சனி, 12 ஜனவரி, 2013

வைகுண்டப் பிராப்தம்


வைகுண்டப் பிராப்தம்
Published January 13, 2013 | By ஜெயஸ்ரீ ஷங்கர்






ஜெயஸ்ரீ ஷங்கர், சிதம்பரம்.

காலையில் மூன்றரை மணிக்கெல்லாம் ஜெயா டிவி யில் நேரடி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது ஸ்ரீரங்கத்தின் சொர்க்க வாசல் திறக்கும் நிகழ்ச்சி . எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளம். சொர்க்க வாசல் திறந்ததும்… ஸ்ரீரங்கனின் .தரிசனத்திற்காக உள்ளே நுழையும் பக்தர்களின் கூட்டம் இப்போதெல்லாம் தொலைக்காட்சி இருப்பதால் இப்படிப் பார்த்து ரசிக்க முடிகிறது வைகுண்ட ஏகாதசி அன்னிக்கு சொர்க்க வாசல் நுழைந்து தரிசனம் பண்ணிட்டா வைகுண்ட ப்ராப்தி கிடைக்கும். அதே போல….இந்த ஏகாதசியில் யார் உயிர் விட்டாலும் நேரா வைகுண்டப் ப்ராப்தம் தான் என்று என் பாட்டி சொல்வார்..

முன்பெல்லாம் கோயில் கோயிலா ஏறி இறங்கி நீள வரிசையில் கால் வலிக்க நின்று சொர்க்க வாசல் உள்ளே நுழைந்து வந்த நிம்மதியோடு நாள் பூரா இருப்போம்..இப்போ அப்படியா…? வீட்டுக்குள்ளேயே இருந்த இடத்தில் தொலைக்காட்சியில் பார்த்து ….”ரங்கா..ரங்கா….ன்னு” கன்னத்தில் போட்டுண்டால் போதும்….! சொர்க்கத்துக்கே போயிட்டு வந்த திருப்தி வந்துருது.

நினைத்ததும் நான் வேலை பார்க்கும் மருத்துவமனையில் யார் யார் ரொம்ப உயிருக்குப் போராடும் நிலையில் இருக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றியது . ச்சே…ச்சே..இது என்ன மடத்தனம்…! இறப்பு பொதுவானது என்று மனசாட்சி இடித்தது.

இன்றாவது நேரத்தோடு ஹாஸ்பிடல் போகணும். டாக்டர் பிரியன் வருவதற்கு முன்னாடி நான் அங்கு இருக்கணும். இல்லாட்டா கதை கந்தலாகும். டாக்டர்கள் லேட்டாக வரலாம். டாக்டருக்குப் பிடித்த நர்ஸும் லேட்டாக வந்தால் தப்பில்லை..ரிசப்ஷனில் இருக்கும் நான் லேட்டாப் போனால்..என்னமோ ஹாஸ்பிடலே என் தலையில் ஓடறா மாதிரி முறைச்சுப் பார்ப்பார் பெரிய டாக்டர். நினைத்துக் கொண்டே தயாராகிறேன். ஸ்கூட்டரை விரட்டி அவசரமாக சிக்னலில் போய் நிற்கிறேன். பச்சை விளக்கு வந்தால் தான் இந்தப் பாவை விளக்கு கிளம்பும். எந்தன் பார்வை சிக்னலுக்காகக் காத்திருந்தது. மனம் மீண்டும் வைகுண்டப் ப்ராப்தியை பற்றி எண்ணியது. இந்த விஞ்ஞான யுகத்திலும் இது நடக்குமா? இன்று இறப்பவர்களுக்கு மோட்சமா? காலம் மாறலாம் கால காலமாகச் சொல்லி வைத்த சம்பிரதாயம் மாறுமோ? உலகில் இன்று எத்தனை உயிர்கள் பிரியுதோ ? அத்தனைக்கும் சொர்க்க புரியில் உட்காரவாவது இடம் கிடைக்குமோ ? பாட்டியைத்தான் கேட்கணும் ! அவர் இப்போ அங்க இருக்காரோ…இல்லை மறுபடியும் இங்க வந்து வரிசையில் நிற்கிறாரோ.

ஹாஸ்பிடல் சென்று அரை மணி நேரத்தில் ரத்தம் சொட்டச் சொட்ட ஒரு இளைஞன் அவனை அழைத்து வந்த இன்னொரு இளைஞன் முகத்தில் பீதியோடு “ஆக்ஸிடெண்டு கேசு எல்லாம் இங்க பார்க்கறது இல்ல சார்…ஜி.ஹெச் எடுத்துட்டுப் போங்க ” இதெல்லாம் போலீஸ் கேஸ்….என்று குரல் கொடுக்கிறேன் அதற்குள் பெரிய டாக்டர் அந்தப் பையனின் பரிதாப நிலையைப் பார்த்து, என்னிடம் அட்மிஷன் போட்டு கேஸ் ஷீட் எழுதுங்க என்று கட்டளை போட்டுவிட்டு….சிஸ்டர் ராணி….எங்கே..? பேஷண்ட ஐ.சி.யூ கொண்டு வரச் சொல்லுங்க…என்று வேகமாக நடக்கிறார்.

ஹாஸ்பிடலில் ஒரு அவசரம் தெரிந்தது.

“உடனே இந்த இஞ்ஜெக்ஷனை வாங்கிட்டு வாங்க…” ரொம்ப அவசரம் என்று நர்ஸ் கொடுத்த சீட்டை வாங்கிக் கொண்டு அவசர அவசரமாக மாதவன் மெடிக்கல் ஷாப்பை நோக்கி ஓடுகிறான்.

அரைமணி நேரம் முன்பு கூட சந்தோஷமாக சிரித்துப் பேசிக் கொண்டிருந்த தம்பி பார்த்திபன் வீட்டிலிருந்து அவசரமாகக் கிளம்பி நேராக ஹாஸ்பிடல் படுக்கையில் கிடத்தப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பான் என்று மாதவன் துளி கூட நினைக்கவில்லை.

ஏற்கனவே மெடிகல் ஷாப்பில் கூட்டம்..மாதவனும் கூட்டத்துக்குள் நுழைந்து கொண்டாலும் “தம்பி , இந்தாங்க டாக்டர் சீட்டு, ரொம்ப அவசரம்..இந்த மருந்தை எடுத்துக் கொடுங்க ப்ளீஸ்…ரொம்ப அர்ஜெண்ட்.இவனது அவலக் குரல் அங்கு இருக்கும் எவரிடமும் எடுபடவில்லை. அங்கு மருந்து எடுத்துக் கொடுக்கும் ரெண்டு பேரும் மருந்துச் சீட்டைக் கையில் வைத்துக் கொண்டு ஆளுக்கொரு பக்கமாகத் திரும்பித் தேடிக் கொண்டிருந்தார்கள். காத்திருப்பவர்கள் பொறுமையிழந்து தவிப்போடு நின்று கொண்டிருந்தார்கள்.

“இப்பத்தான் வந்தீங்க, அதுக்குள்ளாற அவசரமா? இங்க நிக்கற எல்லாருக்குமே அவசரம் தான். நானும் எம்மாந் நேரமா ஒரு ஆஸ்துமா மருந்துக்காக சீட்டைக் கொடுத்துப்புட்டு கால்கடுக்க நிக்கிறேன் . இதோ தாரேன்னுட்டு சீட்ட வாங்கிட்டுப் போன தம்பி இன்னும் எதையோ தேடிக்கிட்டே இருக்கு…அங்கன என் ஊட்டுக்காரர் மூச்சிழுக்க முடியாம தவிச்சுகிட்டு கெடக்குறாரு பொறுமை இழநதவளாக …”அந்த மருந்து இல்லை யின்னா சீட்டை திரும்பக் கொடு..எம்புட்டு நேரம் நிக்க…. ஒவ்வொருத்தங்களுக்கும் இம்புட்டு நேரம் பண்ணினா விடிஞ்சிடும்….” எரிச்சலில் கத்திக் கொண்டிருந்தாள் அறுபது வயதில் ஒரு அம்மாள்.

இங்கு நின்று கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது என்றுணர்நத மாதவன் அடுத்த கடையைத் தேடி அவசரமாக ஓடினான்..அடுத்த ஃபார்மஸியில் மருந்தை வாங்கிக் கொண்டு புயல் வேகத்தில் பார்த்திபன் இருக்கும் அறையை நோக்கி ஓடினான். நர்ஸ்…”இந்தாங்க ” என்று மருந்துக் கவரைக் கொடுத்ததும்..அவசரம்னு சொல்லி அனுப்பினாலும் நிதானமா வாரீங்க… நீங்க கொஞ்சம் வெளிய இருங்க முடிஞ்சதும் கூப்பிடுவோம் …….என்று கோபித்துக் கொண்டே கவரை வாங்கியவள்..”இவனுங்களுக்கெல்லாம் அவசரம்னா வீச என்ன வெல ன்னு கேட்பானுங்க…..ஒடம்புல என்ன சுத்த ரத்தமா ஓடப் போகுது….. எல்லாம் மப்பு ரத்தம் தானே ….சலித்தபடியே நிதானமாக மருந்தை எடுத்து டாக்டரிடம் நீட்டுகிறாள்

பார்த்திபனுக்கு முதலுதவி நடந்து கொண்டிருந்தது….ரத்தம் துடைக்கப் பட்டு அதற்குள் ஒரு இடத்தில் தலைமுடி சுத்தமாக மழித்து தலையைச் சுற்றி கட்டுப் போட்டு சுய நினைவில்லாமல் கிடந்த அவனுக்கு ஊசி மருந்தை செலுத்தியபடியே ‘சமயத்தில் நீயும் நல்லாத்தான் பேசுற ராணி….’

இந்த நர்சு தொழிலுக்கு மட்டும் நீ வரலேன்னு வெய்யி….”கோவை சரளா” வுக்கு டயலாக் எழுதிக்கிட்டு சினிமா உலகத்தில் இருந்திருப்பே. அந்தக் காட்டனை எடு என்கிறார் டாக்டர்.

நர்ஸ் ராணிக்கு அடிக்கடி இப்படி பட்டம் தந்து பாராட்டும் இந்த டாக்டர் பிரியனை மிகவும் பிடிக்கும். அதனாலேயே அவர் இருக்கும் போதெல்லாம் ஜோக்கடிப்பதாக நினைத்துக் கொண்டு தன வாய்க்கு வந்ததைப் பேசிக் கொண்டிருப்பாள் .

“வார்ட் பாய்” இவரை தூக்கிட்டு அந்த ஆஸ்த்துமா பேஷன்ட் பக்கத்து பெட்டுல போடுங்க….டிரெஸ்ஸிங் முடிஞ்சிருச்சு…ஒன்னு இழுத்து இழுத்து விடுது..ஒண்ணு இழுக்கவே மாட்டேங்குது…… சொல்லி விட்டு அந்த இடத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தாள்.

வார்ட் பாய் ஒரு ஸ்ட்ரெக்சரைத் தர தரவென இழுத்துக் கொண்டு வந்தான்.

என்ன டாக்டர்….போரூர்ல வீடு கட்டிக் கிட்டு இருந்தீங்களே…எம்புட்டு தூரத்துல நிக்குது….எப்ப கிரகப்பிரவேசம் பண்ணுவீங்க எனக்கு அழைப்பு வருமில்ல, விருந்து சாப்பிட்டு நாளாச்சு…என்கிறாள்.

ஒரு லாரி லோடு மண்ணு தேவயாயிருக்கு..இத்தனை நாளு டிமாண்டுல இருந்துச்சு மணல் கிடைக்காமே ….. அனேகமா இன்னிக்கு மண்ணு லாரி லோடு வந்துரும்ன்னு சொன்னான் மேஸ்திரி. மதியம் தான் சைட்டுக்குப் போயி பார்க்கணும்.ப்லாஸ் டெரிங் வேலைமுடிஞ்சிச்சின்னா பத்தே நாள்ல அவசர அவசரமா வேலைய முடிச்சிர மாட்டேன்……பெறவு தை மாசம் கிரகப்பிரவேசம் தான்..விருந்தெல்லாம் உனக்கில்லாமலா…? வாரியா இன்னைக்கு வீட்டைக் காட்டக் கூட்டிட்டுப் போறேன்.?

கேஸு ஒண்ணுமில்லையின்னா வந்திருப்பேன்….இதோ இப்பப் பார்த்து இந்த ஆக்ஸிடெண்ட்டு கேஸு வந்து நிக்குதே. பார்க்கலாம்….நாளைக்குப் போகலாம்.

எப்பவும் ஒரு கேசு கூட வராது ஒழுங்கா..இன்னைக்குப் பாருங்க எங்கிட்டோ வேகமா வண்டிய ஓட்டிட்டு அலங்கோலமா இங்க வந்து கிடக்கான்…என்று அலுத்துக் கொள்கிறாள். மனசுக்குள்ளார பெரிய ஹீரோன்னு நெனப்பு…இருந்திருக்கும்..! என்று அலுத்துக் கொள்கிறாள் ராணி.

அவர்கள் பேச்சு எங்கெல்லாமோ சென்று கடைசியில் “கும்கி” (புது சினிமாப் படத் தலைப்பு ) வரைக்கும் வந்து நின்றது. கூடவே காப்பியும் சூடாக சமோசாவும்.

வார்ட் பாய் வந்து சொல்கிறான்…ராணிம்மா ….அந்த கேஸை நீங்க சொன்ன பெட்ல போட்டாச்சு..கேஸ்ஷீட் போட்டுக்குங்க..சி.டி ஸ்கேன் பண்ணச் சொன்னாரு பெரிய டாக்டர்.

நான் தியேட்டர் போறேன் என்று சொல்லிவிட்டு அவசரமாக செல்கிறான்.

எங்கடா ‘கும்கி’ யா?.

மதியம் இந்தப் பேஷண்ட்டுக்கு ஆபரேஷன் வெச்சிருக்காரே. பெரிய டாக்டர்..? உங்களுக்கு பிரியன் டாக்டர் பக்கத்துல நின்னா எதுவும் நினைப்புல நிக்காதே. இதெல்லாம் எங்கிட்டுப் போயி நிக்கப் போவுதோ….! தமிழ் நாட்டுல இதெல்லாம் சகஜமப்பா….என்று சொல்லிக் டே நடந்தவன்… ஓரமாக் வந்து கொண்டிருக்கும் பணிப்பெண்ணைப் பார்த்து….ஏய்… வெள்ளையம்மா…இன்னைக்கு என்ன கும்முன்னு இருக்க? என்று ஜொள்ளுகிறான்.

இப்பத்தான் பெருமா கோயிலுக்குப் போயி அங்கிட்டுருந்து அவசர அவசரமா ஓடியாறேன்.என்னா சனங்க கூட்டம்….வைகுண்ட ஏகாதசியாம். அதான் சொர்க்க வாசலண்ட ஒரே கூட்டம்….நொளஞ்சுட்டு ஓடியாறேன்.. என்று மூச்சு வாங்கினாள் .

ஓடு ..ஓடு …..ஓடு ….சீக்கிரமா பாத்ரூமக் களுவிவிடு ….மேடம் வந்துச்சுன்னா உனக்குப் பூசை போட்ரும்…என்றபடி…”ஜிங்கு ஜிங்குன்னு ஜிமிக்கி போட்டு ஜிலு ஜிலுன்னு ரவிக்கை போட்டு..எங்கே நீயும் போறே கண்ணே ரொம்ப வேகமா…” என்று பாடிக் கொண்டே போகிறான்.

அச்சச்சோ மறந்தே போச்சு….டாக்டர், சீஃப் டாக்டர் இப்போ எங்க போயிருக்காரு? இன்னைக்கு மதியம் அந்த ஆக்சிடெண்டு கேசுக்கு தலையில ஆபரேஷன் பண்ணனும்னு ஃபிக்ஸ் பண்ணியிருக்குல்ல என்று டாக்டர் பிரியனிடம் சொல்லுகிறாள் .

அட ஆமா…நீ .தியேட்டர் ரெடி பண்ணு. சொல்லிக் கொண்டே தனது மொபைலில் மேஸ்திரியிடம் தொடர்பு கொண்டு….”நீங்க என்ன செய்வீங்களோ ஏது செய்வீங்களோ எனக்குத் தெரியாது…” எப்பிடியும் இன்னிக்கு பொழுது சாயறதுக்குள்ளார மணல் லோடு சைட்டுக்குப் போயிறணும்…சொல்லிட்டேன். நானும் அங்க வந்து நிக்கிறேன். எந்த சால்ஜாப்பும் இனிமேட்டு என்கிட்டச் செல்லாது. தை மாசம் கிரகப் பிரவேசம் வெச்சுருக்கேன்.. என்று உறுமிவிட்டு கைபேசியை மூடினார் டாக்டர் பிரியன்.

டாக்டர்….நீங்க இப்பப் போட்ட போடுல மண்ணு லோடு பறந்துக்கிட்டு வரும் பாருங்க….யாருகிட்ட…..? உங்ககிட்டயா…….நடக்கும் என்ற ராணி இந்த ட்ராலியைக் கீழ எடுத்துக்கிட்டுப் போறேன் தியேட்டருக்கு… என்கிறாள்.

இந்தா ராணி…. என் மொபைல..நீ வெச்சிரு ..ரொம்ப எமெர்ஜென்சின்னா மட்டும் என்கிட்டே கொடு..ஃபோன் பத்திரம்..டாக்டர் பிரியன் சொல்லி விட்டு நான் பின்னாலயே வரேன்….என்றார் .

சுயநினைவே இல்லாமல் படுத்துக் கொண்டிருந்த பார்த்திபனை பாசத்தோடு பார்க்கிறான் மாதவன். இன்னைக்குன்னு பார்த்து ஆத்துல எல்லாருமா சேர்ந்துண்டு வைகுண்ட ஏகாதசின்னு ஸ்ரீ ரங்கம் போய்ட்டா. எவ்வளவு தடவை அப்பா நம்மளையும் கூப்பிட்டா. துணிய இருக்கும் வாங்கோன்னு..நாம தான் இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை அங்கக் கூட்டத்துல வந்து இடி பட முடியாதுன்னு சொல்லித் தட்டிக் கழிச்சுட்டு போகாமல் இருந்துட்டோம்..இப்ப என்னாச்சு ? தண்ணி லாரி வந்து இடிச்சுத் தவிக்க விட்டுப் போய்ட்டான் .

அம்மா மட்டும் இருந்திருந்தா இப்படியாகி யிருக்குமா?

கார்த்தால எழுந்ததும் காப்பி டிபன் சாப்பிடலாம் வான்னு நான் தான் கட்டாயப் படுத்தி “சரவணா பவனுக்கு” அழைச்சிண்டு போனேன்.

நீ பெரிய துரை ….! சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டே …அதான் காப்பிக்குக் கூட ஹை கிளாஸ் ஹோட்டல்..! நான் தான் இன்னும் கையேந்தி பவன்…..அதும் சில நேரத்தில் கடன்ல..ஓட்டறேன்…என்று சிரித்தான்.

ஹோட்டலை விட்டு வெளியே வந்து நின்று ஆளுக்கொரு ‘தம்’ இழுத்து விட்டு,அப்படியே வயசுக் கோளாறுல ‘சைட்’ அடிச்சுட்டு ஹீரோ ஹோண்டாவை ஸ்டார்ட் செய்து மனசுக்குள்’ ஷாருக்கான்’ போல தன்னையும் நினைத்துக் கொண்டு அறுபதில் அவசரமாகப் பறக்கும் போது…

என்னடா பார்த்தி…இன்னும் ரெண்டே வருஷம் தான்….படிப்பும் முடியும் கையோட காம்பஸ் ல செலக்ட் ஆகிடுவ….அப்பறம் உன்னையும் பிடிக்க முடியாது. அப்போ நீ காப்பிக்கே கூட ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் தான் போவே…நிலைமை மாறும்டா என்கிறான் மாது.

அப்டிப்போடு அருவாள..!..என்று சொன்னது தான் தாமதம்….! அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற அலாரம் தலைக்குள் அடித்துச் சுதாரிப்பதற்குள் ……

எதிரே இவர்கள் சென்ற பைக்கை தக்கென்று அதிர்ச்சி கொடுத்து அவசரமாக மோதி விட்டுப் பறந்தது. அசுர வேகத்தில் ஆளுக்கொரு பகுதியில் சிதறினார்கள். பைக் பார்த்தி மீதே விழுந்தது. மயக்கத்தில் சுயநினைவு இழந்தான் பார்த்தி…லேசான காயங்களோடு தப்பினான் மாதவன்.

இந்த நேரம் பார்த்து விஷயத்தை தெரிவிக்க இயலாமல் அப்பா தன் மொபைலை வீட்டில் வைத்து விட்டுப் போனார்…கூட்டத்தில் மிஸ் ஆயிடும்.நாங்க ஒரே நாள்ல வந்துடுவோம்.என்று நிம்மதியாகத் தான் கிளம்பிச் சென்றார்கள் .பகவானே…பார்த்திக்கு ஒண்ணும் ஆகக் கூடாது, அவன் நல்ல படியாப் பிழைக்கணும். இது தான் விதியா? அப்போ மதி எப்படி வேலை செய்யும்..? பயத்தில் சர்வமும் ஆடிப் போய் அமர்ந்திருந்தான் மாதவன்.

ஆற்று மணல் மேட்டில் நடப்பது வேறு கதை.

எலேய்…மணி….! லோடு என்னாச்சுடா? உன் சோம்பேறித்தனத்துக்கு நான் தான் ஊறுகாயா? நேத்தே சொல்லிப்புட்டேன்…இன்னிக்கு கொண்டாறேன்னு சொல்லிட்டு எங்கிட்டு டேரா போட்டே? டாக்டர் பிரியனின் வீட்டு மேஸ்திரி கத்திக் கொண்டிருந்தான் மணல் லாரிக் காரனிடம்.

மேஸ்தரி…இதோ வந்துக்கிட்டே இருக்கோம்ல…..மார்கழி மாசம் பாரு…ஒரே குளிர் ஊதக் காத்து..அதான் கொஞ்சம் சொகுசா இருந்துப் புட்டேன். .ஆயிருச்சி…வந்துருவேன். மதியம் அங்கன இருப்பேன். வண்டில ஏறி ஸ்டியரிங்கப் புடிச்சா சும்மா தேசிங்கு ராசா கணக்கா வண்டி பறக்கும்ல. பாத்துக்கிட்டே இருங்க சொன்ன நேரத்துக்கு முந்தி அங்கன வருவேன்.

நீ என்ன வேணாச் சொல்லு. ஆனா சொன்னாப்புல வந்து நில்லு. அம்புட்டுதேன்…என்று கறாராகச் சொன்ன மேஸ்திரி, ” ஏ புள்ள குருவம்மா… நாளையிலிருந்து உனக்கு வேலை ஆரம்பிச்சு உன் இடுப்பு ஓடிஞ்சிரும்…… லோடு வந்திருச்சு….இங்ஙன வா புள்ள…மாமன் பக்கத்துல.

தே …பொறம்போக்கு,….நானே அவசரமா டாக்டர் ஐயா ஊட்டுக்கு பாத்திரம் களுவ இன்னும் போவலியேன்னு அவதி அவதியாக் கெளம்பிக்கினு கெடக்கேன்…………….உனக்கு ஷோக்கு கேக்குதோ….! ஒண்ணு வெச்சேன்னா வெலா விட்டுடும்…!

துடுக்காகப் பேசிவிட்டு தலை முடியை உதறி கோடாலிக் கொண்டை முடிஞ்சுகிட்டு சேலை முந்தானையை ஒரு சிலுப்பு சிலுப்பி உதறி இடுப்பில் இறுக்கிச் சொருகியபடி அவசரமாக நடந்தாள் டாக்டர் பிரியன் வீட்டை நோக்கி.

இன்னைக்கு என்னாச்சு இந்தக் கழுதைக்கு..இம்புட்டு நேரமாகுது. பாத்திரம் தேய்க்க வரல…வரட்டும்..சொல்றேன்….இன்னும் கொஞ்ச நேரத்தில் மதிய சாப்பாட்டுக்கு அவரு வந்துருவாரு. கிச்சன் சிங்க் பூரா பாத்திரங்கள் ரொம்பி வழியுது. படபடப்போடு சமையல் செய்து கொண்டிருந்தாள் வசந்தி. டாக்டர் பிரியனின் மனைவி.

வசந்தி….எனக்கு இங்கன பூரா விட்டு விட்டு வலி வருது….கொஞ்சம் பயம்மா இருக்குங்கறேன்…..பிரியனை சீக்கிரமாக் கூப்பிடு. அவன் வந்து ஒரு ஊசி போட்டால் தான் எனக்கு சரியாகும்….நெஞ்சு வலிக்குதுன்னு சொல்லி சீக்கிரம் கூப்பிடு …ஐயோ ….ஐயோ….அம்மா….வலிக்குதே… என்று வலி தாளாமல் காத்த ஆரம்பித்தாள் வசந்தியின் மாமியார்.

காலையிலேயே அவன்கிட்ட சொன்னேன்…இன்னிக்கு வைகுண்ட ஏகாதசிடா…. ஒருவேளை எனக்கு எதாச்சும் ஆச்சுன்னா…..வைகுண்டப் ப்ராப்தி கிடைக்கும்னு. காதுல வாங்காம போயிட்டான்.

தூளியில் தூங்கிக் கொண்டிருந்த மகன் இந்த சத்தம் கேட்டு…..வீறிட்டு அழ ஆரம்பித்தான். கூடவே தரையை நனைத்தான். வசந்தி ஓடுகிறாள்… அவனைத் தூக்கி இடுப்பில் இடுக்கிக் கொண்டே ஹாஸ்பிடலுக்கு ஃ போன் செய்கிறாள்.

டாக்டர் பிரியன், தியேட்டர் ரெடி தானே…..? என்று கேட்டபடி உள்ளே நுழைகிறார் பெரிய டாக்டர். அப்படியே பார்த்திபன் படுத்திருந்த படுக்கையைப்பார்த்தபடியே புதுக் கேஸுக்கு ….சி டி ஸ்கான் எடுக்கச் சொன்னேன்…என்ன பண்ணி இருக்கீங்க…? ரிபோர்ட் ப்ளீஸ்….! சிஸ்டர் ராணி…..அந்த ஆஸ்த்மா பேஷன்ட்டுக்கு அஸ்தாலின் மாஸ்க் வெய்யுங்க. ஒரு டெரிபிளின் இன்ஜெக்ஷன் போடுங்க. ரொம்ப கஷ்டப்படுறாரு பாரு. பெரிய டாக்டர் உட்கார்ந்த இடத்திலிருந்தே பலதும் செய்வார்.

ஹாஸ்பிடல் அவசர கதியில் இயங்கிக் கொண்டிருந்தது. முதல் முறையாக இதையெல்லாம் பக்கத்தில் இருந்து பார்ப்பதால் அவர்களின் ஓட்டத்தை கவனித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான் மாதவன். அடுத்து நான் போய் பெரிய டாக்டரை இங்க கூட்டிட்டு வந்து பார்த்தியை பார்க்கச் சொல்லனும் என்று எழுந்தான்.

இந்த பேஷன்ட் பேரும் பார்த்திபன் தான் உங்க தம்பி பேரும் அது தானே என்றபடியே டெரிபிலின் ஊசியை அந்த முதியவருக்கு போட்டுக் கொண்டிருந்தாள் ராணி. அவர் கண்களை மூடிக் கொண்டு நல்ல உறக்கத்தில் ஆழ்ந்தார். அவரது சுவாசம் சிறுகச் சிறுக சீரானது. அந்த மெடிக்கல் ஷாப்பில் இவன் சென்ற பொது இவனைப் பார்த்து கத்திய அந்த வயதான பெண்மணி தான் இவனது மனைவி போலும்…..இப்போது கையில் பிளாஸ்கோடு இவனருகில் வந்து “கொஞ்சம் பார்த்துக்கோங்க தம்பி..” டீ வாங்கிட்டு வந்துர்றேன்….என்று கிளம்பினாள் . அங்கு படுத்திருந்த முதியவரின் கண்ணுக்குள் நனவு போல விரிந்தது….கனவு..!.

அம்மாவுக்கு நெஞ்சு வலி…அவசரமாக் கூப்பிடறாங்க…சீக்கிரம் வாங்க…. வசந்தியின் குரலில் ஏகப்பட்ட அவசரம் தெரிந்தது டாக்டர் பிரியனுக்கு.

இதோ வரேன் வசந்தி நீ பார்த்துக்கோ..என்றவன் பதட்டத்தோடு பெரிய டாக்டரிடம் சொல்லி விட்டு ஹாஸ்பிடலை விட்டு வெளியேறுகிறான். கார் வீட்டை நோக்கிப் பறக்கிறது.. அம்மாவுக்கு ஒன்றும் ஆகக்கூடாது…. அவள் செத்து வைகுண்டம்போக வேண்டாம் முருகா..இதென்ன சோதனை..!

“காக்க காக்க கனகவேல் காக்க..

நோக்க நோக்க நொடியினில் நோக்க…

பார்க்க பார்க்க பாவம் பொடிபட…”

மனம் ஸ்கந்தனை நோக்கியது.

இன்னைக்கு ஆப்பரேஷன்னு சொன்னதும் எப்படி அத்துவிட்டுட்டு ஓடுறான் பாரு இந்த டாக்டர் பிரியன். என்று டூட்டி டாக்டர் அலுத்துக் கொள்கிறார். சரி இன்னைக்கு நம்மள ஒரு வழி பண்ணிருவாரு இந்தப் பெரிய டாக்டர்… என்று சொன்னவன்….இந்தாம்மா சிஸ்டர் எல்லாத்தையும் சரியா எடுத்து வை. அனஸ்த்திஸ்ட் வந்ததும் சொல்லியனுப்பு… பேஷண்ட தியேட்டருக்குக் கொண்டு போ. ஹெட் இஞ்சுரி…..என்னவாகப் போவுதோ…? நினைத்த மாத்திரத்தில் வயிற்றைக் கலக்கியது டூட்டி டாக்டருக்கு. சிஸ்டர் ….அவசரமா ஒரு வேலை இருக்கு…இப்போ வரேன். என்று தன் அறைக்குள் ஓடுகிறார்.

கனவில் தன்னை நுழைத்துக் கொண்டபடி வத்தலாகக் கிடந்த அந்த முதியவரைப் பார்க்க மாதவனுக்கு ரொம்பப் பாவமாக இருந்தது. ஊசி இறங்கக் கூட இந்த உடம்பில் சதை இல்லையே …பாவம்…இவர் வீட்டுக்கு உயிர் பிழைத்து போவாரா? அல்லது மேலே வைகுண்டம் போவாரா ?சந்தேகம் அவன் மனதுக்குள் எழுந்தது. அதற்குள் பார்த்திபன் லேசாக தலையை ஆட்டுவதும், அவனது கை விரல்கள் துடிப்பதும் கண்டு சந்தோஷத்தோடு, “டாக்டர் டாக்டர்….. பார்த்திபன் பேஷண்டுக்கு உணர்வு வந்துடுச்சு கொஞ்சம் அவசரமா வாங்களேன்…” என்று பதட்டத்தோடு குரல் கொடுக்கிறான் மாதவன். டாக்டர்கள் விரைகிறார்கள். இன்னும் சற்று நேரத்தில் ஆப்பரேஷன் செய்யனும் என்றார் பெரிய டாக்டர்.

கண் மூடிக் கிடந்த முதியவரின் கனவுக்குள்….

தங்கத்தில் எருமைத் தலை கம்பீரமாக துணை நிற்க, எமதர்ம ராஜா கையில் பாசக் கயிறோடு “சித்திர குப்தா ” இன்று வைகுண்ட ஏகாதசி…. தெரியுமல்லவா….உனக்கு? என்று கனத்த தொனியில் கேட்கிறார்.

தெரியும் மகாபிரபு….அதனால் தான் கையோடு மடிக் கணினியும் எடுத்து வந்திருக்கிறேன். என் மெமரி வெரி வீக் … !

இல்லையில்லை… சித்திரகுப்தா….. பூலோகத்தில் புண்ணியம் செய்வோர் குறைந்து போனார். இன்று யாரும் தமிழ் நாட்டில் சாகமாட்டார் ! ஏதாவது குற்றங்கள், கொலைகள் நடந்து கொண்டே இருக்கின்றன. காலன் கணக்குப்படி மரணப் பதிவுகள் தவறிப் போவுது.

அப்படியும் நல்லவர்கள் இருந்தால் அவர்களுக்கு சில பொறுப்புகள் இருக்கு. இன்னும் சிறிது காலங்கள் அவர்கள் வாழ்ந்துவிட்டுப் போகட்டும்.. பாவம்..!

அப்படியே ஆகட்டும் மகாபிரபு…!

இன்று என் பாசக் கயிறை வீசப் போவதில்லை….. கர்ம வினைகள் தொடர வேண்டாமா? நீ என்ன சொல்கிறாய்? ம்ம்…..ஹஹ் ஹஹ் ஹஹ் ஹா..!

பிரபு. அப்படி யாரையும் கொண்டு வராமல் இருந்தால் எனது ஃபைலில் கணக்கு உதைபடும். அதனால் ஒரு மூன்று நபரையாவது தேர்ந்தெடுத்துத் தருகிறேன். உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு ஜீவன் முக்தி கொடுங்கள் எமராஜா … !

அது அதிகம்…..ஒரு ஜீவனுக்கு மட்டும் தரலாம். பாவம் பிழைத்துப் போகட்டும். எங்கே உனது ஃபைலைப் .பார்த்துச் சொல்லு . இன்றைய அந்த அதிர்ஷ்டசாலி யார் என்று ? எனக்கும் அந்த ஜீவனை விரைவில் காண ஆவல். எனது தூதர்களை தயாராக இருக்கச் சொல்.

ஆகட்டும் எமதர்மா…இதோ சொல்கிறேன்…என்று மடிக் கணினியை ஆன் செய்து ஃபைலை வெளியே எடுத்து ஒவ்வொன்றாகப் வாசித்துக் கொண்டே வரும் போது…….

ஆஹா….இதென்ன அதிசயம்…ஒரே மருத்துவமனையில் இரண்டு பேர் ஒரே பெயரில் உயிருக்கு போராடிய நிலையில் ஒருவர் வயதானவர் . இன்னொருவன் இளைஞன் .வாழ வேண்டியவன். மேலும்…என்று அவர்களைப் பற்றிய குறிப்புகளைக் கொடுத்துக் கொண்டிருந்தான் சித்திர குப்தன் . பத்தி குறிப்பு கொடுக்கும்போதே திடீரென ‘பவர் கட் ஆகி..கணினி தன்னை மூடி மறைத்துக் கொண்டது.

தலையில் அடித்துக் கொண்டான் சித்திரகுப்தன் ! ஓ இது தமிழ் நாடோ ?

அச்சச்சோ ….இப்ப என்ன செய்வது…. பாதி தானே வாசித்தோம்….. அதற்குள் இந்த பாழாய்ப் போனபவர் கட் காலை வாரி விட்டதே…..!

தர்ம ராஜா…இப்போ எப்படி…மின்வெட்டு செய்த சதி இது…நான் சொன்னதை வைத்து நீங்களே ஒரு முடிவு சொல்லுங்கள். நமக்கு இன்று வேண்டியது ஒன்று அல்லது இரண்டு ஆத்மாக்கள். மட்டுமே.

கண் அளக்காததா கணினி அளக்குது ?

ஒ…..அப்படியே ஆகட்டும். எவரது படுக்கையில் ஆளரவம் இல்லையோ அங்கு சென்று வீசு என் பாசக் கயிறை …! உம்…புறப்படுங்கள் என் கட்டளை உடனே நிறைவேற வேண்டும். என்று சிம்மக் குரலில் கர்ஜனை செய்தார் எமதர்மர் .

அப்படியே மகாப்பிரபு….சென்று உயிரோடு வருகிறோம்…உத்தரவு..என்று புறப்பட்டனர் எமதூதர்கள் இருவரும் .

சித்திர குப்தா இனிமேல் இந்த தமிழ் நாட்டு மின்சாரத்தை நம்பாதே. பழைய செல்லரித்த ஏட்டை படிக்க மறுபடியும் பழகிக் கொள். உன் மடிக் கணினி மூலமாக நாம் உயிர்பறிக்க ஆரம்பித்தால் அவ்ளோ தான்…பூமி தாங்காது… தப்பு செய்து விடுவோம் என்று கண்ணீரென்று சிரிக்கிறார் எமதர்மர்.

திடுக்கிட்டுக் கண் விழித்தார் முதியவர் .. தான் கண்டது கனவா..? இல்லை நிஜமா? தன்னைச் சுற்றி யார் இருக்கிறார்கள் என்று பார்த்தவருக்கு பயம் பற்றிக் கொண்டது. ஐயோ..யாருமில்லையே.அப்போ தூதர்கள் நேராக இங்கு தான் வருவார்களோ…? நினைத்த மாத்திரத்தில் அருகில் படுக்கையில் இரண்டு டாக்டரும், நர்சும் அந்த பையனுக்குப் அருகில் நின்று கொண்டிருந்ததைக் கண்டதும்..முதியவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை…கையால் அந்த இரும்பு ஸ்டாண்டைக் கீழே தள்ளித் தட்டி விட்டு ஆ..ஆ..ஆ……என்று இழுக்க நெஞ்சுக்கூடு மேலும் கீழும் ஏறி இறங்குவதைக் கண்ட டாக்டர்கள் என்னவோ ஏதோ என்று திடுக்கிட்டு அவரது இடத்துக்கு சென்று என்னாச்சு…….? என்று கையைப் பிடித்துப் பார்க்கிறார்கள்.

பார்த்திபன் தனியே விடப் பட்டான்.பாசக் கயிறு அவனை நோக்கி வீசப் பட்டது. விக் விக்கென்று உயிர் இழுத்து பறிக்கப் பட்டது !

அடுத்த நிமிடம் எமதர்ம ராஜா ஆச்சரியத்துடன்……”நீ நிஜமாகவே அதிர்ஷ்டசாலி தான்….வைகுண்டம் போகிறாய், வாழ்த்துகிறேன்..”என்று கம்பீரமாகச் சொல்கிறார்.. தன் முன்னே கைகூப்பி வணங்கி நின்ற பார்த்திபனைப் பார்த்து.

படுக்கையில் உயிரற்ற சடலமாகக் கிடந்த பார்த்திபனைக் கண்டதும் வீரிட்டு அழுகிறான் மாதவன்… பார்த்தி….. எங்கள விட்டுப் போயிட்டியாடா… ஆபரேஷன் ஸக்ஸஸ் ??? .பேசண்ட் ஆபரேஷனுக்கு முன்னாடியே செத்துட்டானே ! என்ற அலறல் அந்த அறையின் ஒவ்வொரு மூலையையும் அறைந்தது. ..இதைச் சற்றும் எதிர்பார்க்காத மாதவன் ஆவேசத்துடன் .என் தம்பிக்கு என்ன ஆச்சு…? எல்லாரும் சேர்ந்து கொன்னுட்டீங்களா? என்ன செஞ்சீங்க என் பார்த்தியை.? பாரத்தி….டேய்… பார்த்தி….எழுந்துருடா….எங்கள விட்டுட்டு போகாதே…… ப்ளீஸ்…. கண்ணைத் திறந்து பாரு….ஐயோ .அம்மா…அப்பா…நான் என்ன செய்வேன்.?.உங்ககிட்ட நான் எப்படிச் சொல்வேன் இதை…?..ஓ …..மை காட்…ஹி இஸ் டெட்……! கலங்கித் தவிக்கிறான் மாதவன். அவன் உடல் உதறலெடுக்க ஆரம்பிக்கிறது. சூழ்நிலை மெல்ல மெல்லப் புரிய ஆரம்பிக்கிறது. அவனை பயம் கவ்வுகிறது

டாக்டர் பிரியன் அறுபதைத் தாண்டி வண்டியை விரட்டி வீடு வந்து சேர்ந்தார். வசந்தி…வசந்தி…அம்மாவுக்கு எப்படி இருக்கு..? .என்று ஓடி வந்து பார்த்து நான் வரும் வரைக்கும் எதுக்கு இங்க இருக்க பக்கத்து ஹாஸ்பிட்டல்ல சேர்க்க வேண்டியது தானே….? இப்போ இது ஒண்ணுமில்லை…வெறும் வாயுப் பிடிப்பு..தான் சரியாயிரும்…..இந்த மாத்திரையைப் போட்டு வெந்நீர் குடிங்க….அப்படியே படுத்துக்கங்க..இப்பச் சரியாகும் பாருங்க..என்கிறான்.

பிரியன்….நீ இங்கயே இருடா….எங்கிட்டும் போகதடா….இன்னைக்கு எந்த உயிர் பிரிஞ்சாலும் அதுக்கு ஜீவன் முக்தி கெடைக்கும்டா…..அம்மா மெல்லிய குரலில் சொல்கிறாள். அம்மா உனக்கு ஒன்னும் அம்புட்டு வயசாகலை…வெறும் எழுபது தான் நடக்குது…ரொம்பப் பண்ணாதீங்க..

நா எங்கிட்டும் போமாட்டேன்…..நீங்க ரெஸ்ட் எடுங்க … அங்கே இப்போ ஒரு ஆப்பரேஷன் இருந்துச்சி…வசந்தி ஃபோன் போட்டதும் அப்படியே போட்டுட்டு ஓடியாந்தேன்….. எனக்குத் தெரியும் உங்களுக்கு ஒண்ணு மில்லையின்னு.. நீங்க தான் காரணமில்லாம எப்பவும் பயப்படுறீங்க . அருகில் உட்கார்ந்து கொண்டு அம்மாவைத் தேற்றிக் கொண்டிருக்கும் போதே….போன் மணி அடித்தது.

நர்ஸ் ராணிதான்… எடுத்ததும்…. “டாக்டர், அந்த ஆக்ஸிடெண்டு கேஸு திடீர்னு ஒன்வே டிக்கெட் வாங்கிருச்சி….அவர் கூட வந்த தம்பி… இங்கே ஆர்ப்பாட்டம் பண்ணுது….இப்படியாகும்னு நினைக்கவே இல்லை…பெரிய டாக்டர் சொல்றாரு…மூளையில் ரத்தம் கிளாட் ஆகியிருக்கு…இந்தக் கேசை இங்கே உள்ளயே விட்டிருக்கக் கூடாது…..இந்த ரிசெப்ஷன் மேடம் தான் …கெட்டியாச் சொல்லாமல் அநியாயமா ஒரு உயிர் போச்சு….. .நீங்க… உங்க வீட்டில்…நிலைமை..என்று குரல் கம்மிக் கொண்டிருந்தது அவளுக்கு.

அடப் பாவமே…..இதோ இப்பக் கிளம்பி அரை மணி நேரத்தில் அங்கே வாரேன்…நான் கூட அந்தக் கிழம் தான் டிக்கெட் எடுக்கும்னு நினைச்சேன்…. இன்னைக்கு அந்தப் பையனுக்கு அதிர்ஷ்டம்….புண்ணியம் செஞ்சவன்…. வைகுண்ட ஏகாதசி மரணம் யாருக்குக் கிடைக்கும்…? போட்டும் விடு. நிலைமையை நீ அங்கே சமாளி. நான் வந்துட்டே இருக்கேன்.

டாக்டர்…நீங்களா இப்படிப் பேசறது? ஆச்சரியமா இருக்கு டாக்டர். சரி..நீங்க உடனே வாங்க இங்க நிலைமையை சரி கட்டனும்…பெரிய டாக்டர் உங்கள உடனே வரச் சொன்னார். அவசர கதியில் சொல்லிவிட்டு வைத்தாள் நர்ஸ் ராணி.

வசந்தி..எனக்கு சாப்பாடு வேண்டாம்…அம்மாவுக்கு ஒண்ணுமில்லை…. சும்மா பயப்படுறாங்க அம்புட்டுத்தேன்….நீ சூடா ஒரு காப்பி கொடு போதும்… .குடிச்சிட்டுப் போறேன். அங்க ஒரே சின்னப் பையன் காலையில தான் வந்து அட்மிட் ஆனான்…விபத்து…இப்போ செத்துப் போயிட்டானாம். நான் தான் அவனுக்கு முதலுதவி பண்ணினேன்..மதியம் தான் பெரிய டாக்டர் அறுவை சிகிச்சைன்னு சொன்னாரு…அதுக்குள்ளாற .என்ன ஆச்சு புரியலை. நான் அவசரமா திரும்பப் போகணும். கிளம்பிட்டேன். சொன்னவர் காரைக் கிளப்புகிறார். வேகமாகக் கார் கேட்டைத் தாண்டி பறக்கிறது. இப்போது டாக்டரின் மனதிற்குள் வேறு மாதிரியான பரபரப்பு.

டாக்டரின் கைபேசி மணி மீண்டும் அடிக்கிறது…இந்த முறை .மேஸ்திரி மாணிக்கம்…..!

இப்ப அவசரமா ஹாஸ்பிடல் போயிட்டிருக்கேன்….அப்பால கூப்பிடறேன்… இணைப்பு அறுந்தது.

எலேய்…சிங்காரம்….ஓடியாடா… வண்டிக்கு எலுமிச்சம் பழம் வாங்கியாந்தியா…? அத்த முதல்ல கட்டிவுடு..சூடம் எடுத்து தயாரா வெய்யி…இப்ப வந்திர்றேன்…என்று முழு லோடு தாங்கிய மணல் லாரியைப் பெருமை பொங்கப் பார்த்த லாரி டிரைவர் மணி….வீட்டுக்குளே செல்கிறான்.இந்தா புள்ள…உன் பேரு என்னா சொன்னே…..?

சரோசா….!

நீங்க அடுத்தாபுல வருவீகல்ல ..அப்ப கண்ணாடி வளைவி , நைலக்ஸ் சேலை, ,மல்லியப்பூ வாங்கியார மறந்துப்புடாதீக…வெட்கப்பட்டுச்
சொன்னாள்.

அது சரி…இம்புட்டு நீள லிஸ்ட் தாரியா..? இந்தா புள்ள சரோசா…இந்தப் பணத்துல நீயே அம்புட்டும் வாங்கிக்க….வண்டி இந்த டிரிப்பு அடிச்சுட்டு திரும்ப வர இன்னும் ரெண்டு மாசம் ஆகும். இங்ஙன இப்ப லோடு வேல இத்தோட ஓவரு. இனி ஆடர் வந்தாத்தேன்….வண்டி வரும். நானும் வருவேன்….இப்ப வாரேன்.. சொல்லிவிட்டுக் கிளம்பியவன்…லாரிக்குச் சூடம் காட்டுகிறான்.

அவளைப் பார்த்து சிரித்தபடியே லாவகமாக லாரியில் துள்ளிக் குதித்து ஏறுகிறான். ஒரு கைக்குட்டையை எடுத்து கழுத்தைச் சுற்றி கட்டிக் கொண்டவன் லாரியை லாவகமாக ஸ்டார்ட் செய்கிறான். இரண்டு முறை உறுமி விட்டு அவளையும் உதறிவிட்டு ஸ்பீடு பிடித்தது டாக்டரை நோக்கி மணல் லாரி.

அவனது கைபேசி அழைத்து..மேஸ்திரி மாணிக்கம்…அவசரப் படுத்தினான்.

அண்ணே…..வந்துட்டே இருக்கேன்…இன்னும் பத்து நிமிஷம்…சைட்டுல நிப்பேன்…..நான் சொன்னாச் சொன்னது தான்…என்று அசுர வேகத்தில் எதிரே வந்து கொண்டிருந்த டாக்டர் பிரியனின் காரை ஓங்கி ஒரே இடி இடித்துத் தள்ளி விட்டு அக்கம் பக்கம் பார்க்காமல் கருமமே கண்ணாகப் பறக்கிறது லாரி.

அந்த இடியில் அரண்டு பிரண்டு போன கார் ஏகத்துக்கு பல்டி அடித்து அலங்கோலமாக கிடந்தது. காலியான ரோட்டில் யார் வந்து இடித்தது என்று கூடத் தெரியாத நிலையில் அதிர்ச்சியில் மயங்கிவிட்ட டாக்டர் பிரியன் உடலில் பல இடங்களில் எலும்புகள் உடைந்தும் முறிந்தும் பரிதாபமாக சுயநினைவற்றுக் கிடந்தார்.

மெல்லக் கூடியது பொது மக்கள் கூட்டம்.ஒரு கேசு கிடைத்து விட்டப் பரபரப்பில் தொலைக்காட்சி குழு, துப்புத் துலக்க காவல்துறை, செய்தித்தாள் பிரிவு, என்று அவர்கள் அசுர வேகத்தில் இயங்கிக் கொண்டிருந்தார்கள்.

காலையில் தம்பிக்கு சிகிச்சையளித்த டாக்டர் பிரியன் ஆம்புலன்சிலிருந்து ஸ்ட்ரெக்சரில் போட்டு உள்ளே கொண்டு வருவதைப் பார்த்ததும் வாசலில் தம்பி பார்த்திபனின் சடலத்தோடு நின்று கொண்டிருந்த மாதவன் வாயடைத்துப் போய் அழ மறந்தான்.

அவசரத்தில் உயிர் விட்ட இந்த இரண்டு ஆத்மாக்களுக்கும்…. இன்று வைகுண்டப் பிராப்தி கிடைக்குமா? சித்திர குப்தன் மடிக்கணினிக்கு திடீரென்று உயிர் வரவும் சரிபார்த்தான்… ! லிஸ்டில் முதியவர் பெயரும், டாக்டர் பிரியனின் தாயின் பெயரும் இருந்தன !

எமதர்மன் தலையில் அடித்துக் கொண்டான்..!

அது வந்து….’ மின்வெட்டு செய்த மாயம்’ என்று தலையைச் சொரிந்து கொண்டார் சித்திரகுப்தர்.

============================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக