வெள்ளி, 3 அக்டோபர், 2014

சின்னங்கள் ...!




 




பொங்கும் ஆசைகள்
பூம்புனல்  மனசுக்குள்
வானமென விரிந்த
கண்கள் கொண்ட
ஞாபகப்  பொக்கிஷங்கள்


அனைத்து உணர்வுகள்
சுமந்த உயிர் மூச்சுக்கள்
பாசி படிந்த சங்குகள்
மண் படிந்த சிப்பிகள்
கடல் நுரையின் பூக்கள்
நட்சத்திர மீன்கள்

கண் முழிக்கும் சோழிகள்
பவழப் பூங்கொத்துக்கள்
உல்லாசச் சுற்றுலாவில்
உன் பாதம் பட்டு நகர்ந்ததும்
என் உள்ளங்கையில்
சிக்கிய  கூழாங்கற்கள்
 

பட்டாம் பூச்சியின்
ஒற்றை இறக்கையின்
இறைவன் வரைந்த
அழகோவியம்
'குட்டிபோடும்' நம்பிக்கையில்
மயிலிறகின் ஒற்றைக்கம்பி

அரச மரத்தின் காய்ந்த இலை
காக்காப்பொன்னு
கலர்கலரா குமரிமண்ணு
நானிருக்கும் வரை
என்னோடிருக்குமென
நான் புதைத்து வைத்த
சின்னங்கள் ...!

என்று என் வாழ்க்கை
பாதைமாறிப் பயணித்ததோ
ஆழ்கடல் மனசில் இருந்தவை
அலைகடலுக்குள் அஸ்தியெனக் 
கலந்து விட
என்றாவது எங்காவது
கரையோரம் கால் நனைக்கும்
உன் பாதங்களில்
சிக்கும் இந்த 
வெண்சங்கு ..!




புதன், 1 அக்டோபர், 2014

நவராத்திரி ரதம்...!


 


நவராத்திரி ரதம்...!


இரத்தின மேடையாம் 
நவராத்திரி படிதனில்
கொலுவேறினாள்  
ராஜமாதங்கி...!
 

பஞ்சமி தனிலே
நவகிரக நாயகி
இகபர சுகமளி 
சதுர்மறை சங்கரி..!
 

வைர ஒளி  வீசும்  
பரிபூரணி  பவானி
தீங்கேதும் வாராமல் 
ரட்சிப்பாள் ரஞ்சனி..!

பொற்குடை மலைமகளே 
உமையவளே
மஞ்சளில் மகிழும்  
மங்களவல்லி..!
ஸ்ரீசக்ர நாராயணி 
ஸ்ரீயோகினி
நீலமணிச் சுடர் 
சிவசக்தி நீ..!

நாடிடும் யாவர்க்கும் 
நலமளிப்பாய் கோலத்தில் 
கோலோட்சும் கல்யாணியே..!
வரங்களை வர்ஷிக்கும் 
வனிதாமணி பிரபஞ்ச 
நிவாஸினி  பராசக்தி நீ..!

கும்பத்தில் கொலுவிருக்கும் 
மங்கலமே முத்து 
மாலையிட்டு மனங் 
குளிர்ந்தோம் மாதாவே 
அன்னையே பரமேஸ்வரி ஸ்ரீ
திரிபுர சுந்தரியே 

மனம்மல்கப் பாடுகிறேன்..!
பலவரம் அருள்வாள் 
பவளத்து பார்கவி நீ..!

தெய்வீக தைவதமே 
சாமந்திப்ரிய வதனி  ..!
தாழம்பூ தந்திடுவேன் 
தாம்பூலம் தந்திடுவேன்
அழகு முகத்தில் 
அருட்புன்னகை கண்டிடுவேன்
அலைகடலைக் காக்கும் 
புவனத்துக் கவசமே..!
என்றென்றும் உந்தனருள் 
என் வசமே ..!

செல்வத்தை பாலிக்கும் 
செண்பகவல்லி
லோகத்தைக் காத்திடுவாய்  
லோகேஸ்வரி நீ
உனையல்லாது யாருண்டு 
இங்கெமக்கு?
கடைக்கண் பார்வையும் 
நின் பொற்பாதமும்
இல்லந்தோறும் யந்திரமாய்ப் 
பதித்து விடு தன ஆகர்ஷண 
மந்திரமே மாணிக்கமே..!

பச்சைப் பட்டுடுத்தி 
கிளி கொஞ்சும் பொற்கொடியே
சந்தனக் காப்புக்குள் 
பூத்திடும் அலைமகளே
சுகந்த நிவாஸினி  
மனநிறை மனோன்மணி
திருவிழிப் பார்வையால் 
மருள் நீக்கு மரகதமே..!
புவனத்தை ஆகர்ஷிக்கும் 
அருணோதயம் நீ..!
ஆராதனை செய்தோம் 
கோமேதகமே..!

ருத்ர வீணை நாதம் 
சூழ அக்ஷரமாலை 
புத்தகம் கொண்ட ஸ்ரீவித்யே..!
தீபத்தில் ஒளிரும் புஷ்பராகமே..!
அன்ன வாகினியே ஸ்படிகவேணீ.!
சின்முத்ர தாயினி ஸ்ரீ லோசனி..!
ஆரோக அவரோக ஸ்ருங்காரிணீ ..!
வெண்டாமரையில் 
வீற்றிருக்கும் ஓய்யாரி
நல்வாக்கு சித்திக்கும் வாக்தேவியே 
நவமணி நிறைந்திடும் வைடூரியமே
தேனாபிஷேகப் ப்ரியே ஸ்ரீசாரதே ..!
ஓங்கார ரீங்கார 
ஏகாந்தக் கலைகளை
வரமளிபாய் பூந்தோட்ட  
மனோஹரி..!

------------------------------------------------------------------------------------
ஜெயஸ்ரீ ஷங்கர்





------------------------------------------------------------------------------------