வெள்ளி, 7 மார்ச், 2014

அம்மா....எனும் பெண்..!



அட்சர லட்சப் படைப்பில்
அம்மா...உயிர்ப்பின் படைப்பு
உறவுகளுக்கு ஆணிவேர் நீ
அன்பாய் அனைவரையும்
சேர்த்து அணைக்கும்
ஆலத்தின் கிளை நீ
ஆயிரம் வார்த்தைகளுள்
உனக்கே முதலிடம்
இருந்தும் ஏனோ
உனக்கென்று ஓரிடம்
இதயத்தில் இருக்காமல்
இல்லத்தில் இருத்தினார்.

நெஞ்சு கொள்ளாத
பாசம் உனது...
புரிந்து கொள்ளாத
பிள்ளைகள் ஏனோ
கடமையைக் கூட
காசுக்குள் கணக்கெடுத்து
கருவறை தந்தவளைக்
கணவரைப் பிரிந்திட்டாலோ
கல்லறை செல்லுமுன்னே
உன் அறை அதுவென்றே
அனுப்பி வைப்பார்

இலவசங்கள் பல கிடைத்தும்
அவள் வசம் ஏதுமில்லை..
உடலுருக்கிச் பணிந்ததெல்லாம்
உயிர் செதுக்கும் வேளையிலே 
மனித இடிதாங்கியோ வலி
தாங்கும் தாய் இனமே
குடி செய்த கோலம் பல
கொண்டவள் செய்த ஜாலம் பல
திரும்பிப் பார்க்காத
இதயம் பல வென்று
காரணங்கள் இதிலுண்டு..!

வைரத் தோடும்
அட்டிகையும்
பொன் வளையும்
புதுப் பட்டுமாகத்
வளைய வந்த உனக்கும்
கூலிக்கு மாரடித்து
கூழுக்குத் தனை வகுத்து
பேருக்குப் பிள்ளை
வளர்த்த அவளுக்கும்
காலன் வரும் முன்னே
காத்திருக்கும் கனச் சுவர்கள்
ஊருக்கு வெளியே தான்..!

பாசத்தில் பந்தத்தில்
முன்னமே தோற்றுப்போன
அன்னையரே உங்களுக்கு
ஆலயங்கள் தேவையில்லை
ஆறுதல் ஒன்றே தேவை...!
அறிந்ததால் தானோ ஏனோ

அன்னையர் தினம் பிறந்தது.
அன்னையர்கள் கூடும் கோயில்
கைகுலுக்க வலுவில்லாத
பஞ்சடைத்த கண்களைப்
பார்த்த போது ...!
வாயடைத்துப் போனேன்...
நானும் தாய் தானே...!



கேளுங்ளேன் இதயத்தை...!
தாய்க்கென இடம் உன்
இதயமாய்  இருக்கும் போது
அவளிருக்க வேறிடமும்
இங்கெதற்கு?
தேட வேண்டாம்..
உள்ளவர் உள்ளவரை
சுமந்தவளைச் சுமக்கும்
சுகம் தான் அலாதி..!
அது தானே ஆத்ம நீதி..?
 


2 கருத்துகள்: