வியாழன், 8 ஜனவரி, 2015

கவிதையும் கற்பனையும்...!



ரிஷிமூலம் நதிமூலம்
தேடுதல் போல்
முட்டைக்குள் கோழியா ...?
விதைக்குள் விருட்சமா ..?
ஆராய்ந்து அறிவைச்
சொறிந்து சொறிந்து
சீ...போ  இந்தப்பழம் புளிக்கும்
நரியின் உணர்வை
முகத்தில் நிரப்பி
வெற்றுக் காகிதத்தில்
உணர்வை நிரப்ப
அறியாது தவித்தவளை
கவிதை நாயகி
திருப்பாவை  கோதையவள் 
கேட்டு நின்றாள்
ஒன்றுமேவா ஓடவில்லை..?

எழுந்தது அறிவுக்குள்
ஆக்ரோஷம்...  கவிதை என்ன?
கற்கண்டா கமர்கட்டா
கடலைஉருண்டையா?
பத்துக் காசுக்கு 
பக்கத்துக் கடையில்
வாங்கி வருவதற்கு ...!
எரித்த பார்வைக்கு
ஏகத்துக்கு எகிறி நின்றாள்
நாரணன் நங்கையும்..!
எண்ணத்தில் அடுத்து
மீரா வந்து மிரட்டுமுன்னே
கவிதையைத்  தோண்ட
கற்பனை மண்வெட்டியைக்
கையெடுக்க சிந்தனை
ஊற்று வழிசொல்லலாச்சு..1
கோடி கோடியாகக்
கொட்டிக் கொடுத்த
எண்ணங்கள் யாவும்
கற்பனைக் குதிரையைத்
தட்டிய கவிஞரவர்
கற்பனைத் தாயின்
அற்புதக் குழந்தைகள்
நெஞ்சத்துக்  கனவுகள்
இன்பத்துத் தனிமையில்
உணர்வுகளின் உலகமாகி
காவியக் குழந்தைகளாய்
பெற்றெடுத்த கவிதை
மகளின் அன்புத்தாயே
கற்பனை தானே..!
கடலுக்குள் ஓடி
மறையும் நதியென
கற்பனைக் கடலுள் 
நீந்தி மகிழும் 
கவிதை அலைகள்...!


ஜெயஸ்ரீ ஷங்கர்
ஹைதராபாத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக