செவ்வாய், 30 டிசம்பர், 2014

சாந்திக் குடில் : பாட்டி வீடும் மதுரையும்...!

சாந்திக் குடில் : பாட்டி வீடும் மதுரையும்...!: நான் பிறந்ததிலிருந்து இந்த ஐம்பது வயது வரையில் எனக்கு நினைவிலிருந்து மறக்காமல் ஸ்படிகமாய் இருக்கும் அமானுஷ்யங்களையும் இனியும் என் ...

திங்கள், 15 டிசம்பர், 2014

இலக்கு..!




உயரப் பறக்கும் பருந்தின்

கண்களுக்கு பஞ்சாரக் கோழியின்

குஞ்சுகளே இலக்கு..!


வழியறியாது  அருவியாய் மலை

இறங்கிவிட்டாலும் காட்டாறுக்கு

பொங்கும் கடலே இலக்கு..!


நாண் இல்லாமல் வண்ணவில்லை

வான் எறிந்து தோற்றாலும்

பூமியே மேகத்துக்கு இலக்கு..!


வில்லை  இழக்கும் அம்பிற்கும்

சுதந்திரச் சிறகுகளை

சிதறடிப்பதே இலக்கு..1


இலக்குகள் அற்ற மனங்கள் இருளில்

தீட்டும் ஓவியமாம்  உணர்வுகளையும்

உருவாக்கி உயிர்ப்பித்திடும் இலக்கு..!



வீழ்ந்து விட்டதாய் சோர்ந்திடாமல் நண்பா

எழுவதற்கான  கனவொன்று இருக்கு

இமயத்தின் உயரமே உனக்குள் இலக்கு..!



தோல்வித் துயரங்கள் தொடர்ந்தாலும்

துணிவைத் துடுப்புகளாக்கி தொடர்ந்து

வெற்றியை காண்பதுவே இலக்கு...!



ஆயிரம் சூழ்ச்சிகள் முன்னிலையில்

வெற்றியின் சூத்திரங்கள் உன்மனதில்

வீழ்ச்சிகள் கடந்திடுவாய் அதுவே இலக்கு...!



இலக்கு எனும் மந்திரச் சொல் செய்திடும்

மனத்துள் தந்திரங்கள் - ஆயின் உலகம்

ஓங்கிட  அன்பு ஒன்றே இலக்கு...!


இலக்கு எனும் அச்சில்  சுழலும் பூமி

இலக்கு அச்சாணியில் இயங்கும் இயற்கை

இலக்கு என்ற தேடலில் வாழும் மனிதம்

இலக்கு சற்று விலகினால் தவறிடும் கணக்கு...!


பூமியின் வளங்கள் அனைத்தும்

இலக்கின்றி தகர்க்கும்போது பொறுமையின்

எல்லைக்கு பூகம்பமே இலக்கு...!


அல்லும் பகலுமென கருமவினைக் கணக்கெடுத்துப்

படைத்துப் பெருக்கும்  ஆக்கும்

தொழில் நிறுத்துவதே பரமனின்  இலக்கு..!

வியாழன், 11 டிசம்பர், 2014

பூவுலகு பெற்றவரம்....!

 



பாரதத்தின் நாடியை
நன்கறிந்த கவிஞன்
ஒய்யார முண்டாசுக்குள்
ஓயாத  எண்ணங் கொண்டவன்

கண்களால் ஈர்த்து விடும்
காந்த மனம் கொண்டவன்
வார்த்தை ஜாலங்களால் வானத்தில்
கார்மேகம் சூழ வைப்பவன்

வான் நட்சத்திரங்களை
பூமழையாக மாற்றுபவன்
மந்திரங்கள் கற்காமல் கவிதை
ஜாலத்தால் மனத்தைக்
கட்டிப்போட்டு நகைப்பவன் 

மீசை துடிக்கத் துடிக்க
ஆசைகளைச் சொன்னவன்
கண்ணனைக் கட்டிப் பிடித்தவன்
காளியோடும்  மாரியோடும் 
மகிழ்ந்து கும்மியடித்தவன்

பாரதக் கொடியை
உயர்த்திப் பிடித்தவன்
விடுதலை வேண்டி
சங்கம் முழக்கியவன்

இறுக்கிச் சுற்றிய முண்டும்
கரு மீசையும் கனல் கண்களும்
கன ஆடையில் அச்சத்தின்
முகவரி  தந்தாலும் அச்சமில்லை
என்று இச்செகத்திற்கு
கற்றுக் கொடுத்தவன்

பாப்பாவிடம் ஒடுங்கிக் குனிந்து
ஓடி விளையாடியவன்
உயர்ந்த குன்றில் அமர்ந்து கொண்டு
வாய்ச்சொல் வீரர்களை
வெகுண்டெழச் செய்தவன்

புகழேணி ஏறாமல் புண்ணிய
ஏணி ஏறியவன் பாதை மாறாமல்
கவிதை போதைக்குள் மூழ்கியவன்
ஏழ்மையை எழுத்திலிருந்தும்
எண்ணத்திலிருந்தும் விரட்டியவன்
வீரத்தை வாளாக்கி வணங்கி
பாட்டுக்குள் திணித்தவன்

கருவடிக் குப்பத்து மாமர நிழலில்
சமரச இடத்தில் குயிலை கூப்பிட்டு
ஆன்ம ரகசியம் சொன்ன தீ ..!
பாரதி உந்தன் பார்வை தீ...!

காலங்கள் நீளாது எனக்
கண்டுதானோ காவியக் கருத்துக்களை
காப்பிய பாரதத்தை
கண்ணனின் பெருமைதனை
பெண்ணின் புதுமைகளை

பொக்கிஷக் குவியல்களாக
புதைத்து விடவா பிறந்து வந்தாய்...!
பாரதம் கண்டெடுத்த புதையலாக
பாரதி நீயன்றோ பூவுலகு பெற்றவரம்....!


ஜெயஸ்ரீ ஷங்கர்

பாவை விளக்கு....!: பாரதி நீயே எங்கள் வரம்....!

பாவை விளக்கு....!: பாரதி நீயே எங்கள் வரம்....!:       பாரதத்தின் நாடியை நன்கறிந்த கவிஞன் முன்டாசுக்குள் ஒய்யார எண்ணங் கொண்டவன் கண்களால் ஈர்த்து விட...

பாரதி நீயே எங்கள் வரம்....!

 
 
 
பாரதத்தின் நாடியை
நன்கறிந்த கவிஞன்
முன்டாசுக்குள் ஒய்யார
எண்ணங் கொண்டவன்

கண்களால் ஈர்த்து விடும்
காந்த மனம் கொண்டவன்
வார்த்தை ஜாலங்களால்
வானத்தில் மேகம் சூழ வைப்பவன்

வான் நட்சத்திரங்களை
பூமழையாக மாற்றுபவன்
மந்திரங்கள் கற்காமல்
கவிதை ஜாலத்தால் மனத்தைக்
கட்டிப் போட்டுச் சிரிப்பவன்

மீசை துடிக்கத் துடிக்க
ஆசைகளைச் சொன்னவன்
கண்ணனைக் கட்டிப் பிடித்தவன்
காளியோடும்  மாரியோடும் 
மகிழ்ந்து கும்மியடித்தவன்

பாரதக் கொடியை
உயர்த்திப் பிடித்தவன்
விடுதலை வேண்டி
அடிமையாய் அழுதவன்

உயர் முண்டும் கரு மீசையும்
கனல் கண்களும் கன ஆடையில்
அச்சம் தந்தாலும் அச்சமில்லை
என்று கற்றுக் கொடுத்தவன்

பாப்பாவிடம் குனிந்து
ஓடி விளையாடியவன்
உயர்ந்த குன்றில் அமர்ந்து கொண்டு
வாய்ச்சொல் வீரர்களை
வெகுண்டேழச் செய்தவன்

புகழேணி ஏறாமல் புண்ணிய
ஏணி ஏறியவன்
ஏழ்மையை எழுத்திலிருந்து
விரட்டியவன்
வீரத்தை வாளாக்கி
பாட்டுக்குள் திணித்தவன்

கருவடிக் குப்பத்து மாமர நிழலில்
சமரச இடத்தில் குயிலை கூப்பிட்டு
ஆன்ம ரகசியம் சொன்னவன் நீ..!

காலங்கள் நீளாது எனக்
கண்டுதானோ காவியக் கருத்துக்களை
காப்பிய பாரதத்தை
கண்ணனின் பெருமைதனை
பெண்ணின் புதுமைகளை

பொக்கிஷக் குவியல்களாக
புதைத்து விட்டுச் சென்றுவிட்டாய்
பாரதம் கண்டெடுத்த புதையலாக
பாரதி நீயே நாங்கள் பெற்ற வரம்....!

வெள்ளி, 3 அக்டோபர், 2014

சின்னங்கள் ...!




 




பொங்கும் ஆசைகள்
பூம்புனல்  மனசுக்குள்
வானமென விரிந்த
கண்கள் கொண்ட
ஞாபகப்  பொக்கிஷங்கள்


அனைத்து உணர்வுகள்
சுமந்த உயிர் மூச்சுக்கள்
பாசி படிந்த சங்குகள்
மண் படிந்த சிப்பிகள்
கடல் நுரையின் பூக்கள்
நட்சத்திர மீன்கள்

கண் முழிக்கும் சோழிகள்
பவழப் பூங்கொத்துக்கள்
உல்லாசச் சுற்றுலாவில்
உன் பாதம் பட்டு நகர்ந்ததும்
என் உள்ளங்கையில்
சிக்கிய  கூழாங்கற்கள்
 

பட்டாம் பூச்சியின்
ஒற்றை இறக்கையின்
இறைவன் வரைந்த
அழகோவியம்
'குட்டிபோடும்' நம்பிக்கையில்
மயிலிறகின் ஒற்றைக்கம்பி

அரச மரத்தின் காய்ந்த இலை
காக்காப்பொன்னு
கலர்கலரா குமரிமண்ணு
நானிருக்கும் வரை
என்னோடிருக்குமென
நான் புதைத்து வைத்த
சின்னங்கள் ...!

என்று என் வாழ்க்கை
பாதைமாறிப் பயணித்ததோ
ஆழ்கடல் மனசில் இருந்தவை
அலைகடலுக்குள் அஸ்தியெனக் 
கலந்து விட
என்றாவது எங்காவது
கரையோரம் கால் நனைக்கும்
உன் பாதங்களில்
சிக்கும் இந்த 
வெண்சங்கு ..!




புதன், 1 அக்டோபர், 2014

நவராத்திரி ரதம்...!


 


நவராத்திரி ரதம்...!


இரத்தின மேடையாம் 
நவராத்திரி படிதனில்
கொலுவேறினாள்  
ராஜமாதங்கி...!
 

பஞ்சமி தனிலே
நவகிரக நாயகி
இகபர சுகமளி 
சதுர்மறை சங்கரி..!
 

வைர ஒளி  வீசும்  
பரிபூரணி  பவானி
தீங்கேதும் வாராமல் 
ரட்சிப்பாள் ரஞ்சனி..!

பொற்குடை மலைமகளே 
உமையவளே
மஞ்சளில் மகிழும்  
மங்களவல்லி..!
ஸ்ரீசக்ர நாராயணி 
ஸ்ரீயோகினி
நீலமணிச் சுடர் 
சிவசக்தி நீ..!

நாடிடும் யாவர்க்கும் 
நலமளிப்பாய் கோலத்தில் 
கோலோட்சும் கல்யாணியே..!
வரங்களை வர்ஷிக்கும் 
வனிதாமணி பிரபஞ்ச 
நிவாஸினி  பராசக்தி நீ..!

கும்பத்தில் கொலுவிருக்கும் 
மங்கலமே முத்து 
மாலையிட்டு மனங் 
குளிர்ந்தோம் மாதாவே 
அன்னையே பரமேஸ்வரி ஸ்ரீ
திரிபுர சுந்தரியே 

மனம்மல்கப் பாடுகிறேன்..!
பலவரம் அருள்வாள் 
பவளத்து பார்கவி நீ..!

தெய்வீக தைவதமே 
சாமந்திப்ரிய வதனி  ..!
தாழம்பூ தந்திடுவேன் 
தாம்பூலம் தந்திடுவேன்
அழகு முகத்தில் 
அருட்புன்னகை கண்டிடுவேன்
அலைகடலைக் காக்கும் 
புவனத்துக் கவசமே..!
என்றென்றும் உந்தனருள் 
என் வசமே ..!

செல்வத்தை பாலிக்கும் 
செண்பகவல்லி
லோகத்தைக் காத்திடுவாய்  
லோகேஸ்வரி நீ
உனையல்லாது யாருண்டு 
இங்கெமக்கு?
கடைக்கண் பார்வையும் 
நின் பொற்பாதமும்
இல்லந்தோறும் யந்திரமாய்ப் 
பதித்து விடு தன ஆகர்ஷண 
மந்திரமே மாணிக்கமே..!

பச்சைப் பட்டுடுத்தி 
கிளி கொஞ்சும் பொற்கொடியே
சந்தனக் காப்புக்குள் 
பூத்திடும் அலைமகளே
சுகந்த நிவாஸினி  
மனநிறை மனோன்மணி
திருவிழிப் பார்வையால் 
மருள் நீக்கு மரகதமே..!
புவனத்தை ஆகர்ஷிக்கும் 
அருணோதயம் நீ..!
ஆராதனை செய்தோம் 
கோமேதகமே..!

ருத்ர வீணை நாதம் 
சூழ அக்ஷரமாலை 
புத்தகம் கொண்ட ஸ்ரீவித்யே..!
தீபத்தில் ஒளிரும் புஷ்பராகமே..!
அன்ன வாகினியே ஸ்படிகவேணீ.!
சின்முத்ர தாயினி ஸ்ரீ லோசனி..!
ஆரோக அவரோக ஸ்ருங்காரிணீ ..!
வெண்டாமரையில் 
வீற்றிருக்கும் ஓய்யாரி
நல்வாக்கு சித்திக்கும் வாக்தேவியே 
நவமணி நிறைந்திடும் வைடூரியமே
தேனாபிஷேகப் ப்ரியே ஸ்ரீசாரதே ..!
ஓங்கார ரீங்கார 
ஏகாந்தக் கலைகளை
வரமளிபாய் பூந்தோட்ட  
மனோஹரி..!

------------------------------------------------------------------------------------
ஜெயஸ்ரீ ஷங்கர்





------------------------------------------------------------------------------------

செவ்வாய், 30 செப்டம்பர், 2014

பெருமை




ஜெயஸ்ரீ ஷங்கர், ஹைதராபாத்

நன்றி:தமிழ்த்தேர்,



"என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்...?" பல ஆண்டுகள் முன்பு பிரபலமான திரையிசைப் பாடல் வரிகளாய் பட்டிதொட்டி எங்கும் ஒலித்ததைக் கேட்ட ஒவ்வொருவரின் இதயத்திலும் இசையைத் தாண்டி காலத்தைக் கடந்து அப்படியே செதுக்கி வைத்தது போல அச்சாகியிருக்கும்.

ஆம், வெறும் நாடு என்று சொல்லிவிடவில்லை கவிஞர். 'திரு நாடு' என்று பாரதத்தின் பெருமையை ஒவ்வொருவர் மனத்திலும் உயர்த்தி வைத்து அழகு பார்த்தார். ஒரு விதத்தில் பார்த்தால், இந்தியாவுக்கு என்றென்றும் பெருமை விவசாயிகள் தான். இந்தியாவை அலங்காரம் செய்து பார்க்கவென்றே அவர்கள் எதையும் பொருட்படுத்தாமல் காய்ந்தும், நனைந்தும், நிலத்தோடு நிலமாக வெட்டவெளியில் கிடந்து தான் நம்பி விதைத்த பூமி பச்சைப் பட்டு உடுத்த ஆரம்பத்திலிருந்து, தன் மகளைப் போலப் பேணிக் காத்து 'வாரி வழங்கும் கருணைத் தாயாக்கி', உலக மக்களுக்குப் படியளக்கும் தெய்வமாக்கி , அதன் ஒவ்வொரு தருணத்திலும் தன் சுகம் பாராமல், நிலமகளைப் பார்த்துப் பார்த்துப் பெருமை பட்டு, விளைச்சல் நிலத்தின் மகசூல் கண்டு மகிழ்ந்து, தனது அத்தனை உழைப்பிற்கும் ஈடாக, வயல் தந்த பரிசை 'சூரியனுக்கு'ப் பொங்கலிட்டுப் படையல் தந்து அவர்தம் நன்றிதனை ஆண்டவனுக்கே அர்ப்பணித்தனர்.

எந்த ஒரு விதத்திலும் தங்களால் தான் என்று தற்பெருமை பட்டுக் கொள்வதில்லை விவசாயிகள். எளிமையும், வலிமையும் தந்த வல்லமை பெரிது. மனிதகுலத் தேடுதலின் 'அச்சாணி'யான பசிக்குப் பக்குவமாக ருசியோடு தந்து கொண்டிருக்கும் விவசாயிகள், கால காலமாக நமது இந்தியாவின் ஆணிவேராக விளங்குவதைக் கண்டு நாம் ஒவ்வொருவரும் பெருமைப்படுதல் வேண்டும்.

மண்ணோடு மண்ணாக உழலும், பொன் மனிதர்கள், தங்களின் சுகம், சொகுசு,நாகரிக வாழ்க்கை என்று எதைப் பற்றியும் சிந்தனை செய்யாது, சேற்றோடு நடந்து நடந்து நமது பாரதத்தாயின் குழந்தைகளை கௌரவமாக பவனி வரச் செய்யும் 'தியாகிகள்'. வெற்றுப் பூமியோடு போராடி விளையச் செய்து வெற்றி கண்டு , நாட்டின் அந்நிய செலவாணிகளை உயர்த்தித் தரும் கண்ணுக்கு எட்டாத கணக்கர்கள். காலத்தின் எந்த மாறுதலையும் தனக்கென்று ஏற்றுக் கொள்ளாமல், தனக்கான கருமமே கண் எனக் கொண்டு செய்யும் தொழிலை சவாலாக ஏற்று சமுதாய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் எந்தப் பகுதியின் முன்னேற்றமும் தன் உள்ளத்திலும், உணர்விலும், உடையிலும், வந்து விடாமல் நவீனத்தின் வாசனை எதையும் மனம் நுகராது தன்னைக் காத்துக் கொண்டு மண்ணையும் காக்கும் வீரத்திருமக்கள் இவர்கள். இவ்வாறு இவர்களது பெருமைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

"உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்"...என்ற மஹாகவி பாரதியாரின் கூற்றுக்கு இணங்க, நாம் என்றென்றும் உழவுத் தொழிலையும், அதைக் கண்ணாகக் கருதும் விவசாயிகளையும் பெருமைப் படுத்தக் கடமை பட்டுள்ளோம். ஆனால், தற்போது நடப்பது என்ன? விளை நிலங்கள் விலை பேசப் படுகின்றது. விவசாயத்த்திற்குச் சாயம் பூசி அழகு பார்க்க முயன்று கொண்டிருக்கின்றனர் . இதன் விளைவு , உழவுத் தொழில் மெல்ல மெல்ல அந்தப் புள்ளியிலிருந்து நகர்ந்து செல்லும் அபாயம் காத்திருப்பதை உணராமல், நிலங்களுக்கு விதைநெல் இடுவதற்கு மாறாக 'எண்' இட்டு பிரித்து தரிசாக்கிக் காசு பார்க்கும் கனவு காண்கின்ற வேகம், அதிவேகமாகப் பரவுகிறதே. இதன் நிலை அறிந்து நாம் பெருமைப் படவா இயலும்? ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்னும் நிலைமையை மாற்றி விடத் துடிக்கும் நவீன சமுதாயம் வெறும் நிலத்தை மட்டும் விலை பேசவில்லை விவசாயத்தையே விலை பேசுகிறார். காலகாலமாகச் செய்து பிழைத்து வந்த தொழில் கொஞ்சம் கொஞ்சமாக குடும்பத்தை விட்டு விலகி நகரங்களின் பளபளப்பில் சொக்கி நிற்க ஆரம்பிக்கும் போது, எந்தக் காலத்திலும் மாறாத மனிதனின் பசியைப் போக்கப் போவது இனி யார் என்று நாம் சிந்தித்துப் பார்த்திடல் வேண்டும்.

எந்தப் பெருமைக்கும் தலைநிமிராது, முதுகு வளைந்து குறைந்தாலும், நமது இந்தியாவின் முதுகெலும்பு நிமிர்ந்து நிற்கக் காரணமான விவசாயிகளை எண்ணிப் பெருமை கொள்வோம். அவர் தம் தொழிலை அழிந்திடாது காக்க ஆவண செய்வோம். விளை நிலத்தை விலை பேச விடோம். நாட்டில் எத்தனையோ 'பெருமைகள்' பெருமைப்பட வேண்டிய வகையில் இருந்தாலும், கண்ணுக்குக் கண்ணாக விளங்கும் உழவுத்தொழில் தாயகத்தின் உரிமைத் தொழில் என்று பெருமையோடு நிலைநாட்டப்பட வேண்டிய தருணத்தில் நாம் இன்று இருக்கிறோம்.

சுயநலப் பேராசையால் ....விவசாயிகளை ஆசைகாட்டி அடிமைகளாக்கி, ஆணிவேரில் வென்னீர் ஊற்றிப் பார்க்காமல்' , விவசாயத்தைப் பெருமை படுத்தும் வகையில், அந்தத் தொழில் புரிபவர்களுக்கு நவீன உதவிகள் செய்து தர வேண்டும். தாயகத்தில் விவசாயம் செழித்து, விவசாயிகளை உயர்த்துவதில் தான் இந்தியன் ஒவ்வொருவரின் கடமையும் அதனால் பெருமையும் .பொங்கி நிற்கிறது.