ஞாயிறு, 29 ஜூன், 2014

உயிர் துடிப்பு



... மாற்றுத் திறனாளி என்று




வலிகளே உயிர்த்துடிப்பான போது வாழ்வதன்
ஆனந்தம் உணராத ஆதங்கம், 

உன்னுள் இல்லாதன என்னுள் இருப்பதாய் 
என்னிலிருப்பது உன்னில் இல்லாததாய், 

மாற்றியமைத்த உயிர்க் குயவனவன் வைத்தான் 
ஓட்டைப்பானைக்குள் ஓராயிரம் இரத்தினங்கள்..! 

பார்வைப் பரிசாகம் உயிர்த்துடிப்பைத் தீப்பொறியாக்க,
வார்த்தைப்பரிதாபம் திறமைகளை  எரிமலையாக்கிட 

நாங்கள் மாற்றுத்திறனாளிகள் அல்ல -  இந்த 
ஜெகத்தை மாற்றிடும்  திறனாளர்கள்..! 

அன்பும் நம்பிக்கையும் எங்களைத் தாங்கும் கால்கள்.
எங்களைப் பாருங்கள் பார்வையை மாற்றுங்கள்..!

--------------------------------------------------------------------------------------

வலிகள் துறந்த உயிர் துடிப்பு வேண்டும் 
ஊனத்தை உவமைப் படுத்தாத உறவுகள் வேண்டும் 

பார்வையால் துரத்தும் மனங்கள் திருந்த வேண்டும்.
பாசத்தைப் பங்கு வைக்கும் நேச உறவு வேண்டும் 

தைரியமும் நம்பிக்கையும் கால்களென மாறவேண்டும் 
கேளிவிக்குறி எதிர்காலம் ஆச்சரியக் குறியாக வேண்டும் 

முடக்குவாதங்கள் வையகத்தில் முடங்கிப்போக  வேண்டும் 
வாழ்க்கையின் வலிகள் யாவும் வரலாறாக வேண்டும் 

கைகள் பேசும் மொழியை உலகம் கேட்க வேண்டும் 
அன்புக் கரங்கள் யாவும் ஆதரிக்க வரவேண்டும் 

உதவிக்கரங்கள் நீட்டி எங்களை உயர்த்திவிட வேண்டும் 
ஊனமற்ற உள்ளங்களாக உலகம்  மாறிட வேண்டும்.
----------------------------------------------------------------------------------
பிறவியே விபத்தாக  அதனுள்ளும் விபத்திலே
சிக்குண்ட பிறவியாய் உயிர் பிழைத்தேன் 

ஊனத்துடன்  தானென் உயிர் துடிப்பும்  
காலங்கள் கொண்டு சேர்க்கும் இடமெதுவோ ?

கலங்கிய நெஞ்சத்துடன் எனை ஈன்றவர்கள் 
பரிதாபப் பார்வையில் எனது உறவினர்கள் 

அனுதாபப் பார்வைகளும்  பரிகாச வார்த்தைகளும் 
எனது இயலாமைக்கு உரமாகிப் போனது 

முடங்கிக்கிடந்த உடலுக்குள் ஊனத்தை உகுத்தமனம் 
எழுந்தது, நடந்தது, உருண்டது, ஓடியது 

வானமே இலக்காகி ஊனமே வரமாகி 
கலங்கரை விளக்காகி நம்பிக்கை நங்கூரமானது .
-----------------------------------------------------------------------------------
சிறகில்லாத பறவையாய்  
கூவத் தெரியாத குயிலாய் 

பூக்காத செடியாக
வண்ண உலகத்தில்   

இருண்ட இதயத்தில் உயிர்துடிப்பற்ற
மாற்றுத் திறனாளி வரிசையில்  - நானும் 

வெற்றிமேடை உலகிலே 
ஊன்றி நின்றது காலல்ல - நம்பிக்கை 

ஆடுகளத்தில் அன்புக்கரங்கள் 
இருக்கும்வரை பூகோளத்தை 

உளவியல் வென்றுவிடும் 
ஊனங்கள்  சிகரங்கள் தொட்டுவிடும் 
---------------------------------------------------------------------------------------------------

தாயின் மனத்துடிப்பு 
தவியாய் தவித்த போது 

பிறவியின்  குறைதனை
ஏற்காத  மனக்கசப்பால்  

வீசப்பட்ட கடலும் கொண்டு 
சேர்த்தது கரையில் -  கருணைக் 

கரங்கள் கண்டெடுத்து இசைத் 
தமிழூட்டி சிங்காரித்துச் செதுக்கியது 

குறைகொண்ட உடலெங்கும் 
இசை நிறைந்து  வழிந்தது  உடலின் 

ஊனம் உதிர்ந்து போனதே எந்தன் 
இசை கேட்கத்  உயிர்களும் துடித்தன.
-------------------------------------------------------------------------------
ஏழு பிறப்புள் எதோ ஒன்றில் 
சிக்கிக் கொள்ளும் உடம்பு 

மூளை முடக்குவாதமாம் 
மனமும் உடலும் துவளும் அவலம் 

கள்ளமில்லா அன்பை அள்ளித் தரும் 
உள்ளங்கள் கண்களோடு உறவாடும் 

உயிர் துடிப்பில் ஊனமில்லை 
திறமைகள் தூங்குவது நியாயமில்லை 

பாசத்தின் சங்கிலிகள் இணைந்து கொண்டால்  
காருண்யப் பரிசுகள் கிடைத்து விட்டால் 

மாற்றுத் திறனாளிகள் மாறுவார்கள் 
நம்பிக்கை  ஏணியில் ஏறுவார்கள் .

--------------------------------------------------------------------------------

வியாழன், 12 ஜூன், 2014

ஆங்கிலத்தில் வால்மீகி ராமாயணம்

ஆங்கிலத்தில் வால்மீகி ராமாயணம்

rama
1974 இல் தொடங்கி 1975 இல் நான் வால்மீகி முனிவரின் ராமாயணத்தை ஆங்கிலத்தில் ஈரடிப் பாடல்களாகச் சிறுவர்க்காக எழுதி முடித்தேன். முதலில் சுமார் 1000 பாடல்களில் கதை முடிந்தது, முக்கியமான சில்வற்றை நீளம் கருதியும் அது சிறுவர்க்கானது என்பதாலும் அதில் சேர்க்க்காதிருந்தேன். ஆனால் அவற்றைச் சேர்க்க நினைத்துப் பெரியோர்க்கானதாக மாற்றி எழுதியதில் அது 1789 பாடலகளாக உருக்கொண்டது. அப்போது நான் மைய அரசுப் பணியில் இருந்ததால், Fair copy யைத் தட்டெழுத நேரம் கிடைக்கவில்லை. ராமரின் பட்டாபிஷேகம் வரையிலான கதை மட்டுமே அதில் அடக்கம். வண்ணான் ஒருவனின் பேச்சைக் கேட்டு மதி இழந்து ராமன் சீதையைக் காட்டுக்கு அனுப்பியது என் சிறு வயதிலேயே சம்மதமற்ற ஒன்றாக இருந்ததால் கதையைப் பட்டஞ்சூட்டு விழாவுடன் நிறுத்தினேன். ராஜாஜி அவர்களின் ஆங்கிலப் படைப்பின் அடிப்படையில் இது எழுதப்பட்டது. ஒரு முனிவரின் படைப்பை மாற்றுவதில் எனக்குச் சம்மதமில்லாததாலும், சீதை காட்டுக்கு அனுப்பப்பட்ட கதை பிடிக்காததால், அதைத்தான் நாம் சொல்லப்போவதில்லையே என்கிற சமாதானத்திலும், ராஜாஜியே வால்மிகியைத் தழுவி எழுதியிருக்கும் போது நான் செய்தால் என்ன என்கிற எண்ணத்தாலும் அதைத் தழுவியே படைக்க முற்பட்டேன்.
கணிப்பொறி வாங்கிய பிறகு அதனை மீண்டும் தட்டெழுதினேன். அதன் வெளியீட்டுக்கு இப்போதுதான் வேளை வந்துள்ளது. Cyberwit Net எனும் பதிப்பகம் அதை வெளியிட முன்வந்துள்ளது. விரைவில் அது வெளியாகிவிடும்.
அன்புடன்
ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா
எழுத்தாளர்