ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

நான்"

Image result for வெட்டவெளி

எனக்குள் நானாக
யாருக்கும் புரிந்திடாத
புண்ணியங்கள் தானாகி
நானாக..!

பெயருக்குள் உயிராகி
உடலுக்குள் சிறையாகி
விடுதலை வேண்டி
நித்தம் திமிரும்
நானாக...!


யாரோ நிமிர
எனக்குள் நானும்
நீ யார்?
நான் யார்?
விடையில்லாத
வினாவின்
விடையே
நானாக...!

சூட்சுமம் அறிந்த
ஆன்மா
நேற்றும் இன்றும்
நாளையுமாய்
அழியும் உயிரில்
நானாக...!

சிறைக்குள்
மும்மலச் சேற்றுள்
அமிழாது தெளிந்து
காந்த விலங்குக்குள்
ஏகாந்தமாய்
நானாக..!

ஏழாம் பிறவியிலும்
எட்டாத அறிவியலும்
கிட்டாத அதிசயமாய்
ஒட்டாத ஓட்டுக்குள்
பழுத்த புளியாய்
நானாக...!


பதி ,பசு ,பாசம்
முப்பொருள் ஆட்சியும்
மறைத்த வழியை
நித்திய இருளுள்
மூழ்கித் தேடித்
தவிக்கும்
நானாக..!


நீளும் இருள்குகைக்குள்
ஓடும் முன்னே
கணக்கை பூஜ்ஜிமாக்க
தன் திறம்
காணும்
நானாக...!

விரல் சுட்டிக்கு
மாட்டாது
பரத்தோடு ஜீவனாக
ஒன்றைத் தேடும்
நானாக...!


வந்த காரணம்
வாழ்ந்த காரணம்
சேரும் காரணம்
ஒன்றாகத்
தந்திரம் அறிந்த
நானாக..!


பிணியும், வலியும்
கணக்காக
சாகரம் விலகி
வழிவிட உடைத்து
பாயும் ஒளியே
நீயும் நானும்
அவனும், இவனும்
நானாக...!

வெட்டவெளி
பிரபஞ்சத்தில்
சுதந்திரப் பறவையாகி
விலங்குடைத்து
சிறை விடுத்து
சிறகு விரித்தேன்
நானாக...!




 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக