக்கு ஜஸ்ட் குட் ஃபிரண்ட் தான்...என்றாள் தீர்மானமான குரலில். வாய் சொன்னாலும் மனம்....ஏன் பொய் சொல்றே.... உண்மையைச் சொல்லிடேன்...என்று வீணையைக் கட்டிக் கொண்டது. கைவிரல்கள்..வீணையை லேசாக மீட்டி அதில் வரும் நாதத்தை ரசித்தது. மனம்....ரமேஷ் வீணையை ஏந்தி ஹாலில் நின்று பிறந்த நாள் பாட்டுப் பாடியதை கண்ணுக்குள் கொண்டு வந்து காட்டியது.


அம்மா சொல்லிக் கொண்டிருந்தாள். பைரவி...நீ முன்ன மாதிரி கிடையாது..சினிமா இண்டஸ்ட்ரியில் இருக்கிறவள்...அதே சமயம் கல்யாணமாக வேண்டிய பெண். பத்திரிகை ரிப்போர்டர்ஸ்.பார்த்தால் போதும்...யாரோ எதையோ செய்யறா நமக்கெதுக்குன்னு இருக்க மாட்டா முதல் பக்கத்துல இன்னார்க்கு இன்னார்னு கொட்டை கொட்டையா எழுதிட்டுத் தான் மறுவேலை பார்ப்பார்கள் .. அவங்களுக்கு வேண்டியது கொஞ்சம் அவல் நிறைய த்ரில் அவ்ளோதான். என் கவலை எனக்கு....ஆயிரத்தி ஒண்ணாவது ரசிகனா இருந்தாத் தேவலை...தான். ஆனால்...இது கொஞ்சம் கூட நன்னாயில்லை நம்ப குடும்பத்து கௌரவம்.....என்று இழுத்தாள் அம்மா..!

அம்மா...ஒரு விஷயத்தை இல்லைன்னு சொல்லிட்டு..பின்னால ஆமாம்னு சொன்னாத் தப்பில்லை. அதே விஷயத்தை இருக்குன்னு வெளிப்படையாச் சொல்லிட்டு பிறகு இல்லைன்னு சொல்லிண்டு நின்னா...அப்போ தான் உன்னோட குடும்ப கௌரவப் பிரச்சனை எல்லாம் வரும்....இப்ப வர எந்த கிசு கிசுக்கும் நான் இல்லைன்னு ஒரே பதிலைத் தான் தருவேன் நீ கவலைப் படாதே..என்று அம்மாவை சமாதானப் படுத்தினாள் .

அதற்குள் பைரவியின் கல்லூரித் தோழி மாதவி கையில் பூங்கொத்தோடு வந்து நின்று வாழ்த்துச் சொல்லவும் ரமேஷ் சிறிது நேரம் மனதிலிருந்து விலகி நின்றான்.அப்படியும் அவனைப் பற்றி பேசாமல் இருக்க முடியவில்லை பைரவியால் .

கொஞ்ச நேரம் முன்னாடி வந்திருக்கக் கூடாதா மாதவி..? இப்பத் தான் ரமேஷ், அதான்...."வானவில் டிவி" ஓனர் ரமேஷ் வந்துட்டுப் போனார். உனக்கு அறிமுகப் படுத்தி இருப்பேன்.மிஸ் பண்ணிட்ட....என்று வருத்தப் பட்ட பைரவி "இதோ அவர் கொடுத்த பரிசு...இந்த வீணை..." என்று பெருமை பொங்க தோழியிடம் வீணையைக் காண்பித்தாள் .

அவர்கள் பேச்சு எங்கெங்கோ சென்று திரும்ப..சாப்பிடும் போது பைரவியின் அம்மா தான் கேட்டாள் ..."அடுத்தது மாதவி...உன்னோட கல்யாண விருந்துக்கு எங்களை எப்போ கூப்பிடப் போறே..?"

அதெல்லாம் இப்போ ஒண்ணும் கிடையாது ஆன்ட்டி ....எனக்கு இந்தக் கல்யாணம் என்ற உறவுச் சிறையில் எல்லாம் நம்பிக்கையே இல்லை... அதெல்லாம் ஒரு கமிட்மென்ட்.எனக்கு குழந்தைகளையே பிடிக்காது. பிரசவம்னா பயம்...அதை தடுக்கனும்னா நிச்சயமா கல்யாணத்தை நிராகரிக்கனும் என்று வெளிப்படையாக பளிச்சென்று சொன்னாள் மாதவி.

என்ன சொல்றே நீ மாதவி..? என்னால நம்பவே முடியலையே...இன் ஃபாக்ட் நீயா..? இப்படிப் பேசினே...! ஆச்சரியமா இருக்கு...என்று மாதவியின் முகத்தைப் பார்த்தாள் பைரவி.அவளின் பார்வை கேள்விக் குறிகளை கொக்கியாக போட்டு மாதவியின் மனதின் ரகசியத்தை இழுக்க ஆரம்பித்தது.

அது சின்ன வயசிலயே மனசுல விழுந்த அடி பைரவி. இதயத்தோடு தழும்பா இருக்கு...நான் அதை விட்டு வெளியே வர முடியாமல் தான் இன்னும் தவிக்கறேன்.
அந்த வலியிலிருந்து விலகி வாழணும்னு தான் நான் பரதமே கத்துண்டேன்...நாளடைவில் பரதமே எனக்கு ஆதரவா, ஆறுதலா ஒரு துணையாய் மாறிப் போச்சு. .
நான் சதங்கை கட்டாமல் ஆடினாலும் என் காதுக்குள் சரியான ஜதி ஸ்ருதி சுத்தமாகக் கேட்கும். என்னால என் நாட்டியத்தை என்னைக்கும் விட முடியாது. அதே சமயம் என் அம்மாவைப் போல பெற்ற குழந்தைகளை பறி கொடுத்து விட்டு காலா காலத்துக்கும் கவலைப் பட்டுக் கொண்டு நடை பிணமாக வாழ முடியாது.

மாதவி......என்னாச்சும்மா உன் அம்மாவுக்கு...? அழும் குழந்தையைத் தேற்றும் தாயாக பைரவியின் அம்மா மாதவியின் தலையை வருடியபடி அருகில் நின்றாள் .

என் அம்மாவுக்கு நான் பிறந்த பிறகு இரண்டு பிரசவம் நடந்தது. இரண்டு தடவையும் குழந்தை ரோஜாப்பூ மாதிரி பிறக்கும்...கையைக் காலை அசைத்து நெளியும்..அடுத்து சில நிமிடங்களில் உதறலெடுத்து விறைத்துக் கொண்டு இறந்து போகும். இன்னைக்கு இருந்திருந்தால் எனக்கு ரெண்டு தங்கைகள இருந்திருப்பார்கள். பாவம்...இதை நேரில் பார்த்திருக்கேன் நான். அப்போ எனக்கு வயசு எட்டு இருக்கும். நானும் அப்படித் தான் போயிருந்திருப்பேனாம்....பகவான் புண்ணியம் நீ மட்டும் பிழைச்சேன்னு பாட்டி சொல்லுவா. இந்த அதிர்ச்சியில் என் அப்பா துக்கம் தாளாமல் ஹார்ட் அட்டாக்கில் செத்துப் போய்ட்டார். என் அம்மாவுக்கு நான் மட்டும் தான் மிச்சம்..அம்மாவும் அந்த சோகத்திலிருந்து இன்னும் மீளாமல் எதிலும் பிடிப்பில்லாமல் இருக்காங்க . என்னைத் தான் உயிரா நினைச்சுண்டிருக்கா . கண்ணில் நீர்முத்தாக வந்த கண்ணீரை கைகுட்டையால் மெதுவாக ஒத்திக் கொண்டாள் . ரோஜாப்பூவில் பன்னீர்த்துளி ததும்பியது போலிருந்தாள் அவள்.

உன் மனதுக்குள் இத்தனை சோகமா.? கவலைப் படாதே எல்லாம் சரியாகும்...தைரியமா கல்யாணம் பண்ணிக்கோ..உனக்கு ஒண்ணும் ஆகாது என்று பைரவியின் அம்மா ஆறுதல் சொன்னாள் . பைரவியும் ஆதரவாக தன் அழகிய தோழி மாதவியைக் கட்டிக் கொண்டாள் .இந்த இறுக்கமான சூழ்நிலையில் இருந்து மெல்ல பேச்சு வேறு பக்கம் சென்றது. புதுப் படப் பாடல் பற்றியும் தனது அரங்கேற்றம் பற்றியும் இருவரும் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள் .பிறகு ரமேஷைப் பற்றியும் பேச்சு திசை திரும்பியது.

விடைபெறும் நேரம் வந்ததும்..."கண்டிப்பா அவரையும் அழைச்சுண்டு வா. எனது நடன நிகழ்ச்சிக்கு ..... ராணி சீதை மஹாலில் ....மறந்துடாதே... அடுத்த ஞாயிறு..... எதிர்பார்ப்பேன்.....கண்டிப்பா அந்தக் கலா ரசிகரையும் அழைச்சுண்டு வா...மறந்துடாதே..என்றதில் அந்த "அவரையும்" என்னும் போது அதில் ஜதி கூட சேர்த்தாள் மாதவி.


நிலைமை இப்படியிருக்க, பைரவி என்ன பேசுவாள் என்று கற்பனை செய்தவன்....காரை லாவகமாக ஜி.ஆர்.டி கிராண்ட் ஹை டைம் ஹோட்டலில் நுழைந்து காரைப் பார்க் செய்து லாக் செய்து விட்டு கைபேசியோடு நடந்து கொண்டே சரியாக பைரவி அமர்ந்திருக்கும் இருக்கைக்கு சென்று.......லேசாக ஃபோனால் தலையில் மென்மையாக ஒரு தட்டுத் தட்டி ரொம்ப நேரமாச்சா? சாரி...சாரி... ...தாம்பரத்துலேர்ந்து பறந்து வந்தேன்.....என்று மூச்சிரைப்பது போல நடித்தான்.

ஜஸ்ட் இப்பத் தான் வந்தேன். சீட்ஸ் ஃ போன்ல ரிசர்வ் பண்ணிருந்தேன். அதனால நோ ப்ராப்ளம்...என்றவள்...ஏதாவது லைட்டா ஆர்டர் பண்ணு பசிக்குது. என்றாள் ..

அவளிடம் கேட்காமலேயே அவளுக்குப் பிடித்ததெல்லாம் சொன்னான் ரமேஷ்.அவள் ஆச்சரியத்தை மனதுக்குள் வைத்துக் கொண்டு... ம்ம்ம்ஹும்.....நீ சொன்ன மெனுல ஒண்ணு கூட எனக்குப் பிடிக்காது தெரியுமா? என்று அவனிடம் பொய்யாகச் சொல்கிறாள்.

அட அப்படியா...அந்த மெனுல இருக்கும் ஒண்ணும் எனக்கும் பிடிக்காது, அது உனக்குத் தெரியுமா? என்று கண் சிமிட்டிய படியே பதில் சொல்கிறான் ரமேஷ்.

சரி...ஜோக் இருக்கட்டும்...கொஞ்சம் சீரியஸ் விஷயம். பேசலாமா ?.. இன்னும் இரண்டு மாசத்தில் லண்டன் போறோம்....அங்க ஒரு கலை நிகழ்ச்சி...இந்த வாட்டி போறதுக்கு பெயர் கொடுப்பதற்கு முன்னாடி உங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு உன் பெர்மிஷனோட போகணும்னு ஒரு அல்ப ஆசை....! போகட்டுமா...ஒரு வாரம்...ஆகும் திரும்பிவர...நீயும் வந்தாலும் வரலாம்...என்ன சொல்றே..உன் பெயரையும் சேர்த்துடவா என்று தலையைச் சாய்த்தபடியே அவனைப் பார்த்து ஆவலாகக் கேட்க. சீக்கிரம் சொல்லு..சாப்பிடுட்டு மதியம் மூணு மணிக்கு சூப்பர் சிங்கர் ஷூட்டிங் இருக்கு...போகணும்..வெளில டிரைவர் வெய்டிங் என்று பைரவி அவசரப் படுத்தினாள்.

பக்கத்து இருக்கையில் இருந்து இவர்களையே நோட்டம் விட்டுக் கொண்டிருந்தனர் வந்தவர்கள். சிலர் சிநேகமாகச் புன்னகைத்தனர். சில பெண்கள் இவளிடம் ஆடோகிராஃப் கேட்டு கை துடைக்கும் டிஸ்ஸு பேப்பரை கொண்டு வந்து நீட்டினார்கள். இவளும் சிரித்தபடியே இரண்டொரு வார்த்தை பேசிவிட்டு கையெழுத்துப் போட்டு விட்டு...சாதரணமா பாடகிகளுக்கு இந்த மாதிரி ரசிகர்கள் தொந்தரவு அதிகமா எங்கியும் இருக்காது...இப்போல்லாம் மீடியா இருப்பதால் தான் வெளியில் தெரிகிறது ...சரி நீ சொல்லு ரமேஷ்...பதில்...என்று கண்ணால் கேட்க.

இப்ப ஒரு ஸிச்சுவேஷன் சாங் பாடட்டுமா..."போகுதே...போகுதே...என் பைங்கிளி வானிலே....நானும் சேர்ந்து போகவும்...சிறகும் இல்லையே....உறவும் இல்லையே..."
என்று சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு....டேபிள் மீதிருந்த கிளாசில் இருந்து ஒரு சொட்டு தண்ணீரை கண்ணில் தொட்டு வைத்துக் கொண்டு தேம்புவது போல நடிக்கிறான்.

ரமேஷ்...போதும்....போதும்..நான் போறேன் லண்டனுக்கு......? வரமாட்டேன்னு சொல்ல முடியாது. இப்ப என் கேள்வி... நீயும் கூட வரியா? ன்னு கேட்கத்தான் வந்தேன்.

நீ தான் முடிவே பண்ணிட்டியே..என்றவன்...நிமிர்ந்து உட்கார்ந்தபடி..." வேண்டாம் பைரவி...வரலைன்னு சொல்லிடு....எங்கெல்லாம் உனக்குப் போகணும்னு தோணுதோ லிஸ்ட் கொடு...நாம தனியா போகலாம்...." கூட்டத்தோட வேண்டாம்...நான் வரலை. நீயும் இரேன்....போகாதே.....போகாதே என்று மாதவன் ஸ்டைலில் ராகம் பாட. ஆரம்பிக்கிறான்.

போகாதேன்னு சொல்லாதே ரமேஷ்...நீயும் கூட வர ட்ரை பண்ணேன் ப்ளீஸ்....என்கிறாள்.

பைரவி...நீ டிரைவரை அனுப்பிடு நான் உன்னை அங்கே ட்ராப் பண்றேன் என்று சொல்கிறான்.

வித விதமாக உணவுகள் உணர்வுகளைத் தூண்ட....ரசித்து சாப்பிட்டு விட்டு...இவனோடு காரில் தொத்திக் கொள்கிறாள் பைரவி.

அவளது கார் அவள் இல்லாத தனிமையில். சோர்வுடன் கிளம்புகிறது.... "தங்கமான பொண்ணு பைரவியம்மா ....இவரு எப்படிப் பட்டவருன்னேத் தெரியலை...கூட்டிக்கிட்டு சுத்துறாரு.....அடுத்த தடவை அம்மாக்கிட்ட சொல்லி வைக்கணும்....ஜாக்கிரதையா இருங்கம்மான்னு...இந்தம்மா வெளுத்த தெல்லாம் பாலுன்னு நம்பும்..பாடகி ..! எந்தப புத்துல எந்த பாம்போ..?

அவர்களின் கார் கடந்ததும்...புலம்பியபடியே டிரைவர் வேகம் பிடிக்கிறார்.

இது ரொம்ப அழகான கார்ல....ஐ லைக் திஸ்...! வெரி வெரி கம்ஃபர்டபில் கார்...என்றபடியே அதில் ஒலித்த பாடலை ரசித்தபடியே.....நீ எல்லாம் நான் பாடினதாத் தான் கேட்குறியா ? இந்தப் பாட்டு ரெகார்டிங் ஆகும்போது ஒரு ஜோக். நான் ஒரே ட்ராக்ல பாடிட்டு வந்துட்டேன். கோரஸ் க்ரூப்ல ஒரு பொண்ணுக்கு சோர் த்ரோட் ....பாவம்...ரெகார்டிங் ஆயிட்டிருக்கு.....அவ குரல் மட்டும் தனியா கேட்குது....எப்படி இருக்கும்..? என்று கல கல வெனச் சிரித்தாள்.

நீ இப்படிச் சிரிச்சுக்கிட்டே இருந்தால் ரொம்ப நல்லா இருக்கும்..என்று ரமேஷின் பதில் ஜொள்ஸ் ....அவள் அவனைப் பார்த்து பொய் கோபத்தில் முறைத்தாள் .

ஸ்டீரியோவை அணைத்தபடியே...ரமேஷ், நான் லண்டன் போறதுக்கு முன்னாடியே நாம கல்யாணம் பண்ணீடால் என்ன? எந்த "காசிப்"பும் இருக்காது. நீயா நம்ம கல்யாணப் பேச்சை எடுப்பேன்னு பார்த்தேன். அன்னிக்கு நீ வீட்டுக்கு வீணையோட வந்துட்டு போன பிறகு என் பேரெண்ட்ஸுக்கு விஷயம் தெரிஞ்சு போச்சு..என் அப்பா ஜாடையாகக் கேள்விகள் கேட்க ஆரம்பிச்சாச்சு......என்று நாணம் மிகுந்த கண்களோடு கூர்ந்து ரமேஷைப் பார்க்கிறாள் பைரவி.

சடன் பிரேக் போட்ட ரமேஷ்...." ஹேய் .....நீ என்ன சொல்றே....? என்னது...கல்யாணமா..? என்று பெரிய ஜோக்கைக் கேட்டவன் மாதிரி சிரிக்கிறான்...நீ எந்தக் காலத்தில் இருக்கே....பைரவி...கல்யாணம் எல்லாம் ரொம்ப ஓல்ட் ஃ பாஷன். நானே உன்கிட்ட இதைப் பத்தி கேட்கணும்னு இருந்தேன். கல்யாணம் பத்தி எல்லாம் நான் நினைப்ப தில்லை !

அடித்த ஷாக்கில் வெளிறிப் போயிருந்த பைரவிக்கு மீண்டும் ஷாக் கொடுப்பது போலிருந்தது அவனது கேள்வி..

"லிவிங் டுகெதர் " பத்தி நீ என்ன நினைக்கிறே? எனக்கு ஒ.கே...இன் ஃபாகட் நம்ம இண்டஸ்ட்ரியில் இது தான் சூப்பரா வொர்க் அவுட் ஆகும். ரெண்டு பேரோட வேலையும் எதனாளையும் கெடாது. எந்த ரிஸ்கும் இல்லை. ஏன்...? அவர் கூட....பேர்... டக்குன்னு நினைவுக்கு வரலை....யாரது...நீ சொல்லு...ன்னு யோசிக்கும் பாவனையோடு ரமேஷ் இவளைப் பார்த்துக் கொண்டே . காரை நிதானமாக ஒட்டினான்.

பைரவிக்கு திக்கென்றது. இதயத் துடிப்பு அதிகமானது. கோபத்தில் முகம் சிவந்தது. உள்ளுக்குள் எழுந்த உணர்வு வெறுப்பாக மாறி...சிறிது நேரத்திற்கு முன்னால் இருந்த சகஜம் மறைந்து பயம் வந்தது அவளுக்கு.

என்ன ரமேஷ்....? நீங்க சொல்றது....மத்தவங்களை விடுங்க.....யார் என்ன செய்தா எனக்கென்ன..? ஆனால் நீங்கள் சொல்வதைக் கேட்கும் போது நான் தான் அவசரப் பட்டுட்டேனோ என்று தோன்றுகிறது.இப்ப என் மூடையே நீ ஸ்பாயில் பண்ணிட்டே. என் குடும்பமோ...நானோ ...நீ நினைக்கறா மாதிரி இல்லை. தயவு செய்து என்னை மறந்து விடு. இங்கயே..இப்பவே என்னை இறக்கி விட்டுடு... ப்ளீஸ்.. நான் என் கார்ல என் வேலைக்கு போறேன்...ஸ்டாப் த கார். லெட் மீ கெட் அவுட் ஃ பர்ஸ்ட் . என்று காரின் கதவைத் திறப்பது போல செய்கை செய்கிறாள்....பைரவி. அவளின் ஏமாற்றம் அவளை சராசரி பெண்மணியாக்கியது.

ஹே.....ஹே.....வாட்ஸ் திஸ்....சும்மாக் கேட்டதுக்கே இத்தனை ஆர்ப்பாடம்மா? எனக்கும் உன் எண்ணம் தெரிஞ்சுக்கணும் இல்லையா? ஓகே...ஓகே....கீப் கூல் ...நானும் யோசிக்கறேன்....நீ சொன்னதை...நீயும் யோசி நான் சொன்னதை...சரியா? பைரவி..ஐ வான்ட் யு டு பி வித் மீ ஃபாரெவர் ...அண்டர்ஸ்டா ண் ட் மீ மை ஸ்வீட்டி..!
என்று கெஞ்சும் குரலில் குழைந்த போது பைரவி அமைதியானாள். ஆனாலும் அவள் உள்ளத்தில் ஒரு விரிசல் லேசாக இடம் விட்டு நகர்ந்தது .


அடுத்து சில நொடிகளின் அமைதியைத் தாளாத பைரவி...டக்கென்று காரின் ஸ்டீரியோவை ஆன் செய்தாள் .. அதில் அவள் மிகவும் விரும்பும் குரலில் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.

"தேரில் ஏறும் முன்னமே... தேவன் உள்ளம் தெரிந்தது....
நல்ல வேலை திருவுள்ளம்... நடக்க வில்லைத் திருமணம்...
நன்றி...நன்றி...தேவா..... உன்னை மறக்க முடியுமா?
கலைந்திடும் கனவுகள்... கண்ணீர் சிந்தும் நினைவுகள்....
வசந்த காலக் கோலங்கள்........"


இந்த வரியோடு பைரவி இறங்க வேண்டிய இடத்தில் அவளை இறக்கி விட்டுச் சென்றான் ரமேஷ். நடந்தவளுக்கு மனசெல்லாம் அதே வரிகள் ஒலித்துக் கொண்டிருந்தது..


ஏழு நாட்கள் இருவரும் கைபேசியில் மாறி மாறிப் பேசிப் பேசி கழிந்து விட்ட நிலையில் மாதவியின் நடன நிகழ்ச்சிக்கு ரமேஷும் பைரவியும் சேர்ந்து சென்று முதல் வி.ஐ.பி வரிசையில் உட்காரவும்...நிகழ்ச்சி ஆரம்பமாகவும் சரியாக இருந்தது.தன

ரமேஷுக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை. .ரம்பா..ஊர்வசி. மேனகை என்று கேள்விப்பட்டிருக்கிறான்....இது வரை கண்டிராத பேரழகுப் பதுமையாக மேடையில் ஆடிக்கொண்டிருந்தாள்.அவள் அழகில் , நிறத்தில், கவர்ச்சியில் பைரவியை ஓரங்கட்டி விட்டது போலிருந்தது ரமேஷுக்கு. மாதவியைப் பார்த்ததும் திடீரென்று அவன் மனத்தின் வக்கிரம் விழித்துக் கொண்டது. பைரவிக்குத் தெரியாமலாவது மாதவியோடு உடனே பழக வேண்டும் என்ற ஆவலில் ஆசைமனம் திட்டம் தீட்டியது..வைத்த கண்ணை எடுக்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்த ரமேஷ்..பைரவி...உன் ஃ ப்ரெண்டுக்கு நல்ல ஃப்யூச்சர் இருக்கு.. பாரேன்.எவ்ளோ நளினம், எவ்ளோ நளினம்..என்ன ஒரு அசத்தலான முக பாவம்... மஞ்சு பார்கவி, பானுப் ப்ரியா, ஷோபனா இவங்க ரேஞ்சுக்கு ஆடறாங்க பாரேன்....ஐ லைக், ஐ..லைக்...ஹெர் டான்ஸ்.நானே நிறைய சான்ஸ் வாங்கித் தரேன். என்று சொன்னதும் பைரவி மகிழ்ந்தாள்.

மேடையில் மாதவி அபிநயத்தோடு ஆடிக் கொண்டே இவர்களையும் ஒரு மின்னல் வெட்டும் பார்வை பார்க்கிறாள்.

மானின் இனம் கொடுத்த விழியாட - அந்த
விழி வழி ஆசைகள் வழிந்தோட - நல்ல
மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் - வண்ண
மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
காதல் மழை பொழியும் கார்முகிலாய் - இவள்
காதலன் நானிருக்கப் பேரெழிலாய் - இங்கே
மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் -

அந்தப் பார்வைக் கணையில் ரமேஷ் தன்னை மறந்தான். அவளழகில் மயங்கிக் கொண்டிருந்தான்.

"மான் கண்டேன் மான் கண்டேன்...மானே தான் நான் கண்டேன்...நான் பெண்ணைக் காணேன்" என்று அவனது ஆன்மா பாட ஆரம்பித்தது.

என் கண்ணேப் பட்டுவிடும் போலிருக்கு.அவளுக்கு இந்த நிகழ்ச்சியில ஒரு தீவிர ரசிகன் கிடைச்சுட்டான்ன்னு அவங்ககிட்ட நீ சொல்லு. என்று ரமேஷ் சிரித்தான்.
ரமேஷ் வானில் பைரவி சிறிது சிறிதாய் பிறை நிலவாய் மறைந்து கொண்டு வந்தாள். மாதவி முழு நிலவாய் அடுத்தடுத்து நிறைவாகி வந்தாள்.

சொன்னா..அவ ரொம்ப சந்தோஷப் படுவாள்.....என்று மேலாக சொன்னாலும்....பைரவியின் உள் மனசு " அவ உனக்கெல்லாம் சிக்க மாட்டா.." என்று முணுமுணுத்தது.

அரங்கம் விட்டு வெளிவந்து வீடு சென்று இரவு படுக்கையில் படுத்த பின்பும் ரமேஷுக்கு அந்த நடனத்தின் தாக்கம் இருந்தது மெல்ல மெல்ல மாதவி ரமேஷின் இதய மேடையில் சலங்கை கட்டி ஜல்ஜல்லென ஆடிக் கொண்டிருந்தாள். ரமேஷ் உறக்கம் வராமல் படுக்கையில் புரண்டு தவித்துக் கொண்டிருந்தான். பைரவி தான் சொன்னதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஒருவேளை மாதவி என்னை ஏற்றுக் கொள்வாளா? இந்த விஷயம் பைரவிக்குத் தெரியாமல் தான் கேட்டுப் பார்க்கணும். மாதவி இல்லாத வாழ்வை என்னால் இனி நினைத்துப் பார்க்க முடியாது. ஆனால்..பைரவி...? என்று மனசாட்சி எதிர் கேள்வி கேட்டது.

"அவளையும் பார்க்கிங் லாட்டில் வைத்துக்கொள்வேன்,"...என்று சொல்லிக் கொண்ட ரமேஷ் கண்களை மூடி தலையணைக்குள் முகம் புதைத்து கனவுலகில் நுழைந்தான். அங்கும் மாதவி தான் ஜலங்கையோடு நடனமிட்டாள்.

"வந்ததுவும் போனதுவும் இமைப் பொழுதானாலும்
மனமிங்கு களவானதே....கைதொழு நவநீதன்...."
இதயமேடையில் நளினமாக ஆடிக் கொண்டிருந்தாள்.

இரவு மெல்ல மெல்ல விடியலை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.


ஒரு வாரம் கழித்து மாதவியின் நாட்டிய நிகழ்ச்சிக்கு ரமேஷுடன் சேர்ந்து சென்று திரும்பிய பைரவி அவனிடம் வெளியில் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாலும் மனசுக்குள் " கல்யாணத்தைப் பற்றிச் சொன்னேனே எந்த முடிவு எடுத்திருப்பானோ...தெரியலையே...நான் சொன்னதை மறந்து விட்டவன் போல ..ஒன்றுமே சொல்லாமல் கல்லூளி மங்கன் மாதிரி இருக்கறதப் பாரேன்..." அப்ப அவன் நினைக்கும்படி தான் நடக்கணும்னு நினைக்கிறான் போல....இருக்கட்டும்....இருக்கட்டும்..ரமேஷ்...நீ நினைப்பது எந்தக் காலத்திலும் நடக்காது. நானாவது உன் இழுத்த இழுப்புக்கு"லிவிங் டுகெதர்ன்னு" வருவதாவது... அதுக்குப் பேசாம "துஷ்டனைக் கண்டால் தூர விலகுன்னு" விலகி விடுவதே மேல்...நான் பாட்டுக்கு நானுண்டு என் வேலையுண்டுன்னு இருந்தேன்...குளத்தில் கல்லெறிந்து கலக்கியது போல என் மனம் இப்போ கலங்கிப் போயிருக்கு.

எத்தனையோ படங்களுக்கு காதல் பாட்டை இரட்டை முறையாகப் பாடறேன்.... ஒரே படத்தில் ஒரே பாடலை இன்பத்துக்கும், துன்பத்துக்கும் மாற்றிப் பாடறேன்..ரமேஷ் என்னைக் கல்யாணம் செய்துக்க மறுத்தால் ஒருவேளை என் மனசும் சோக கீதம் பாடும் .நல்லவேளையா என் மனசின் ரகசியம் வெளியில் இன்னும் யாருக்கும் தெரியலை மாதவிக்குக் கூடத் தெரியாதது நல்லதா போச்சு. இப்ப நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து போனதே மாதவி தன நிகழ்ச்சியைப் பார்க்க ரமேஷ் வரணும்னு ரொம்பக் கேட்டதால் தானே. அவளுக்கு நேரம் வரும்போது சொன்னால் போகிறது. அவள் மனத்திலே இருக்கும் ரணம் ஆறணும் .

இத்தனை வருஷப் பழக்கத்தில் இந்த முறைதான் மனசு விட்டுப் பேசியிருக்காள் . அவளுக்கும் நல்ல இடத்தில் கல்யாணம் நடக்கணும். நினைத்ததும் நினைவுக்கு வந்தவர் முரளிதரன். இளையராஜா சார் க்ரூப்ல வயலின் வாசிக்கும் அவர் தான் மாதவிக்கு பொருத்தமாயிருப்பார் என்று தோன்றியது பைரவிக்கு .


ஒரு தடவை டைரக்டர் விளையாட்டாக ஆதித்யனை அழைத்து உங்க பாட்டுக்கு சோலோவா அவ்வளவு அழகா வயலினாலயே அழுதது இவர் தான் மேடம்...என்று அறிமுகப் படுத்தியவர் அப்படியே கால்கட்டுக்குத் தப்பிச்சுண்டு இருக்கான்...யாருகிட்ட மாட்டப் போறாரோ..? .என்று சொன்னதும்..முகமெல்லாம் வெட்கத்தோடு வணக்கம் சொன்ன கம்பீரம் பிடித்திருந்தது பைரவிக்கு. அதன் பின்பு அவரைச் சந்திக்கும் வாய்ப்பும் கிடைக்கவில்லை.

படுக்கையில் படுத்துக் கொண்டிருந்தாலும் மனசெல்லாம் அலை அலையாய் எண்ணங்கள் வந்து மோதிக் கொண்டிருந்தது...உறக்கத்தைத் தவிர.


"பைரவி, பைரவி ...அதுக்குள்ளேத் தூங்கியாச்சா? கையில் பாலோடு வந்த அம்மா....இந்தாச் சூடாப் பால் சாப்பிடு, மாதவி நன்னா ஆடினாளா? எங்களுக்குத் தான் வர முடியாமல் போச்சு....ஆனால் நல்லவேளை..நாங்க வீட்டில் இருந்தோம்..நான் போனில் சொன்னேனே, நாளை பர்ஸ்ட் ஃப்ளைட்டில் நீ மும்பை கிளம்பணும்னு . சாம்பசிவம்.வந்து டிக்கெட் கொடுத்துட்டு போனார், உன் . கூட விஜய் ஜேசுதாஸ் ஏர்போர்ட்ல ஜாயின் பண்ணிப்பாராம்.இன்னொருத்தரும் வராராம். ஏதோ ஒரு ஹிந்திப் படமாமே..."வாரிஸோ ....பாரிஸோ ...என்னதது....?

வாரிஸ் ......வாரிசுன்னு அர்த்தம்.

ஓ ....அனுராதா பௌட்வால் தான் உன்னை ரெக்கமண்ட் செய்தாராம். நாளைக்கு கார்த்தால ரெகார்டிங்காம்....அவங்க பிக்கப் பண்ணிப்பாங்க....உன் மேஜை மேலே கவர் வெச்சேன்...பார்த்து எடுத்துக்கோ பத்திரம். கார்த்தால டிரைவர் ரத்தினத்தை மூணு மணிக்கே வரச் சொல்லியிருக்கேன். நீயும் சீக்கிரமாத் தூங்கு..நான் அலாரம் வெச்சுடறேன்....அடிச்சதும் எழுப்பறேன். முடிஞ்சா இப்பவே டிரஸ் எல்லாம் எடுத்து வெச்சுக்கோ...ரெண்டு நாட்கள் தானாம்.


பைரவிக்கு அம்மாதான் பர்சனல் செக்கரட்டரி. இதே இசையமைப்பாளர் ஏ .ஆர்.ரகுமான் இசையில் பாடணும்னா நட்ட நாடு ராத்திரி தான் போகணும்....விடியற்காலை திரும்பணும் .அதுவரை அம்மாவும் முழிச்சுண்டு இருப்பாள். இந்தக் கலைத்துறைக்கு நேரம் காலமே கிடையாதே.


சூரியன் எழுந்திருக்கும் முன்னமே எழுந்து பர பரப்பாகக் கிளம்பிக் கொண்டிருந்தாள் பைரவி..


மனதுக்குள் ரமேஷிடம் இந்த முறை சொல்லவே இல்லையே...என்று உணர்வு மேலோங்கி நின்றதும்....நேற்று நாட்டியக் கலையரங்கில் அம்மாவின் ஃபோன் வந்து விஷயம் தெரிந்ததும்.....சொல்வதற்காக ரமேஷைப் பார்த்ததும்...அவன் தனை மறந்து மாதவியை கண் இமைக்காமல் பார்த்து விழுங்கிக் கொண்டு இருந்ததும்..தனக்குள் எழுந்த கோபத்தில், பார்வையே சரியில்லையே என்ன வேண்டியிருக்கு....ஆள முழுங்கற பார்வை.....சொல்லாட்டாலும் தப்பில்லை...என்ற எண்ணத்தில் சொல்லாமல் கிளம்பினாள் .


நாட்டிய அரங்கத்தை விட்டுக் கிளம்பியதும் கூட ரமேஷ் தன நிலையில் இல்லை...ஏதோ மயக்கத்தில் இருந்தது போலிருந்தது பைரவிக்கு. சரியாகப் பேசாமலே காரை ஒட்டிக் கொண்டு வந்து "கடனே" என்று விட்டுவிட்டுப் போனது புரிந்தது அவளுக்கு.


சரி, அதனால் என்ன..? இந்த முறை மும்பை தானே ..? சொல்லாமல் போகலாம்...என்னாகிறதுன்னு பார்க்கலாம்.அவசரமாக் கிளம்பினேன்னு கேக்கும்போது சொல்லிக்கலாம்...மனதை சாமாதானப் படுத்திக் கொண்டாள் பைரவி.

டிக்கெட் கவரை பார்த்து எடுத்துண்டியா? அம்மா நினைவு படுத்தினாள் .

விஜய் ஜேசுதாசும் ரொம்ப தங்கமான மனுஷர். அவரோட சேர்ந்து போவது சந்தோஷமாத் தான் இருக்கு.என்று மகிழ்ச்சியில் சொன்னவள் . அம்மா... மாதவி ஃபோன் செய்தால் சொல்லிடு. அங்க நான் ரெகார்டிங்ல இருக்கும்போது ஃபோன் எடுக்க முடியாது. நான் முடிச்சதும் உங்களுக்கு கால் பண்றேன்..என்று கிளம்புகிறாள். காரில் அவளது சூட்கேஸை எடுத்து டிக்கியில் வைத்துக் சார்த்திய டிரைவர்.... கார் கதவைத் திறந்து வைத்துக் காத்திருக்க, பைரவி காருக்குள் ஏறிக்கொண்டதும் கார் மீனம்பாக்கம் விமான நிலையத்தை நோக்கிப் பறந்தது .
கண்களை மூடிக் கொண்டு சீட்டின் பின்னால் சாய்ந்து கொள்கிறாள் பைரவி.
பின்னால் குழலிசையோடு ....வீணையும்.....சேர...சுசீலாம்மா பாடவும்....

"கலை வாணி நின் கருணை தேன்மழையே...
விளை யாடும் என்நாவில் செந்தமிழே...
அலங்கார தேவதையே வனிதா மணி...
இசையாவும் தந் தருள்வாய் கலை மாமணி.."


இந்தப் பாடலைத் தான் பைரவி காலை எழுந்ததும் கேட்பாள்...இதை நன்கு அறிந்தவர் இரத்தினம் .

அம்மா அமைதியா பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கும் போது தொல்லை பண்ணக் கூடாது...பாட்டு முடியட்டும் மெல்லப் பேச்சை ஆரம்பித்துச் சொல்லி விடலாம்.என்று காத்துக் கொண்டிருந்த ரத்தினம்....இந்த நேரத்தை விட்டால் தன்னால் சொல்ல இயலாமல் போய்விடும் என்று....


"அம்மா... ஒரு விஷயம் சொல்லணும்.உங்ககிட்ட....என்று தயக்கத்துடன் ஆரம்பிக்கிறார் லேசாகத் திரும்பிப் பார்த்தபடியே.

சொல்லுங்க ரத்தினம்...என்ன விஷயம்...? ஏதாவது பண உதவி தேவையா ..? நான் வர ரெண்டு நாளாகும் ...அம்மாகிட்ட கேட்டு வாங்கிக்கங்க என்கிறாள் பைரவி.

அதெல்லாம் இல்லீங்கம்மா....அந்த "வானவில் தொலைக்காட்சி " ரமேஷ் சார் கூட நீங்க நாட்டிய அரங்கேற்றத்துக்கு போனதை வெச்சு அரசு புரசலா ஒரு மாதிரி நேத்து பேச்சு வார்த்தை நடக்குதும்மா...என் காதுல விழுந்துச்சு.. அதான் உங்க கிட்ட சொல்லணும்னு நினைச்சேன். என்னடா இவன் இதைச் சொல்றானேன்னு தப்பா நினைச்சுக்கிடாதீங்க.

ஓ ...அப்படியா .சரி...அதை நான் பார்த்துக்கறேன்...! என்று சொல்லிவிட்டு எவ்வளவு பிரபலமானால் என்ன...? இந்த கிசு கிசுலேர்ந்து யாரும் தப்ப முடியாது போல..அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது..கூடவே ரமேஷ் கேட்டதும் நினைவுக்கு வந்து...அவளுக்கு எரிச்சலை உண்டு பண்ணியது. அவனிடமிருந்து மெல்ல மெல்ல விலகியாகணும் ...இந்த பாம்பே பிரயாணம் கூட ஒரு விதத்தில் கொஞ்சம் மனசுக்கு மாறுதலா ஆறுதலா இருக்கும் என உணர்ந்தவள்.....ரமேஷ் நல்லவன் தான்..கண்ணியமானவன் தான்..ஆனால் வெளிநாட்டில் படித்ததாலோ என்னவோ திருமணத்தைப் பற்றிய சரியான புரிதல் இல்லாமலிருக்கிறான். முதலில் அதை அவனுக்கு உணர்த்த வேண்டும்...என்றெல்லாம் யோசித்துக் கொண்டே பறந்து சென்றாள்.

அருகில் அமர்ந்திருந்த விஜய் ஜேசுதாஸ் கூட...."என்ன மேடம் உடம்பு சரியில்லையா...? வாய்ஸ் ஒகே தானே....எனி ப்ராப்ளம் என்று கேட்டார். நம்ம கூட வயலினிஸ்ட் ஆதித்யனும் வந்திருக்கார்......தெரியுமா உங்களுக்கு...? என்று கேட்டதும்...பைரவிக்கு மனசுக்குள் ஒரு சந்தோஷம் எட்டிப் பார்த்தது.

ஓ ...அப்படியா...ஐம் ஆல்ரைட் என்று வாய் முணு முணுத்தாலும் மனது மட்டும் ரமேஷிடம் சென்றுவிட்டு வந்தது...ஜன்னல் வழியாக வெளியே பார்க்கிறாள்...பஞ்சுப் பொதியாக...ஏதோ சினிமாவில் தேவலோகக் காட்சிக்கு செட்டிங் போட்டது போல....மேகப் பொதிகள்..மிதந்து கொண்டிருப்பதைப் பார்த்தும்.. வழக்கம் போல தன்னை மறந்து மனது பாடியது..

வெண் பஞ்சு மேகங்கள்
உன் பிஞ்சுப் பாதங்கள்...
மண் தொட்டதால் இங்கே
செவ்வானம் போலாச்சே
விண் சொர்க்கமே பொய்...பொய்...
என் சொர்க்கம் நீ பெண்ணே...
சூடிய பூச்சரம் வானவில் தானோ...ஓ ...

எத்தனை இனிமையான பாடல்...இந்தக் காலத்தில் ஏன் இப்படி ஒரு இனிமையான பாட்டு தனக்குக் கிடைப்பதில்லை...ஜானகியம்மா கொடுத்து வெச்சவங்க...யோசித்துக் கொண்டே பிரேக் ஃ பாஸ்ட் சாப்பிடலாமா வேண்டாமா என்று கையில் சாண்ட்விச்சை எடுப்பதற்குள் மும்பை வந்து விட்ட அறிவிப்பும் வந்து விட்டது..

மும்பையில் தரையிறங்கி செக் அவுட் ஆகி...."ஃ ப்ளாக் கார்ட்" பார்த்து காரில் ஏறி அமர்ந்ததும்...அதற்காகவே காத்திருந்தவன் போல ரமேஷின் அழைப்பு அவளைத் தொடர்ந்தது.

விஷயத்தை சுருக்கமாகச் சொல்லிவிட்டு கைபேசியை அணைத்தவள் அருகில் இருந்த விஜயைப் பார்த்து ஒரு புன்சிரிப்புடன் திரும்புகிறாள்.. அடுத்த நொடி விஜய்க்கும் அவரது கைபேசி மணி....

"அம்மாவென் றழைக்காத உயிரில்லையே...
அம்மாவை வணங்காது உயர்வில்லையே...
நேரில் நின்று பேசும் தெய்வம்...
பெற்ற தாயன்றி ......."
அவரது அப்பாவின் குரலில் அழைக்கிறது. புன்னகைத்தபடியே மெலிதான குரலில் இவளுக்குக்கேட்டுவிடாத படி பேசுகிறார்.
மனைவியாய் இருக்கும் என்று பைரவி நினைத்துக் கொள்கிறாள்.


முன்சீட்டில் அமர்ந்திருந்த ஆதித்யன் அமைதியாக வந்து கொண்டிருந்தார். ஏதாவது பேசலாமா என்று நினைத்து இவளும் வாயை மூடிக் கொண்டாள் . சரியான அழுத்தக் காரர் போல..வாயைத் திறந்தாள் முத்து உதிர்ந்திடுமோ...இவரோட நமக்கு என்ன பேச்சு.? சமாதானம் அடைந்து கொண்டாள் .


பைரவி ஊரில் இல்லாத இந்த நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள நினைத்தான் ரமேஷ். மாதவியை எப்படி சந்திக்கலாம் என்ற யோசைனையில் இருந்த ரமேஷுக்கு பழம் நழுவிப் பாலில் விழுந்து போல மாதவியே ஃபோன் செய்தாள் .

நான் மாதவி...பேசறேன்.. என்னோட நாட்டிய நிகழ்ச்சிக்கு நான் பைரவி கிட்ட சொன்னதை மதித்து நீங்களும் பைரவி கூட வந்தது பற்றி எனக்கு ரொம்ப சந்தோஷம்.. அதுக்கு தேங்க்ஸ் சொல்லத் தான் ஃபோன் செய்கிறேன் என்றும் சொன்னாள் .

அடடா,....நானே உங்களை ஃ போன் செய்து பாராட்டணும்னு நினைச்சேன் ....அதுக்குள்ளே ஆச்சரியமா உங்க கிட்டேர்ந்து ஃ போன் வரும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. இது எனக்கு இன்ப அதிர்ச்சி. மாதவி நீங்க மயில் மாதிரி நளினமா நாட்டியம் ஆடினீங்க...நாள் பூரா பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல இருந்துச்சு.. உங்களுக்கு விளம்பரத்தில் ஆவல் இருந்தால் சொல்லுங்கோ...என் வானவில் தொலைக் காட்சி காத்திருக்கு...மறந்துடாதீங்க....என்று அவளுக்கு வலை விரித்தான்.

மாதவி அவனது சகஜமான பேச்சில் மனதுக்குள் " பைரவி ரொம்பக் கொடுத்து வைத்தவள்.." நல்ல நண்பன் கணவனாகக் கிடைக்கக் கொடுத்து வைத்திருக்கனணும்..அவளுக்கு ஏற்றவர் தான் இந்த ரமேஷ்..என்று மனதில் நினைத்துக் கொள்கிறாள். கண்டிப்பாக பைரவி மும்பையிலிருந்து வந்ததும் உங்களை வந்து சந்திக்கிறேன் என்று சொல்லி விட்டு ஃபோனை கட் செய்தாள் .

அவள் ஃபோனை வைத்து விட்டாலும்..ரமேஷ் அந்த மொபைலைப் பார்த்தபடியே... அமர்ந்திருந்தான் . மாதவியிடம் தன்னைப் பற்றி என்ன சொல்லியிருப்பாள் பைரவி என்று தெரியவில்லையே. அவன் தலைக்குள் கேள்விகள் அரித்தது.


மனதில் குழப்பம் இருந்தாலும், மாதவிக்கு ஃபோன் செய்து பார்க்கலாம்... என்ற எண்ணத்தில் நம்பரைத் தட்டியதும்...

ஹலோ....மாதவி ஹியர்....இன்னிசையாய் குரல் கேட்க..

ஹை..மாதவி நான் ரமேஷ் பேசறேன்....இப்ப நீங்க...நீ...நீ...ப்ரீயா..இருக்கீங்களா...?

குட் மார்னிங்...இல்லையே...எனக்கு இன்னைக்கு ஒரு கான்செர்ட் இருக்கு....ஏன் ?. ஏதாவது சொல்லணுமா?

எஸ்....உங்களுக்கு ஆட்சேபனை இல்லைன்னா...ஒரு தடவ என் ஆபீசுக்கு வர முடியுமா?

எங்கே...வானவில்லுக்கா...?சாரிங்க. இன்னைக்கு முடியாது...நாளைக்கு ஃபோன் பண்ணிச் சொல்றேனே. என்கிறாள் குரலில் குதூகலத்தை கேட்கத் தவறவில்லை ரமேஷ்.
எஸ்....எஸ்...ஐம் வெய்டிங்.....!
ஃபோனை வைத்ததும் "யார்கிட்டயிருந்து மாதவி இந்தக் கால்...? அம்மா கேட்கிறாள்.

மிஸ்டர்.ரமேஷ்.நம்ம பைரவியோட ஃ பிரெண்ட்.....லாஸ்ட் வீக் என் நிகழ்ச்சிக்கு வந்தார். ஐ திங்க்...அனேகமா பிறவியைக் கல்யாணம் பண்ணிப்பார்னு.....வானவில் டிவி ஓனர் . சுருக்கமாகச் சொல்லி நிறுத்திய மாதவியைப் பார்த்து வருத்தமுடன்..
நீயும் கல்யாணம் பண்ணிக்கோன்னா பிடிவாதம் பிடிக்கறே ..எத்தனை நல்ல நல்ல வரனெல்லாம் போச்சு...உன் பிடிவாதத்தால. 

அம்மா..ப்ளீஸ்..என் மூடை கெடுக்காதே...இத விட்டுட்டு என்ன வேணாப் பேசு. நான் இப்படி இருக்கும்போது தான் தைரியமா இருக்கேன். நான் உண்டு என் டான்ஸ் உண்டுன்னு.நான் கத்துண்ட இந்த பரதம் அந்தக் கல்யாணத்தை விட மிகவும் புனிதமானது. என்னால் இதை இந்த ஜென்மத்தில் விட முடியாது.

உன்னைத் திருத்தவே முடியாது...என் கவலையே எனக்குத் தீரலை....அம்மா சலித்துக் கொள்கிறாள்.

ட்ரை பண்ணாதேம்மா விட்டுடு..என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டு கிளம்புகிறாள்.

ஒரு நாள் போவது ஒரு உகம் போவது போலிருந்தது ரமேஷுக்கு. மாதவி வரவேண்டும்...என்று ஜபம் செய்து கொண்டிருந்தான் மனதுக்குள்.

அடுத்தநாள் சொன்னபடியே மாதவியும்...ஃபோன் செய்து இன்று வரேன்... ஷ்யூர்....வரேன்...என்றவள் அடுத்த கட்ட அலங்காரத்திற்கு தயாராகிறாள்.

புடவையை கட்டிக் கொண்டு அழகு பார்த்தவள்......ச்சே...இது சரிப்பட்டு வராது...என்று சூடிதாருக்கு மாறினாள் .

மாதவியின் i20காரில் அவள் ஏறியதும் அவளது பிடிக்கு அடங்காமல் வேகம் பிடித்தது. எப்பவோ பார்த்த ஞாபகம் இந்த வானவில் டிவி ஆஃபீஸை என்று நினைவு படுத்திக் கொண்டே பொறுமையில்லாமல் சந்துகளில் புகுந்து ஒரு வழியாக மந்தவெளி வந்து அங்கிருந்து இரண்டு வீதிகள் கடந்து ஒருவழியா வந்தாச்சு....என்று காரை பார்க் செய்து விட்டு உள்ளே நுழைகிறாள்.

இவளுக்காகவே காத்திருந்தவன் ரிசெப்ஷன் அழகுப் பெண்ணிடம் ஏதோ சொல்லியபடி "இதோ அவங்களே வந்துட்டாங்க" என்றபடி...
வாவ்...வாங்க வாங்க மாதவி....ப்ளீஸ் கெட் இன்....பை த பை...யு லுக் ஸோ....கார்ஜியஸ்...! என்றவன் மெல்லிய சீட்டியடித்தபடியே தன அறைக்குள் செல்கிறான் ரமேஷ்.


அவனைப் பின் தொடர்ந்தவளாக கண்களை அங்கும் இங்கும் ஓட விட்ட மாதவி ....பார்த்த இடமெல்லாம் அழகான பெண்கள் வேலையில் மும்முரமாக இருந்ததையும் கவனித்தாள் .


உள்ளே நுழைந்ததும் ஜில்லென்று குளிர்...மெல்லிய சந்தன வாசனை....ஒரு சுவர் முழுக்க பெரிய வானவில்லின் வண்ண ஓவியம் ...பளீரென்று கண்ணைப் பறிக்க, ஒரு கண்ணாடி பீரோ நிறைய கேடயங்கள், பரிசுகள் என்று அழகாக அடுக்கி வைக்கப் பட்டு இருந்தது. சுவரில் தொங்கிய எல்.இ .டி மெல்லிய குரலில் வானவில்லை விளம்பரப் படுத்திக் கொண்டிருந்தது.

வீணையோடு சரஸ்வதி சிலையும், நடராஜர் சிலையும், தாமரைப் பூவில் அமர்ந்த லக்ஷ்மி சிலையும் தெய்வீகத்தை மணக்க மணக்க சொல்லிக் கொண்டிருந்தது.

முகத்தில் இழையோடிய புன்சிரிப்புடன் யு ஆர் கிரேட்...வெரி நைஸ் டு பீ ஹியர் ...என்கிறாள் மாதவி.

ரமேஷ்...." என்ன சாபட்றீங்க.." கேட்குமுன்னே கைபேசி மணி அடித்தது... அதில் பேசிக் கொண்டிருக்கும் போதே இன்னொரு கைபேசி அழைத்தது.... அதைத் தொடர்ந்து இண்டர்காம்......என்று அவன் ஒரு அஷ்டாவதானியான காட்சியை ரசித்துக் கொண்டிருந்தாள் மாதவி.

அவளது கண்கள் நடராஜர் சிலையைப் பார்த்துக் கொண்டே கால்கள் தாளம் போட ஆரம்பித்தன..மனமோ...

"சபாபதிக்கு வேறு தெய்வம்...சமான மாகுமா.... தில்லை...."
கிருபா நிதி இவரைப் போல கிடைக்குமோ"

என்று பாடிக்கொண்டிருக்க.... ."கூல் ட்ரிங்க்ஸ்" என்ற ரமேஷின் குரல் பூமிக்கு இழுத்து வந்தது மாதவியை..

நோ...தேங்க்ஸ்...என்ன விஷயமா கூப்பிட்டேள்?....உங்களைச் சொல்ல விடாமல் ஃபோன் கால்ஸ்...என்று புன்னகைத்தாள் .

ஹோ....ஐ ஆம் சாரி....! மார்னிங் கொஞ்சம் இப்படித்தான்....என்ற ரமேஷ்...கொஞ்சம் முக்கியமான விஷயம் பேசும் தொனியில் தொண்டையைச் செறுமியபடியே "தில்லானா... தில்லானா ..." ன்னு ஒரு ப்ரோக்ராம் எவெரி சண்டே காலையில் பத்து மணிக்கு நம்ம தொலைக் காட்சியில் அடுத்த வாரத்தில் இருந்து வரப் போறது....அதுக்கு நீங்க ஜட்ஜா வரணும்....அதைச் சொல்லத் தான் கூப்பிட்டேன். ஸ்பான்சர் ப்ரோக்ராம் இது..யாரு தெரியுமா? என்று சொல்லி நிறுத்தினான்

ம்ம்...நோ கெஸ்......நீங்களே சொல்லுங்கோ...என்றாள் மாதவி...மனசுக்குள் தேடல் படலத்தோடு...யாராயிருக்கும்?

ஏ வி ஆர் தங்க மாளிகை.....இப்போ ப்ராண்ட் அம்பாசடர் காஜல் அகர்வால்ன்னு நினைக்கறேன்..கொஞ்சம் பொறுங்கோ..அடுத்து மாதவி தான்....! அதுக்கு நான் காரண்டி...என்று சிரிக்கிறான்.

சொன்னதும் உட்கார்ந்திருந்த மாதவிக்கு இறக்கை முளைக்கிறது.....கடலும் வானமும் மலையும் , மழையும் ஒன்றாகக் காட்சி தர தான் இருப்பது எங்கே என்று புரியாத சந்தோஷ மயக்கத்தில் பறக்கிறாள். அவளுக்குள் நான் பைரவியின் தோழி என்ற ஒரே காரணத்துக்காக ரமேஷ் எவ்வளவெல்லாம் செய்கிறார். பைரவி நீ கொடுத்து வெச்சவள்டீ என்று யோசித்தபடியே...இந்த விஷயம் பைரவிக்குத் தெரியுமா?

என்ன...நம்ப முடியலையா? இல்லை கனவா....? என்று கனவைக் கலைத்த ரமேஷ்....உங்களுக்கு சம்மதமாயிருந்தால் ஒரு அக்ரீமெண்ட் போடணும்...இதெல்லாம் பார்மாலிட்டி தான்...உனக்கு...உங்களுக்கு என்று நிறுத்தவும்.


பரவால்ல ...பரவால்ல .... நீங்க என்னை வா...போ என்றே அழைக்கலாம்...என்று பத்துப் படி தாவி இறங்கி வந்தாள் மாதவி.

மீனுக்குப் போட்ட தூண்டிலில் மான் சிக்கிக் கொண்டதை எண்ணி மகிழ்வோடு சிரித்தான் ரமேஷ். இந்த வானவில்லில் பூட்டிய அம்பில்
நான் வெச்ச குறிக்கு தப்பாத மானே இல்லை. மாதவி என்னமோ ரொம்ப ஸ்பெஷலா நினைச்சேன்....ஒரே ப்ரோக்ராம்மில் சிக்கிகிட்டா.
ஆனால்...எனக்கு மாதவி ரொம்ப ஸ்பெஷல் தான். மனசுக்குள் நினைத்த படியே அவளையே பார்க்கிறான்.

அப்போது மாதவியின் கைப்பையிலிருந்த கைபேசி அழைத்தது....ஒன் செகண்ட் என்று ரமேஷிடம் மன்னிப்புக் கேட்கும் தொனியில்
சொல்லியபடியே கைபேசியை கையில் எடுத்து யாரென்று பார்க்கிறாள்...."பைரவி...காலிங்...." என்று மின்னிக் கொண்டிருந்தது.

எடுப்பதா...? வேண்டாமா ? என்று யோசனை செய்தாள் மாதவி. 



என்ன தயக்கம் மாதவி?…ஃபோன் எடுத்துப் பேசுங்கள்…..எனிதிங் பர்சனல்..? நான் வேணா..வெளிய இருக்கட்டுமா..?..என்று சீட்டிலிருந்து எழுதிருக்க முயன்றான் ரமேஷ்.

நோ…நோ…ப்ளீஸ் ..பி சீட்ட்ட் …..பைரவி தான் மும்பையிலிருந்து பண்ணியிருக்காள், சொல்லியபடி..”ஹலோ ” எனும் போது இணைப்பு கட் ஆனது.

சுழல் நாற்காலியில் சுழன்று உட்கார்ந்து கொண்ட ரமேஷ் …எவ்வளவு அழகு…….ஆண்டவனுக்கு நன்றி சொல்லணும்…மாதவியைப் பார்த்த ரமேஷின் கண்களில் குறும்பு தாண்டவமாடியது

எதுக்கு..திடீர்னு..ஆண்டவுனுக்
கு நன்றி ..? என்று அப்பாவித்தனமாகக் கேட்டாள் மாதவி.



“அத்தனை அழகையும் உனக்கே கொடுத்ததற்கு” சரிதானே..?

இதைக் கேட்டதும் கல கல வென்று சிரித்தபடியே ‘யூ ஆர் கிட்டிங்’ என்றாள் மாதவி. அவளது மேனியிலிருந்து மின்காந்த கவர்ச்சி அலைகள் வெளிப்பட்டு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தன அவனுக்குள்..

அவனைச் சுற்றிலும் எழில் தேவதைகள் பறந்து பூமழை பொழிவது போலிருந்தது. பெண்மைக்கு இத்தனை காந்த அதிர்வலைகளா? மனத்தின் அடியிலிருந்து ஓரு கேள்விக்குறி மேலெழுந்தது. மாதவி தான் எனக்காகவே பிறந்தவள் என்று…அவன் உள்ளம் துடியாய்த் துடித்துச் சொல்லியது. “இவளை இழந்து விடக் கூடாது…இந்தக் கலைமான் எனக்குத் தான் சொந்தம்…”

ரமேஷ் நினைத்துக் கொண்டிருக்கும் போதே மீண்டும் மாதவியின் கைபேசி மணியடித்தது.

“மாதவி..! .நான் ரெகார்டிங் இப்போ போகணும்.அதுக்குள்ளே உன்கிட்ட ஒரு விஷயம் கேட்டுட்டு போகலாம்னு பேசறேன்.” – பைரவி

கேளு பைரவி..நான் கூட ஒரு விஷயம் சொல்லணும்…

இங்க உனக்கொரு அலையன்ஸ் பார்த்து வெச்சுருக்கேன். அவரிடம் உன்னைப் பற்றிச் சொல்லணும்…உனக்கு ரொம்பப் பொருத்தமானவர் .. உனக்கு கண்டிப்பாப் பிடிக்கும்…- மாதவி ! அவர்ட்ட சொல்லிடவா..? என்று ஆவலாகக் கேட்டாள் பைரவி.

அச்சச்சோ வேண்டாம்…வேண்டாம்….ப்ளீஸ்...பைரவி…நோ..நோ.. நோ..நோ….உன்கிட்ட நான் அன்னிக்கே சொன்னேனே.. .இப்போ எனக்குக் கல்யாணத்தில் நம்பிக்கை யில்லை. பண்ணிக்கவும் இஷ்டமில்லை. என்னை சுதந்திரமா பறக்க விடேன்.. ! ப்ளீஸ்… யாரிடமும் பேசி இந்த மாதிரி எந்தக் காரியமும் பண்ணிடாதே..அப்பறம் அவர் உன்னைத் தப்பா நினைப்பார். என்று பரபரப்பாகப் பேசினாலும் குரலில் பிடிவாதத்தை பதித்தாள் .

அப்படியா…? சரி..விடு…உன் இஷ்டம்…ஒரு நல்லவருக்கு எதிர்கால மனைவியாகும் பாக்கியம் உன்னை விட்டுப் போகிறது..அதான் என் வருத்தம்.

அந்த பாக்கியம் உனக்கே கிடைக்கட்டும்…என் வாழ்த்துக்கள் பைரவி. இப்ப நான் எங்கே இருக்கேன் தெரியுமா.? ஒரு நல்லவரோட ஆஃபிஸில்…எனக்கு ரெண்டு பெரிய ப்ராஜெக்ட்ஸ் தந்திருக்கார் வானவில்லில். இதைப் பத்தி உன்னிடம் நீ வந்த பிறகு பேசறேன்…டூ யு வான்ட் டு டாக் டு ஹிம்….ஹி இஸ் .ஹியர்

………

ஓகே …ஒகே…நான் சொல்லிக்கறேன். யு கேரி ஆன்..! இணைப்பைத் துண்டித்தவள்…இப்போ அவசரமா தியேட்டர் போறாளாம். அவளே உங்களோட பேசுவாளாம் .. என்று புன்னகை முகத்தோடு சொல்லவும்.

அந்த அவசரத்திலும்….ஸோ … ‘ஆதித்தனிடம் பேச ஒன்றுமில்லை’ என்று தோன்றியது பைரவிக்கு. அதே சமயம், “இப்ப மாதவிக்கு ரமேஷோட வானவில் ஆபீசில் என்ன வேலை….? அங்கே ஏன் போயிருக்காள் ? என்று யோசித்த படியே தியேட்டருக்குள் நுழைகிறாள் பைரவி.

ரமேஷ் ஆவலுடன் ஆமா…என்ன விஷயம்…மாதவி..நீ..நீங்க வேக வேகமா நோ..நோ..ன்னு சொன்னியே….நான் தெரிஞ்சுக்கலாம்னா….என்று இழுத்தான்.

அதுவா..என் கல்யாணம்….பற்றியது. ஒரு அலையன்ஸ் பற்றி பைரவி சொன்னாள் . அதான் வேண்டாம்னு சொல்லிண்டிருந்தேன். எனக்கு இந்தக் கல்யாணத்தில் எல்லாம் நம்பிக்கை கிடையாதுன்னு ஏற்கனவே அவளிடம் சொல்லியிருக்கேன் .தெரிஞ்சும் கேட்கிறாள்.அதான். …!

இந்தப் பதிலைக் கேட்டதும் ரமேஷுக்கு தூக்கி வாரிப் போட்டது.. .”டேய்… ரமேஷ்..நீ மச்சக்காரன்டா…..பழம் நழுவிப் பாலில் விழுந்து அதுவும் நழுவி வாயில் விழுகிறது…” ஒருவேளை மாதவி உன்னை விரும்பறா போல….” நினைக்கும் போதே நெஞ்சம் இனித்தது ரமேஷுக்கு.

“மாதவி உனக்காகப் பிறந்தவள்…அவளை விடாதே…இன்னும் என்ன சொல்லத் தயக்கம்…அவள் தான் உனக்கு முன்னாடிப் பச்சைக் கொடி பிடிச்சாச்சே… இனிமேல் நீ தான் ஸ்டார்ட் பண்ணணும் …ரமேஷுக்கு தைரியம் தலை தூக்கியது.

அதற்குள் ஒரு அழகிய பெண் இருவருக்கும் சாசரில் காபி கொண்டு வந்து வைத்து விட்டுப் போனாள் .

நானே கேட்கணும்னு நினைச்சேன்….இங்க எல்லாருமே ஒரே மாதிரி உடை உடுத்திக் கொண்டு இருக்காங்க…. அதே சமயத்தில் எல்லாரும் ரொம்ப அழகா இருக்காங்க….இப்படி அமைவது கூட கடினம் தான். என்கிறாள் மாதவி.

எஸ்…மாதவி…யூ ஆர் ரைட். ஐ அப்ரிசியேட் யூ . நல்லா கவனிச்சுருக்கே. இந்த இடம் மான்களுக்கும் கலை மான்களுக்கும் ஒரு உல்லாசப் பூங்கா மாதிரி… எல்லா மான்களும் ஒரே மாதிரி….இங்கே இப்போ நீ ஒரு கலைமான்…என்று சொல்லிச் சிரிக்கிறான் ரமேஷ்.

” இல்லை கவரிமான்”….என்று அழுத்திச் சொல்லித் அவனைத் திருத்துகிறாள் மாதவி. மீண்டும் அவளது மொபைல் அபாய மணி அடிப்பது போல அடிக்கிறது .

இவள் ஏதோ..”மறந்தே போயிட்டேன் ” என்று உணர்ந்தவள் போல் காபியை வேகமாகக் குடித்துவிட்டு அப்போ நான் கிளம்பறேன். முக்கிய வேலை வந்திருக்கு…போயாகணும்…மீண்டும் சந்திப்போம்..என்று சொல்லி எழுந்து விடுகிறாள்.

அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு..நல்ல சந்தர்ப்பம் கை நழுவி போயிடிச்சே என்று தோன்றுகிறது. கூடிய சீக்கிரம் இன்னொரு மாஸ்டர் ப்ளானில் இந்த பெட்டையை அமுக்கிப் பிடிச்சு பஞ்சாரத்துல பாதுகாக்கணும். அவன் மாதவியைப் பார்த்துக் கொண்டே நின்றான்.

அவனது கைபேசியில் பைரவி சிரித்தபடி அழைத்தாள்.

மாதவி வெளியேறி நடக்க நடக்க அங்கிருக்கும் பெண்களின் அழகும், கவர்ச்சியும் அவளை என்னவோ செய்தது. தனது காரை எடுத்துக் கொண்டு எங்கிருந்தோ விடுபட்டு சுதந்திரமாகப் பறப்பதைப் போல உணர்ந்தாள் . வெளியில் இருண்டு மழை மேகங்கள் கூடி, மழை பெய்து நின்று இவளை வாழ்த்துவது போலிருந்தது.

“காலங்கள்..மழைக் காலங்கள்….
புதுக் கோலங்கள்…ராகங்களே சுகங்கள்
நாங்கள்..கலைமான்கள் ..பூக்கள் ..”

காரினுள் பைரவியின் குரல் குழைந்து கொண்டிருந்தது..


மும்பையில் பைரவி தனது பாடலின் டிராக் முடிந்ததும் ..ஆதித்தன் வயலின் வாசிப்பதைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் .



இவள் பாடிய பாடலின் வரிகள் வயலினில் அழுது காட்டியது…ஆதித்தன் கண்களை மூடிக் கொண்டு இசையில் லயித்து அவனது கை அசைவில் வயலின் அழுதது,அழுதது, அழுது சோக கீதம் பொங்கிது….தவித்துப் பேசியது… இறுதியில் வாயடைத்து மௌனமானது.

அந்த இசை வெள்ளத்தில் மூழ்கித் தத்தளித்துக் கொண்டிருந்த பைரவிக்குத் தான் திடீரென நாணறுந்த வீணையாக உணர்ந்தாள் .

வெறும் ஒரு முழ மரப் பெட்டியிலிருந்து இசையை நீர்வீழ்ச்சியாக வடித்துக் கொட்டுகிறாரே ….இவர்…இவர் தான் இந்த ராகங்களுக்கு அதிபதி போல ஒரு பாவனை….எல்லாம் முடிந்து தியேட்டர் கலைந்த பின்பும்…அத்தனை நிசப்தத்திலும் பைரவிக்கு காதில் வயலின் இன்னிசை எதிரொலித்துக் கொண்டிருந்தது போலிருந்தது.

காருக்குள் அமர்ந்திருந்தவள் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டல் ரூமுக்குள் போகும் வரைக்கும் கூட எதையும் பேச மறந்தவளாக அந்த இசையில் இணைந்த ஆன்மா கண்மூடிக் கொண்டே லயித்தபடியே கரைந்து வலது கன்னத்தில் கண்ணீர் கோடுகள் .”வயலின் வேவ்” போல அது அவளது கன்னத்தைத் தடவின.. சிலிர்த்தவள்…..சுதாரித்தபடி டிஸ்ஸுவால் கண்களை ஒற்றிக் கொண்டாள் .

அருகில் அமர்ந்திருந்த விஜய் ஜேசுதாஸ் “அநியாயத்துக்கு பிழிஞ்சு எடுத்துட்டாங்க சோகத்தை…”ஆதித்தா !….நீ கிரேட் பா….அவர் எதிர்பார்த்ததை விட அசத்திட்டீங்க….இல்லையா பைரவி..? என்று இவள் பக்கம் திரும்பவும்..

எஸ்….எஸ்…சரியா சொன்னீங்க…வயலின் ரொம்ப மெலோடியஸ். கண்களில் நீர் சொரிந்தது. நான் என்ன பாடினேன்னு கூட மறந்துடுச்சி இன்னும் வயலின் நாதம் மட்டும் காதில் ஒலிக்குது என்று புன்னகைத்தாள் .

ஆதித்தன் பணிவான குரலில்.இவள் பக்கமாகத் திரும்பி “ரொம்ப தாங்க்ஸ் மேடம்”…என்றார். விஜய் ஜேசுதாஸும் இவளைப் பார்த்து புன்னகைத்தார்.

பைரவியின் பார்வை முதன் முதலாகத் தன்னை வித்தியாசமாக நோக்கித் தொட்டுச் சென்றதுபோலிருந்தது ஆதித்தனுக்கு . உடனே அந்தப் பார்வையை ஆதித்தன் விழிகளை மூடி உள் வாங்கினான். இதயத்துக்குள் லேசான அதிர்வு, என்றுமில்லாத ஓர் துடிப்பு நேர்வது கண்டு திகைத்தான் ஆதித்தன்.


பைரவி இல்லாமல் இரண்டு நாட்கள் கழிந்தது ஒரு நிமிடம் போலத் தோன்றியது ரமேஷுக்கு.அதற்கு மாதவிக் கலைமான் தான் காரணம்… இன்னும் ஒரு வாரம் பைரவியைப் பார்க்கவில்லை என்றால் மாதவி அருகில் இருக்கும் தைரியத்தில் பைரவியை மறந்தே போயிருப்பான் . ஆனாலும் பைரவி சொல்லியிருந்தாள் , ரமேஷ், நாளைக்கு ஏர்போர்ட் வந்துடு….என்னை பிக் அப் பண்ணிக்கோ…என்று. அதற்காகத்தான் கிளம்பிக் கொண்டிருந்தான் ரமேஷ்.



இன்னும் ஒரு மணி நேரத்தில் பைரவி வந்து விடுவாள் அதற்குள் சீக்கிரம் போகணும் என்று நினைத்துக் கொண்டே . தலையை வாரிக் கொண்டிருந்த ரமேஷைப் பார்த்து….”ரமேஷ், என்னடா…..எல்லாரும் பேசிக்கறாளாமே….நீ அந்தப் பாடகி பைரவியோட பழகறேன்னு….நிஜமா …? அப்போ ஒரு நல்ல நாளாப் பாரத்து நாங்க பெரியவா பேசி முடிவு பண்ணலாம் இல்லையா? ஏன் ஒத்திப் போடணும் ? பைரவி நல்ல பெண். நீ கொடுத்து வெச்சுருக்கே.

திடுக்கெனத் திரும்பிப் பார்த்தவன், அம்மா….நான் யாரையும் இன்னும் முடிவு பண்ணலை….இசையில் நாட்டம் இருக்கு…அது சலங்கை ஒலியா ? அல்லது வீணையின் நாதமான்னு . குழப்பமா இருக்கு…இன்னும் கொஞ்சம் பொறு … சீக்கிரமாச் சொல்றேன்… .ஆனால் நிச்சயமா பைரவியா…..? சிந்திக்கிறேன் . ஒகே… என்றவன் எர்போர்ட்டுக்குக் கிளம்பி விட்டான்.

ரமேஷைக் கண்ட பைரவி “தேங்க்ஸ் ஃபார் பீயிங் ஹியர்” ….. என்றபடி சிரித்துக் கொண்டே காருக்குள் ஏறுகிறாள். அதில் ஒரு உரிமை இருந்ததைப் பார்த்து ரமேஷுக்கு “நாம ஏதோ விளையாட்டுக்குச் செய்யப் போக இது பெரிய ப்ராப்ளத்துல கொண்டு விடுமோ ..? அம்மா வேற இப்ப ஒரு மார்க்கமா பேசினாளே ….என்று உள்மனசு சொன்னாலும்….போற வரைக்கும் போகட்டும் … பார்த்துக்கலாம் என்று அசட்டுத்தனம் தைரியம் சொன்னது.

ரெண்டு நாள் தான் உன்னைப் பார்க்கலை…அதுவே ரெண்டு யுகம் போறது மாதிரி இருந்தது….உன் முகத்தை, உன் குரலைக் கேட்காமல் ரொம்பத் தவிச்சுப் போயிட்டேன் தெரியுமா? உனக்கு எப்படி இருக்கோ தெரியாது .? ஆமா…போன விஷயம்…. ஹிந்திப் பாட்டு நல்லாப் பாட முடிஞ்சுதா? என்ன பாட்டு அது.? ..ஒரு வரி பாடிக் காமியேன்…பைரவி.

“பத்தர் பனாதியா
முஜே….
ரோனே நஹி தியா…”

அப்டின்னா அர்த்தம் சொல்லேன்….

“கல்லாக்கி விட்டாய்
என்னை
கதற விடாமல் …நீ..”

ஓ …சூபெர்ப்…! ச்ச்ச்ச்ச்ச்ச்ச்……அப்படியே பிழிஞ்செடுத்துட்டே …..! குட்..

ம்ம்ம்ம்ம்….அப்புறம்…இங்க எப்படி? எனி நியூஸ்..?

இதைக் கேள் பைரவி ! நான் ஒரு மெகா கலா நிகழ்ச்சி நடத்தப் பிளான் பண்றேன். நீயும், மாதவியும் சேர்த்து..வானவில் டிவி க்கு ஒரு நிகழ்ச்சி பண்ணித் தரணும்…ரெடியா இரு.



மார்கழி மாச மஹா உற்சவம்..ன்னு நிறைய பெரிய பெரிய ஸ்பான்சர்ஸ் கிடைச்சிருக்காங்க…”பாட்டும் பரதமும்” ன்னு ஒரு கலைப்போட்டி நிகழ்ச்சி. அஞ்சு லட்சம் பரிசுத் தொகை. ஆர் யூ ரெடி…மாதவியோட சலங்கைக்கு ஸ்வரம் சொல்லிப் பாடு……ஆனால் இந்த போட்டியில் ஜெயித்தால் தான் பரிசு.

ஒகே.

வாவ்…..வொன்டர்ஃபுல் ஐடியா….. கிரேட்…..இந்த விஷயம் மாதவிக்குத் தெரியுமா?

நீயே சொல்லேன்…நான் வேறு ஏற்பாடுகள் செய்து கொள்கிறேன்..நல்ல பாடலாக நீயே செலக்ட் செய்து பாடிப் பரிசைத் தட்டிச் செல், ஒரே ஷாட்ல அஞ்சு லட்சம்… என்று சொல்லி அவளைப் பார்த்துச் சிரிக்கிறான். அப்படியே மனதுக்குள்….பரிசு யாருக்குக் கிடைக்க முடிவு செய்வது ? பைரவிக்கா ? மாதவிக்கா ? இரு கலைமான்களில் எந்தக் கலைமானுக்கு ? ”அதான் நான் ஏற்கனவே பரிசு எனக்குப் பிடித்த ஒருத்திக்குத்தான் கிடைக்கணும்னு முடிவு செய்து ஏற்பாடும் பண்ணியாச்சே.. என்று ரமேஷ் சிரித்துக் கொள்கிறான்.

பரிசுத் தொகையை விட தனது கௌரவம் தான் முக்கியம் என்று பைரவி எண்ணியவள்.. இருந்தாலும் பரிசு பெறுவதே ஒரு கௌரவம் தான் அங்கீகாரம்..தான். அவளுக்கு அதில் வெற்றி தனக்குத் தான் கிடைக்கும் என்ற நம்பிக்கை மனம் பூரா வியாபித்திருந்தது

அதே சமயம் மாதவிக்குக் கூட ஆடுவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு, மேடை.. இதுவே அவள் எதிர்பார்ப்பது…அவளும் மனதுக்குள் …பரிசு எனக்குத் தான் கிடைக்க வேண்டும் என்றும் விரும்புவாள் .

சரி ரமேஷ்…இந்த ப்ரோக்ராமுக்கு நானும் மாதவியும் கலந்துக்கறோம். நான் சொன்னால் அவள் கேட்பாள். நான் எனக்கு வேறு எந்த நிகழ்ச்சியும் வராமல் பார்த்துக்கறேன்….அதுவரை இதற்காக கொஞ்சம் தனிப்பட்ட பயிற்சி எடுக்கணும்… அந்த ஒத்திகை பார்த்துக்கறேன். மற்றபடி எங்களது ஒத்துழைப்பு என்றும் இருக்கும். அப்போ நான் இறங்கிக்கறேன்…வீட்டுக்குள் வந்து காபி சாப்பிட்டு விட்டுப் போகலாமே….அழைத்தாள் பைரவி.

இல்லை பைரவி, ஐ ‘ல் கம் சம்மதர் டைம்…..பை என்று காரைத் திருப்பினான் ரமேஷ்..

மும்பை சென்று திரும்பிய பைரவி ரமேஷின் காரில் வந்து இறங்கியதும்….” அவரும் மும்பை வந்திருந்தாரா என்ன? ” என்று அதிர்ச்சியோடு கேட்ட அம்மாவைப் விநோதமாகப் பார்த்தாள் பைரவி.

இல்லையே…ஏர்போர்ட்டுக்கு வந்தார்…அதுக்கு ஏன் நீ இப்படி ஷாக் ஆனா மாதிரி இருக்கே..நான் தான் வரச் சொன்னேன். நேற்று நம்ம ட்ரைவர் ரத்தினத்துக்கு ஃ போன் பண்ணி ஏர்போர்ட் வரச் சொன்னேன்…..அவருக்குப் பாவம் வைரல் ஃபீவர்ன்னு சொன்னார். அதனாலத் தான் ரமேஷுக்கு ஃபோன் பண்ணினேன். மாதவிக்கு வீடு ரொம்ப தூரம்.

ரமேஷ் வரும்போது சொன்னார். வானவில் டி வி யில் ‘பாட்டும் பரதமும்’ னு ஒருபோட்டியாம்…அதைப் பற்றி சொன்னார். நானும் மாதவியும் சேர்ந்து பண்ணப் போறோம்.முதல் பரிசு ஐந்து லட்சமாம். என்று நிறுத்திவிட்டு அம்மாவின் முகத்தைப் பார்க்கிறாள் பைரவி.

அது மாதவிக்கே கிடைக்கட்டும்….நீ ஏன் இதிலெல்லாம் கலந்துக்கணும் . உனக்கு நேரம் இருக்காதே. ஆனாலும் சின்னத் திரைக்கு ஏன் போகணும்…?

அம்மா….!இப்போ நான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்குப் போறதில்லையா? அது மாதிரி தான் இதுவும்..

சரி..சரி..என்னவோ செய் உன் இஷ்டம்.

பைரவி மாதவியிடம் சொன்னதும் மாதவி சந்தோஷத்தில் குதித்தாள் …..நீயா எனக்காக பாட்டுப் பாடப் போறே..? நம்ம நல்ல நட்புக்கு இந்தப் போட்டி எல்லாம் வெறும் வெளி உலகுக்குத் தான். எனக்கு உன்னைப் பற்றித் தெரியாதா என்ன? நீ தான் பரிசுக்கு சொந்தக் காரி..இப்பவே லிஸ்ட் போட்டுக்கோ பரிசுத் தொகையில் என்னவெல்லாம் பண்ணலாம்னு….என்று சொல்லிச் சிரிக்கிறாள்.

இல்லை மாதவி…நாம ரெண்டு பேருமே இதை ஒரு சாலஞ்சா எடுத்து திறமையைக் காட்டணும் .இதில் பரிசை விட கெளரவம் முக்கியம்.. இல்லையா?

ஆமாம்..பெயரும் புகழும் கிடைத்து ஏற்கனவே உனக்குன்னு கெளரவம் இருக்கு. இதன் மூலமா அது ரொம்ப ஸ்ட்ராங்கா ஆகும்…அவ்ளோதான். நீ தான் பரிசை வாங்கணும். வாங்குவே…அது தான் சரி.

இதில் எந்த மாஜிக்கும் இல்லை….திறமைக்குத் தான் வெற்றி. ரமேஷ் கண்டிப்பா சொல்லிட்டார். யாரடி நீ மோகினி…? ன்னு நான் கேட்பேன்…பதில் சொல்லு….உன் நாட்டியத்தில்…!

இருவரும் மனம் விட்டுச் சிரிக்கின்றனர். சிரித்துச் சிரித்து மாதவியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்த் துளி ததும்பி வழிகிறது . பைரவி அதைத் துடைத்து விடுகிறாள்.

இருவரும் பணத்துக்கு மட்டுமா போட்டி போடுகிறார்கள் ? இல்லை செல்வந்த ரமேஷைத் தன்வசம் கவரவே திறமையைக் காட்டப் போகிறார்கள்.

அவர்கள் இருவரும் ஒத்திகை பார்ப்பதில் ரமேஷைப் பார்ப்பதை ஒத்தி வைத்திருந்தார்கள். போட்டிக்கான அந்த நாளும் வந்தது.

பாட்டும் பரதமும்…விளம்பரத்தோடு டைரெக்ட் டெலிகாஸ்ட் ஆரம்பமானது.

அழகான செட்டிங்கில் மாதவியின் எழில் மயக்கும் அலங்கார மோகினியாக பைரவியின் குரலுக்கு அவளது சலங்கைக் கால்கள் காத்திருந்தன.

கணீரென்ற குரலில் தாள ஜதி ஒலிக்கிறது….மாதவி தன்னை மறந்தாள். பைரவியும் தன்னை மறந்தாள் . பாட்டும் பரதமும் ஒன்றையொன்று மிஞ்சிக் கொண்டிருந்தது போட்டியில்.

தொலைகாட்சி நேயர்கள் பார்த்த மாத்திரத்தில் அந்த நிகழ்ச்சியில் தங்களைப் பறிகொடுத்தனர்.

பைரவியின் இன்னிசை நாதம் பொங்கி எழுந்தது.

தாகிட தகஜம் தரிகிட தகஜம்
தாகிட தகஜம் தரிகிட தகஜம்
தாங்கிட தக ரீம்கிட தக நீம்கிடதக
தீன்கிட தக நம் கிட தக ஜம்
தகஜம் தகஜம் தகஜம் தகஜம்

ஆனந்தம் தந்தவன் யாரென்று
கேளடி தோழி….எந்தன் தோழி..!
ஆனந்தம் தந்தவன் யாரென்று
கேளடி தோழி….எந்தன் தோழி..!
ஆ…ஆஅ…ஆஆ…ஆஆ..

மாலை ஏற்கும் மன்னனோ…?
நேரில் காணும் கண்ணனோ…?
சேர வேண்டும்
எந்தன் தீரனை…யி ….யி ….யி ….!

தேவதை நான்… விண்ணுலக
ஊர்வசி தான்…ஆஆ.ஆஆ.
மேனகை தான்..
மன்மதனின்
ரதியும் நான்…..
ஆ…ஆஅ…ஆஆ…ஆஆ…..(2)

நேற்று வந்த மானிடம்…
பார்வை தேடித் போகுமா?
இன்று உந்தன் ஆடலில்
பாதை மாறிப் போகுமோ..?

உன் எண்ணம் பொல்லாது
உன் ஜம்பம் செல்லாது
என்னை இங்கு வெல்லும்
உந்தன் சதங்கை காட்டடி…..!

மேடைதனில் ஏறி நில்….
போட்டியிதில் தோற்றுச் செல்…
என் ஆசை தீராதா.
உன் கோபம் மாறாதா….
சலங்கையும் வீணையும்
கலங்கித் தவிப்ப தேனடி….?

என்னில் ஒரு வேதனை
உன்னால் வந்த சோதனை
தேவை யில்லை
உனது சாதனை..!

ஆனந்தம் தந்தவன் யாரென்று
கேளடி தோழி…இனிய தோழி..!
மாலை ஏற்கும் மன்னனோ
நேரில் பார்க்கும் கண்ணனோ
சேர வேணும் என் தேவனை…!

ஆனந்தம் தந்தவன் யாரென்று
கேளடி தோழி…இனிய தோழி..!
மாலை ஏற்கும் மன்னனோ
நேரில் பார்க்கும் கண்ணனோ
சேர வேணும் என் ஜீவனை …!

தத்தித்தோம் தகதிமித் தோம்
தத் தகிட தீம் தத் தகிட
தகஜம் தாம் தீம் தத் தரிகிட
தாம் தீம் தகிட தஜம்
தஜம் தஜம் தஜம் தஜம்.

பாட்டுக்கு ஏற்ப மின்னல் போல் வெட்டி மாதவி பம்பரமாய் ஆடினாள். பார்த்தோரை தன் உடல் அசைப்பால் மயக்கினாள்.

பைரவிக்கு பாடி முடித்ததும் பயங்கர கரகோஷம் ஹாலை அதிர வைத்தது. கைதட்டலின் சப்தத்தில் இருவருக்கும். ஜிவ்வென்று மனம் பறந்தது. நினைத்ததை விட நன்றாக பாடியது போலத் தோன்றியது பைரவிக்கு. பரிசின் அறிவிப்பில் யார் பெயரைச் சொல்வார் என்று ஆவல் அவளுக்குள் தயாராக இருந்தது.

மாதவி ஆடி முடித்த கையோடு எழுந்த கைதட்டலைக் கண்டு அவள் பைரவியைப் பார்க்கிறாள். ” அதில் உன் குரலுக்குக் கிடைக்கும் அங்கீகாரம் பார்த்தாயா ? என்ற மொழி இருந்தது. ஆனால் பரிசு குரலுக்கா ? உடல் நெளிவுக்கா ?

ரமேஷ் முன்னமர்ந்த நீதிபதிகளை மேடைக்கு அழைத்து முடிவு அறிவிக்கிறார். கண்ணுக்கு விருந்து தந்து அந்தப் பாடலைச் சிறப்பித்த மாதவிக்குத் தான் பரிசு கிடைக்கிறது. அஞ்சு லட்சம் பரிசு என்று சொல்லிக் கொண்டே ஒரு பெரிய செக் போர்டும் தனது பையிலிருந்த காசோலையையும் எடுத்து தலைமை நீதிபதியுடம் கொடுக்கிறார்.

ஒருமித்த கரகோஷம்….பூ மழைத் தூவல்…மாதவிக்கு இன்ப அதிர்ச்சி பொங்குகிறது …! ஒரு நொடியில் உலகை மறந்து போகிறாள் மாதவி.

யார் யாரோ பேச வருகிறார்கள்…..மாதவிக்கு மலர் மாலைகள் விழுந்து கொண்டே இருக்கிறது. பைரவிக்கு தூக்கி வாரிப் போடுகிறது. இதயத்தில் ஏதோ பாரம் அழுத்த ஆரம்பித்தது. இதில் ஏதோ சதி….! உள்மனது சொல்லியது. என்னை வேண்டுமென்றே ரமேஷ் இங்கே அழைத்து வந்து மேடையில் அவமானப் படுத்தியது போலே உள்ளம் கூனிக் குறுகியது. பரிசு யாருக்கென்று ஏற்கனவே முடிவு செய்து காசோலையில் பெயர் எழுதப் பட்டதுபோல் தெரிந்தது !

என்னதான் பரிசு பெற்றவள் தன் தோழியாக இருந்தாலும் இந்த நிமிடத்தில் அவள் மனதுள் பொறாமைத் தீ கப கப வென்று பற்றிக் கொண்டு கொழுந்து விட்டு எரிய ஆரம்பிக்கிறது. பாடிய குரல் உள்ளுக்குள் அமுங்கியது. எதையும் வெளிக் காட்டாமல் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் விறு விறுவென்று அந்த இடத்தை விட்டு வெளியேறினாள் பைரவி.
அவளது காரின் அருகே சென்று “ரத்தினம்….”வண்டியை எடுங்க ” என்கிறாள் பைரவி.

அவளது குரலில் அடிப்பட்ட பாம்பின் சீற்றம் இருந்தது.



நான் அன்னிக்கே நினைச்சேன்..இப்படியாகும்னு .இந்தம்மா தான் ரமேஷ் நல்லவர்ன்னு யார் சொன்னாலும் கேட்காமல் நம்பிகிட்டிருந்தாங்க..இப்ப என்னாச்சு….? அவரு தன்னோட செல்வாக்கைக் காட்டி மாதவியை தன் வலையில் சிக்க வெச்சுக்கிட்டாரு. நல்ல வேளையா நம்ம பைரவியம்மா அவருகிட்ட இருந்து பத்திரமாத் தப்பிச்சாங்க அது வரைக்கும் எனக்கு சந்தோஷம் .

ரத்தினம் மனசுக்குள் நினைத்தபடியே பைரவியின் வருத்தத்திற்கு ரமேஷ் தான் காரணமாயிருக்கலாம் என்று யூகித்தபடியே வண்டியை வீட்டுக்கு ஒட்டினார் ..

காரை விட்டு இறங்கி கதவை டமால் என்று அழுத்திச் சாத்தியவள் …வீட்டுக்குள் புயல் வேகத்தில் நுழைந்து ..வேகமாகத் தனது அறைக்குள் சென்று தொப்பென்று படுக்கையில் விழுந்தாள் . உடல் குலுங்கியது. தலையணை நனைய ஆரம்பித்தது.

அவளது கைபேசியும் யாரும் எடுக்காததால் கூடவே விடாமல் அலறிக் கொண்டே இருந்தது.

பைரவி என்னாச்சு…? எழுந்திரு…..பைரவி என்னாச்சும்மா சொல்லு…. பதட்டத்துடன் அருகில் ஓடி வந்தமர்ந்த அம்மாவின் மடியில் தலைப் புதைத்துக் கொண்டு தேம்பித் தேம்பி அழலானாள்… அவளது அத்தனை உணர்வுகளின் வடிகாலாக அவளது தாயின் மடியில் ஒரு நிம்மதி கிடைத்தது பைரவிக்கு.

பைரவி…அழறியா…? அழும்படியா என்னாச்சும்மா..? திடுக்கிட்டவளாக…. பைரவியின் தலையை வருடிக் கொண்டே “நான் தான் அன்னிக்கே சொன்னேனே…இதெல்லாம் வேண்டாம்னு…நீ கேட்டியா? எதுவா இருந்தாலும் ஈஸியா எடுத்துக்கோ . நீ நன்னாத் தான் பாடினே..பரிசு உனக்குக் கிடைக்கலைன்னா , போனால் போகட்டும்…விடு. அவன் நல்லவனே இல்லை…அவன் பணத் திமிரில் என்ன வேணா செய்வான்….நீ ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும் .நேக்குத் நன்னாத் தெரியும்..

அம்மாவின் பேச்சில் விருட்டென்று மடியைத் தள்ளி விட்டு எழுகிறாள். ஹாலில் இருந்த வீணையை தூக்கி….ரத்தினம்…ரத்தினம்.
…கொஞ்சம் இங்க வாங்க…! இந்த வீணையைக் கொண்டு போய் அந்த வானவில் ஆஃபீஸில் வெச்சுட்டு நான் திருப்பி அனுப்பினேன்னு அவருகிட்டச் சொல்லிட்டு வந்துடுங்க. என்ன சொன்னாலும் திரும்ப எடுத்துக்கிட்டு வராதீங்க…. வீணையைக் கொடுத்து மேடையில் என் மானத்தை வாங்கியவன் ! என்கிறாள்.



பைரவியின் அம்மா முகம் மலர்ந்தது….ரத்தினம்..கொஞ்சம் சீக்கிரமாப் போயி கொடுத்துட்டு வந்துடுங்க….! அவள் குரலில் ஏதோ ஒரு நிம்மதி இருந்தது ரத்தினத்திற்கும் புரிந்தது.

ஆமா…. யார்ட்ட இருந்து கால் வந்துண்டே இருக்கு.? ..மொபைலை பார்க்கிறாள் ….அத்தனை மிஸ்டு கால்கள் அனைத்தும் மாதவியினுடையது.

உனக்கும் மாதவிக்கும் ஏதாவது மன வருத்தமா? ரமேஷுக்கும் மாதவிக்கும்…ஏதாவது…! என்று சொல்ல நினைத்ததை சொல்லாமல் விடுகிறாள்.

ச்சே..நீ கொஞ்சம் பேசாமல் இரேன் …நீ நினைக்கிறது எதுவும் இல்லை…இது வேற….என்று கைபேசியை சுவிட்ச் ஆஃப் செய்யப் போகும் போது மறுபடியும் அழைப்பு….ஆனால் அது ஆதித்தனிடமிருந்து.

பாலைவனத்தில் சோலையைக் கண்ட பரவசத்தில் ‘ஹலோ’ என்கிறாள். அவளது குரல் சோகத்தை மறைத்தது.

நிகழ்ச்சியைப் பாராட்டி விட்டு…ரொம்ப நன்றாகப் பாடினீர்கள்…..உங்கள் தோழிக்குப் பரிசு கிடைக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தது உங்கள் பெருந்தன்மையைக் காட்டுகிறது. இது தான் தியாகம்….இது தான் நட்பு. எனக்கு உங்களைப் பார்த்தால் பெருமையாக இருக்கு. நீங்கள் ஏற்கனவே புகழின் உச்சியில் நிற்கிறீர்கள்..இப்போது உங்கள் தோழியையும் இந்த நிகழ்ச்சி மூலமாக அந்த உயரத்துக்கு கொண்டு சென்ற விதம் பெருமைப்பட வைக்கிறது.அதான்…தொலைக் காட்சியில் இப்போ தான் பார்த்தேன்…. உங்கள் பாட்டும் பிரமாதம். உங்கள் தோழியின் நாட்டியமும் பிரமாதம். நீங்கள் வேண்டுமென்றே பரிசை விட்டுக் கொடுத்து போலத் தெரிந்தது. அதான் உங்களை வாழ்த்தணும்ன்னு கூப்பிட்டேன்.

……………… (இவன் பேசப் பேச…பைரவி தூள் தூளாக உடைந்து குமுறிக் கொண்டிருந்தாள்.உள்ளுக்குள்.)..…பதில் பேச முடியாமல் அவளை ஏதோ உணர்வு தொண்டையை அடைத்தது.

ஹலோ…..ஹலோ…..இருக்கீங்களா...? பைரவி…பைரவி…பைரவி…ஆர் யூ தேர்…பைரவி பேசுங்க…..!

மீண்டும் இவளது மௌனம்…(அவன் இவளது பெயரை அழைக்க ,அழைக்க இவளது உயிர் இவளை விட்டு எங்கோ பறந்தது போலிருந்தது…)

சரி…நான் வெச்சுடறேன்…! ஆதித்தனிடமிருந்து கைபேசி இணைப்பு துண்டித்தது. பைரவியின் மனதுக்குள் ஆதித்தனின் வயலின் வாசிக்க ஆரம்பித்தது. அவன் வாசித்த துன்ப ராகம் அவள் காதில் இன்ப ராகத்தைக் கொட்டியது.

இப்படியும் ஒரு கோணம் இருக்கிறதா? நான் ரமேஷ் மேல் வைத்திருந்த நம்பிக்கை பொய்யாகிவிட்ட உணர்வில் இப்படி மதி கேட்டுப் போச்சே…!

அன்று மாதவி சொன்னது நினைவுக்கு வந்தது. ரமேஷ் தான் நடுவில் ஏதாவது தில்லுமுல்லு பண்ணியிருக்கணும். இல்லாவிட்டால் நிஜம்மாவே மாதவியின் நாட்டியம் தான் ஜட்சுக்குத் தெரிய வெற்றி பெற்றிருக்க வேண்டும். இதில் என் மனசு சுயநலமாக ஒரு விஷயத்தை நினைத்துக் கொண்டு எப்படி மாதவியைக் கண்டு என் மனசு பொறாமைப் பட்டது? எனக்குள் எங்கிருந்து மூண்டது இந்த ஆசைத் தீ ? இந்த ரமேஷ் மனத்தில் நுழைந்து என்னுள் இந்தப் பொறாமைத் தீயைப் பந்தமாக ஏறிய விட்டிருக்கிறான். இத்தனை நாள் அது உள்ளுக்குள் புதைந்து கொண்டே தான் இருந்திருக்கிறது.

இதோ அதை ஆதித்தன் அழகாக அமைதி நீரை ஊற்றி அணைத்து விட்டார். என்னை எனக்குப் புரிய வைத்து என் இதயத்தில் தீபம் ஏற்றியவர் ஆதித்தன். என்னைத் தனக்குள் இழுத்துக் கொண்டு ஆசை எனும் தீப்பந்தத்தைச் செருகியவன் ரமேஷ்…! இந்த வித்தியாசத்தை நான் உணர வேண்டும் என்பதற்காகவா இதெல்லாம் நடக்கிறது….? தனக்குள் கேள்வி கேட்டுக் கொண்டு ஒன்றும் புரியாதவளாக அமைதியானாள் பைரவி.

சற்று நேரத்தில் ‘வீணையை கொடுத்துட்டு வந்தாச்சும்மா’ அவர் ஒண்ணுமே சொல்லலை. அங்க “வெச்சுட்டுப் போ ” ன்னு சொன்னாரு. அந்த ரூமில் நம்ம மாதவியம்மாவும் இருந்தாங்க….என்னைப் பார்த்தும் அவங்க தெரிஞ்சா மாதிரியே கண்டுக்கலை…ஒரு புன்சிரிப்பு கூட இல்லைம்மா…. ஏதோ சதி நடந்திருக்கு. இருவர் முகத்திலும் இருள் படிந்திருந்தது. என்று எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றி விட்டுப் போனார் ரத்தினம்.

இவள் அந்த அவமானத்தை முழுங்கிக் கொண்டு…சரி தேங்க்ஸ்…நீங்க வீட்டுக்குப் போகலாம்..இன்னைக்கு எனக்கு ஒரு வேலையும் இல்லை..’ என்று சொல்லி அனுப்பினாள் .

பைரவியின் அம்மா எட்டிப் பார்த்து ‘அப்பாடா…இப்பத் தான் எனக்கு நிம்மதியா இருக்கு…’என்று நெஞ்சில் கை வைத்த படியே பெருமூச்சு விட்டபடியே….தலை போற அவசரத்தில் இந்த விஷயத்தை முதல்ல அவர்ட்ட ஃபோன் போட்டுச் சொல்லணும். வீணை கிளாஸ் எடுத்துண்டு இருப்பாரே…..சிறிது பின் தங்கினாலும்..’இதைச் சொல்லலைனா இப்ப என் தலையே வெடிச்சுடும்’ எத்தனை வேண்டிண்டேன்…..’இந்த ரமேஷின் பிடியிலிருந்து பைரவி விலகணும்னு ‘. பகவான் கண்ணைத் திறந்தான். அவனும் அவன் மூஞ்சியும்..சிரிப்பும்…அவனைப் பார்த்த அன்னிக்கே மனசுக்குப் பிடிக்கலை..என்ன செய்யறதுன்னு தெரியாம மனசுக்குள்ள புழுங்கிண்டு கிடந்தோம். நிம்மதியா சுதந்திரமா இருந்த பொண்ணு எப்ப அவனோட நினைப்பில் எதையோ பறிகொடுத்தவள் மாதிரி…அடிக்கடி வருத்தப் பட்டுண்டு….! பைரவியின் தாய்மனம்….தனியே மனசுக்குள் நிம்மதியில் புலம்பியது.

அந்த நேரம் பார்த்து வாசலில் கார் வந்து நிற்கும் சப்தம் கேட்டதும்…” போச்சுடா….வினை வீடு தேடி வரும்’ ன்னு இதைத் தான் சொல்வாளோ… இவளா ஒதுங்கினாலும் விட மாட்டான் போல இருக்கே…மீண்டும் வீணையைத் தூக்கி கொண்டு வந்து விட்டானோ…..? காலைச் சுத்தின பாம்பு… உதறினாலும் போகாது. பதட்டதோடு வெளியே வந்து பார்க்கிறாள். மனம் “அவனாக இருக்கக் கூடாதே…” என்று வேண்டிக் கொண்டது.

மாதவி காரை விட்டு இறங்கிக் கொண்டிருந்தாள். எங்கிருந்தோ ஒரு நிம்மதி வந்து மனதை தடவியது. அப்பாடா…அவன் இல்லை .

மாதவியின் முகம் வழக்கத்துக்கு மாறாக வாடியிருந்ததை கவனிக்கத் தவற வில்லை பைரவியின் அம்மா.

வா…வா…வா…மாதவி…பாராட்டுகள்; ரொம்ப சந்தோஷம் …நீ தானே ஜெயிச்சே…. பைரவி உள்ள ரூமில் இருக்கா போய்ப் பாரு. உனக்கு ஹார்லிக்ஸ் கலந்து எடுத்துண்டு வரேன்…சொல்லிவிட்டு நகர்ந்தாள் .

அறையில் தனது படுக்கையில் கவிழ்ந்து படுத்துக் கொண்டு குலுங்கிக் கொண்டிருந்தாள் பைரவி.

மாதவி சென்று தயக்கத்துடன் அவளது தோளைத் தொட்டதும் , விசித்திர ஸ்பரிசத்தில் திரும்பியவள், சுதாரித்துக் கொண்டு “எப்ப வந்தே மாதவி?’

‘இப்பத் தான்..’ இதுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை பைரவி…’இந்தா செக் ‘ பணத்தை மாற்றித் தரேன்.இது நியாயமா உன்னோடது தான். அன்னிக்கு சொன்னது தான் இன்னிக்கும் என்னிக்கும்…பரிசு உனக்குத் தான் கிடைச்சிருக்கணும்..ரத்தினம் வீணையைத் திருப்பி கொண்டு வந்து கொடுக்கும் போதே நினைத்தேன்….உன் மனசு எவ்ளோ வேதனைப் பட்டிருக்கும்னு. என்னைப் புரிஞ்சுக்கோ…நான் உன்னைத் தேடினேன்….நீ அங்கே இல்லைன்னு தெரிஞ்சதும் உனக்கு ஃபோன் செய்தும் பார்த்தேன்…நீ எடுக்கலை… கோபம்னு புரிஞ்சுண்டேன்.

மாதவி ! பரிசு கிடைச்சது உனக்கு. உனக்குக் கிடைத்த பரிசைத் தட்டிப் பறித்துக் கொள்பவள் நானில்லை புரிஞ்சுக்கோ..

இந்தச் செக் ஒண்ணும் எனக்கு வேண்டாம். நான் பணத்துக்காக அழலை. நீ வெற்றி பெற்றதில் எனக்கு சந்தோஷம் தான். என்னமோ மனசுக்குள்ள ஒரு பாரம். வேற ஒண்ணுமில்லை.

ஒருத்தரை நம் மனசுக்குள் வரும்போது எவ்வளவு சந்தோஷப் படுவோம் அதே போல் மனசு வெறுமையாகும் போது அதுக்காக அழுவோம்…. இல்லையா? மற்றபடி உனக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை என்று பைரவி சொல்லி சமாளிக்கிறாள்.

அப்போ நீ ஏன் அங்கேர்ந்து கிளம்பிப் போனே? உனக்கு என் மேல என்ன கோவம்? நான் என்ன செய்தேன் அதைச் சொல்.. நான் எவ்வளவு தவிச்சுப் போனேன்னு உனக்குத் தெரியுமா?

ரமேஷுக்கு என்னைப் பிடிக்க வில்லை மாதவி ! உன்னைத் தான் அவருக்கு ரொம்பப் பிடித்திருக்கு; இந்தப் போட்டி அதை நிரூபித்து விட்டது ! பாராட்டுகள் ! நமக்குள் எதுக்கு போட்டியும் பொறாமையும்.

இது ஆனந்தக் கண்ணீர் ! நீதான் அவரது வருங்கால மனைவி மாதவி !

சீ…சீ…சீ…! ரமேஷ் உன்னைத்தான் விரும்பி நேசித்தார். நீதான் அவரின் எதிர்கால மனைவி ! இந்தப் பரிசு அளிப்பால் நான் அவரை மணப்பேன் என்று நினைக்கிறாயா ? அதுதான் சஸ்பென்ஸ் ! அவர் பேசும் போதெல்லால் உன்னினிய குரலைதான் மெச்சுகிறார்.

சரியாகச் சொன்னாய் மாதவி ! என் குரலைத்தான் விரும்புகிறார். என்னை அல்ல. சி. டி. யில் போட்டு கேட்டுக் கொள்ளட்டும் என் பாட்டை ! அவர் நினைப்பது போல என்னால் வாழ முடியாது

நாளைக்கு ரமேஷ் ஒரு பார்ட்டி தரதா சொல்லியிருக்கார்…ஹோட்டல் க்ராண்ட்ல. நீயும் வந்துடு….கோவிச்சுக்காதே..போதும் உன் ஊடல்.. பைரவி ! நீரடிச்சு நீர் விலகாது.

இனி அதுக்கெல்லாம் அவசியமல்லை. எனக்கு புரோகிராம் இருக்கு மாதவி. நீ மட்டும் கலந்து கொள். நான் வர மாட்டேன்.

இந்தா செக்கைப் பிடி….இது உன் பரிசுப் பணம் தான்…எனக்கு இந்த செக்கை விட நீயும் நம் நட்பும் தான் முக்கியம்.. நீ பாடி நான் ஆடும்போது அதில் கிடைத்த நிம்மதியை வேறெந்தப் பரிசும் பணமும் தராது. அழாதே எழுந்திரு… வெளியில் வா…உன்னை இதெல்லாம் ஒண்ணும் செய்து விடாது…சின்ன நூல்கண்டா உன்னை சிறைப் படுத்துவது….ஐ நோ யூ …பைரவி.

உடைந்து போனவளாக பைரவி….ஐம் சாரி மாதவி….! ஒரு நிமிஷம் தடுமாறிட்டேன்…என்றவளை தன் மடியில் தாங்கினாள் மாதவி.
பைரவியை முதுகில் தட்டிக் கொடுத்து ‘நீ ஏதோ குழப்பத்தில் இருக்கே’ன்னு மட்டும் புரியறது..எதுவா இருந்தாலும் எங்கிட்டச் சொல்லேன். மனசுக்குள் வெச்சு உன்னை நீ வதைச்சுக்காதே.

நேரடியாக் கேட்கிறேன்……நீ ரமேஷை விரும்பறே தானே? மெல்லக் கேட்கிறாள் மாதவி.
அதெல்லாம் ஒண்ணு மில்லை….என்னை அவருக்குப் பிடிக்க வில்லை. அதான் வீணையைத் திருப்பிக் கொடுத்துட்டேன். பரிசு கொடுக்கும் போது அவர் கண்கள் உன்னைத்தான் துளைத்தன ! வெளியில் தவறான கிசு கிசுக்கள்…அதை தவிர்க்கணும்…இனிமேலாவது. எங்களுக்கிடையே உள்ள இடைவெளி நீளுது. ஆரம்பத்தில் இருந்த மனசு இப்ப இல்லை. ஏனோ மனசு திரும்பி விட்டது இருவருக்கும். இனி நட்பாக இருப்பதர்க்குக் கூட லாயக்கில்லை…என்றாகிவிட்டது. எல்லாம் நல்லதுக்குத் தான்.



ம்ம்ம்ம்ம்ம்…..சீக்கிரமா வேறொரு நல்ல மாப்பிள்ளையாப் பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ… சரியாயிடும்.

அப்போ மாதவிக்கு ரமேஷ் மேல் ஒரு பிடிப்பு …இருப்பதை உறுதி செய்து கொண்டாள் பைரவி….! ரமேஷுக்கும் மாதவிக்கும் அவன் விருப்பப்பட்டது போல ‘லிவிங் டுகெதர்’ ஒத்து வரும்…இவளும் திருமணத்தை விரும்பாதவள் தானே…? அதனால் தான் நான் மும்பையிலிருந்து ஆதித்தனைப் பற்றி சொன்னதும் ஒரேயடியாக மறுத்து விட்டாள் ….மனம் என்னென்னமோ சொல்லிக் கொடுத்தது பைரவிக்கு .

மாதவி சென்று பல மணி நேரமாகியும் பைரவியின் எண்ண அலைகள் ஓய்ந்த பாடில்லை.

தாம்பரத்தில் ஜே.வி.ஆர் தங்க மாளிகையின் மேனஜிங் டைரக்டர் பரபரப்பாக அறையிலிருந்து பஸ்ஸரை அழுத்தி உதவி மேனஜரை அழைக்கிறார்.

கொஞ்சம் ‘வானவில் டிவி’ ஃபைலை எடுத்துக்கிட்டு உடனே வாங்க.

ஃபைலோடு உள்ளே நுழைந்தவரைப் பார்த்து நம்ம விளம்பர கான்டிராக்ட் எல்லாத்தையும் வானவில் டிவி கிட்ட இருந்து உடனே கான்சல் பண்ணுங்க என்றவர்…என்னங்க…அக்ரிமெண்டுல கூட கையெழுத்து வாங்காம வெச்சுருக்கீங்க…இதான் நீங்க வேலை பார்க்கிற லட்சணமா? கோபித்த படியே…ம்ம்ம்ம்ம்…ஒரு விதத்துல அதுவும் நல்லதாப் போச்சு. என்றவர். மானேஜரின் முகத்தைப் பார்க்கிறார்.

‘பாட்டும் பரதமும்’ நிகழ்ச்சிக்கு ஐந்து லட்சம் பரிசுப் பணம் கொடுத்ததே அந்த பாடகி பைரவிக்காகத் தான். அந்தப் பொண்ணு நம்ம விளம்பரத்துக்கு கிராண்ட் அம்பாசடரா போடணும்னு தான் ரமேஷ் கிட்ட சொன்னேன். கடைசீல பார்த்தா அந்தப் பணத்தை அந்தாளு அவனோட கேர்ள் ஃபிரண்டாமே மாதவி….அவளுக்குத் தூக்கித தார வாத்துட்டான். என்கிட்ட இவனோட வித்தை எல்லாம் நடக்குமா? டாம் இட்….என்றவர்…மேனஜரைப் பார்த்து டூ இட் வாட் ஐ சே……கான்சல் ஆல் ஹிஸ் கான்ட்ராக்ட்ஸ் டுடே இட்செல்ஃப் என்கிறார்.

எஸ் ஸார்….மேனஜர் குழப்பத்தில் அங்கிருந்து நகர்கிறார்.

கைபேசியை எடுத்து …”ம்….நான் தான்பா…’வானவில்’ லிடமிருந்து எங்க எல்லா விளம்பரமும் கான்சல் பண்ணியாச்சு.

ஆமாம்…..அப்படியே ‘பொதிகை டிவி. க்கு’ மாத்தி விட்டுடு…!

நான் ஒருத்தன் வெளிய வந்தால் போதும்..மத்த எல்லாம் ஒண்ணு ஒண்ணா வெளிய வந்துடும்….!

கைபேசியை மூடியவர், சுழல் நாற்காலியில் ஒரு முறை வேகமாகச் சுற்றிவிட்டு…..” எரியற கொள்ளியைப் பிடுங்கியாச்சு….இனிமேட்டு தானே கொதிப்பது அடங்கிடும்…”

பாடகி பைரவிக்கும் பரிசுத் தொகை போய் சேரலை. என் மகனுக்குப் பார்க்கணும்னு நினைச்ச பொண்ணு மாதவி…அதையும் கெடுத்துட்டான்.

என்கிட்டே மோதினா என்ன நடக்கும்னு வேடிக்கை பார்க்கட்டும். வானவில் எவ்ளோ சீக்கிரமா மறைஞ்சு போகும்னு அந்தச் சுள்ளானுக்குக் காமிக்கிறேன்…சொன்னவர் கோபத்தோடு சபதம் செய்வது போல டேபிளை ஓங்கிக் கையால் குத்துகிறார்.அதில் வலியும்…வஞ்சமும் இருந்தது.

தி கிராண்ட் ஹோட்டலில் மாதவிக்காக காத்துக் கொண்டு ரமேஷ் அமர்ந்திருந்தான். தூரத்தில் ஒயிலாக மாதவி நடந்து வருவதைப் பார்த்ததும் சற்றே நிமிர்ந்து உட்கார்ந்தபடி புன்னகையோடு அவளை வரவேற்றான் ரமேஷ்.

சாரி…வந்து ரொம்ப நேரமாச்சா…?

காத்துக் கிடப்பதிலும் காக்க வைப்பதிலும் தனி சுகம் இருக்கும் மாதவி… அவனது கண்கள் அவளது உடலைத் துளைத்தன.

மாதவி நெளிந்தாள்.

மாதவி…உன் வெற்றிக்காக இதோ இந்த ஸ்மால் கிஃப்ட்..என்று ஒரு நகைப் பெட்டியை நீட்டுகிறான்.

என்னது..? எதுக்கு?

நீ ஜெயித்ததற்கு…திறந்து தான் பாரேன்….நான் சொல்ல மாட்டேன்…நீ பார்க்கணும்..உன் பரவசத்தை நான் ரசிக்கணும்.

ம்ம்ம்ம்…என்று பெட்டியைத் திறந்தவளுக்கு முகத்தில் கோடி மின்னல் கீற்றுக்கள்…..அத்தனையும் வைரங்கள் பதித்த நெக்லஸ் பள பள வென்று டாலடிக்கிறது…மாதவியின் முகத்தில் பேராச்சரியம்.

எதுக்கு இவ்வளவு காஸ்ட்லி கிப்ட். பத்து லட்சம் இருக்குமே? பரிசுத் தொகையை விட ரெண்டு மடங்கு…..அல்லவா?

இந்தச் உயிர்ச் சிலைக்கு விலையே இல்லை மாதவி!

என்னை எதுக்கு விலை பேசணும்?

உன்னை விலை பேசவில்லை….உன் நேசத்துக்கு ஒரு விலை இருக்குமே?

இதெல்லாம் கொடுத்து என்னை யாரும் விலைக்கு வாங்க முடியாதுன்னு உங்களுக்குத் தெரியாதா?

நேரடியா விஷயத்துக்கு வரேன். இந்தக் காதல், கல்யாணம், ஹனிமூன் இதிலெல்லாம் எனக்கும் நம்பிக்கையே இல்லை…. நம்ம ரெண்டு பேருக்குமே இந்த ஒரு கருத்தில் மனசு ஒத்துப் போயிருக்கு…தெரியுமா?

ஓ ….உங்களுக்கும் கல்யாண உறவில் நம்பிக்கை இல்லையா ? அதுபோல் எனக்கும் கல்யாணம், பிள்ளை பெறுதல் இதெல்லாம் ஒத்து வராது. நான் வாழ்கை டான்சோடத் தான் .. முகம் புன்னகையில் மலர்ந்தது மாதவிக்கு.

உடனே ரமேஷ், அப்படியென்றால் நாமிருவரும் லிவிங் டுகெடுதருக்கு உடன்படுகிறோம் இல்லையா ?

நீ நிரந்தரமாய் என்னோட பங்களாவுக்கு வந்துவிடு…”கட்டாமலே வெச்சிக்கலாம்” இப்போ என் டிவில ஒரு விளம்பரம் ஓடுதே…..!
உண்மையில அதுக்குத்தான் ஏக டிமாண்ட் தெரியுமா..? ஈட்டி எரிந்தது தெரியாமல் சிரிக்கிறான் ரமேஷ்.

மாதவிக்கு சதக்கென்று நெஞ்சில் சுத்தியல் அவன் குத்தியது போலிருந்தது.. திடுக்கிட்டாள்.

அவனது வக்கிரம் புரிந்து கொண்டவளாக எதுவும் பேசாமல் எழுந்தவள் அவனைத் திரும்பிப் பார்க்காமல் ஹோட்டலை விட்டு வெளியேறினாள் .



டேபிள் மேலே மாதவி எடுத்துக் கொள்ளாமல் தவிர்த்து விட்டுப் போன வைர நெக்லஸ் அவனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தது போலிருந்தது ரமேஷுக்கு. அவமானப் படுத்தி விட்டுப் போயிட்டாள் என்னும் கோபத்தோடு அதை எடுத்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டே….ஷிட்..! எவ்வளவு துணிச்சல் இவளுக்கு…மதிப்புத் தெரியாமல் தூக்கி எரிஞ்சுட்டுப் போறாள் தான் பெரிய அழகின்னு கர்வம். என்கிட்டயே இவளோடு திமிரைக் காண்பிக்கலாமா? இவளுக்கு…..நான் யார்ன்னு காண்பிக்கணும். அவன் இதயத்தை ஏமாற்றம், இயலாமை, பொறாமை, புறக்கணிப்பு அனைத்தும் ஈட்டிபோல் குத்திக் கிழித்தன. ரமேஷ் மிகுந்த கோபத்தோடு…. “உன் கொட்டத்தை நான் அடக்கறேன். ”கவரிமானா நீ ….. உயிர் துறக்கத் தயாராக இரு…” மனதுக்குள் கருவிக் கொண்டான். அப்படியே ஓடோடி வந்து வெளியில் பார்க்கும் போது மாதவியின் கார் அரை வட்டம் அடித்து ஹோட்டல் கேட்டைத் தாண்டி இறக்கத்தில் இறங்கி நழுவி விரைந்து கொண்டிருந்தது. அதிலிருந்து கிளம்பிய ஒலி, மாதவி பதட்டத்துடன் இருப்பதாக அலறியது.

என்னை உதாசீனப் படுத்தி விட்டு நீ ஒடறியா …….! என்னை அவமானப் படுத்தி விட்டு நீ எங்கேயும் ஓடிப் போக முடியாது. நீ எங்க போனாலும் பின்னாடி வேதாளம் போல் வருவேன். தானும் அவளது காரை பின்தொடர்ந்து சென்று அங்கிருக்கும் சிக்னல் விழவும் பிரிந்து நின்று விடுகிறான். ரமேஷின் கண்கள் முன்பு மாதவியின் கார் சிக்னலைத் தாண்டிப் பறந்தது…..சிகப்பு விளக்கு 14,13,12,11,10….என்று எண்ணி அவனது பொறுமையை சோதித்துக் கொண்டிருந்தது. அவன் பட்ட அவமானம் அவனைப் பழி தீர்க்கச் சொல்லி ஆத்திரத்தை மூட்டிக் கொண்டிருந்தது. சிக்னல் அவனது பொறுமையைத் தாண்டிப் போய் விட்ட து. அவன் கைகளால் ஸ்டியரிங்கை ஓங்கி அடிக்கிறான். அதற்குள் அவனது கைபேசி அழைக்கிறது. எடுத்துப் பார்த்தவன் ஜே.வி.ஆர் தங்க மாளிகையின் மேனஜிங் டைரக்டரின் அழைப்பு. எடுத்துப் பேசுகிறான்.

அவசரமாக கார் வானவில் ஆஃபீஸை நோக்கி விரைகிறது.

காருக்குள் காரின் வேகத்தைக் காட்டிலும் மாதவியின் மனம் ஓடிக் கொண்டிருந்தது.

‘ச்சே ……..ச்சே ……எவ்வளவு தைரியம் இருந்தால் இப்படி ஒரு கேள்வி அதும் என்னைப் பார்த்துக் கேட்பான்.? இனிமேல் இவனுக்கு என்ன மரியாதை வேண்டியிருக்கு,,,,? எல்லாம் பணத் திமிர்…தான் .!பெண் என்றால் இவங்களுக்கெல்லாம் பார்பி டாலா? இந்த விஷயத்தில் இவனும் தன்னை சராசரி தான்னு சொல்லிட்டான்.

நல்லவேளை…..பைரவி இவனை விட்டு விலகி விட்டாள் …ஒரு வேளை அவளுக்கும் இது போன்ற ஏதாவது அவமானம் நடந்திருக்குமோ.?….அவள் சொல்லவே இல்லையே? இத்தனை நாட்கள் சேர்த்து வைத்த நம்பிக்கை அனைத்தும் சிதறித் தெறித்து விழுந்தது போல…..இதோ இப்பவே நான் நேரா….பைரவியைப் பார்த்துப் பேசினாத் தான் என் மனசு ஆறும்.. அவன் சொன்ன வார்த்தைகள் இவளது உடம்பில் அசிங்கத்தைக் கரைத்து ஊற்றியது போல சுருங்கினாள் .

பைரவியின் வீட்டு வாசலில் நின்ற ஸ்கூட்டரைப் பார்த்ததும், யாராயிருக்கும்….?மனசுக்குள் எழுந்த கேள்வியோடு என்னால் இன்று இந்த விஷயத்தை பைரவியோடு பேச முடியுமா? என்று சந்தேகத்துடன் நுழைந்த மாதவியை முகம் மலர வரவேற்றாள் பைரவி. அங்கிருந்த ஆதித்தனைப் பார்த்து சிநேகமாகப் புன்னகைக்கிறாள் மாதவி.

இப்போத் தான் வந்தேன்…உங்களை இங்கே நான் எதிர்பார்க்கலை. வெரி ஹாப்பி டு மீட் யு…..பை த பை கங்கிராட்ஸ்…! ரொம்பப் பிரமாதமா ஆடினீர்கள் போட்டி போட்ட இருவருக்கும் பரிசுத் தொகையைப் பகிர்ந்து கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் அது போட்டியாக இருந்திருக்காது…இல்லையா? என்கிறார் ஆதித்தன்.

“ஆதிக்கு…உன் நாட்டியம் ரொம்பப் பிடித்ததாம்…உன்னைப் பார்த்து சொல்லணும்னு சொல்லிண்டு இருந்தார்…அதுக்குள்ளே நீயே வந்துட்டே… ” என்று பைரவி சொல்லவும்…!

மாதவி…மனசுக்குள்ளே..’போச்சு
டா….இன்னொரு பிரச்சனையா? என்று நினைத்தவள் பைரவி…..நான் இன்னொரு நாள் வரேன்…இப்போ அவசர வேலையாப் போறேன்…’ என்று சொல்லிக் கொண்டு கிளம்பத் தயாரானாள் .



‘இரு…இரு…வந்ததும் எங்க ஓடறே ….முக்கியமான விஷயமெல்லாம் இருக்கு சொல்றேன் ….ஒரு நிமிஷம்…இரேன்…..மாதவி….ப்ளீஸ்….’. என்று பைரவி கெஞ்சவும், மாதவி அமர்கிறாள்.

“அப்போ நான் கிளம்பறேன், பைரவி…நீங்க பேசிட்டிருங்க…” என்று பைரவியின் பதிலுக்குக் காத்திராமல் ஆதித்தன் கிளம்புகிறார் . மாதவியிடம் ‘போயிட்டு வரேன் என்று சொல்லியவாறு கண்ணியத்துடன் நகர்ந்து விட்ட விதம் மாதவிக்கும் பிடித்திருந்தது.

கேள்விக் குறியாக பைரவியைப் பார்க்க முகம் ஒத்துழைக்காமல் மாதவிக்கு மனம்சோர்வாகவே இருந்தது.

என்ன பைரவி..புது சானலா? என்று கேட்பாள் என்று எதிர்பார்த்து ஏமாந்து போனவளாக ” ஏன் எப்படியோ இருக்கே மாதவி..?.ஆதியைப் பிடிக்கலியா? வேறென்ன பிரச்சனை? என்று கேட்டவள்..பார்த்தியா மாதவி….இந்த ரமேஷிடமிருந்து ஒரு அழைப்பும் இதுவரை வரவில்லை.வராதது எனக்கும் சந்தோஷம்தான். ஆனால் எனக்கு ஆச்சரியமா இருக்கு. ஒரு விதத்தில் இப்போதான் நான் நிம்மதியா இருக்கேன் எப்படி ஒரே நாளில் என்னைத் தூக்கி வீச முடிந்தது அவனால்…?

அப்போ இவனை நம்பி என் வாழ்க்கையை ஒப்படைத்திருந்தால் என் நிலை என்னாவது..? ச்சே…ச்சே….இனிமேல் அவனைப் பற்றி சிந்திப்பது கூட பெரும் பாவம் தான் . இனி அவன் யாரோ நான் யாரோ. அவன் உன்னைப் பார்த்ததும் என்னைத் தள்ளினான்… இல்லை, ரமேஷ் நம் இருவரையும் நேசிப்பது போல் நடிக்கிறான். நம்மில் ஒருத்தி கிடைக்கட்டும் என்று மாற்றி மாற்றிப் பிடிக்கத் துரத்துகிறான். .

பேசிக் கொண்டே போன பைரவியை….ஒரு நிமிஷம்…ஒரு நிமிஷம்…என்று மாதவி குறுக்கிட்டாள் .

சொல்லு மாதவி என்ன சொல்ல வரே நீ ..? அவனுக்கு வக்காலத்து வாங்க நீ இங்க வந்திருக்கேன்னா…என்கிட்டே அதைப் பத்தி இனிமேல் பேசாதே..மாதவி… என்னை முழுசா பேச விடு கொஞ்சம்….இன்று தான் ஆதித்தன் வீட்டுக்கு வந்து ப்ரபோஸ் பண்ணினார். அவருக்கு இத்தனை நாளா கேட்கத் தயக்கமாம்..அம்மாவிடம் சொல்லி என் சம்மதம், அப்பா சம்மதம் கேட்க வந்தாராம். எதுவாயிருந்தாலும் சொல்லுங்கோ, உங்க முடிவைக் கேட்டு நான் என் அப்பா, அம்மாவை அழைச்சிண்டு வரேன்னு சொன்னார்.

என்னால நம்பவே முடியலை. எனக்கும் பூரண சம்மதம்….! ன்னு சொல்லிட்டேன்.

ஒரு கலைஞனால் தான் கலையை ரசிக்க முடியும். அந்த விதத்தில் நான் கொடுத்து வெச்சிருக்கேன். சுயநலமில்லாத அன்பு. எதையும் எதிர் பார்க்காத நட்பு. யதார்த்தமான பரிச்சயம். வெளிப்படையான பேச்சு… இதெல்லாம் தான் ஆதித்தன்..! யாரா இருந்தால் என்ன உண்மை கண்ணில் தெரிந்து விடும்.

என் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கூட ஆதித்தனை ரொம்ப பிடிச்சிருக்கு. இன்னும் கொஞ்ச நேரத்தில் ஜாதகத்தை தூக்கிண்டு பொருத்தம் பார்த்து முஹூர்த்த நாள் குறிக்க கிளம்பிடுவா பாரேன்….அவா ரெண்டு பேருக்கும் இனிமேல் வீட்டில் இருப்பே கொள்ளாது…என்று சிரிக்கிறாள்.

ஒரு கலைஞன் தான் நிஜமான ரசிகன்..கலையைப் பற்றி அதை அறிந்தவனுக்குத் தான் அதன் அருமையும் தெரியும் . புரிந்து ஆராதிக்கவும் முடியும்..என்ன சொல்றே நீ மாதவி…? நான் சொல்வது சரி தானே.? இதை நான் போன வாரம் நம்ம நித்யஸ்ரீ ஆத்துக்குப் போனபோது புரிஞ்சுண்டேன்….அவர்களுக்கு என்னால் ஆறுதல் கூட சொல்ல முடியலை…அவள் தான் மனசுக்குள் அத்தனையையும் வெச்சு அழுத்திண்டு இருந்தாலும் வெளியில் இம்மி கூடத் தெரியாமல் வளைய வந்தாலும் பாரேன்…அவர் செய்த காரியத்தில் அவளை சுக்கல் சுக்கலா ஆக்கிட்டார்.

ஆமாம் பைரவி….அது ரொம்ப கொடுமை….இந்த ஆண்கள் எப்போ எப்படி மாறுவான்னு தெரிய மாட்டேங்கறது..ஆனால் அவாளைக் கேட்டால் பழியைத் தூக்கி நம்ம தலையில் போட்டுடுவா. ஒருவிதத்தில் நீ எடுத்த முடிவு ரொம்ப சரி தான். எனக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்கு பைரவி.

நாம் ரெண்டு பேரும் இப்படி ஃப்ரீயாப் பேசிக்கணும்னு தான் ஆதி உன்னைப் பார்த்ததும்….ஓடிட்டார்….என்று சிரித்தவள் இந்தா ஸ்வீட்ஸ் எடுத்துக்கோ…அவர் தான் வாங்கிண்டு வந்தார்… என்று தட்டை நீட்டிய பைரவியை ‘இருக்கட்டும்’ இப்போ வேண்டாம் என்று கைகளால் விலக்கினாள் மாதவி.

அவளது இந்தப் போக்கு பைரவிக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது.

என்னாச்சு மாதவி…? உனக்கு ஆதித்தனைப் பிடிக்கலையா? அப்பாடி..! என்கிறாள்…நெஞ்சில் கை வைத்தபடியே…பொய்யாக நடித்தபடி.

திடீரென பைரவி ஆதி புராணம் பாட ஆரம்பித்தது…மாதவிக்கு அப்போது இருந்த சூழலில் சிறிது எரிச்சலாகத் தான் இருந்தது. இருந்தும் அதை வெளிக் காட்டாமல்…

“அது சரி பைரவி….நானே ரொம்ப குழப்பத்தில் இருக்கேன்…உன்னோட அவசரமாப் பேசணும்னு ஓடி வந்தேன்…கொஞ்சம் எனக்காக காதைக் கொடேன்..!

ஐம் சாரி….சொல்லு மாதவி…என்னாச்சு..?

இன்னைக்கு வரச் சொல்லிக் கூப்பிடாறேன்னு ஹோட்டலுக்கு லஞ்சுக்குப் போனேன். பைரவி….அங்கு வந்ததும் உடனே ஒரு வைர நெக்லஸ் பரிசு கொடுத்து எனக்கு அதிர்ச்சி உண்டாக்கினார். முதலில் ஐந்து லட்சம் பரிசு ! இப்போ அதையும் மிஞ்சிய வைர நெக்லஸ் அன்பளிப்பு ! எனக்கு புரியவில்லை. …ஏதேதோ பேசிக் கொண்டிருந்த ரமேஷ் திடீரென இப்படிச் செய்ததை நான் எதிர் பார்க்கவே இல்லை….அந்த நேரத்தில் .’என்னோட லிவிங் டு கெதர் ‘ வர சம்மதமான்னு பட்டெனக் கேட்டான்…. எனக்கு எலெக்டிரிக் ஷாக் அடித்தது ! நான் பட்டென்று எழுந்து அப்படியே வந்துவிட்டேன்.

இடியட்… அதை அவன் கேட்டதும்..என் உடம்பு முழுதும் பதறியது.. எப்படி பைரவி..எப்படி?..இப்படி ஒரு வார்த்தை… என்னைப் பார்த்தால் அப்படியா தெரியறது. என் அம்மா காதில் இந்த வார்த்தை விழுந்தால் அவ்ளோதான். என்னால் ரமேஷ் இப்படி பேசுவான்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை.

திடுக்கிட்ட பைரவி….” ஓ …மை காட்….உன்னையும் அப்படியாக் கேட்டான், நீ ஏன் பேசாமல் எழுந்து வந்தே……? கன்னத்தில் பளார்னு ஒண்ணு விட்டுட்டு வர வேண்டியது தானே? சும்மா ஏன் பயந்துட்டு வந்தே..என் கிட்ட கூட ஒரு நாள் காரில்….என்றவள் ஆள் வரும் சப்தம் கேட்டதும் அப்படியே பேச்சை நிறுத்தினாள் பைரவி.

அதே சமயம் டிரைவர் ரத்தினம் உள்ளே நுழைகிறார் …..”பைரவியம்மா …இந்தாங்க நீங்க கேட்ட செய்தித்தாள் என்று கொடுத்து விட்டு…வழியில் நம்ம ஆதித்தன் ஸாரைப் பார்த்தேன்…..வண்டியை நிறுத்திட்டு பேசிட்டுப் போனார்மா..ரொம்பத் தங்கமானவர் … என்றவர். அங்கிருந்த இறுக்கமான சூழ்நிலையை உணர்ந்தவராக…..ஏதாவது பிரச்சனையுங்களாம்மா..?

ஒண்ணுமில்லை…ஒண்ணுமில்லை … என்று அவசரமாக மறுத்தவள்….. நீங்க கிளம்புங்க ரத்தினம்…என்றவள் ஏதோ நினைத்தவளாக… இல்ல… இல்ல நீங்க இருங்க கொஞ்சம்….மாதவியை இன்னைக்கு அவங்க வீட்டில் டிராப் பண்ணிடுங்க ப்ளீஸ்….என்கிறாள்.

அதுவரைக்கும் நான் கொஞ்சம் வெளிய வெயிட் பண்றேன்மா…என்று ரத்தினம் நகர்ந்தாலும் மனசுக்குள் ‘இவங்க ரெண்டு பேர் முகமும் சரியாயில்லையே….என்னவோ நடந்திருக்கு…என்னவாயிருக்கும் ? மனம் சிறிது கேளேன்,,,என்று கட்டளை போட்டது.

ரத்தினமும் கதவருகே நின்று காதைத் தீட்டினார்.

அதற்குள் மாடியிலிருந்து இறங்கி வந்த பைரவியின் அம்மாவும் அப்பாவும்.. ‘அட….மாதவியா..வா…வா….வா...நல்ல நேரத்தில் வந்திருக்கே…..ஒருவழியா பைரவிக்கு மனசுக்கேத்த மாப்பிள்ளை வந்தாச்சு… இனிமேல் நல்லபடியாக் கல்யாணம் பண்ணிப் பார்க்கணும்… அதுக்கு நாள் குறிக்கத் ஜோசியரைப் பார்க்கப் போறோம்..கொஞ்சம் நீயும் பைரவிக்குத் துணையாக இங்கயே இரேன்…பைரவியோட பேசிண்டு.. நாங்க வரும் வரை. நாங்க கார்ல தான் போறோம்….ரத்தினத்தைக் கூப்பிடும்மா பைரவி…என்ற அப்பா ஷூவை மாட்டிக் கொள்கிறார். அம்மா பட்டுப் புடவை சரசரக்க ’நாங்க சீக்கிரமா வந்துடறோம்…’
அதான்…இன்று ஆதித்தன் உனக்கு கொண்டு வந்து கொடுத்தாரே ‘பேப்பர் ஸ்ப்ரே “. சமயத்தில் அதை கையில் வைத்துக் கொள்வது கொஞ்சம் நிம்மதி தான். எதுக்கும் வெச்சுக் கோங்க… நாங்க சீக்கிரமா வந்துடுவோம்.

அம்மா அது பேப்பர் ஸ்ப்ரே இல்லை…பெப்பர் ஸ்ப்ரே….என்று சிரிக்கிறாள் பைரவி.

இதென்ன புது வித ஸ்ப்ரே……..! என்ன வாசனை வரும்..? ‘ வீணை போச்சு வாசனை வந்தது…டும்…டும்… டும்…டும்..! ‘என்று மாதவி அந்த ஸ்ப்ரே பாட்டிலை தலைக்கு மேலே தூக்கி வைத்தபடி ஆட்டிப் பார்த்து சிரிக்கிறாள்.

சீரியசாப் பேசும்போது என்ன பாட்டு வேண்டியிருக்கு உனக்கு….? வெடுக்கெனப் அதைப் பற்றிய பைரவி….இது மும்பைக்கு நாங்க போயிருந்தப்போ அந்த ஹோட்டலில் ரூமுக்கு ஒரு காம்ப்ளிமெண்டா தந்தது. தனக்குத் தேவைப் படாது என்று ஆதித்தன் இன்று தான் என்கிட்ட தற்காப்புக்கு உபயோகப் படுத்திக்கோன்னு கொடுத்தார். இது டேஞ்ஜர். இங்க தா.. என்றவள் அதை வாங்கி ஒரு ஓரமாக வைக்கிறாள் பைரவி.இதே போல என்கிட்டே ஒண்ணு இருக்கு அதை உனக்குத் தரேன் நீ எடுத்துக்கோ.

ரமேஷ் மாதிரி ஆண்களுக்கும்
உபயோகப் படும். என்று மெல்லிய குரலில் சொல்கிறாள் மாதவி.

இதற்குள் அப்பாவையும் அம்மாவையும் ஏற்றிக் கொண்டு கார் கிளம்பிச் சென்றது. ரத்தினம் மனசுக்குள்….இந்த நேரம் பார்த்து நான் இல்லாமல் போயிட்டேனே….என்னமோ பயங்கரம் நடக்கப் போகிறது…இதை எப்படி ஐயாட்ட சொல்லுவேன்….என் மனசே சரியில்லையே….எப்படி இந்தக் காரை விட்டு நான் வீட்டுக்குப் போவது..? அய்யா முதல் தடவையா ஜோசியர் கிட்ட போகும்போது அபசகுனம் மாதிரி…நான் ஒண்ணும் பேசக் கூடாது….’ஐயனாரே….வீட்டுல ரெண்டு பெண்களும் தனியா இருக்காங்க..நீ தான் துணையா இருக்கணும்’ என்று வேண்டிக் கொண்டார் ரத்தினம். கார் இவர்கள் இருக்கும் ரோட்டைக் கடந்து மெயின் ரோட்டில் பறந்தது. காருக்குள் அய்யாவும், அம்மாவும் ரொம்ப சந்தோஷமாக ஆதித்தனைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

எதிர்புறத்தில் இவர்கள் காரை வேகமாகக் கடந்து சென்ற ரமேஷின் கார் மெல்ல பைரவி வீடு இருக்கும் தெருக்குள் நுழைவதைக் கண்ட ரத்தினம்…..’ அம்மா…இன்னைக்கே கண்டிப்பா ஜோசியர் வீட்டுக்குப் போகணுமாம்மா… அந்த வானவில் ஓனர் ரமேஷ் நம்ம வீட்டுப் பக்கம் போறா மாதிரி தெரியுதுங்கையா’…என்று தயக்கத்துடன் சொல்கிறார் ரத்தினம்.

ரமேஷின் கார் பைரவியின் வீட்டை நெருங்கி நிற்கிறது . மாதவியின் காரும் அங்கு நிற்பதைக் கண்டு சிரித்துக் கொள்கிறான் ரமேஷ். அவன் முகத்தில் குரூரப் புன்னகை கோரமாக முற்றுகை இட்டது. அவனது வலது கை தானாக நிதானமாக பாண்ட் பாக்கெட்டுக்குள் நுழைத்து தடவிப் பார்த்து திருப்தி அடைகிறது. அதனுள் ‘திராவகம் ‘ தயாராக மாதவியின் முகத்தை அழிக்கக் காத்திருந்தது.


என்ன சொல்றே நீ ரத்தினம்..? நாம இன்னிக்கு கண்டிப்பா போறோம். அந்த ஜோசியர் கிட்ட அப்பாயிண்ட்மெண்ட் கிடைப்பதே கஷ்டம். இப்பப் போய் நீ இப்படிக் கேட்கறியே....வேண்டாம்...வேண்டாம் நீ பாட்டுக்கு வண்டியை ஒட்டு...நான் பைரவி கிட்ட பேசிக்கறேன். அவளுக்கு ஒண்ணும்  ஆகாது. வேணும்னா ஆதித்தனை போய் பார்த்துக்க சொல்றேன். அதுவும் தேவையிருக்காது. பைரவியே பார்த்துக்குவா.அவ தைரியசாலி. அதான் மாதவி கூட இருக்காளே...பிறகு என்ன...? நாம போயிட்டு வந்துடலாம்.பைரவியின் அப்பா தனது கைபேசியை எடுத்து பைரவியை அழைக்கிறார்.
  
பைரவியின் வீட்டு வாசற்படியை மிதித்தவுடன், முதல் முறை தான் வீணையோடு ஏறி வந்த காட்சி ஆழ்மனத்தின் உள்ளிருந்து மேலெழுந்து மிதந்து வந்தது ரமேஷுக்கு.  "பைரவி....மாதவி..நீங்க ரெண்டு பேருமே  என்னை ஒரு விதத்தில் ஏமாற்றி ஏளனப்படுத்தி  ஒதுக்கிட்டீங்க , அதுக்கு ஏத்த பரிசை நானும் உங்களுக்குத் தரேன்....வாங்கிக்கோங்க....வாழ்நாள் பூரா நினைவில் நெஞ்சோடு கனக்கும் பரிசு .அது ...ரமேஷ் ஸ்பெஷல் .".என்று  ஆங்காரமோடு காலிங் பெல்லை நாலுமுறை அழுத்துகிறான் ரமேஷ். ஒரு வஞ்சத்தைத் தீர்த்து முடிக்க வேண்டிய அவசரம் அவனது கண்ணில் குடி கொண்டிருந்தது.

நாம் யார் மீது அளவுக்கு அதிகமாக அன்போ பாசமோ வைக்கிறோமோ அவர்கள் மீது தான் பின்னாளில் கோபமோ ,வெறுப்போ  கூடி வரும் என்று யாரோ சொன்னதாகப் படித்தது நினைவில் மின்னல் வெட்டியது. "அது தான் இது"...இப்பத் தான் புரிஞ்சது.. மீண்டும் ஒரு முறை காலிங் பெல்லை வேகமாக அழுத்துகிறான். 

அது யாருமே இல்லாத வீட்டில் நீ எத்தனை தடவை தட்டினாலும்  யார் வந்து கதவைத் திறப்பாங்க ? என்பது  போல கதவு மௌனம் காத்தது.

சரி...அவங்க வீட்டுக்கு உள்ள இல்ல போல...பைரவியின் காரைக் காணமே...கொஞ்ச நேரம் கழித்து மறுபடியும் வரேன்..அது வரைக்கும்  காரில் உட்கார்ந்திருப்போம்..என்று திரும்பி காரினுள் ஏறி ஏசி யை  ஆன் செய்து விட்ட படி...."எங்க போய்டுவீங்க....எங்கே போனாலும் இங்க தானே  வந்தாகணும்...எங்க போகணும்னாலும் கதவைத் தானே திறக்கணும் " மரத்தடி புலி மாதிரி உட்கார்ந்தாப் போச்சு. அது வரை...மீண்டும்...மதியம்  ஜே.வி.ஆர் தங்க மாளிகையின் மேனஜிங் டைரக்டர்  தனது ஆபீசுக்கு வந்து அமர்ந்து பேசியது நினைவுக்கு வந்து மனது அசை போட்டது. அது எரியும் நெருப்பில் நெய் ஊற்றியது போல..எகிறியது..

என்ன ரமேஷ்....ஏதோ...உங்க அப்பாவோட பழகின  பழக்கத்துக்கு உனக்கு என் கம்பெனி கான்டிராக்ட் எல்லாம் கொடுத்தேன். நீயும் ஆரம்பத்தில் ரொம்ப நல்லாத் தான் பண்ணிட்டு வந்தே...உன் 'வானவில் ' இப்போ நிமிர ஆரம்பிச்சு இருக்கு. சந்தோஷம் . ஆனால்,...அந்தப்  பாடகிக்கு கொடுக்க வேண்டிய பரிசுப் பணம் தான் மாதவிக்கு நீ கொடுத்து அந்தப் போட்டி நிகழ்ச்சியில் என்னை ஏமாத்தி ,இப்போ என்னையே இங்க வர வெச்சிருக்கே. உனக்கே புரிஞ்சிருக்கும்னு நினைக்கறேன். என்று சொல்லி முடித்து விட்டு தொண்டையைச் செருமிக் கொண்டார் அவர்.

அது வந்து அங்கிள்....நீங்க நினைக்கறா  மாதிரில்லாம் ஒண்ணுமே இல்லை. நீங்க மட்டும் எப்படி போட்டின்னு வெச்சுட்டு அந்தப் பரிசு பாடகி பைரவிக்கு மட்டும் போகணும்னு சொல்ல முடியும்?. இது என்னோட சானல் நிகழ்ச்சி. ஒரு நல்ல டி ..ஆர்..பி. ரேட்டிங் கிடைக்க இது போலத் தான் செய்யணும். அடுத்து நான் "ஏர்டெல் " கம்பெனி கூட ஒரு ப்ரோகிராமிற்கு நேரடி ஒளி பரப்புக்காக பேசிக் கொண்டிருக்கிறேன்...இதெல்லாம் தான் எங்க சானலோட  சிறப்பு அம்சம் . ரமேஷின் குரலில் தொனித்த கர்வம் அவரையும் பதில்  பேச வைத்தது.

நான் ஒரு விஷயம் கேள்விப் பட்டேனே...நீ என்னமோ அந்தப் பாடகியோட...! அப்டிப் பார்த்தால் அவளுக்குத் தானே நீ பரிசை அள்ளித்   தந்திருக்கணும்.?

அது இப்போ உங்களுக்குத் தேவையில்லாத விஷயம். ! மாதவி அவனை உதாசீனப் படுத்திவிட்டுப் போன ஆங்காரத்திலும், ஏமாற்றத்திலும் தனக்கு முன்பு யார் இருக்கிறார் என்பதைக் கூட உணராமல் புத்தி மட்டு வார்த்தைகள் அவனை விட்டு அம்பென வெளியேறியது.

அதான் கெண்டையைப் போட்டு விராலை இழுக்கறியாக்கும்...அவர் குரலில் ஏளனம் தொனித்தது .

உங்களுக்கு இப்ப என்ன வேணும், அங்கிள்..?

உன்னோட 'விட்டேத்தியான போக்கு ' உன்னோட ஆக்கத்தை அழிச்சுடாமப் பார்த்துக்கோ...எதையும் பணத்தைப் போட்டு ஆரம்பிச்சுடலாம். ஆனால் அதை கவனிக்காமல் , சட்டை செய்யாமல் விட்டுட்டா பின்னாடி அதுவே உன்னைப் பிடித்து இழுக்கும்.
பதவி வரும்போது தான் பணிவும் வர வேண்டும்....என்னமோ இந்தக் காலத்தில் பதவி வந்ததும் எல்லாருக்கும் 'பந்தா' தன்  குறைச்சல் இல்லாமல்  வந்துடறது. ஆமா அந்தப் பொண்ணு மாதவியோட நம்பரைக் கொடு. அத்த வாங்கிண்டு போகத் தான் இங்க நேரில் வந்தேன்.

ஆமா...நேற்று உங்க ஆஃபீஸ்லேர்ந்து ஃபோன் வந்ததே... நீங்க உங்களோட விளம்பர கான்ட்ராக்டை "வானவில் "லில் இருந்து கான்சல் பண்ணப் போறதாக...?  பிறகு எதற்கு மாதவியோட தொலைபேசி நம்பர் உங்களுக்கு?

அவங்களைத் தான் இனிமேல் நான் என் கம்பெனியின் பிராண்ட் அம்பாசடராக எடுத்துக்கலாம்னு நினைக்கறேன்.  முடிஞ்சா என் மகனுக்குக் கட்டி வெச்சு எங்க வீட்டு மருமகளாக் கூட ஆக்கிக்குவேன். உனக்கென்ன?

இவன் ரத்தம் கொதித்தது...அதைப் புரிந்து கொண்டவர் முகத்தில் ஒரு மந்தஹாசம்..

அப்போ எங்க காண்ட்ராக்ட்..!?

உன் அசட்டையால் நீ அக்ரிமென்ட்டுல  கூட கையெழுத்துப் போடலைங்கறதை  ஞாபகம்  வெச்சுக்கோ...நான் அதை "பொதிகைக்கு" மாத்தி விட்டாச்சு. நீ 'எர்டேல்லோ.....டோகோமா' வோ ஏதாவது தனியார் கம்பெனியைப் பார்த்துக்கோ. எழுந்தார். 

அப்போ...நான் கேட்ட  ஃபோன்  நம்பர்..? என்று செருமினார்.

வேண்டா வெறுப்பாக ஒரு பேப்பரில் மாதவியின் கைபேசி எண்ணைக்  கிறுக்கியபடி எழுதி அவரிடம் நீட்டியது தான் நிமிஷத்தில் மனசுக்குள் பளிச்செனத் தோன்றியது. "அந்த முகத்தைப் பார்த்துத்  தானே...." இவ்வளவு பேச்சு....! அவளிடம்  அழகு இல்லையானா உங்களால என்ன செய்ய முடியும்? இல்லை அவளாலத் தான் என்ன செய்ய முடியும்..? இதோ இதுக்கெல்லாம் நானே  வைக்கறேன் ஆப்பு..! ரமேஷ் கருவிக் கொள்கிறான்.

ஏறி வந்த ஏணியை ஞாபகம் வெச்சுக்கணும்....இறங்கும் போது  தேவைப் படும். அந்தத் துண்டுப் காகிதத்தை தன்னுடைய கோட்டுப் பாக்கெட்டில் திணித்தபடியே ரமேஷின் முகத்தைப் பார்க்கிறார் அவர் .

அதெல்லாம் மறுபடியும் இறங்கறவங்களுக்குத் தான். என்னோட தியேட்டர் அக்ஷயபாத்திரம்...மாதிரி !..இப்போ அங்கே "மாற்றான்" ஓடிண்டு இருக்கு....காம்ப்ளிமென்ட் பாஸ் தரேன்.....வாங்கீண்டு  போங்க. பிசினஸ் பண்றது எப்படின்னு கொஞ்சமாவது புரியும்.  திமிரோடு பேசினான் ரமேஷ்.

நீ அடிபடாமல் திருந்த மாட்டே....! அவர் கொடுத்தது சாபமா..? அது பலிக்குமா?


அடிபட்ட பாம்பு போல அவர் வெளியேறினார்.அவர் மனத்தில் "எப்பேர் பட்டவர்கள் , என்  நண்பர்...! அவங்களுக்குப் போய் இப்படி ஒரு தருதலை! அவங்க பேரைக் கெடுக்க இப்படி ஒண்ணு .!குடும்பத்து  கோடாலிக் காம்பு.! அவர் தனது தலையைத் தட்டி விட்டுக் கொண்டபடியே கிளம்பினார்,

அவர் சென்றதும் ரமேஷுக்குள் உறங்கிக் கொண்டிருந்த மிருகம் விழித்தது. கூடாது...கூடவே கூடாது....அவளை இனி எந்தச்  
சானலில் இருந்தும் யாருமே   அழைக்கக்  கூடாது. அவளுக்கு இனிமேல் நாலு சுவர் மட்டும் தான் ஆயுள் தோழன். கண்ணாடி கூட அவளைப் பிடித்து வெளியேத்  தள்ளி விட வேண்டும். அதுக்கு ஒரே வழி...? என்ன வழி..? என்ன வழி..? இதோ போறாரே...என் பையனுக்குக்  'கட்டி வைப்பேன்'னு சொல்லிட்டு....கட்டி வை....கட்டி வை...! தாராளமாக் கட்டி வையுங்க.... மாதவிக்கு நான் கொஞ்சம் அலங்காரம் பண்றேன்....அதுக்கப்பறமா  யாருக்கு வேணாக் கட்டி வையுங்க. யாரு வேணுமானாலும் போய்  அவளிடம் உரிமை கொண்டாடுங்க.அதுவும் முடியுமா பார்க்கிறேன். மருமகளாம்...! அது உன் பையனோட தலையெழுத்து..!

நினைத்தவன், உடனே இணையத்தில் பழி தீர்க்கும் வழி தேடினான்...நல்லதையும், கெட்டதையும் , கேட்டவர்கெல்லாம் அள்ளித் தரும் 
"கூகுள்".....அவனுக்கு சகாயமாக உபாய வழி சொல்லித் தந்தது. ரகசியமாக 'திரவியத்தில்' திராவகத்தை காண்பித்துக்  கண்ணடித்தது.
முதலில் பயந்தாலும் அவனுக்குள் விழித்த மிருகம் 'அது தான் சரி ' என்று அவனை உற்சாகமூட்டியது. அந்தத் தெம்பை நிறுத்தி வைக்க கொஞ்சம் தெம்பை ஏற்றிக் கொண்டு கிளம்பினான்.

அவனுக்கு 'அது' கிடைப்பது ஒன்றும் பெரிய விஷயமாக இருக்கவில்லை. விசிலடித்தபடியே அரைக் கிணறு தாண்டிய நிலையில் ஒருவழியாக இப்போது பைரவியின் வீட்டு வாசலில்...ரமேஷ்.!


வீட்டின் உள்ளே,.... !

மாதவிக்கு வந்த போனில் அவள் பேசிக் கொண்டிருந்தாள். அவளுக்கு எதிரே இருந்த டிரெஸ்ஸிங் டேபிளில் அவளது அழகுமுகம் உயிருள்ள ஓவியமாய் சிரித்து மகிழ்ச்சியில் மிதந்து கொண்டிருந்தது. போனில் வந்த விஷயம் அவளைச் சிறகடித்துப் பறக்க வைத்தது.

ஃபோனில் ஜே.வி.ஆர் தங்க மாளிகையின் மேனஜிங் டைரக்டர் தான் பேசிக் கொண்டிருந்தார். மாதவியைத்  தான் அவர்களது  பிராண்ட் அம்பாஸடராகத் தேர்ந்தெடுத்து இருப்பதால்...சம்மதமானால் ஒரு முறை ஆபீஸுக்கு வந்து அக்ரீமென்டில்  கையொப்பம் போட்டுவிட்டு....செல்லுமாறும், அடுத்த கட்ட ஷூட்டிங் இருக்குமாதலால் அதைப் பற்றியும் இனி என்ன செய்ய வேண்டும் என்றும்  சொல்லிக் கொண்டிருந்தார்.

மாதவிக்கு தன்  காதுகளையே நம்ப முடியவில்லை. அதிர்ஷ்டக் காற்று தன் பக்கமாக வீசத் தொடங்குவது  போல உணர்ந்தாள் .கண்கள் அலைபாய, வருகிறேன்  ஸார்....வருகிறேன்  ஸார்...என்றாள் .

  
பைரவியின் போனில் அவளது அப்பா பேசிக் கொண்டிருந்தார். 

"இப்போ அந்த ரமேஷின் கார் நம்ம வீட்டுக்கு வந்துண்டு இருக்காம்..எனி டைம்...அவன் அங்க வருவான்...நீங்க ரெண்டு பேரும் எதற்கும் ஜாக்கிரதையா இருங்க..ரொம்ப நேரம் பேச வைக்காமல் சட்டுன்னு நீ அவனைப் பேசி அனுப்பு...இல்லாட்டி இப்பவே நீங்க ரெண்டு பேரும்  கிளம்பி எங்கேயாவது வெளில போய்டுங்கோ ...எதற்கும் ஆதித்தனை வேணா ஃபோன் பண்ணி துணைக்கு வந்து இருக்கச் சொல்லட்டுமா..?  நாங்க சீக்கிரமா வந்துடறோம். இப்ப ஈஸியாக் கிடைத்த அப்பாயிண்ட்மென்ட்...இன்னொரு நாள் கிடைக்குமா தெரியாது...இந்த விஷயத்தில் தடங்கல் வேண்டாமே பைரவி...நீ கொஞ்சம் பார்த்துக்கோ.

அப்பா...நீங்க போயிட்டு வாங்கோ...நாங்க பார்த்துக்கறோம்..!

இருவருமே  மும்முரமாக கைபேசியில் பேசிக் கொண்டிருந்ததால் அழைப்பு மணியின் அழைப்பை அலட்சியம் செய்தனர்.


ஆட்டத்தைக் கலைக்க ஆண்டவனுக்காத் தெரியாது. நாமொன்று நினைக்க தெய்வம் வேறு நினைக்குமே. !  இரு மான்கள் மீது காதல் வயப்பட்டுப் பின் சென்றவன் இப்போது தீப்பந்தம் ஏந்தி கொளுத்த வருகிறானா ? வரட்டும் பார்ப்போம் என்று விதியும் வீதியிலேயே காத்திருந்தது. காத்திருந்தது.

ஒரு தவறான எண்ணம் கூட மனதில் நுழைந்து விட்டால் அதற்கான பலனை எதிர் நோக்கித் தானே ஆக வேண்டும். அரசன் கொன்ற காலம்...தெய்வம் நின்று கொன்ற காலம் எல்லாம் போய் ..இப்போது தவறான எண்ணத்துக்கே தண்டனை கிடைக்கும் காலம் இது என்பதை உணரும் முகமாக.....ரமேஷின் கைபேசி அலறியது. 

தியேட்டர் மேனகேர் ஜார்ஜ் தான்....குரலில் கலவரம்..தெரிந்தது.! பட்ட காலிலே படும் ! கெட்ட  குடியே கெடும். !

ரமேஷ் சார்.... அதிர்ச்சியான சேதி !  எங்கிருந்தாலும் ஓடி வாங்க  !   திடீர்னு மின்கசிவு காரணமா நம்ம தியேட்டர் தீப்பிடிச்சு எரிய ஆரம்பிச்சுடுச்சு...பாதிப் படம் 'மாற்றான்" ஓடிக்கிட்டு இருக்கும் போது ..நடந்தது ! பிரச்சனை பெரிசாகும் போல இருக்கு...நீங்க சீக்கிரமா வாங்க ப்ளீஸ்.

ஓ ...மை...காட்..! என்ன சொல்றே ஜார்ஜ்...!இது எப்படியாச்சு...பதறினான் ரமேஷ்.

அதான் சார்...நீங்க உடனே எங்கிருந்தாலும் கிளம்பி உடனே வாங்க...நான் ஃபயர் ஸ்டேஷனுக்கு ஃபோன்  போட்டாச்சு....வாங்க சார்...ப்ளீஸ் எனக்கு ரொம்ப பயம்மா இருக்கு...கையும் காலும் பதறுது.ன்னு பதற்றத்தோடு சொல்லிவிட்டு  ஃபோனை வைத்தான்.

விஷயத்தைக் கேட்ட மாத்திரத்தில் ரமேஷுக்கு மயக்கம்  வருவது போலிருந்தது.

கோடிக் கோடியாக பணத்தைப் போட்டு ஆரம்பித்த எழில் மிகும் தியேட்டர் "நெருப்பில் சாம்பலாவதா" .?.உடல் பதற வந்த வேலை என்னவென்று மறந்து போய்  பதறியபடி காரை ஸ்டார்ட் செய்தவன் ..போகிற போக்கில் பான்டில் உறுத்திக் கொண்டிருந்த திராவக பாட்டிலை எடுத்துத் தெருவில் 'ஒழிஞ்சு போ' என்றபடியே தூர வீசி எறிய... அது தார்  ரோட்டை உருக்கி  ஆவியாகிக் கொண்டிருந்தது. 
அதிலிருந்து மாதவி, பைரவியின் முகங்கள் தப்பியது.

நீண்ட நாட்கள் கழித்து மனது  முதல்  முறையாக  இறைவனை  நினைத்தது.  அதிகச் சேதம் ஆகாமல் இருக்க வேண்டுமே...எத்தனை பேரோட ஷேர் அதில் இருக்கு? . இந்த நேரம் பார்த்து என்னோட அத்தனை ப்ராஜெக்ட அக்ரீமெண்டும் கான்சல் ஆகி வானவில்லே மூழ்கிற நிலைமைக்கு  வந்து நின்னுகிட்டு இருக்கு.  மாடு மேய்க்காமல் கெட்டது . பயிர் பார்க்காமல் கெட்டது .என்பது போல இப்போது ரமேஷின் நிலை அடியற்ற மரம் போல சாய்வதை உணர்ந்தான்.

இந்தத் தியேட்டர் தானே சென்னையில் 'மாயாஜால்' க்குப் பிறகு மக்கள் விரும்பி வந்து போகிற சினிமா ஹால். இதோட வருமானம் போச்சுன்னா, எல்லாம் அடுக்கடுக்கா அடி வாங்குமே.? எப்படி கரண்ட்லீக் ஆகி இருக்கும். போன மாசம் தான் அதுக்கு புதிய 'ஜெனரேட்டர் செட் ' வாங்கிப் போட்டேன். அப்போ எல்லாம் செக் பண்ணினானே.  இப்படியாகும்னு எதிர் பார்க்கலையே...! காரை ஸ்பீட் பிரேக்கர் பாராமல் ஓட்டுகிறான் ரமேஷ். கண் கெட்ட பின்னே தானே சூரிய நமஸ்காரம்..! சுகவாசிகளுக்கு எல்லாம் அப்படித் தான்...மனசாட்சி இடித்தது.

இப்போது வந்த இந்த விபத்துப் பிரச்சனை  என்னை எப்படி ஆட்டி வைக்கப் போகிறதோ..? இனிமேல் ஒழுங்கா இருப்பேன்....! மனசு ஆயிரம் உக்கி போட்டது.!

இதுக்கெல்லாம் நானே தான்  காரணம்..எத்தனையோ கஷ்டப் பட்டு சம்பாதித்த பணத்தைப் போட்டு இரவும் பகலுமா கஷ்டப் பட்டு நினைத்ததை விட பிரம்மாண்டமான அளவில் செய்து நேரத்தைக் காசாக்கி, காசை வெற்றியாக்கி வெற்றியை வானவில்லாக்கி வளைத்து வைத்து ஊஞ்சலாடும் போது .....தூக்கி எறியப் பட்ட நிலையாக...என்னோட சபலமும், இரண்டு அழகிகளின் மேல் நான் வைத்த ஆசையும் எனக்கே அழிவைக் கொண்டு வந்திருக்கே  நிஜத்தில் மாதவி என் வாழ்வில் காலடி எடுத்து வைத்த நேரம் தான் எனக்கு கெட்ட நேரமா..? இதையெல்லாம் எதையும் நம்ப மாட்டேனே..இப்போ மனசு 'சபலம்' போய்  'சகுனம்' பார்க்க ஆரம்பிக்குதே. இனிமேல் அந்த 'ராகு' மாதவியின் முகத்தில் விழிக்கவே மாட்டேன்.

 இப்போ எனது அழிவைக் கண்டு அவர்கள் மகிழ்ந்து கொண்டிருப்பார்கள். மூழ்கப் போற என்னோட கப்பலை எப்படியாவது காப்பாத்தியாகணும். இந்தத் தியேட்டர் தான் மற்ற என்னோட தொழிலுக்கு ஆதாரமா இருந்தது....அச்சச்சோ..."மாற்றான்" படம் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்குன்னு நினைச்சு சந்தோஷத்தில் இருந்து விட்டேன்..காலையில் அங்கிளிடம்  சவால் விட்டேன் ..என் கர்வம் என்னைத் தின்று விடும்னு அப்போ எனக்குத் தோணலையே ..எத்தனை  உயிர் சேதம் ஆச்சோ...என்னவோ...மனசு அதிவேகமாக அடித்துக் கொண்டது...கண்களில் ஈரம் எட்டிப் பார்த்தது. கல் இதயம் வெடித்துக் கண்ணாடி இதயமாக நொறுங்கிக்  கொண்டிருந்தது.

தப்புப் பண்ணிட்டேன்...தப்புப் பண்ணிட்டேன்...இது நான் செய்த தப்புக்கு தண்டனையா ?.....மனசு  பதறியது.இப்போ என்னால் எந்த பாதிப்பையும் தாங்கிக் கொள்ள முடியாதே.பொறாமை, கோபம் , எரச்சல், ஆற்றாமை , இயலாமை, ஏமாற்றம் எல்லாம் இப்போது கவலையாக மாறி தொண்டைக்குள் உருண்டது.

'இன்சுரன்ஸ் ரினியூவல் ' பண்ணினேனா...தெரியலையே..? ஜார்ஜ் கிட்ட கேட்கணும்....ச்சே.....நான் ஒரு இடியட். சுத்த இடியட்...! ரொம்ப அசால்டா இருந்துட்டேன். அவசர அவசரமாக கைபேசியை எடுத்து "ஜார்ஜ்....இன்சூரன்ஸ் ரெனவல்  பண்ணியாச்சு தானே? என்று கேட்டதும்..

சார்...அது வந்து ..நான் போன வாரம் முழுசும் உங்க கிட்ட வந்து ஒரு கையெழுத்துப் போடச் சொல்லி கூப்பிட்டுட்டே இருந்தேன்..நீங்க தான் பிறகு பார்த்துக்கலாம்னு சொல்லி டிலே  செய்தீங்க  நீங்க ...வரலை....அதனால இன்சுரன்ஸ் ரினியூவல்  பண்ண முடியலை சார். இன்னும் பெண்டிங்ல தான் இருக்கு. ஐ' ம் சாரி சார்...!

ஷிட்.....! உன்னைப் போய்  நம்பினதுக்கு..எனக்கு இதுவும் வேணும்..இன்னமும் வேணும்...!முட்டாளுக்கு கோபம் மூக்குக்கு மேலே என்பது போல ரமேஷ் கோபத்தில் மேனேஜரைத் திட்டுகிறான்.
 

கார் விரைந்து  செல்லும்போதே.....தூரத்தில் விஸ்வரூபமாக கரும்புகை எழும்பி வானத்தை நோக்கி பாய்ந்து கொண்டிருந்தது. மை...காட்.ஐ...லாஸ்ட் எவ்வரிதிங் .! ஐ லாஸ்ட்..மை ட்ரீம்...மை  லைஃப்.! அவன் நெருங்க நெருங்க அனலில் இட்ட துரும்பு போல ஆனான்.

காரை பார்க் செய்து விட்டு இறங்கும் போது பகீரென்ற உணர்வுடன்...யாரோ இருவர் கொஞ்சம் சத்தமாகப் பேசிக் கொண்டிருந்தது இவனைத் துரத்திக் கொண்டு வந்து காதுக்குள் ஈட்டி போலப் பாய்ந்தது.

 "அந்தத் தியேட்டர்  ஓனர் தாம்பா.....ஒரே நேரத்துல ரெண்டு கலைமானை விரட்டிட்டு போனா ....கடைசில  வேட்டைக்காரனுக்கு ஒரு மானும்   சிக்கலையாம்....நம்ம ரத்தினம் தான் ஃபோன்ல சொன்னாருப்பா ....ஹி ஹி ஹி ஹி ஹி...."  அந்தாளு இந்தப் பக்கம் வந்தே மாசக் கணக்கு ஆகுதாம். இப்போ தியேட்டரே பத்திகிட்டு  எரிஞ்சு அவரை வரச் சொல்லிக் கூப்பிடுது...என்று சிரிக்கிறார்.

செல்வம் சேர்ந்த போது அதை அலட்சியமாக வாரி இறைத்த ரமேஷ் ...இனிமேல் ஒவ்வொரு பைசாவுக்கும் அலைய வைக்கப் போகிறது இந்த  "தீ விபத்து"  என்பதை அறியாமல் தனது எரிந்து கொண்டிருக்கும்  தியேட்டரை நோக்கி நாலு கால் பாய்ச்சலில் ஓடுகிறான்.

  
பைரவியின் ஜாதகத்தையும் ஆதித்தனின் ஜாதகத்தையும் ஒன்றுக்கொன்று அருகில் வைத்த படியே தனது மூக்குக் கண்ணாடி மூக்கை விட்டு நழுவ, அப்போதும் நிமிராமல் ஒரு பென்சிலால் கணக்குப் போட்டபடியே....அப்பப்போ தனது விழிகளை  உயர்த்தி ஆவலோடு அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த பைரவியின் பெற்றோர்களைப் பார்த்தார் ஜோசியர்.

உங்க பெண்ணா? அவரது கேள்விக்கு இருவரும் நிமிர்ந்து உட்கார்ந்தபடி 'ஆமாம் ' என்று தலையசைக்கிறார்கள்.

சுத்த ஜாதங்கம்...ரெண்டுமே...அமோகமாப் பொருந்தி இருக்கு. இதோ பார்த்தேளா.....அஞ்சாம் பாவம்..பூர்வ புண்ணியம், புத்திரச் ஸ்தானம்...குரு....நன்னாருக்கு.... யார் உட்கார்ந்துண்டு இருக்கான்னு பாரும்.....ஏழாம் பாவம் பாருங்கோ..! களத்திர ஸ்தானம் நன்னாருக்கு....அட அட அட.....ஒன்பதாம் பாவம்...பாக்கியஸ் தானம்.....நன்னா அமைஜ்சுடுத்து ...அம்சமா இருக்கு. இப்போ ராகு திசையில் புதன் புத்தி...விவாகம் கூடி வரும். ரஜ்ஜு தட்டலை...ஸ்திரீ தீர்க்கம்.... பொருத்தம் அமோகம். பேஷாப் பண்ணி வைக்கலாம்,சொல்லி கொண்டே இருவரையும் பார்த்தவர் .

ஜாதகம் அம்சமாப் பொருந்தி இருக்கு...கவலையே படாதேங்கோ...பெண்ணுக்கும் சரி...பிள்ளைக்கும் சரி இசை ரொம்ப கைவல்யம்...சரி தானே...? சரஸ்வதி கடாக்ஷம் நிரம்பி இருக்கு.

ஆமாம்...ஆமாம்.....! இருவரும் ஆவலுடன் தலையசைக்கவும்.

பின்னே ..!..நானா சொல்றேன்...கட்டம் சொல்றது....! ம்ம்ம்...அப்போ நீங்க இந்த தை மாசத்தில்  கூட முகூர்த்த நாள் பார்க்கலாம்.ஜாதகம் ரொம்ப நன்னாப் பொருந்தி வந்திருக்கு. இது போல அமையறது அதிசயங்காணும் .! பேஷாப் பண்ணி வையுங்கோ. வார்த்தையால் சக்கரை யை அள்ளிப் போட்டார் ஜோசியர்.

அவர் சொல்லச் சொல்ல இருவரின் காதிலும் தேனாகப் பாய ஒரு கட்டுப் பணத்தை தட்சணையாக வைத்து விட்டு முகமெல்லாம் பல்லாக ஜாதகத்தை எடுத்துக் கொண்டு வெளியேறினார்கள் இருவரும்.

வரும் வழியெல்லாம் காரில் பைரவியின் கல்யாணத்தை எப்படச் சிறப்பாக  நடத்துவது என்பதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள் இருவரும்.

ரத்தினத்துக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சி இருந்தாலும்...இன்னொரு பக்கம் பயம் இருந்தது.அதனாலேயே  வண்டியை விரைவாக ஓட்டினார் அவர்.



அம்மா...அம்மா...உனக்கு ஒரு சந்தோஷமான செய்தி சொல்லப் போறேன் ..பீடிகையோடு அம்மாவிடம் பேச்சை ஆரம்பித்தான் ஆதித்தன்.

என்னடா....புதுசா இளையராஜா ட்ரூப்ல உன்னை சேர்த்துண்டு இருக்காளா? அதெல்லாம் நேக்கு சந்தோஷம் தராதுடா...!

அதில்லை.....இப்போ நிஜமாவே உனக்கு  சந்தோஷமான விஷயம் தான்...நீ எதிர் பார்க்கிறது தான் அது.


சொல்லு சொல்லு...சீக்கிரமாச் சொல்லு....கல்யாணம் தானே?  நேக்குத் தெரியும்டா...என்னைக்காவது ஒரு நாள் நீ உன் மனசை மாத்திண்டு வேற ஒரு பெண்ணை கல்யாணம் பண்ண சம்மதிப்பாய் என்று. யாருடா அந்த அதிர்ஷ்டக் காரி...! ஃபோட்டோ இருக்கா...காமியேன்.  இப்போ மட்டும் உன் அப்பா உயிரோட இருந்திருந்தா எவ்வளவு சந்தோஷப் பட்டிருப்பார் தெரியுமா?

என்னம்மா சொல்றே நீ? உனக்குத் என்ன தெரியும் ? யாரைம்மா..../குழப்பத்தில் கேட்கிறார் ஆதித்தன்.

அதாண்டா...இப்போ ரொம்ப பிரபலமா ஒரு பொண்ணு பாடிண்டு இருக்காளே....பைரவி ன்னு.  அவள் முதல் முதலா பாட வாய்ஸ்  டெஸ்டுக்கு வந்த போதிலிருந்து உன் மனசு அவ கிட்ட சரெண்டர்  ஆன விஷயம் நேக்குத் தெரியும்னு சொல்ல வந்தேன் .

அப்பறம்....அவங்க பாடி ரொம்பப் பெரிய இடத்துக்குப் போனதும் நீ திரும்பி வந்துட்ட.....இதெல்லாம் உன் டயரியைப் பார்த்து புரிஞ்சுண்டேன்.மனசுக்குள்ள நினைச்சதை வெளியே சொல்லாமல் மூடி வெச்ச விஷயம் தான் .உன் டயரி சொல்லித்து.

என்ன பண்ண..?அடுத்தவா அந்தரங்கத்தை படிக்கிறது தப்பு தான். அன்னிக்கு நீ பாம்பே போயிட்டு வந்ததும்....உன் டயரி டேபிள்  மேலே இருந்தது. என்னவாயிருக்கும்னு எடுத்தேன்... தப்பு ..தப்பு...இருந்தாலும் படித்தேன். 

நேக்கு மனசு கேட்கலைடா..ஆதி..!  நீயும் கல்யாணம் வேண்டாம்னு சொல்ல ஆரம்பிச்சே..நான் வேண்டாத தெய்வம் இல்லை.  மனசுக்குள்ள நான் எவ்வளவு வேதனைப் பட்டேன் தெரியுமா?

என் வயிற்றில் பாலை வார்த்தே.  இப்போவாவது யாருன்னு சொல்லு உடனே கல்யாணத்தை முடிச்சு வைக்கிறேன். உன் சந்தோஷம் தான் என் சந்தோஷம். என்று சிரித்தபடி தன்னைப் பார்க்கும் அம்மாவிடம்.

அம்மா....அவளே தான் இவள்...பைரவி...! பைரவியைத் தான் இன்று அவாத்தில் போய்  சம்மதம் கேட்டேன்.. அவாத்தில் எல்லாருக்கும் ரொம்ப சந்தோஷம் .சம்மதம்.

என்னது அப்படியே...? ஆனால் நீ அந்தப் பொண்ணு..யாரோ 'வானவில் ரமேஷை'க் கல்யாணம் செய்து கொண்டு விடுவாளோ என்று பயம்மாக இருக்கிறதுன்னு எழுதி இருந்தியே...! உன் டயரியில்...?

அதையும் படிச்சுட்டியா நீ? ஆமாம்...நான் எல்லாரையும் போல அவளைத் தப்பாப் புரிஞ்சுண்டேன்மா...! ஆனால் அதெல்லாம் ஒண்ணுமே  இல்லை. இப்போ நீ வந்தால் அவாத்துக்கு அழைச்சுண்டு போறேன். கிளம்பேன். போயிட்டு வரலாம் உன்னைப் பார்க்கணும்னு சொன்னார்கள் அவாத்தில் .

அதுக்கென்ன...தாராளமாப் போயிட்டு வரலாம். நேக்கும் அவள் பாட்டுன்னா ரொம்பப்  பிரியம். உன் ஆசை வீண் போகலைடா...கண்ணா..!
பகவான் கண்ணைத் திறந்தார்.மகனை உச்சி முகருகிறாள் அம்மா.

பைரவியின் வருங்கால மாமியாரான சந்தோஷத்தில்.இருவரும் பைரவியின் வீட்டை நோக்கிக் கிளம்புகின்றனர்.



தங்களுக்கு வைத்த குறி  தானாக விலகிப்  போன ஆபத்தை உணராத மாதவியும், பைரவியும் ஃபோனில்  பேசிய விஷயங்களைப் பகிர்ந்து கொண்ட படியே  கல கல வென்று சிரித்தபடியே கதவைத் திறந்து வெளியில் வந்து பார்க்கிறார்கள். அங்கு ரமேஷ் வந்து போனதன் அடையாளம் கூட இல்லை.
அடுத்தடுத்த மகிழ்ச்சியாக அம்மாவும் அப்பாவும் ஜாதகம் பொருந்திய சந்தோஷத்தில் வந்திறங்கவும் , அவர்கள் பின்னாலேயே ஆதித்தனும் , அவரது அம்மாவும் வந்து சந்தோஷ அதிர்ச்சி தர....அந்த வீட்டின் ஹாலே மகிழ்ச்சி நிரம்பி வழிந்து கொண்டிருந்தது சந்தோஷ அலைகளாக .

பைரவியின் கல்யாணத்தை இந்த மாசமே  சீக்கிரமா முடிச்சிடறோம்....என்ன மாப்பிள்ளை சொல்றீங்க..?..என்று ஆதித்தனைப் பார்த்து  அவளது அப்பா கேட்டதும்  வெட்கத்தில் குங்குமமாகக்  கன்னம்  சிவந்தாள்  பைரவி.


அடுத்த சில நிமிடத்தில் சன் டிவி  நியூஸ் தொலைக்காட்சியில்  செய்திகளில் தலைப்புச் செய்தியாக வானவில் டிவி ' அதிபரின் திரை அரங்கம் தீக்கரை யானது பற்றிய  சோகச் செய்தியை தனது கணீரென்ற குரலில் நிர்மலா பெரியசாமி வாசித்துக் கொண்டிருந்தார். கூடவே ஆவண  படங்களாக அந்த நிகழ்க்கிகள் காட்சிகளாக ஒளி பரப்பாகிக் கொண்டிருந்தது.

கார் டிரைவர் ரத்தினத்தின் கைபேசி அவரது நண்பர் மூலமாக தகவல் சொல்ல , அதைக் கேட்க கேட்க அவரின்  முகம் இருண்டது.."கடைசீல இப்படியா ஆகணும்..."

சந்தோஷ அலைகள் அந்த ஹாலில் சட்டென அடங்கி "அடப் பாவமே' என்று நிசப்தமானது அவர்களின்  மனங்கள் .

முற்றும்