ஞாயிறு, 31 மார்ச், 2013

அக்னிஹோத்ரம்..!





பண்டைய காலத்தில் ஆன்மீகத்தின் மூலம் தனி மனிதரை தூய்மை படுத்துதல் மற்றும் மனதை இதமாக்குதல் (குணப்படுத்துவது என்பார்கள்) என்பது ஒரு ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை. ஒவ்வொரு மனிதரும் தான் இறந்தப் பிறகு நல்ல கதி அடைய வேண்டும் என்றே நினைக்கின்றார்கள். நாம் ஒவ்வொருவரும் மோட்ஷம் பெற வேண்டும் என நினைப்பது தவறு இல்லை. பண்டைய காலத்தில் நம் முன்னோர்கள் மன அமைதியுடன், திருப்தியான மனதுடன் இருந்தார்கள். அவர்கள் கனவெல்லாம் நாம் இறந்தப் பின் மோட்ஷம் அடைய என்ன வழி என்பதே. அதற்காக அதற்கு என்ன வழி என்று தேடி அலைந்தார்கள். குருமார்களை தேடி அலைந்தார்கள். ஆலயங்களுக்குச் சென்று மனபூர்வமாக வழிபட்டார்கள். யாகங்களில், ஹோமங்களில் கலந்து கொண்டார்கள். புனித நதிகளில் நீராடினார்கள்.


ஆனால் மாறிவிட்ட இந்த காலங்களில் என்ன நடக்கின்றது ? அனைவருமே உயர்ந்த நிலை வாழ்கையை பெறவும் , சமூகத்தில் ஒரு தனி அந்தஸ்து பெற வேண்டும் என்பதற்காகவும் பணம் சம்பாதிக்க வேண்டி உள்ளது. அமைதி இன்றி போட்டி பொறாமைகளில் உழன்று கொண்டு இருக்கும் அவர்கள் யாரைப் பிடித்தால் அந்தஸ்தைப் பெறலாம் என அலைகிறார்கள். ஒ.....இவரிடம் நெருக்கமாக இருந்தால், அவரிடம் நெருக்கமாக இருந்தால் நமக்கு சமூகத்தில் அந்தஸ்து கிடைக்கும் என நினைக்கின்றார்கள். பலவிதமான குருமார்களிடம் செல்கிறார்கள்.


சரி குருமார்களிடம் சென்றால் அங்கு என்ன நடக்கின்றது? அங்கும் போட்டி....பொறாமை....நீ பெரியவனா, நான் பெரியவனா.. குருமார்களிடம் சென்று ஆசி வாங்க வேண்டும் என்றாலும் கூட பணம் இருந்தால்தான் அருகில் நெருங்க முடிகின்றது, தனிப்பட்ட ஆசியும் கிடைக்கின்றது. ஆலயங்களில் சென்றால் காசிருந்தால் முதலில் தரிசிக்கலாம் என்பது நிலை. இப்படிப்பட்ட நிலைமை இருப்பதினால் தமது குடும்பத்தையே பணம் சம்பாதிக்க வேலைக்கு அனுப்பி விடுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு முடிவாக மன அமைதியும் கிடைப்பது இல்லை, ஆனந்த வாழ்வும் அமைவது இல்லை. தம்மை பணம் படைக்கும் இயந்திரமாகவே மாற்றிக் கொண்டு விட்டார்கள் என்பதே உண்மை. ஆகவே நாம் அனைவரும் நமக்கு உள்ளது போதும்... நமக்கு பூர்வ ஜென்ம பாபங்களினால் ஏற்படும் மனத் துயரங்களுக்கு வடிகால் கிடைத்தால் போதும் என்றே எண்ண வேண்டும். நமக்கு மன அமைதி கிடைப்பது எப்படி? இயந்திரமாகவே மாறிவிட்ட நாம் ஹோமங்களில், யாகங்களில் கலந்து கொண்டு புண்ணியத்தை பெறுவது எப்படி? நாம் உள்ள இடம் அமைதியாக இருக்க வேண்டும் என்றால் என்ன செய்வது ?


இதற்கெல்லாம் விடிவு இல்லாமல் இல்லை. அங்காங்கே பல ஆன்மீக நிலையங்கள் உள்ளன. அங்காங்கே பல நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டு உள்ளன. ஆனால் அங்கு செல்ல நேரம்தான் கிடைக்கவில்லை என்பதினால் மன அமைதியை வீட்டிலேயே அடைய அக்னிஹோத்ரம் எனும் மிக எளிய வழி உள்ளது என ஒரு யோகினி கூறுகிறார்.

அக்னிஹோத்ரம் என்பது என்ன ?
பூமியை சுற்றி சந்திரன், சூரியன் மற்றும் பல கிரகங்கள் ஓடுகின்றன. பூமி தன்னை தானே சுற்றிக் கொள்ளும்போது அந்த கிரகங்கள் ஒவ்வொரு இடங்களிலும் நிற்கின்றன. அவற்றில் சில குறிப்பிட்ட நேரங்களில் மனிதன், மிருகம் மற்றும் நமது எண்ணங்கள் என அனைத்தும் ஒரு மாறுதலுக்கு உள்ளாகின்றன. உண்மையைக் கூறினால் அலைகழிக்கப்படும் மனதையும் கூட அந்த குறிப்பிட்ட நேரங்களில் ஸ்திரப்படுத்தினால் நாமும் மனத்தைக் கட்டுப்படுத்தும் திறமையைப் பெற்று விடுவோம். அந்த குறிப்பிட்ட நேரத்தில் நம்மை சுற்றி உள்ள பிரபஞ்சத்தின் வெளியை சுத்தப்படுத்தினால் போதும். அப்படிப்பட்ட நேரத்தில் நம் வீட்டில் உள்ள வெற்று இடத்தையும் நம்மையும் தூய்மைப்படுத்தும் , மன அமைதியைத் தரும் . அதை பெற சில நிமிடங்களே செய்ய வேண்டிய சிறிய வேள்வியே அக்னிஹோத்ரம் என்பது.


அக்னிஹோத்ரா சூழ்நிலை என்பது நமது வீட்டில் நம்மை சுற்றி உள்ள வெற்று வெளியில் உள்ள அதிர்வலைகளைக் கட்டுப்படுத்தி தூய்மை ஆக்கும். அது நம்முடைய நரம்பு மண்டலங்களை ஒழுன்கீனப்படுத்தும் நம் வீட்டில்
வைத்துள்ள செடிகொடிகளும் கூட அக்னிஹோத்ரா சூழ்நிலையில் நன்கு வளரும். நமது வீட்டில் அமைதி நிலைக்கும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.


அக்னிஹோத்ரா புதிதல்ல. இது பற்றி நான்கு வேதங்களிலும்- ரிக், யுஜுர்வன, சாம மற்றும் அதர்வண வேதங்களில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே கூறப்பட்டு உள்ளது. அக்னிஹோத்ராவை வேத நாராயணனை வேண்டியே செய்தார்கள். ரிஷி முனிவர்கள் துவக்கி வைத்த அதை அப்போது சாஸ்திர சம்பிரதாயங்களில் ஊறித் திளைத்த பிராமணர்களே செய்து வந்துள்ளார்கள். வேதத்தில் கூறப்பட்ட முறையிலான அக்னிஹோத்ராவை இன்னமும் கேரளாவில் சில நம்பூத்ரி பிராமணர்கள் கடைப்பிடித்து வருவதாக கூறுகிறார்கள். ஆனால் காலப்போக்கில் அதே ஹோமத்தை நமக்குத் தேவையான அளவில் மாறுதலாக்கித் தந்து உள்ளார்கள். கடைபிடிக்கப்படும் முறைதான் வேறுபட்டு உள்ளதே தவிர அதன் முடிவில் நமக்கு கிடைக்கும் பலன் இரண்டும் ஒன்றுதான்.
அக்னிஹோத்ரா செய்ய தேவையான பொருட்கள் என்ன?

ஒரு பிரமிட்
பசு வரட்டி
நல்ல நெய்
முழு அரிசி
நான்கு வரி மந்திரங்கள்.

இதை எங்கு, யார் செய்யலாம் ?

இதை வீட்டிற்குள் எந்த அறையிலும் செய்யலாம்
சிறியவர் பெரியவர் என்ற பேதம் இல்லை
ஜாதி மத பேதமும் இல்லை
ஆண்கள் இல்லை பெண்கள் என யார் வேண்டுமானாலும் செய்யலாம்
இதற்கு விரதம் இருந்துவிட்டே செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை
குறிப்பிட்ட நேராத்தில் மட்டும் செய்ய வேண்டும் என்பதே விதி.

இதை ஆரம்பித்தப் பின் சில நாட்களில் நிறுத்தி
விட்டால் ஏதாவது தீமை வருமா ?
நிச்சயமாக அப்படி எதுவுமே இல்லை. செய்தவரை அதற்கான நல்ல பலன் கிடைக்கும். விட்டுவிட்டால் எப்போதும் போலத்தான் இருப்பீர்கள். நாம் பல பூஜைகளை ஆரம்பித்துவிட்டு தவிர்க்க முடியாத காரணங்களினால் பாதியில் நிறுத்தி விடுவது இல்லையா ? அப்படித்தான் இந்த அக்னிஹோத்ரமும்.

சரி அக்னிஹோத்ராவை எப்படி செய்ய வேண்டும்?
குறிப்பிட்ட நேரத்தில் காலை சூரிய உதயத்தின்போதும், மாலை சூரிய அஸ்தமனத்தின் போதும் சிறிய பிரமிட் போன்ற தாமிர குண்டத்தில் பசு வரட்டியை வைத்து கற்பூரத்தை முதலில் ஏற்றி அடந்த தீயினால் நெய்விட்ட பசுவரட்டியை பற்ற வைத்து அதை பிரமிட் போன்ற குண்டத்தில் வைத்து எரிய விடவேண்டும். அப்போது அந்த நான்கு வரி மந்திரத்தையும் உச்சரித்துக் கொண்டே பசு நெய்யினால் ஈரப்படுத்திய சிறிது அரிசியை ஐந்து விரல்களினாலும் எடுத்துக் கொண்டு ஸ்வாகா எனக் கூறிக்கொண்டே அந்த ஹோம குண்டத்தில் போட வேண்டும். அவ்வளவுதான்.
அக்னிஹோத்ர மந்திரம்

காலையில் கூற வேண்டிய
அக்னிஹோத்ர மந்திரம்
அக்னயே ஸ்வாகா
அக்னயே இதம் ந மம
பிரஜாபதயே ஸ்வாகா
பிரஜாபதயே இதம் ந மம

மாலையில் கூற வேண்டிய
அக்னிஹோத்ர மந்திரம்
சூர்யாய ஸ்வாகா
சூர்யாய இதம் ந மம
பிரஜாபதயே ஸ்வாகா
பிரஜாபதயே இதம் ந மம

அப்படி செய்து முடித்தப் பின் ஐந்து நிமிடங்கள் கண்களை மூடி வைத்துக் கொண்டு இருக்க வேண்டும்.ஹோமம் முடிந்தது. வேறு எதுவும் செய்யத் தேவை இல்லை. அதன் பலன் பத்தே நாட்களில் தெரியத் துவங்கும் என்கிறார்கள். வீடு அமைதியாக உள்ள உணர்வு ஏற்படும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும். நாம் செய்யும் காரியங்கள் தடங்கல் இன்றி நடக்கும்.

1 கருத்து:

  1. அக்னிஹோத்ரம் செய்வதற்கு உகந்த, நேரத்தை நீங்கள் இருக்கும் இடத்தின், (அட்சய ரேகை, தீர்க்க ரேகை), சூரிய உதய நேரம், சூரிய அஸ்தமன நேரம் கொண்டு துல்லியமான அக்னிஹோத்ர நேரத்தை மற்றும் அதன் காலத்திற்கு ஏற்ற மந்திரத்தை காட்டும் கடிகை என்னும் விண்டோஸ் போனிற்க்காக (Windows phone) மென்பொருள் செய்துள்ளேன். இது அக்னிஹோத்ரம் மட்டுமின்றி, மிக முக்கியமான ஹோரை, குளிகன், இராகுகாலம், எமகண்டம், சூரிய உதய மற்றும் மறைவு நேரங்கள், பருவ காலங்கள் மற்றும் வேறு பல விஷயங்களை காட்டுகிறது. இந்த கடிகையை விண்டோஸ் ஸ்டோரில் இங்கே (http://www.windowsphone.com/en-in/store/app/kadigai/0e6be181-bc0b-4555-85fe-d65def4a8998) பதிவிறக்கம் செய்யலாம்

    பதிலளிநீக்கு